Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 75)
முதல் ப்ரகரணம்
வீட்டின்ப வின்பப் பாக்களில் த்ரவ்யபாஷா நிரூபண ஸமம் இன்பமாரியி லாராய்ச்சி.
இப்படி ப்ரமாண ப்ரமேய வைபவத்தை ப்ரதிபாதித்த வநந்தரம் ப்ரமாத்ரு வைபவத்தை விஸ்தரேண ப்ரதிபாதிக்கிறார் மேல். அதில் ப்ரதமத்திலே ப்ரமாண ப்ரமேயங்கள் இப்படி விலக்ஷணமா யிருந்ததாகிலும் இப்ப்ரமாண வக்தாவானவர் சதுர்த்த வர்ணரன்றோ வென்ன, பாகவதோத்தமரான இவருடைய ஜந்ம நிரூபண தோஷத்தை ப்ரமாண ப்ரமேயங்களில் த்ரவ்யபாஷா நிரூபண தோஷம் கீழுக்த மன்றிக்கே யிருக்கச் செய்தே அத்தை ஸித்தவத்கரித்து த்ருஷ்டாந்தமாக்கிக் கொண்டருளிச் செய்கிறார் (வீட்டின்பமென்று தொடங்கி).
ப்ரமாணமாக உள்ள திருவாய்மொழி, அதன் மூலம் அறியப்படும் ப்ரமேயமான அர்ச்சாவதாரம் ஆகியவற்றின் மேன்மைகளை இதுவரை அருளிச்செய்தார். தொடர்ந்து இத்தகைய திருவாய்மொழியை அருளிச்செய்தவருடைய வைபவத்தை விரிவாக அருளிச் செய்கிறார். முதலில், ப்ரமாணம் மற்றும் ப்ரமேயங்களான திருவாய்மொழியும் அர்ச்சாவதாரமும் அனைத்தைக் காட்டிலும் மேம்பட்டதாக உள்ளபோதிலும், இந்தத் திருவாய்மொழியை அருளிச்செய்தவர் நம்மாழ்வார் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவர் அல்லவோ என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அளிக்கிறார். திருவாய்மொழி ஏற்படுத்தப்பட்ட மொழி, அர்ச்சாவதார விக்ரஹம் உண்டாக்கத் தேவைப்பட்ட பொருள் ஆகியவை கொண்டு அவற்றை ஆராய்ந்து இகழ்ந்தால், அதனால் பாவங்களே ஏற்படும் என்று இதுவரை உள்ள சூர்ணைகளில் நேரடியாகக் கூறப்படவில்லை என்றாலும், அதனைச் செய்வதால் பாவங்கள் ஏற்படும் என்று கூறாமல் கூறப்பட்டது என்றே கொள்ளவேண்டும்; இதனையே உவமையாக்கி, பாகவதர்களில் மிகவும் உயர்ந்த நம்மாழ்வாருடைய பிறவியை ஆராய்ந்தால் பெருங்குற்றமே வந்து சேரும் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார். குறிப்பு – இந்தச் சூர்ணையை “இன்பமாரியில் ஆராய்ச்சி வீட்டின்பத்தில் த்ரவ்ய நிரூபன ஸமம், இன்பப்பாவில் பாஷா நிரூபண ஸமம் - என்று பிரித்துப் படிக்கவேண்டும். இங்கு இன்பமாரி = நம்மாழ்வார், வீட்டின்பம் = அர்ச்சை, இன்பப்பா = திருவாய்மொழி, திரவியம் = கல், உலோகம்.
