Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 79)

முதல் ப்ரகரணம்

மீந நவநீதங்கள் கந்திக்குமிடமும் வெறிகொள் துழாய் கமழுமிடமும் தன்னிலொக்குமோ.

இனி மூவருடையவும் உத்பத்தி ஸ்தல கந்த விசேஷங்களைப் பார்த்தால் மற்றயவை இரண்டிலும் இவருடைய உத்பத்தி ஸ்தலத்துக்குண்டான வைபவம் விலக்ஷண மென்னுமிடத்தை மூதலிக்கிறார் - (மீனேத்யாதியால்).

அடுத்து, வ்யாஸர், க்ருஷ்ணன் மற்றும் நம்மாழ்வார் ஆகிய மூவரும் அவதரித்த இடங்களுடைய வாசனை (மணம்) விசேஷங்களை நோக்கும்போது, மற்ற இருவர் அவதரித்த இடங்களைக் காட்டிலும், நம்மாழ்வார் அவதரித்த இடத்திற்கு உள்ள மேன்மை வேறுபட்டது என்பதை இந்தச் சூத்திரத்தில் புகழ்கிறார்.

– அதாவது, மீன்வெறி நாறுகிற வ்யாஸோத்பத்தி ஸ்தலமும், வெண்ணெய்முடை நாறுகிற க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமும், “வெறிகொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற” என்றும், “இவளந் தண்டுழாய் கமழ்தல்” என்றும் பகவத் ஸம்பந்த ப்ரகாசகமான திருத்துழாய் மணம் நாறுகிற ஆழ்வாரவதரித்த ஸ்தலத்துக்கு ஸத்ருசமோவென்றபடி. ப்ராக்ருத விஷய ஸம்ஸர்க்கஜமான ஹேய கந்தங்களிறே அவை, அப்ராக்ருத விஷய ஸம்ஸர்க்கஜமான உபாதேய கந்தமிறே யிது. இத்தால் தாத்ருச ஸ்தலங்களிலுண்டான அவர்களுடைய உத்பத்தியில் ஈத்ருச ஸ்தலத்திலுண்டான விவருடைய உத்பத்தியினேற்றம் காட்டப்பட்டது.

– (மீந நவநீதங்கள் கந்திக்குமிடமும்) - மீன்நாற்றம் வெளியேறுவதான வ்யாஸர் பிறந்த இடமும், வெண்ணெய்முடை நாறுகிற க்ருஷ்ணன் அவதரித்த இடமும். (வெறிகொள் துழாய் கமழுமிடமும்) – திருவாய்மொழி (4-4-3) – வெறிகொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற – என்றும், திருவாய்மொழி (8-9-10) - இவளந் தண்டுழாய் கமழ்தல் - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடனான தொடர்பை பெற்றுள்ளதன் அறிகுறியான துளசிமணம் வீசுகின்ற நம்மாழ்வார் அவதரித்த இடத்திற்கு. (ஒக்குமோ) - ஒப்பாகுமோ. இந்த உலகியல் பொருள்களுடன் ஸம்பந்தம் அடைந்த காரணத்தால் தாழ்ந்த நாற்றங்கல் வீசும் இடங்கள் முந்தையது ஆகும். ஆனால் இந்த உலகியல் பொருள்களுடன் ஸம்பந்தம் இல்லாத வஸ்துவான ஸர்வேச்வரனுடைய சேர்க்கையால் ஏற்பட்டதான, அனைவரும் விரும்பவல்ல நறுமணம் அல்லவோ நம்மாழ்வார் அவதரித்த இடம் ஆகிறது! இதன் மூலம் அந்த இடங்களில் ஏற்பட்டதான அவர்களுடைய பிறவிகளைக் காட்டிலும், இந்த இடத்தில் ஏற்பட்டதான நம்மாழ்வாரின் பிறவி ஏற்றம் கூறப்பட்டது.