Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 81)

முதல் ப்ரகரணம்

தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள்போலே ப்ரஹ்ம ஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டைநாளிற்பிறவி உண்ணாட்டுத் தேசிறே.

எல்லாம் செய்தாலும் பூர்வவர்ணங்களில் பிறவிபோலே சதுர்த்தவர்ணத்தில் பிறவி தேஜஸ்கரமன்றே யென்ன, தாஸ்ய ரஸஜ்ஞர்க்கு இது தேஜஸ்கரமென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் - (தேவத்வமுமென்று தொடங்கி).

எவ்விதம் நோக்கினாலும், மற்ற மூன்று வர்ணங்களில் எடுக்கின்ற பிறவிகள் போன்று நான்காம் வர்ணத்தில் உள்ள பிறவி தேஜஸ்ஸுடன் கூடியதாக இருப்பதில்லையே என்னும் சந்தேகம் எழலாம். இதற்கு, “ஸர்வேச்வரனுக்கும், அவனுடைய அடியார்களுக்கும் அடிமையாக இருப்பதன் சுவையை அறிந்த உயர்ந்தவர்களுக்கு, இத்தகைய பிறவி தேஜஸ்ஸுடன் கூடியதாகவே இருக்கும்”, என்கிறார்.

– அதாவது, ராவணவதாநந்தரம் ப்ரஹ்மாதிகள் “பவாந் நாராயணோ தேவ:” என்றது அஸஹ்யமாய், “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்” என்கையாலும், கோவர்த்தநோத்தரணாநந்தரம் அந்த அதிமாநுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சரியப்பட்ட கோபர், “பால த்வஞ்சாதி வீர்யஞ்ச ஜந்ம சாஸ்மாஸ்வ சோபநம், சிந்த்ய மாநமமேயாத்மந் சங்காம் க்ருஷ்ண ப்ரயச்சதி, தேவோ வா தாநவோவா த்வம் யசோ கந்தர்வ ஏவ வா” என்று சங்கித்துச் சொல்ல, “க்ஷணம் பூத்வா த்வஸௌ தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய கோபவாந்” என்கிறபடியே அது அஸஹ்யமாமென்னுமிடம் தோன்றச் சிறிதுபோது வாய் திறவாமலிருந்து பின்னை, “நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ ந ச தாநவ: அஹம் வோ பாந்தவோ ஜாத: நைவ சிந்த்யமதோந்யதா” என்கையாலும், தேவர்க்கும் தேவனான தான் லோகரக்ஷணார்த்தமாக மநுஷ்ய ஸஜாதீயனா யவதரித்தவளவில் தேவனாகச் சொல்லுகையும் நிந்தையாம்படி புரையறப் பிறக்கும் சீலாதிகனான ஈச்வரனுக்கு, “ஸ உ ச்ரேயாந் பவதி ஜாயமாந:” என்கிறபடியே, “பல பிறப்பாயொளி வரு முழுநலம்” என்று தாழவிழிந்ததனையும் கல்யாண குணங்கள் ஒளி பெற்று வரும் ஜந்மங்கள் போலே, – “மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகமாத்மாநா” என்று ப்ராஹ்மண்யத்துக்கு எல்லைநிலமான ப்ரஹ்மாவாய்ப் பிறக்கையும் சேஷத்வ விரோதியான அஹங்கார ஹேதுவாகையாலே ஆத்மாவுக்கு அவத்யமென்று இகழும்படி தாஸ்ய ரஸமறிந்தார்க்கு “பண்டை நாள்” என்கிற திருவாய்மொழியில் “பல்படிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யும் தொண்டர்”, “உன் பொன்னடிக் கடவாதே வழிவருகின்றவடியர்”, “தொல்லடிமை வழிவரும் தொண்டர்” என்று சொன்னபடியே தாஸ்ய விரோதியான ஜந்மாத் யபிமாந மின்றிக்கே கைங்கர்யாநுரூபமான குடிப்பிறவி, “ஆழியங்கைப் பேராயற்காளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்கிறபடியே பகவத் விமுக ப்ரசுரமாகையாலே புறநாடான லீலாவிபூதி போலன்றிக்கே பகவதாநுகூல்யைக போகரஸத்திலே நெருங்கி போக விபூதியாய் அவனுக்கந்தரங்கமாயிருக்கிற பரமபதத்தில் வர்த்திக்கிற தேஜஸ்ஸை யுடைத்திறே யென்கை. பரமபதத்தில் பகவத் கைங்கர்யாநுகுணமாகப் பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி சேஷவஸ்துவான ஆத்மாவுக்கு இதுவே தேஜஸ்கரமென்று கருத்து.

