Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 76)
முதல் ப்ரகரணம்
பேச்சுப் பார்க்கில் கள்ளப்பொய்ந்நூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்.
இங்ஙனன்றிக்கே பேச்சிலும், இது சொன்னவர் பிறவியிலும் தாழ்வு பார்த்து இப்ப்ரபந்தத்தை இகழுமவர்களுக்கு அநிஷ்ட ப்ரஸஞ்ஜநம் பண்ணுகிறார் - பேச்சித்யாதி வாக்ய த்வயத்தாலே.
இது மட்டுமே அல்லாமல், தமிழ் மொழிக்கும், தமிழில் வேதம் அருளிச்செய்த நம்மாழ்வாருடைய பிறவிக்கும் சிலர் தாழ்வை உரைத்து, இந்தத் திருவாய்மொழியை இகழக்கூடும். அப்படிப்பட்டவர்கள், தங்களுக்கு விருப்பம் இல்லாத நூல்களைக்கூட ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்று இந்தச் சூர்ணையில் உள்ள இரண்டு வாக்கியங்களால் கூறுகிறார்.
– அதாவது, ஸம்ஸ்ருதமாகவுமாம், த்ராவிடமாகவுமாம், பகவத்பரமானது உபாதேயம்; அந்யபரமானது த்யாஜ்யமென்று கொள்ளாதே பாஷாமாத்ராவதியாக விதி நிஷேதங்களை அங்கீகரித்து த்ராவிட பாஷையாகையாலே இது த்யாஜ்யமென்னப் பார்க்கில், “வெள்ளியார் பிண்டியார் போதியாரென்றிவரோதுகின்ற கள்ளநூல்” என்றும், “பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்றுமோதி” என்றும் சொல்லுகிற பாஹ்ய சாஸ்த்ராதிகளும் ஸம்ஸ்க்ருத பாஷையான வாகாரத்தாலே உபாதேயமாக வேணும். சதுர்த்த வர்ணோத்பவரென்று வக்தாவானவர் பிறவியைப் பார்த்து இத்தை யிகழுமளவில், மத்ஸ்யகந்தாஸுதனான வ்யாஸன் சொன்ன பஞ்சம வேதமான மஹாபாரதமும், கோபஜந்மாவான க்ருஷ்ணன் சொன்ன ஷட்க த்ரயாத்மகமான கீதோபநிஷத்தும் த்யாஜமாக வேணுமென்கை. இத்தால் பாஷாமாத்ரத்தையும், வக்த்ரு ஜன்மத்தையும் பார்த்து இப்ப்ரபந்தத்தை இகழுமளவில் வரும் விரோதம் காட்டப்பட்டது. அதவா, பாஷா வக்த்ரு ஜந்மமாந்த்யங்கள் நிரூபிக்கலாகாதென்று கீழ்ச்சொன்னபடியன்றிக்கே ஸம்ஸ்க்ருத பாஷையாயுள்ளதும், ஜந்மகௌரவமுடையார் சொல்லுமதுவுமே உபாதேயமென்று கொள்ளுமவர்களுக்கு அநிஷ்ட ப்ரஸஞ்ஜநம் பண்ணுகிறார் - பேச்சுப்பார்க்கிலித்யாதி வாக்ய த்வயத்தாலே. அதாவது - பகவத் பரத்வாந்ய பரத்வங்களைப் பரிக்ராஹ்ய பரித்யாஜ்யத்வங்களுக்கு ஹேதுவாக்காதே ஸம்ஸ்க்ருத பாஷையானது உபாதேயமென்று பேச்சினுடைய கௌரவமாத்ரத்தை பார்க்கில், “கள்ளநூல்”, “பொய்ந்நூல்” என்று கழிக்கப்பட்ட பாஹ்ய சாஸ்த்ராதிகளும் பரிக்ராஹ்யங்களாம். யதாஜ்ஞாநர் சொன்னது உபாதேயம், அயதாஜ்ஞானர் சொன்னது த்யாஜ்யமென்று கொள்ளாதே, ஜந்ம கௌரவமுடையார் சொன்னதே உபாதேயம்; அல்லாதார் சொன்னது த்யாஜ்யமென்று பிறவி மாத்ரத்தையே பார்க்கில், மத்ஸ்யகந்தா ஸுதனான வ்யாஸன் சொன்ன பஞ்சமவேதமும், கோபஜந்மாவான க்ருஷ்ணன் சொன்ன கீதோபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணுமென்கை. இத்தாலே பேச்சில் கௌரவமும், சொல்லுமவர்கள் பிறவியில் கௌரவமும் ப்ரபந்தோபாதேயத்வ ஹேதுவாகச் சொல்லுமளவில் வருமநிஷ்டம் காட்டப்பட்டது.
