Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 70)
முதல் ப்ரகரணம்
அதவா, வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுதுவேதம் வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய் ஆகமூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தாரென்னும்.
ஆக இதுக்குக் கீழ் திவ்யப்ரபந்தத்துக்கு வேத ஸாம்யமும் ததுபப்ருஹ்மண ஸாம்யமும் உண்டென்னுமிடத்தை அருளிச்செய்தார். இங்ஙனன்றிக்கே வேதாவிர்ப்பாவ விசேஷமாய் இவ்வாழ்வாராலே நிர்மிதமாக ப்ரஸித்தமா யிருப்ப தொன்றென்று, இதுக்கு இன்னமும் ஒரு யோஜனை பண்ணுகிறார் மேல் - (அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே என்று தொடங்கி).
ஆக இதுவரை, திவ்யப்ரபந்தங்களுக்கும் வேதங்களும் உள்ள ஒற்றுமை மற்றும் திவ்யப்ரபந்தங்களுக்கும் வேதங்களை விளக்கவல்லதான இதிஹாச புராணங்களுக்கும் உள்ள ஒற்றுமை ஆகியவற்றை அருளிச்செய்தார். இவை மட்டும் அல்லாமல் வேதங்களே இந்த வடிவில் அவதரித்த விசேஷமாகவும், ஆழ்வார் அருளிச்செய்ததாகவும், உலகில் உள்ள பலரும் அறிந்த விஷயமாகவும் உள்ளது ஒன்று என இதற்கு மேலும் ஒரு கருத்தையும் அருளிச்செய்கிறார்.
– அதாவது, கீழ்ச்சொன்ன உபய ப்ரகாரமுமன்றிக்கே, “வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே, வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா” என்று வேத வேத்யனான பரமபுருஷன், தசரத புத்ரனா யவதரித்த விடத்தில் அபௌருஷேயமான வேதமும், ஸ்ரீவால்மீகிபகவான் பக்கல் ஸ்ரீஇராமாயண ரூபேண அவதரித்த தென்கிற ந்யாயத்தாலே, “க்ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே”, “ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்”, “தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:”, “யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந், ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ, ப்ரஹ்மணா விபச்சிதா” இத்யாதிகளாலே பலவிடங்களிலும் ஈச்வரனுடைய பராவஸ்த்தையை ப்ரதிபாதிக்கையாலே பரத்வத்திலே நோக்காய், “முதுவேதம்” என்கிறபடி புருஷ புத்தி ப்ரபவ தோஷ கந்தமில்லாதபடி அநாதித்வேந பழையதா யிருக்கிற வேதமானது, – “ஷாட்குண்யாத் வாஸுதேவ: பர இதி ஸ பவாந் முக்தபோக்ய:” என்கிறபடியே ஷாட்குண்ய பரிபூர்ணனாய் முக்தபோக்யனா யிருக்கிற அந்த பரனானவன், “பலாட்யாத் போதாத் ஸங்கர்ஷணாஸ் த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ர மைச்வர்ய வீர்யாத், ப்ரத்யும்நஸ் ஸர்ககதர்மௌ நயஸி ச பகவந் சக்தி தேஜோதிருத்தோ பிப்ராண: பாஸி தத்வம், கமயஸி ச ததா வ்யூஹ்ய” என்கிறபடியே ஸர்க்காதி நிர்வஹணார்த்தமாக வ்யூஹீபவித்த அவஸ்த்தையில், “ஸங்கர்ஷணாதி ஸத்பாவம் பஜே லோக ஹிதேப்ஸயா, க்ரமச: ப்ரளயோத்பக்தி ஸ்திதிபி: ப்ராண்யநுக்ரஹ: ப்ரயோஜந மதாந்யச்ச சாஸ்த்ர சாஸ்த்ரார்த்த தத்பரை:, தசாஸ் துர்ய ஸுஷுப் த்யாத்யாச் நதுர் வ்யூஹேபி லக்ஷயே” இத்யாதியாலும், “தத்ர ஜ்ஞாந பலத்வந்த்வாத் ரூபம் ஸாங்கர்ஷணம் ஹரே:, ஐச்வர்ய வீர்ய ஸம்பேதாத் ரூபம் ப்ராத்யும்ந முச்யதே சக்தி தேஜஸ் ஸமுத்கர்ஷாத் அநிருத்த தநுர் ஹரே:, ஏதே சக்திமயா வ்யூஹா குணேந்மேஷ ஸ்வலக்ஷணா:” இத்யாதியாலும் அந்த வ்யூஹ விசேஷ தத் குண ரூப க்ருத்யாதிகளை விஸ்தரேண ப்ரதிபாதிக்கைக்காக “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயண: ஸ்வயம்” என்கிறபடியே ஸர்வத்துக்கும் ஆதிவக்தா ஈச்வரன் தானாகையாலே “ஓதினாய் நீதி” என்று சொல்லப்பட்ட பஞ்சராத்ரமாய் ஆவிர்ப்பவித்து, இப்படி வ்யூஹீபவித்த மாத்ரமன்றிக்கே ஸர்வசப்தவாச்யனாய் ஸர்வகர்ம ஸமாராத்யனாய்க் கொண்டு ஸர்வாந்தர்யாமித்வேந வ்யாபித்து நிற்குமவஸ்த்தையில், “ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூநவ:, தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண: ஸ்ம்ருத:” இத்யாதியாலும், “ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸ மணீயஸாம், ருக்மாபம் ஸ்வப்நதீகம்யம் வித்யாத் து