Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 72)

முதல் ப்ரகரணம்

மேகம் பருகின ஸமுத்ராம்புபோலே நூற்கடற்சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.

ஆனால் வேதத்துக்கு அத்யயந கால நியதியும் அதிகாரி நியதியு முண்டாயிரா நின்றதே. அந்த வேதாவதாரமான இதுக்கு அவையின்றிக்கே யொழிவானென் னென்ன வருளிச்செய்கிறார் (மேகம் பருகின வித்யாதி).

ஆனால் வேதங்களை அத்யயனம் செய்வதற்கு நேரக்கட்டுப்பாடுகள், தகுதிகள் போன்ற பலவும் உள்ளன. அத்தகைய வேதத்தின் அவதாரமாகவே உள்ளதான இந்தத் திருவாய்மொழிக்கு, அத்தகைய கட்டுப்பாடுகள் ஏன் இல்லை என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, விரஸமாய் ததந்தர்க்கத ஸத்வங்களுக்கொழியப் புறம்புள்ளார்க்கு உபஜீவ்யமன்றிக்கே பர்வங்களிலொழிய ஸ்பர்சிக்கலாகா தென்கையாலே ஸ்பர்ச கால நியதியையு முடைத்தாயிருக்கிற ஸமுத்ர ஜலமானது மேகம் பருகி வர்ஷிக்க அந்த மேக ஸ்பர்சத்தாலே தன் விரஸதை போய் ஸர்வதா ஸர்வஜந போக்யமாமாபோலே, “ச்ராவண்யாம் ப்ரௌஷ்ட்டபத்யாம் வா உபாக்ருத்ய யதாவிதி, யுத்தச் சந்தாம்ஸ்யதீயீத மாஸாந் விப்ரோர்த்த பஞ்சமாந்; அத ஊர்த்வம் து சந்தாம்ஸி சுக்லேது நியத: படேத், வேதாங்காநி ரஹஸ்யம் ச க்ருஷ்ணபக்ஷேது ஸம்படேத்” என்கிறபடியே அத்யயன கால நியதியையும், த்ரைவர்ணிகாதிகாரதயா அதிகாரி நியதியையு முடைத்தா யிருந்துள்ள “நூற்கடல்” என்கிற வேதவித்யா ஸமுத்ரத்தில் வசநம் “இவள் வாயனகள் திருந்த” என்கிறபடியே இவருடைய வாக்கதமாய் கால நியம அதிகாரி நியம நிரபேக்ஷமான ஆகாரத்தையடைந்து கட்டளைப்பட்டவாறே, “அத்யேதவ்யம் த்விஜ ச்ரேஷ்டை: வேதரூபமிதம் க்ருதம், ஸ்த்ரீபிச் சூத்ராதிபிச் சைவ தேஷாம் முக்தி: கரே ஸ்திதா” என்கிறபடியே ஒரு கால நியமமின்றிக்கே ஸர்வகாலமும் ஸர்வர்க்கு முபஜீவ்யமாமிறே யென்கை.

(மேகம் பருகின ஸமுத்ராம்புபோலே) – உப்புத்தன்மை அதிகமாகக் கொண்டதாகவும், கடலாகிய அதற்குள் வசிக்கக்கூடிய உயிரினங்கள் அல்லாமல் மற்ற யாரும் அதில் வசிக்க இயலாததாகவும், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே கடல் நீரில் நீராடலாம் அல்லாமல் மற்ற நாட்களில் அது போன்று செய்யலாகாது என்பதால் காலக் கட்டுப்பாடுகள் கொண்டதாகவும் ஸமுத்ர ஜலம் உள்ளது. ஆனால் அத்தகைய கடல் நீரானது, மேகத்தால் பருகப்பட்டு, மழையாகப் பெய்யப்படும்போது, அந்த மேகத்தின் ஸம்பந்தம் ஏற்பட்ட காரணமாக, தனது உப்புத்தன்மை நீங்கப் பெற்று, எப்போதும் அனைவருக்கும் பயன்படுகிறது. அதே போன்று, (நூற்கடல் சொல்) - மநுஸ்ம்ருதி (4-95) - ச்ராவண்யாம் ப்ரௌஷ்ட்டபத்யாம் வா உபாக்ருத்ய யதாவிதி, யுத்தச் சந்தாம்ஸ்யதீயீத மாஸாந் விப்ரோர்த்த பஞ்சமாந்; அத ஊர்த்வம் து சந்தாம்ஸி சுக்லேது நியத: படேத், வேதாங்காநி ரஹஸ்யம் ச க்ருஷ்ணபக்ஷேது ஸம்படேத் – அந்தணன் ஒருவன் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட உபாகர்மங்களைச் செய்து, தகுந்த நியமயத்துடன் கூடியவனாக நான்கரை மாதங்களில் வேதஅத்யயனம் செய்வானாக; அதன் பின்னர் தகுந்த நியமங்களுடன் கூடியவனாக சுக்லபக்ஷத்தில் வேதங்களை ஓதுவானாக; வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்களை க்ருஷ்ணபக்ஷத்தில் அத்யயனம் செய்வானாக - என்று கூறுவதற்கு ஏற்ப இன்ன காலங்களில் மட்டும் அத்யயனம் செய்யவேண்டும், மூன்று வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அத்யயனம் செய்யவேண்டும் என்று காலம் மற்றும்அதிகாரி கட்டுப்பாடுகள் கொண்டதான, மூன்றாம் திருவந்தாதி (32) – நூற்கடல் - என்பதற்கு ஏற்ப உள்ள வேதங்கள் என்னும் ஸமுத்திரத்தில் உள்ள சொற்கள், (இவர் வாயனவாய்த் திருந்தினவாறே) - திருவாய்மொழி (6-5-7) - இவள் வாயனகள் திருந்த – என்று கூறுவதற்கு ஏற்ப, நம்மாழ்வாருடைய திருவாக்கு மூலம் வெளிப்பட்டு, காலக்கட்டுப்பாடு மற்றும் அதிகாரிகளின் தகுதி போன்ரவை அவசியம் இல்லை என்பதான தன்மையை அடைகின்றன. இவ்விதம் கட்டளைப்பட்டபடி பாஞ்சராத்ரம் - அத்யேதவ்யம் த்விஜ ச்ரேஷ்டை: வேதரூபமிதம் க்ருதம், ஸ்த்ரீபிச் சூத்ராதிபிச் சைவ தேஷாம் முக்தி: கரே ஸ்திதா – வேதரூபமாகச் சொல்லப்பட்டு இது அந்தணர்களில் சிறந்தவர்களாலும், பெண்களாலும், நான்காம் வர்ணத்தினராலும் அத்யயனம் செய்யத்தக்கது. இதனை அத்யயனம் செய்பவர்கள் கையில் மோக்ஷம் உள்ளது – என்பதற்கு ஏற்ப காலக்கட்டுப்பாடு ஏதும் இன்றி, அனைத்துக் காலத்திலும் அனைவருக்கும் அவர்கள் கற்கலாம்படி உள்ளது.