(பேச்சுப்பார்க்கில்) வடமொழியில் இருந்தாலும், தென்மொழியில் இருந்தாலும், பகவானைப் பற்றி உரைக்கும் நூல்கள் ஏற்கத்தக்கதே ஆகும்; மற்ற விஷயங்கள் குறித்து உரைக்கும் நூல்கள் மட்டுமே தள்ளத்தக்கவை ஆகும். ஆனால் இவ்விதம் கொள்ளாமல், அந்தந்த நூல்கள் இயற்றப்பட்ட மொழியை மட்டுமே கருத்தில் கொண்டு, “இவற்றை ஏற்கவேண்டும், இவற்றைத் தள்ளவேண்டும்” என்றுள்ள விதிகளைப் பின்பற்றி, தமிழில் ஏற்பட்டது என்பதால் இந்தத் திருவாய்மொழியானது கைவிடத்தக்கது என்று சிலர் கூறக்கூடும். (கள்ளப்பொய்ந்நூல்களும் க்ராஹ்யங்கள்) – இவ்விதம் உரைத்தால், பெரியதிருமொழி (9-7-9) - வெள்ளியார் பிண்டியார் போதியாரென்றிவரோதுகின்ற கள்ளநூல் – என்றும், பெரியதிருமொழி (2-5-2) - பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்றுமோதி – என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளதான மற்ற மத நூல்கள் பலவும் வடமொழியில் இருந்தால், அவைகளையும் ஏற்கவேண்டும் என்றாகிவிடும். (பிறவி பார்க்கில்) - திருவாய்மொழியை அருளிச்செய்த நம்மாழ்வார், நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவர் என்று, பிறவியை ஆராய்ந்து திருவாய்மொழியை சிலர் இகழக்கூடும். இவ்விதம் செய்தால், (அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்) - மச்சகந்தியின் புத்திரராகிய வ்யாஸர் அருளிச்செய்த ஐந்தாவது வேதம் என்று போற்றப்படும் மஹாபாரதமும், இடையர் குலத்தில் அவதரித்த க்ருஷ்ணன் திருவாய் மலர்ந்த பதினெட்டு அத்யாயங்கள் கொண்டதான ஸ்ரீமத்பகவத்கீதை என்னும் உபநிஷத்தும் கைவிடத்தக்கதே என்றாகிறது. ஆக இதன் மூலம், மொழி மற்றும் ஆழ்வாரின் குலம் ஆகியவற்றைக் காரணம் காண்பித்து, இந்தத் திருவாய்மொழியை இகழ்வதில் உள்ள விரோதம் உணர்த்தப்பட்டது. அல்லது வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். நூலின் மொழி, நூலை உண்டாக்கியவரின் குலம் ஆகியவற்றை ஆராயக்கூடாது என்று கூறப்பட்டது. இவ்விதம் கொள்ளாமல், வடமொழியில் உள்ள நூல்கள் கூறுபவை மற்றும் உயர்ந்த குலத்தில் வந்தவர்கள் கூறுபவை மட்டுமே ஏற்கத்தக்கது என்று கூறுவர்கள், தங்களுக்கு விருப்பம் அற்ற நூல்களைக்கூட, ஒரு தலையாக ஏற்கவேண்டிய நிலை வரும் என்று இந்த இரண்டு வாக்கியங்களில் உரைப்பதாகவும் கொள்ளலாம். இந்தக் கருத்தை இனி விளக்குகிறார். (பேச்சுப் பார்க்கில்) – பகவானைக் குறித்து உரைத்தல், மற்ற விஷயங்கள் குறித்து உரைத்தல் என்பதால் முறையே ஏற்றுக்கொள்ளத்தக்கவை, ஏற்கத்தகாதவை என்று காரணம் காண்பிக்காமல், வடமொழியில் அமைந்த காரணத்தால் எத்தகைய நூலும் ஏற்கத்தக்கவை என்று மொழியின் பெருமையை மட்டுமே காரணமாகச் சிலர் ஏற்கக்கூடும். இவ்விதம் கொண்டால், (கள்ளப்பொய்ந்நூல்களும் க்ராஹ்யங்கள்) – பெரியதிருமொழி (9-7-9) - வெள்ளியார் பிண்டியார் போதியாரென்றிவரோதுகின்ற கள்ளநூல் - என்றும், பெரியதிருமொழி (2-5-2) - பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தள்ளப்பட்ட மற்ற சமய நூல்களும் ஏற்கத்தக்கவை என்றாகிறது. (பிறவி பார்க்கில்) – மெய்யான ஞானம் உள்ளவர்கள் கூறுபவை ஏற்கத்தக்கவை, மற்றவர்கள் கூறுவது தள்ளத்தக்கவை என்று கொள்ளாமல், ஒருவருடைய பிறவியை ஆராய்ந்து, இவ்விதம் கொள்ளத்தக்கவற்றையும் ஏற்கத்தக்கவற்றையும் தீர்மானித்தால், (அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்) - மச்சகந்தியின் புத்திரராகிய வ்யாசர் உரைத்த ஐந்தாம் வேதமாகிய மஹாபாரதமும், இடையர் குலத்தில் அவதரித்த க்ருஷ்ணன் அருளிச்செய்த ஸ்ரீமத்பகவத்கீதை என்ற உபநிஷத்தும் தள்ளத்தக்கவை என்றாகிவிடும். ஆக இப்படியாக, ஒரு நூல் அமையப் பெற்ற மொழியின் கௌரவம், அந்த நூலை ஏற்படுத்தியவருடைய பிறவியின் கௌரவம் ஆகியவற்றை, ஒரு நூல் ஏற்றுக்கொள்வதற்கான காரணமாக உரைத்தால் வரக்கூடிய தோஷம் கூறப்பட்டது.