Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 74)

முதல் ப்ரகரணம்

பெரும்புறக்கடலும் ச்ருதிஸாகரமும் அலைத்தாழ்ந்தோடு மிடங்களில் அயோக்யர்க்குச் சமைத்த மடுவும் சாய்கரகமும் மாநமேய சரமம்.

இனிமேல் இப்படியிருந்துள்ள திருவாய்மொழியும், ஏதத் ப்ரதிபாத்யமான அர்ச்சாவதாரமுமாகிற ப்ரமாண ப்ரமேய சரமங்கள் இவற்றினுடைய பூர்வா வஸ்த்தைகளில் அவகாஹன க்ஷமரல்லாதார்க்கு ஸுலபமாகக் கல்பிதங்களானவை யென்று “வேதவேத்ய” இத்யாதி வாக்யத்திற் சொன்ன ப்ரமாண ப்ரமேய சரமங்களை நிகமிக்கிறார் - (பெரும்புறக்கடலென்று தொடங்கி).

இப்படியாக உள்ள திருவாய்மொழி என்னும் ப்ரமாணத்தின் எல்லையும், திருவாய்மொழியில் கூறப்படுவதான அர்ச்சாவதாரம் என்னும் ப்ரமேயத்தின் (ப்ரமாணத்தால் அறியப்படும் வஸ்து = ஸர்வேச்வரன்) எல்லையும் – திருவாய்மொழிக்கு முன்பு உள்ளவற்றையும் (வேதங்கள், பாஞ்சராத்ரம், இராமாயணம், மஹாபாரதம் போன்றவை), அர்ச்சாவதாரத்தின் முன்பு உள்ளவற்றையும் (பர, வ்யூஹ, விபவ, அந்தர்யாமி நிலைகள்) - அறிந்து கொண்டு வணங்குவதற்கு வலிமை இல்லாதவர்கள், மிகவும் எளிதாக அறியும்படி படியாக ஏற்பட்டவை என்று, சூர்ணை (70) - வேதவேத்ய – என்பதில் கூறப்பட்டதான ப்ரமாண ப்ரமேய எல்லைகளை இந்தச் சூத்திரத்தில் நிறைவு செய்கிறார்.

– அதாவது, எல்லாக் கடலுக்கும் புறம்பாய் தான் பெருத்திருக்கிற கடல் போலே அபரிச்சேத்யமா யிருக்கிற பரவஸ்துவான ப்ரமேயம் – ஸமுத்ரம் தரங்கிதமாய் அலைந்து நிற்குமிடம்போலே ஜ்ஞாநாதி ஷட்குண பரிபூர்ணமான தானே அவற்றிலே இவ்விரண்டு குணங்களை ப்ரகடிப்பித்துக் கொண்டு ஸங்கர்ஷணாதி ரூபேண வ்யூஹித்திருக்குமிடத்திலும், ஸமுத்ரத்தில் நிலை காணவொண்ணாதபடி ஆழ்ந்திருக்கு மிடம்போலே, “யமாத்மா ந வேத” என்றும், “கட்கிலீ” என்றும் சொல்லுகிறபடியே அத்ருச்யத்வேந அந்தர்யாமியாய் நிற்குமிடத்திலும், ஸமுத்ரமானது கழிகளாய்க் கொண்டோடு மிடம்போலே, “மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந:”, “யஸ்யாம் ஜாதோ ஜகந்நாதஸ் ஸாக்ஷாத் விஷ்ணுஸ் ஸநாதந:”, “நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்”, “விஷ்ணுர் மாநுஷரூபேண சசார வஸுதாதலே” என்கிறபடியே, கண் காண வந்து தோன்றி “ஞாலத்தூடே நடந்து” திரிந்த அவதாரமான விடத்திலும், தேச கரண கால விப்ரக்ருஷ்டதைகளாலே கிட்டி யனுபவிக்க யோக்யரல்லாதார்க்கு “அதிலே தேங்கின மடுக்கள் போலே” என்கிறபடியே தேசாதி விப்ரகர்ஷ கந்தமில்லாதபடி கல்பிக்கப்பட்ட அத்யந்த ஸுலப விஷயம் ப்ரமேயாவிர்ப்பாவ பரம்பரையினுடைய சரமாவஸ்த்தையான அர்ச்சாவதாரம். – “மதிமந்தாநமாவித்த்ய யேநாஸௌ ச்ருதி ஸாகராத்” என்கிறபடியே அபரிச்சேத்யமாய் பரத்வபரமான வேதம் – ஸமுத்ர தரங்கித ப்ரதேசம்போலே தத் வ்யூஹ ப்ரதிபாதகதயா அவஸ்த்தாந்தராபந்நமாய் பஞ்சராத்ரமான விடத்திலும் ஸமுத்ரத்தில் அகாத ஸ்தலம்போலே ததந்தர்யாமித்வ ப்ரதிபாதகதயா அவகாஹித்து அர்த்த தர்சநம் பண்ணவரிதாம்படி மந்வாதிஸ்ம்ருதி ரூபமான விடத்திலும், ஸமுத்ரம் கழிகளா யோடுமாபோலே ததவதார ப்ரதிபாதகதயா இதிஹாஸ ரூபேண விஸ்த்ருதமாய் நடக்கிற விடத்திலும், ஜ்ஞாநசக்தியாதி ஸங்கோசத்தால் அவகாஹித்து விடாய் தீர மாட்டாதார்க்கு விடாய்த்தவன் வாயை அங்காந்திருக்கத் தானே தண்ணீர் வந்து குதிக்கும்படி கல்பிதமான சாய்கரகம்போலே அநாயாஸேந உபஜீவிக்கலாம்படி அத்யந்த ஸுலபமான சாஸ்த்ரம் ப்ரமாண பூதமான வேதத்தினுடைய ஆவிர்ப்பாவ பரம்பரா சரமாவஸ்தையான திருவாய்மொழி யென்கை. இத்தால் மடுவும் சாய்கரகமு மென்கையாலே ப்ரமாண ப்ரமேயங்களினுடைய ஒளியும் எளிமையும் இனிமையும் தொடக்கமான ஸத்குண ஸாஹித்யம் சொல்லப்பட்டது.