– அதாவது “கனிவார் வீட்டின்பம்” என்கிறபடியே பகவத் விஷயமென்றால் உளம் கனிந்திருக்குமவர்களுடைய க்ருஹங்களிலே அவர்களுகந்ததொரு த்ரவ்யத்தை திருமேனியாகக் கொண்டிருந்து இன்பத்தை விளைக்கிற அர்ச்சாவதாரத்தில் த்ரவ்ய நிரூபணத்தோடும், “அந்தமிழினின்பப்பா” என்கிறபடியே த்ராவிட ரூபமாக பகவத் குண கண ப்ரதிபாதகதயா விசேஷஜ்ஞர்க்கு ஆநந்தாவஹமாயிருக்கிற திருவாய்மொழியில் பாஷாநிரூபணத்தோடும் துல்யதோஷம் “அடியார்க்கின்பமாரி” என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் திருவாய்மொழி முகத்தாலே ஆநந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார்பக்கல் உத்பத்தி நிரூபணமு மென்கை. – “விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதி ய: கரௌ மாநுஷம் பாவமுபௌ நரக பாதிநௌ”, “யோ விஷ்ணோ ப்ரதிமாகாரே லோஹபாவம் கரோதி வை, குரௌச மாநுஷம் பாவமுபௌ நரகபாதிநௌ”, “அர்ச்சாவதாரோபாதாந வைஷ்ணவோத்பத்தி சிந்தநம், மாத்ரு யோநி பரீக்ஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண:”, “ஹரிகீர்த்திம் விநைவாந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம, பாஷாகாநம் ந காதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்”, “கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் ஸர்வ யோநிஷு, ப்ரத்யக்ஷிதாத்மநா தாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்”, “சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா, வீக்ஷதே ஜாதி ஸாமாந்யாந் ஸ யாதி நரகம் நர:” ஏவமாதி சாஸ்த்ர வசனங்களை ஹ்ருதீகரித்திறே இவரிப்படி யருளிச்செய்தது. “அவஜாநந்தி மாம் மூடா:” என்கிறபடியே வாசியறியாமல் அவஜ்ஞை பண்ணும் மூடர்க்கும் “பச்யந்தி கேசிதநிசம் த்வதநந்ய பாவா:” என்கிறபடியே வாசியறிந்து ஆதரிக்கும் அநந்யபாவர்க்கும் மூன்றிடமு மொக்குமிறே.
(வீட்டின்பத்தில்) - திருவாய்மொழி (2-3-5) - கனிவார் வீட்டின்பம் - என்பதற்கு ஏற்ப பகவத் விஷயம் என்றால் சட்டென்று உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும்படியாக உள்ளவர்களுடைய வீடுகளில், அவர்களுக்கு மகிழ்வை அளிக்கவல்ல ஏதேனும் ஒரு பொருளைத் தனது திருமேனியாகக் கொண்டு நின்று, அவர்களுக்கு பரமானந்தத்தை அளிக்கின்ற அர்ச்சாவதாரத்தை, (த்ரவ்ய நிரூபணம்) – அத்தகைய அர்ச்சாவதார விக்ரஹமானது செய்யப்பட்டதான பொருள்கள் காரணமாக அதனைத் தாழ்வாக உரைப்பதற்கும், (இன்பப்பாவில்) - பெருமாள் திருமொழி (1-4) - அந்தமிழினின்பப்பா - என்பதற்கு ஏற்ப தமிழ் ரூபமாக நின்று பகவானுடைய திருக்கல்யாண குணங்கள் கூட்டத்தை உரைப்பதால் சான்றோருக்கு ஆனந்தத்தை அளிப்பதாக உள்ள திருவாய்மொழியை, (பாஷா நிரூபணம்) - அது உண்டாக்கப்பட்ட மொழியைக் காரணமாகக் கொண்டு தாழ்வாக உரைப்பதற்கும், (ஸமம்) - ஒப்பாகும். எது எவ்விதம் ஒப்பாகும்? விடை அளிக்கிறார். (இன்பமாரியில்) - திருவாய்மொழி (4-5-10) - அடியார்க்கின்பமாரி - என்பதற்கு ஏற்ப ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் திருவாய்மொழி மூலமாகப் பேரானந்தம் என்னும் மழையைப் பொழிகின்ற மேகம் போன்றவராகிய நம்மாழ்வாரின், (ஆராய்ச்சி) - பிறவியை இன்னது