Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 78)

முதல் ப்ரகரணம்

பெற்றும் பேறிழந்து(ம்) கன்னிகையானவளும், எல்லாம் பெற்றாளாயும் தத்துக்கொண்டாள் என்பர் நின்றாரென்னுமவளும், நெடுங்காலமும் நங்கைமீ ரென்னுமவளுக்கு நேரன்றே.

– அதெங்ஙனேயென்னு மபேக்ஷையிலே பல ஹேதுக்களாலும் இவர் ஜந்ம வ்யாவ்ருத்தியை ப்ரகாசிப்பிக்கிறார் மேல்; அதில் ப்ரதமத்திலே அவர்களைப் பெற்றவர்கள் இவரைப் பெற்றவளுக்கு ஸத்ருசரல்லாமையை இசைவிக்கிறார் – (பெற்றுமென்று தொடங்கி).

கடந்த சூர்ணையில் கூறப்பட்டது போன்று “நம்மாழ்வாருடைய பிறவியானது வ்யாஸர் மற்றும் க்ருஷ்ணனுடைய பிறவி போன்று அல்ல” என்று எவ்விதம் கூற இயலும் என்ற கேள்வி எழலாம். இதற்கான விடையை, பல காரணங்களைக் காண்பித்து, நம்மாழ்வாரின் பிறவி மேன்மையை, அடுத்துள்ள மூன்று சூர்ணைகளில் அருளிச் செய்கிறார். அவற்றுள் முதலாவதாக, அவர்களைப் பெற்றவர்கள், நம்மாழ்வாரைப் பெற்றவருக்கு ஒப்பாகமாட்டார்கள் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, “திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற” என்கிறபடியே க்ருஷ்ணனைப் பிள்ளையாகப் பெற்றிருக்கச் செய்தேயும் அவனுடைய பால்யரஸம் ஒன்றுமநுபவிக்கப் பெறாதபடி “திருவிலேனொன்றும் பெற்றிலேன்” என்று பேறிழந்தவளான தேவகியும், “த்வீபே பதரிகாமிச்ரே பாதராயணமச்யுதம், பராசராத் ஸத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்” என்கிறபடியே வ்யாஸனைப் பிள்ளையாகப் பெற்றிருக்கச் செய்தேயும் அவனாலுள்ள ரஸம் ஒன்றுமநுபவிக்கப் பெறாதபடி “புந: கந்யா பவிஷ்யதி” என்ற பராசர வசனத்தாலே மீளவும் கந்யகையான மத்ஸ்யகந்தையும்; “எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே” என்னும்படி க்ருஷ்ணனுடைய பால சேஷ்டிதாதிகளையெல்லா மநுபவிக்கப் பெற்றிருக்கச் செய்தேயும், “தத்துக்கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ” என்றும், “இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி யுன்னை யென்மகனே யென்பர் நின்றார்” என்றும் அவனுடைய அதிமநுஷ சேஷ்டிதங்களடியாகத் தானும் பிறரும் சங்கிக்கும்படியான மாத்ருத்வத்தையுடைய யசோதையும், – “நெடுங்காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப்பெற்ற” என்று ஸக்ருதாச்ரயண மமைந்திருக்க ஆதராதிசயத்தாலே சிரகாலம் ஆச்ரித சுலபனான க்ருஷ்ணன் திருவடிகளை யாச்ரயித்து இவளைப் பெற்றவளாகவும், “நங்கைமீர் நீருமோர் பெண் பெறறு நல்கினீர்” என்று தொடங்கி - பூர்ணைகளான நீங்களும் ஒரு பெண்பிள்ளை பெற்று வளர்த்திகோளிறே, பகவல்லாஞ்சநாதிகளை திவாராத்ர விபாகமற வாய்புலற்றா நின்றுள்ள சபலையானவென் பெண்பிள்ளைபடியை எங்ஙனே சொல்லுவேனென்று வாசாமகோசரமான இவருடைய முக்தவசநாதிகளை அநுபவித்தவளாகவும் சொன்ன விவரைப் பெற்றவளுக்கு ஸத்ருசரன்றே யென்கை.

