Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 80)

முதல் ப்ரகரணம்

ஆற்றில் துறையில் ஊரிலுள்ள வைஷம்யம் வாசாமகோசரம்.

இன்னமும் அவர்களுடைய உத்பத்தி ஸ்தலங்களுக்கும் இவருத்பத்தி ஸ்தலத்துக்குமுள்ள வைஷம்யாதிசயத்தைக் காட்டுகிறார் - (ஆற்றிலித்யாதியால்).

மேலும் அவர்கள் அவதரித்த இடங்களுக்கும், நம்மாழ்வார் அவதரித்த இடத்திற்கும் உள்ள வேறுபாட்டின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

அதாவது வ்யாஸோத்பத்தி ஸ்தலம், ஆறுதானே அசிஷ்ட பரிக்ரஹமுடைய கங்கையாய், அத்துறை ஓடத்துறையாய், ஊர் வலைச்சேரியா யிருக்கும். க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலம், ஆறானது க்ருஷ்ண ஜலப்ரவாஹதயா தமோமயியான யமுனையாய், துறையும் அதில் காளிய விஷதூஷிதமான துறையாய், ஊர்தானே “அறிவொன்றுமில்லாத வாய்க்குலம்” என்கிறபடியே இடக்கை வலக்கை யறியாதார் வர்த்திக்கிற இடைச்சேரியா யிருக்கும். இவ்வாழ்வாருடைய உத்பத்தி ஸ்தலம், ஆறு “பவள நன் படர்க் கீழ்ச் சங்குறை பொருநல்” என்கிறபடியே விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஆகரமுமாய் வாஸ ஸ்தலமுமாய்க் கொண்டு அதிச்லாக்யமாயிருக்கும் தாம்ரபர்ணியாய், துறை சுத்த ஸ்வபாவமாய் அவதாதமாயிருக்கிற சங்கங்கள் வந்து சேருகிற திருச்சங்கணிதுறையாய், ஊர், “நல்லார் நவில் குருகூர்” என்கிறபடியே ஸகல ஸஜ்ஜந ச்லாகநீயமாய், “சயப் புகழார் பலர் வாழும் தடங் குருகூர்”, “நல்லார் பலர் வாழ் குருகூர்” என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழையுடையராய் பகவதநுபவம் பணி வாழ்கிற ஜ்ஞாநாதிகரான விலக்ஷணர் பலரும் நிரந்தர வாஸம் பண்ணுகிற திருக்குருகூராயிருக்கும். – ஆகையால், அந்தவாறுகளையும் துறைகளையும் ஊர்களையும் பற்ற இந்த ஆற்றுக்கும் துறைக்கும் ஊர்க்கும் உண்டான வைஷம்யம் பேச்சுக்கு அவிஷயமாயிருக்கு மென்கை. ஆக க்ருஷ்ண, க்ருஷ்ணத்வைபாயநோத்பத்தியிற் காட்டில் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வமான இவருத்பத்திக்கு ஏற்றத்துக்குடலாகக் கீழ் விலக்ஷிதமான வற்றை யடைய வெளியிட்டாராய்த்து.

வ்யாஸர் அவதரித்த இடம் – அங்குள்ள ஆறானது சிவனுடைய ஸம்பந்தம் கொண்டதான கங்கையாக, அந்தத் துறையானது ஓடத்துறையாக, அந்த ஊரானது மீன் வலைகள் நிரம்பியதாக இருக்கும். க்ருஷ்ணன் அவதரித்த இடம் – அங்குள்ள ஆறானது கறுத்த நிறமுள்ள நீர் கொண்டுள்ளதால் தமோமயமான யமுனையாக, அதன் துறையானது காளியனின் விஷத்தால் நிரப்பப்பட்டதாக, அந்த ஊரானது திருப்பாவை (28) - அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் - என்பதற்கு ஏற்ப எதனைச் செய்யவேண்டும் எதனை விடவேண்டும் என்று அறியாதவர்கள் நிரம்பியதாய் இருப்பதாகும். ஆனால் நம்மாழ்வார் அவதரித்த இடம் - அங்குள்ள ஆறானது, திருவாய்மொழி (9-2-5) – பவள நன் படர்க் கீழ்ச் சங்குறை பொருநல் – என்பதற்கு ஏற்ப மேன்மையான பொருள்களுக்குப் பிறப்பிடமாகவும் வசிக்கும் இடமாகவும் உள்ளதால் மேன்மையாக உள்ள தாமிரபரணியாகவும்; துறையானது தூய்மையான தன்மை உடையதாயும், வெண்மையாயும் உள்ள சங்குகள் வந்து ஒதுங்குகின்ற திருச்சங்கணி துறையாகவும்; ஊரானது திருவிருத்தம் (100) – நல்லார் நவில் குருகூர் - என்பதற்கு ஏற்ப அனைத்து ஸாதுக்களாலும் புகழ்ப்பட்டதாய், திருவாய்மொழி (3-1-11) - சயப் புகழார் பலர் வாழும் தடங் குருகூர் – என்றும், திருவாய்மொழி (10-8-11) – நல்லார் பலர் வாழ் குருகூர் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸம்ஸாரத்தை வென்றதால் புகழ் கொண்டவர்களும், எப்போதும் பகவத் அனுபவம் உள்ளதன் காரணமாக பகவத் அனுபவம் நிறைந்தவர்களும் ஆகிய ஞானிகள் பலரும் எப்போதும் வசித்தபடி உள்ளதான திருக்குருகூர் ஆகும். – ஆகவே, அவர்கள் அவதரித்த இடத்தில் உள்ள ஆறு, ஊர், துறை ஆகியவற்றை நோக்கும்போது, நம்மாழ்வார் அவதரித்த இடத்தில் உள்ள ஆறு, துறை, ஊர் ஆகியவற்றுக்கு உண்டான மேன்மையான வேறுபாடுகள் சொற்களால் கூறி முடிக்க இயலாதபடி இருக்கும். இப்படியாக க்ருஷ்ணன், க்ருஷ்ண த்வைப்பாயனர் (வ்யாஸர்) ஆகியவர்களுடைய பிறவிளைக் காட்டிலும், க்ருஷ்ணன் மீது கொண்ட பக்தி என்பதே வடிவமானது என்று கூறலாம்படி உள்ள நம்மாழ்வாரின் பிறவிக்கு உள்ள ஏற்றங்களை விரிவாக எடுத்துரைத்தார்.