என்று ஆராய்தல் ஆகும். இவ்விதம் இவர் அருளிச்செய்ததன் காரணம், பின்வரும் பல சாஸ்த்ர வாக்கியங்களைத் திருவுள்ளத்தில் கொண்டதால் ஆகும். – ப்ரஹ்மாண்டபுராணம் - விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதி ய: கரௌ மாநுஷம் பாவமுபௌ நரக பாதிநௌ - யார் ஒருவன் மஹாவிஷ்ணுவின் அர்ச்சா விக்ரஹங்களை அவை உலோகம் என்ற சிந்தனையில் காண்கிறானோ அல்லது யார் ஒருவன் ஆசார்யனை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணுகிறானோ அவர்கள் இருவரும் நரகத்தில் விழுவார்கள். யோ விஷ்ணோ ப்ரதிமாகாரே லோஹபாவம் கரோதி வை, குரௌச மாநுஷம் பாவமுபௌ நரகபாதிநௌ – யார் ஒருவன் அர்ச்சா விக்ரஹமாக எழுந்தருளியுள்ள மஹாவிஷ்ணுவிடம் உலோகம் என்னும் எண்ணத்தை வைக்கிறானோ, யார் ஒருவன் ஆசார்யனிடம் மனிதன் என்னும் எண்ணத்தை வைக்கிறானோ, அவர்கள் இருவரும் நரகம் செல்வர். அர்ச்சாவதாரோபாதாந வைஷ்ணவோத்பத்தி சிந்தநம், மாத்ரு யோநி பரீக்ஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண: - அர்ச்சாவதார விக்ரஹங்களின் மூலத்தை ஆராய எண்ணுதல், ஸ்ரீவைஷ்ணவனின் குலத்தை ஆராய எண்ணுதல் ஆகியவை, தாயின் யோனியை ஆராய்வதற்கு ஒப்பாகும் என்று சான்றோர் கூறுவர். ஹரிகீர்த்திம் விநைவாந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம, பாஷாகாநம் ந காதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் – அரசனே! அந்தணன் ஒருவன் மஹாவிஷ்ணுவைக் குறித்து அல்லாமல் உள்ள மற்ற செய்யுள்களால் (வடமொழி அல்லாமல் மற்ற மொழிகளில் உள்ள) பாடுதல் கூடாது. ஆகவே நீ மற்ற பாக்ஷையில் பாடியதற்காக நாட்டை விட்டுத் துரத்திய காரணத்தால் உன்னால் பாவம் செய்யப்பட்டது. பவிஷ்யோத்தர புராணம் – கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் ஸர்வ யோநிஷு, ப்ரத்யக்ஷிதாத்மநா தாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம் - யோகிகள் இந்தப் பூமியில் அனைத்துவிதமான பிறவிகளிலும் பிறக்கிறார்கள். ஜீவாத்மா அனைத்திற்கு ஈச்வரனாகிய பரமாத்மாத்வை நேரில் கண்ட இந்த யோகிகளின் குலம், தொழில் போன்றவற்றை ஆராய்தல் கூடாது. சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா, வீக்ஷதே ஜாதி ஸாமாந்யாந் ஸ யாதி நரகம் நர: - நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவன், வேடுவன், நாய் இறைச்சி உண்பவன் ஆகியவர்களில் யாரேனும் பகவானின் பக்தனாக இருந்தால், அவர்களை அவ்விதம் அந்தந்த குலங்களில் வைத்துக் காண்பவன் நரகம் செல்வான். கீதை (9-11) – அவஜாநந்தி மாம் மூடா: - மனிதனாக ரூபம் எடுத்து அவதரித்த என்னை அறிவற்றவர்கள், நான் சாதாரண மனிதன் என்று கருதி அவமதிக்கிறார்கள் - என்பதற்கு ஏற்ப உள்ளவர்களான மூடர்கள் மற்றும் ஸ்தோத்ரரத்னம் (16) – பச்யந்தி கேசிதநிசம் த்வதநந்ய பாவா: - உன்னையே எப்போதும் சிந்திப்பவர்களாக, மற்ற விஷயங்களை நோக்காதவராக - என்பதற்கு ஏற்ப உள்ள ஞானிகள் ஆகிய இரு பிரிவினருக்கும் மூன்று இடங்களும் ஒன்றே ஆகும் (அதாவது ஏதும் அறியாதவர்கள் அறியாமை காரணமாக பர, வ்யூஹ, விபவங்கள் ஒன்று என உணர்வர்; ஞானிகள் அனைத்தும் அறிந்ததால் அவை மூன்றும் ஒன்று என உணர்வர்).