(பெற்றும்) பெரியாழ்வார் திருமொழி (1-2-17) - திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற – என்பதற்கு ஏற்ப க்ருஷ்ணனைத் தேவகி தனது புத்திரனாகப் பெற்றபோதிலும், (பேறு இழந்தும்) – அவனுடைய பாலலீலைகள் எதனையும் அனுபவிக்கப் பெறாத காரணத்தால், பெருமாள்திருமொழி (7-5) - திருவிலேனொன்றும் பெற்றிலேன் - என்பதற்கு ஏற்ப பேறு இழந்த தேவகியும். (பெற்றும்) மஹாபாரதம் - த்வீபே பதரிகாமிச்ரே பாதராயணமச்யுதம், பராசராத் ஸத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம் - இலந்தை மரங்கள் நிறைந்த கானகத்தில் ஸத்யவதி என்பவள் பராசரமுனிவர் மூலமாக, எதிரிகளை வாட்டவல்ல விஷ்ணுவின் அம்சமாக, பதரிகாச்ரமத்தின் அருகில் பாதராயணர் என்ற வேதவ்யாஸரைப் பெற்றாள் - என்பதற்கு ஏற்ப ஸத்யவதி, வ்யாஸரைப் புத்திரராகப் பெற்றெடுத்த போதிலும், (கன்னிகையானவளும்) – அந்தப் புத்திரன் மூலம் ஏற்படக்கூடிய எந்தவிதமான தாய்மை இன்பத்தையும் அனுபவிக்க இயலாமல், புந: கந்யா பவிஷ்யதி - நீ மீண்டும் கன்னிப்பெண்ணாக ஆவாய் - என்று பராசரர் கூறியதன் காரணமாக மீண்டும் கன்னியாக மாறிய மச்சகந்தியும். (எல்லாம் பெற்றாளாயும்) – பெருமாள்திருமொழி (7-5-3) - எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே – என்பதற்கு ஏற்ப க்ருஷ்ணனுடைய பாலலீலைகள் முழுவதையும் நன்றாக அனுபவிக்கும்படியான பேறு யசோதைக்குக் கிட்டியபோதிலும், (தத்துக்கொண்டாள் என்பர் நின்றா ரென்னுமவளும்) – பெரியாழ்வார் திருமொழி (2-1-7) - தத்துக்கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ – தத்து எடுத்துக்கொண்டாள் அல்லாமல் தானே ஈன்றாளோ - என்றும், பெரியாழ்வார் திருமொழி (3-1-3) - இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி யுன்னை யென்மகனே யென்பர் நின்றார் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அவனுடைய மனிதச் செயல்களுக்கு அப்பாற்பட்டதான செயல்கள் காரணமாகத் தானும், மற்றவர்களும் “க்ருஷ்ணனின் தாய் யசோதையோ” என்று சந்தேகம் கொள்ளும்படியாக உள்ள யசோதையும் (தேவகி, ஸத்யவதி, யசோதை ஆகிய மூவரும் நம்மாழ்வாரின் தாய்க்கு ஈடாக மாட்டார்கள் என்று அடுத்து உரைக்கிறார்) ….. – (நெடுங்காலமும்) – திருவிருத்தம் (37) – நெடுங்காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப்பெற்ற - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனைச் சரணம் புகுதல் என்பது ஒருமுறை செய்தால் மட்டுமே போதுமானதாக உள்ளபோதிலும், பக்தி காரணமாக நீண்ட காலம், அனைவருக்கும் எளிதில் அடையவல்லவனாகிய க்ருஷ்ணனின் திருவடிகளை அடைந்து, பராங்குசநாயகியான நம்மாழ்வாரைப் பெற்றவளாகவும்; (நங்கைமீ ரென்னுமவளுக்கு) - திருவாய்மொழி (4-2-9) – நங்கைமீர் நீருமோர் பெண் பெறறு நல்கினீர் – என்றுள்ள வரி தொடக்கமாக, “அனைத்தும் நிரம்பப் பெற்ற நீங்களும் ஒரு பெண்பிள்ளையைப் பெறறு வளர்க்கிறீர்கள்; ஆனால் எனது பெண் பிள்ளையையும் பாருங்கள்; ஸர்வேச்வரனுடைய சங்கு, சக்கரம் போன்றவற்றை பகல், இரவு என்றுள்ள கால மாறுபாடுகள் கூட அறியாமல் புலம்பியபடி உள்ள எனது பெண்பிள்ளையின் நிலையை நான் எவ்விதம் உரைப்பேன்”, என்று உரைப்பதற்கு இயலாதபடி நம்மாழ்வாருடைய திருவாயிலிருந்து வெளிவரும்படியான சொற்களை அனுபவித்தவளாகவும் உரைக்கப்படும் நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாயாருக்கு, (நேர் அன்றே) – ஒப்பாக மாட்டார்கள் அல்லவோ?