Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 71)
முதல் ப்ரகரணம்
மண்ணாடின ஸஹ்யஜலம் தோதவத்திச்சங்கணி துறையிலே துகில்வண்ணத் தெண்ணீராய் அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்பச்ருதர் கலக்கின ச்ருதி நன்ஞானத் துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ்பொருளை யறிவித்தது.
ஆனால் அபௌருஷேயமான வேதம் இப்படி அவஸ்த்தாந்தரத்தை பஜித்ததாகில் கலுஷமாய் அர்த்தப்ரகாசகத்வம் குன்றாதோவென்ன, வக்த்ரு விசேஷத்தாலே அது மற்றைப்படியாய்த் தென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச் செய்கிறார் (மண்ணாடின வித்யாதியால்).
ஆனால் யாராலும் செய்யப்படாத வேதம் என்பது இப்படியாகப் பலவிதமாக வெளிப்பட்டது என்னும்போது, அது கலங்கின தன்மை கொண்டதாக உள்ளதே அல்லாமல், தெளிவாக உள்ளது என்னும் தன்மையை இழக்காதோ - என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். அதனைத் தமிழில் அருளிச்செய்த நம்மாழ்வாரின் மேன்மை காரணமாக அது தெளிவுற்றது என்பதை எடுத்துக்காட்டுடன் அருளிச்செய்கிறார் (சூர்ணையில் உள்ள ஸஹ்யஜலம் = மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு நீர் = காவேரி, தோதவத்தி துறை - திருவரங்கம் காவேரி படித்துறை, அங்கணித்துறை = தாமிரபரணி படித்துறை).
அதாவது, உச்ச ஸ்த்தலத்தில் நின்றும் வேகத்தோடே வந்து பூமியிலே விழுகையாலே ம்ருந்மிச்ரமாய்க் கலங்கி ஸஹ்யத்தில் நின்றும் வருகிற ஜலமானது, “தோதவத்தித் தூய்மறையோர் துறை” என்றும், “பொருநல் சங்கணி துறை” என்றும் சொல்லுகிற துறைகளிலே வந்தவாறே துறைவாசியாலே “துகில்வண்ணத் தூநீர்” என்றும், “தெண்ணீர்ப் பொன்னி” என்றும் சொல்லுகிறபடியே தெளிந்த நீராய் தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாசிப்பிக்குமாபோலே, “பிபேத்யல்ப ச்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி” என்கிறபடியே வேதந்தான் நடுங்கும்படி ததபிப்ராயமறியாமல் ப்ரதிபந்தங்களைச் சொல்லும் அல்ப ச்ருதர், ஒரு வாக்யத்துக்கர்த்தம் சொல்லப்புக்கால் அதுதன்னிலே நின்று விப்ரதிபத்தி பண்ணி, த்வைதமென்பார், அத்வைதமென்பார், த்வைதாத்வைத மென்பாராய் இப்படி கலக்கக் கலங்கின ச்ருதியானது, “நன்ஞானத்துறை” என்று இவர் தாமருளிச் செய்தபடியே யதா ஜ்ஞாநத்துக்குத் துறையான இவ்வாழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து “தெளிவுற்றவாயிரம்” என்கிறபடியே முன்புத்தைக் கலக்கம் தீர்ந்து தெளிவையடைந்து “அறிவித்தேனாழ்பொருளை” என்கிறபடியே அகாதமாய், பரமரஹஸ்யமான அர்த்த விசேஷங்களையெல்லாம் தோன்றுவித்த தென்கை.
(மண்ணாடின ஸஹ்யஜலம்) - மலைகளின் மேற்புறத்திலிருந்து மிகுந்த வேகத்துடன் வந்து பூமியில் விழுவதன் காரணமாக மண் கலந்து கலங்கியபடி, மலையில் இருந்து வரும் காவேரி மற்றும் தாமிரபரணி ஆகிய இரண்டும். (தோதவத்திச்சங்கணி துறையிலே துகில்வண்ணத் தெண்ணீராய்) – பெரியாழ்வார் திருமொழி (4-8-1) – தோதவத்தித் தூய்மறையோர் துறை - என்றும், திருவாய்மொழி (10-3-11) - பொருநல் சங்கணி துறை – என்றும் கூறப்படும் படித்துறைகளில், மேன்மையுடன் கூடிய வேறுபாடு காரணமாக, திருவாய்மொழி (7-2-11) - துகில்வண்ணத் தூநீர் - என்றும், பெருமாள் திருமொழி (1-1) – தெண்ணீர்ப் பொன்னி - என்றும் கூறுவதற்கு ஏற்ப மிகவும் தெளிந்த நீராக மாறி. (அந்தஸ்ஸ்தத்தைக் காட்டுமாபோலே) – தன்னுள்ளே ஆழத்தில் கிடக்கின்ற பொருள்களையும் தெளிவாகக் காண்பிப்பது போன்று. (அல்ப ச்ருதர் கலக்கின ச்ருதி) – பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி - பிபேத்யல்ப ச்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி – குறைவாகக் கற்றவனைக் கண்ட வேதமானது, இவன் என்னை வஞ்சித்து விடுவான் என்று அஞ்சுகிறது – என்று கூறுவதற்கு ஏற்ப, வேதங்களும் தங்களைக் கண்டு அச்சம் கொண்டு நடுங்கும்படியாக, அவற்றில் கூறப்பட்ட ஆழ்பொருளின் அர்த்தங்கள் அறியாமல், அவற்றுக்கு விரோதமான பொருள்களை உரைக்கும் அற்பமான ஞானம் உள்ளவர்கள், வேதத்தில் உள்ள ஏதேனும் ஒரு வாக்கியத்திற்கான பொருளை உரைக்கும்போது, அந்தப் பொருள் சரிவர விளங்காமல் மயங்கி த்வைதம், அத்வைதம், த்வைத அத்வைதம் என்று பலவிதமாக உரைப்பர். இப்படியாக மற்றவர்களால் கலக்கப்பட்ட காரணத்தால் கலங்கி நிற்கும் வேதமானது, திருவிருத்தம் (93) – நன்ஞானத்துறை - என்று நம்மாழ்வார் தாமே அருளிச்செய்தபடி, மெய்யான ஞானத்திற்குப் படித்துறையான நம்மாழ்வாரிடம் வந்து சேர்ந்து, திருவாய்மொழி (7-5-11) - தெளிவுற்றவாயிரம் - என்பதற்கு முன்பு உண்டான கலக்கம் அனைத்தும் நீங்கப்பெற்று தெளிவடைந்து, நான்முகன் திருவந்தாதி – அறிவித்தே னாழ்பொருளை – என்பதற்கு ஏற்ப ஆழ்ந்தும், பரமரஹஸ்யமும் ஆகிய ஆழ்பொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்தியது என்று கருத்து.