Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 73)

முதல் ப்ரகரணம்

ம்ருத்கடம்போலன்றே பொற்குடம்.

இன்னமும் வேதகார்யமாயிருக்கச் செய்தே காரணமானவதுபோல் அதிக்ருதாதிகாரமன்றியே இது ஸர்வாதிகாரமா யிருக்கக் குறையில்லை யென்னு மிடத்துக்கு ஒரு த்ருஷ்டாந்த விசேஷம் தர்சிப்பிக்கிறார் (ம்ருத்கடமித்யாதி).

– இந்தத் திருவாய்மொழி வேதத்தின் கார்யமாக (உதாரணம்: மண் = காரணம், பானை = கார்யம்) உள்ளபோதிலும், காரணப்பொருளான வேதங்கள் போன்று ஒரு சிலருக்கு மட்டுமே உரியது என்பது போன்றல்லாமல், அனைவருக்கும் உரியதாக இருப்பதற்கு எந்தவிதமான குறையும் இல்லை என்பதை ஒரு உதாரணம் மூலம் அருளிச் செய்கிறார்.

– அதாவது, ம்ருத்கடம் தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும் தொடவொண்ணாதாயிருக்க, பார்த்திவமாயிரா நிற்கச்செய்தே பொற்குடம் எல்லார்க்கும் ஸ்பர்சிக்கலாயிரா நின்றதிறே யென்கை. இத்தால் காரணமான வேதம் அதிக்ருதாதிகாரமா யிருந்தாலும் தத்கார்யமானவிது ஸம்ஸ்கார விசேஷத்தாலே ஸர்வாதிகாரமாகக் குறையில்லை யென்றதாய்த்து. த்ருஷ்டாந்தத்திலே தோற்றுகிற காரணாத் கார்ய ச்லாக்யதாதிகள் தார்ஷ்டாந்திகத்திலும் விவக்ஷிதம்.

– மண்ணால் செய்யப்பட்ட குடம், அதனைத் தொடுவதற்கு வல்லவர்கள் அல்லாமல் எல்லாரும் தொட இயலாத ஒன்றாக உள்ளது; ஆனால் சுட்டு எடுக்கப்பட்ட குடம் ஒன்று, மண்ணால் செய்யப்பட்டது என்றாலும், எல்லாராலும் தொடக்க்கூடியதாக உள்ளது அல்லவோ? இது போன்றே, காரணமாக உள்ள வேதம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே உரியதாக உள்ளபோதிலும், அதன் கார்யமாக உள்ள திருவாய்மொழி அனைவருக்கும் உரியதாக உள்ளது. மண்குடம், பொற்குடம் என்ற உபமானத்தில் காணப்படுவதான காரணத்தைக் காட்டிலும், கார்யமான பொற்குடத்திற்குச் சிறப்புக்கள் அதிகம் என்பது போன்றவை, உபமேயமான வேதம் மற்றும் திருவாய்மொழிக்கும் உள்ளது என்பது தெளிவு [அதாவது காரணமான வேதங்களைக் காட்டிலும், கார்யமான திருவாய்மொழிக்குச் சிறப்பு அதிகம்].