– (தேவத்வமும் நிந்தையானவனுக்கு) - இராவணனை வதைத்த பின்னர் நான்முகன் உள்ளிட்ட பலரும் இராமாயணம் யுத்தகாண்டம் (120-13) - பவாந் நாராயணோ தேவ: - நீயே நாராயணன் என்ற தெய்வம் ஆவாய் - என்று இராமனைப் புகழ்ந்தார்கள். அப்போது இராமன், இராமாயணம் யுத்தகாண்டம் (120-13) - ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் - என்னை நான் மனிதனாகவும், இராமன் என்ற பெயர் உள்ளவனாகவும், தசரதனின் புத்திரனாகவும் மட்டுமே எண்ணுகிறேன் - என்றான். கோவர்த்தன பர்வதத்தை க்ருஷ்ணன் தனது திருக்கரத்தால் உயர்த்திப் பிடித்த பின்னர், மனிதனால் செய்ய இயலாத இந்தச் செயலைக் கண்டு வியந்த இடையர்கள், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-13-7) – பால த்வஞ்சாதி வீர்யஞ்ச ஜந்ம சாஸ்மாஸ்வ சோபநம், சிந்த்ய மாநமமேயாத்மந் சங்காம் க்ருஷ்ண ப்ரயச்சதி, தேவோ வா தாநவோவா த்வம் யசோ கந்தர்வ ஏவ வா – இளமை, மிகுந்த வீர்யம், இங்கு வந்த பிறவி ஆகியவற்றை ஆராயும்போது இவன் தேவர்களுக்கும் தேவனா, கந்தர்வனா, யக்ஷனா என்ற சந்தேகம் ஏற்படுகிறது – என்று ஐயத்துடன் கூறினார்கள். இதனைக் கேட்டபோது, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-13-9) - க்ஷணம் பூத்வா த்வஸௌ தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய கோபவாந் – க்ருஷ்ணன் சில நொடிகள் பொய்யான கோபம் கொண்டவனாக வாய் மூடி நின்றான் - என்பதற்கு ஏற்ப அவர்கள் உரைத்ததைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் சிறிது நேரம் வாயை மூடி நின்றான். பின்னர் அவர்களிடம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-3-12) – நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ ந ச தாநவ: அஹம் வோ பாந்தவோ ஜாத: நைவ சிந்த்யமதோந்யதா – நான் தேவன் அல்லன், கந்தர்வன் அல்லன், யக்ஷன் அல்லன், அஸுரன் அல்லன்; உங்களுடைய பந்துவாக அவதரித்த என்னை வேறுவிதமாக எண்ண வேண்டாம் – என்றான். இவ்விதம் இராமனும், க்ருஷ்ணனும் கூறியதால், தேவர்களுக்கும் தேவனாக உள்ள தான், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக, மனிதனாக அவதரித்தபோது, தன்னைத் தேவனாக உரைத்தல் என்பதையே இழிந்து உரைப்பதாக எண்ணுகிறான். இவ்விதம் தடை இன்றி வெளிப்படும் சீலகுணம் பொருந்தியுள்ள ஸர்வேச்வரனுக்கு, (ஒளிவரும் ஜநிகள் போலே) – யஜுர் வேதம் – ஸ உ ச்ரேயாந் பவதி ஜாயமாந: – இந்தப் பரமாத்மா அவதரித்ததால் ஒளி பொருந்தியன் ஆகிறான் - என்றும், திருவாய்மொழி (1-3-2) – பல பிறப்பாயொளி வரு முழுநலம் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தாழ்வாக உள்ள அவதாரங்கள் அனைத்திலும் அவனுடைய திருக்கல்யாணகுணங்கள் மிகுந்த ப்ரகாசத்துடன் வெளிப்படுவது போன்று … (ப்ரஹ்ம ஜந்மமும் இழுக்கு என்பார்க்கு) - ஸ்தோத்ரரத்னம் (55) - மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகமாத்மாநா – எனக்கு நான்முகனாக உள்ள பிறவி வேண்டாம் – என்பதற்கு ஏற்ப, அந்தணப்பிறவிக்கு எல்லையாக உள்ள நான்முகனாகப் பிறத்தல் என்பது, அடிமைத்தனத்தின் விரோதியாக உள்ள அஹங்காரம் ஏற்படக் காரணம் ஆகிவிடும் என்பதால், அந்தப் பிறவியைக் கூட இகழும்படியாக, ஸர்வேச்வரனுடைய அடிமையாக இருத்தலின் சுவையை அறிந்தவர்களுக்கு. (பண்டைநாளிற் பிறவி) - திருவாய்மொழி (9-2) – பண்டை நாள் - என்கிற திருவாய்மொழியில், (9-2-1) – பல்படிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யும் தொண்டர் – என்றும், (9-2-2-) – உன் பொன்னடிக் கடவாதே வழிவருகின்றவடியர் – என்றும், (9-2-3) - தொல்லடிமை வழிவரும் தொண்டர் – என்றும் அருளிச்செய்தபடி, அடிமைத்தனத்திற்கு விரோதியாக உள்ளதான “நான் இந்தக் குலத்தில் பிறந்தேன்” என்று, பிறவி போன்றவை மூலம் ஏற்படும் கர்வம் இல்லாமல் கைங்கர்யம் செய்வதற்கு ஏற்றதான குலப்பிறவியானது. (உண்ணாட்டுத் தேசிறே) – பெரியதிருவந்தாதி (79) – ஆழியங்கைப் பேராயற்காளாம் பிறப்பு ... உண்ணாட்டுத் தேசன்றே – என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனைக் குறித்து எந்தவிதமான விருப்பமும் இல்லாதவர்கள் உலகில் அதிகமாக உள்ளதால், இந்த உலகம் போன்று அல்லாமல், ஸர்வேச்வரனுக்கு ஏற்றவனாக இருத்தல் என்னும் இன்பத்தின் சுவையில் நிலை நின்று, ஆனந்தம் அளிக்கவல்ல இடமாகவும், அவனுக்கு அந்தரங்கமாகவும் உள்ள பரமபதத்தில் வசிக்கின்ற, இந்த உலகின் ஸம்பந்தம் இல்லாத சரீரம் போன்று தேஜஸ் நிறைந்தது ஆகும். பரமபதத்தில் ஸர்வேச்வரனுடைய கைங்கர்யத்திற்கு ஏற்றவிதமாக ஒரு சரீரத்தை அடைவது போன்று, அடிமையாக உள்ள ஆத்மாவுக்கு ஏற்றதான ஒளியை இந்தச் சரீரமும் அளிக்கிறது என்று கருத்து.