(பெரும் புறக்கடல்) - அனைத்துக் கடல்களைக் காட்டிலும் பெரியதாகப் பரந்து விரிந்துள்ள கடல் போன்று அளவிட இயலாதபடி உள்ள உயர்ந்த வஸ்துவான ப்ரமேயம் [பரம்பொருள்] தோன்றியதான, (அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில்) – கடலானது அலைகளுடன் கூடியதாக அலைந்தபடி நிற்பது போன்று, ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களும் பரிபூர்ணமாகத் தன்னிடம் உள்ளபோதிலும், அவற்றில் பலம் மற்றும் ஞானம் கொண்டுள்ள ஸங்கர்ஷணன் என்னும்படியாக இரண்டு இரண்டு குணங்கள் கொண்டுள்ள வ்யூஹங்கள் என்ற நிலைகள்; ஸமுத்திரமானது ஆழங்காண இயலாதபடி உள்ள இடங்கள் போன்று, ப்ருஹத் உபநிஷத் (5-7-22) - ய யமாத்மா ந வேத - எந்த ஒரு பரமாத்மாவை ஆத்மா அறிய இயலாமல் உள்ளதோ - என்றும், திருவாய்மொழி (7-2-3) – கட்கிலீ - என்றும் கூறப்படும்படியாகக் காண இயலாத தன்மையுடன் கூடியதான அந்தர்யாமி என்ற நிலை; ஸமுத்ரமானது கழிகளாகக் கொண்டு ஓடும் இடங்கள் போன்று, இராமாயணம் அயோத்யாகாண்டம் (1-7) – மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந: - மனித ரூபத்தில் நித்யனாக உள்ள மஹாவிஷ்ணு அவதரித்தான் - என்றும், யஸ்யாம் ஜாதோ ஜகந்நாதஸ் ஸாக்ஷாத் விஷ்ணுஸ் ஸநாதந: – ஜகந்நாதனாகிய மஹாவிஷ்ணு எங்கு அவதரித்தானோ - என்றும், ஹரிவம்சம் (113-62) - நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் - ஆதிசேஷன் என்ற மெத்தை மீது சயனிக்கும் அவன் மதுராவிற்கு வந்தான் – என்றும், விஷ்ணுர் மாநுஷரூபேண சசார வஸுதாதலே - மஹாவிஷ்ணு மனிதரூபத்தில் இந்தப் பூமியில் ஸஞ்சரித்தான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, கண்களால் அனைவரும் காணலாம்படியாக அவதரித்து, திருவாய்மொழி (6-9-2) – ஞாலத்தூடே நடந்து - என்பதற்கு ஏற்ப இந்தப் பூமியில் நடந்து திரிந்ததான விபவம் என்ற அவதார நிலை. (அயோக்யர்க்கு) - இந்த நிலைகளை அந்தந்த காலத்தில் இல்லாத காரணம், மாமிசக்கண்கள் கொண்டு காண இயலாத காரணம் ஆகியவற்றால் அனுபவிக்க இயலாதபடி உள்ளவர்களுக்கு, (சமைத்த மடுவும்) - சூர்ணை (39) - அதிலே தேங்கின மடுக்கள் போலே - என்பதற்கு ஏற்ப இடத்தின் காரணமாகவும், காலத்தின் காரணமாகவும் ஏற்படும் எல்லைகள் ஏதும் இல்லாதபடி ஏற்பட்டதும், மிகவும் எளியதும், ஸர்வேச்வரனுடைய ஐந்து நிலைகளில் எல்லையாக உள்ளதும் ஆகிய அர்ச்சாவதாரம். (ச்ருதி ஸாகரம்) – மதிமந்தாநமாவித்த்ய யேநாஸௌ ச்ருதி ஸாகராத் – எந்த வ்யாஸபகவானால் வேதம் என்ற கடலில் ஞானம் என்று மத்து கொண்டு கடைந்து – என்பதற்கு ஏற்ப, அளவிட இயலாதபடியான ஸர்வேச்வரனுடைய பரத்வ நிலையைக் கூறும் வேதமானது, (அலைத்து) - கடலில் அலைகள் நிரம்பி உள்ளதான இடங்கள் போன்று ஸர்வேச்வரனுடைய வ்யூஹ நிலையை உரைப்பதன் காரணமாக வேறு ஒரு இடத்தை அடைந்தது போன்ற பாஞ்சராத்ரமாக மாறும் இடங்கள், (ஆழ்ந்து) - ஸமுத்ரத்தில் ஆழமான இடம் போன்று, அந்தர்யாமி நிலையை உரைப்பதால் “இன்ன பொருள் இங்கு உரைக்கப்படுகிறது என்று உறுதிபட உணர்வதற்குக் கடினமான மனுஸ்ம்ருதி போன்ற ஸ்ம்ருதிகளாக மாறும் இடங்கள், (ஓடும்) - ஸமுத்திரம் கழிகளாக ஓடும் இடங்கள் போன்று ஸர்வேச்வ்ரனுடைய அவதாரங்கள் பற்றி மிகவும் விரிவாக உரைப்பதால் இதிகாசங்கள் என்பதான ரூபங்கள் எடுக்கும் இடங்கள் என்பதான மூன்று இடங்கள். (அயோக்யர்க்கு) – ஞானம், சக்தி போன்றவற்றால் குறைவுள்ள காரணத்தால் நீர் நிறைந்த மடு ஒன்றில் மூழ்கியபடி இருந்தாலும் தாகம் தீராதவர்கள் போன்றுள்ள வர்களுக்கு. (சமைத்த சாய்கரகம்) - அதிக தாகம் எடுத்த ஒருவன் தனது வாயைத் திறந்து வைத்துள்ளபோது தானாகவே வந்து அவனுடைய வாயில் நீர் ஊற்றுவதான சாய்ந்த நிலையில் உள்ள பாத்திரம் போன்று, (மாநமேய சரமம்) - பெருமுயற்சி எடுத்து களைத்துப்போதல் என்பது இன்றி எளிதாகக் கற்கலாம்படி மிகவும் எளிமையான சாஸ்த்திரம் எதுவென்றால், ப்ரமாணமாக உள்ள வேதங்களுடைய வெளிப்பாடாக உள்ளதும், பலவற்றிலும் எல்லையாக உள்ளதும் ஆகிய திருவாய்மொழியே ஆகும். இந்தச் சூர்ணையில், அர்ச்சாவதாரத்தை மடு என்றும், திருவாய்மொழியைச் சாய்கரம் என்றும் கூறுவதால், ப்ரமாணம் மற்றும் ப்ரமேயம் ஆகியவற்றுடைய வெளிப்படும் தன்மை, எளிமை, இனிமை ஆகியவை தொடக்கமாக உள்ள உயர்ந்த தன்மைகளின் சேர்க்கை உணர்த்தப்பட்டது.