Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 77)

முதல் ப்ரகரணம்

க்ருஷ்ண க்ருஷ்ணத்வைபாயநோத்பத்திகள் போலன்றே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வஜந்மம்.

இவ்வாழ்வாருடைய உத்பத்தியை வ்யாஸ க்ருஷ்ணோத்பத்தி ஸமமாக வருளிச்செய்தார் கீழ். அவற்றில் இதுக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்செய்கிறார் மேல் – (க்ருஷ்ண க்ருஷ்ணேத்யாதியாலே).

நம்மாழ்வாருடைய பிறவியை, வ்யாஸர் மற்றும் க்ருஷ்ணன் ஆகியவர்களுடைய பிறவிக்குச் சமமாக கடந்த சூர்ணையில் அருளிச்செய்தார். அவர்களுடைய பிறவியைக் காட்டிலும் நம்மாழ்வாரின் பிறவி உயர்ந்து நிற்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனான” க்ருஷ்ணனுடையவும், கந்யாஸுதனான வ்யாஸனுடையவும் உத்பத்தி போலன்றே “கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற”வராய், “க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்” என்கிறபடியே க்ருஷ்ண விஷய த்ருஷ்ணைதான் ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற ஆழ்வாருடைய அவதாரமென்கை.

– திருப்பாவை (25) - ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாய் – என்பதற்கு ஏற்ப உள்ளதான க்ருஷ்ணனுடைய பிறவி மற்றும் கன்னிப்பெண்ணான மச்சகந்தியின் புத்திரனாகிய வ்யாஸருடைய பிறவி போன்றது இவருடைய பிறவி அல்ல; யாருடைய இவ்விதம் அல்ல என்றால் விடை அளிக்கிறார். திருவிருத்தம் (37) – கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளவராகவும், ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் (1-6) – க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம் - க்ருஷ்ணனிடம் கொண்ட ஆசை என்பதே ஒரு வடிவம் எடுத்தது போன்று அவதரித்த நம்மாழ்வார் - என்று கூறுவதற்கு ஏற்ப க்ருஷ்ணனிடம் உள்ள ஆசையே ஒரு வடிவம் எடுத்தது போன்றுள்ளவரும் ஆகிய விதத்தில் நம்மாழ்வாருடைய அவதாரம் உள்ளது.