புருஷம் பரம்”, “ஏநமேகே வதந்த்யக்நிம் மருதோந்யே ப்ரஜாபதிம், இந்த்ரமேகே பரே ப்ராணமபரே ப்ரஹ்ம சாச்வதம்”, “ஏஷ ஸர்வாணி பூதாநி பஞ்சபீர் வ்யாப்ய மூர்த்திபி: ஜந்ம வ்ருத்தி க்ஷயைர் நித்யம் ஸம்ஸாரயதி சக்ரவத்” இத்யாதியாலும், “ஸ ஆத்மா, அங்காந்யந்யா தேவதா:” என்கிறபடியே ஸர்வதேவதா சரீரிதயா ஸர்வகர்ம ஸமாராத்யன் இவனென்று தோற்றும்படி பூர்வபாகோப ப்ரும்ஹணமாய்க் கொண்டு ஸர்வாந்தர்யாமிதயா வ்யாப்தியை ப்ரதிபாதிக்கைக்காக “கேட்ட மனு” என்கிறபடியே ஆப்தமாகக் கேட்கப்பட்ட மந்வாதி ஸ்ம்ருதியா யாவிர்ப்பவித்து, அப்படி அதீந்த்ரியனாய் நிற்கிறவவன் ஸாதுபரித்ராணாதிகளுக்காக ராம க்ருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணின வவஸ்த்தையில் தத்ததவதார சேஷ்டிதாதிகளை ப்ரதிபாதிக்கைக்காக “படுகதையும்” என்கிறபடியே வ்ருத்த கீர்த்தந ரூபமான ஸ்ரீராமாயண மஹாபாரதாதீ திஹாஸங்களாய் ஆவிர்ப்பவித்து, அப்படி அவதாரமுகேந முன்னின்று ரக்ஷித்தருளுமவன், அவதாரத்தில் பிற்பாடரும் இழவாதபடி, “ஆகமூர்த்தியாய வண்ணமென்கொல்” என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும்படி ஆச்ரித ஹ்ருதயாநுகுணமாக “தமருகந்த தெவ்வுருவம்” இத்யாதிப்படியே த்ரவ்ய நாம ரூபாஸன சயநாதிகளிலும், தேசகாலாதிகாராதிகளிலும், ஸ்நாந போஜநாதிகளிலும் ஒரு நியமமறப் பண்ணிக் கொண்டு அத்யந்த ஸுலபனாயிருக்கும் அர்ச்சாவதாரமான அவஸ்த்தையில் தத்வைபவ ப்ரதிபாதநார்த்தமாக “சடகோபன் பண்ணிய தமிழ்” என்னும்படி ப்ரமேயந் தன்னைப்போலே தானும் ஸர்வஸுலபமாய் ஸர்வாதிகாரமாகைக் குறுப்பாக த்ராவிட ரூபமாய்க் கொண்டு ஆழ்வார் பக்கலிலே ஆவிர்ப்பவிக்கையாலே ஸம்ஸ்க்ருத ரூபமாயிருக்கிற வேதத்தை த்ராவிடமாகச் செய்தாரென்று சொல்லுவதும் ஒரு ப்ரகாரமுண்டென்கை. “எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வரும் சடகோபனை” என்னக்கடவதிறே. இவையெல்லாத்திலும் எல்லாம் சொல்லுமேயாகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்கா யிருக்கையாலிறே இவரிப்படி யருளிச்செய்தது. இதுதான் “பரத்வபர”மென்கையாலே ஸ்பஷ்டமிறே.
(அதவா) – திருவாய்மொழிக்கு, வேதங்களுடனும், அவற்றை விளக்கவல்ல இதிகாச புராணங்களுடனும் உள்ள ஒற்றுமை என்பது இதுவரை கூறப்பட்ட கருத்தில் அல்லாமல், (வேத வேத்ய ந்யாயத்தாலே) - இராமாயணம் பாலகாண்டம் - வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே, வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா - வேதங்களால் மட்டுமே அறியப்படுபவனாகிய பரமபுருஷனாகிய தசரதபுத்ரன் அவதரித்தபோது, வேதங்கள் ப்ராசேதஸின் புத்ரனாகிய வால்மீகி மூலம் இராமாயணமாக அவதரித்தன - என்று கூறுவதற்கு ஏற்ப, வேதத்தால் மட்டுமே அறியத்தக்கவனாகிய பரமபுருஷனாகிய இராமன், தசரதனின் புத்திரனாக அவதரித்தபோது, யாராலும் இயற்றப்படாமல் உள்ள வேதமானது, வால்மீகி பகவானால் இராமாயண வடிவில் அவதரித்தன என்ற அதே ந்யாயத்தின் அடிப்படையில். (பரத்வ பரமுதுவேதம்) - தைத்திரீய உபநிஷத் – “க்ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே - ராஜஸம் மற்றும் தாமஸம் ஆகியவற்றின் இருப்பிடமான இந்த உலகத்தின் மேலே உள்ள பரமபதத்தில் எழுந்தருளியுள்ள – என்றும், புருஷஸூக்தம் - ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் – சூரியனின் ப்ரகாசம் போன்ற பரமபுருஷன் இருள் சூழ்ந்த ப்ரக்ருதி மண்டலத்துக்கும் அப்பால் உள்ளான் – என்றும், யஜுர்வேதம் - தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய: - மஹாவிஷ்ணுவின் பரமபதத்தை அந்த நித்யஸூரிகள் எப்போதும் பார்த்தபடி உள்ளனர் – என்றும், தைத்திரீய உபநிஷத் – யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந், ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ, ப்ரஹ்மணா விபச்சிதா – இதயம் என்ற குகைக்குள் உள்ள இந்த ப்ரஹ்மத்தை யார் உபாஸிக்கிறானோ அவன் ப்ரக்ருதியின் தொடர்பற்ற பரமபதத்தில் உள்ள ப்ரஹ்மத்துடன் சேர்ந்து அனைத்து விருப்பங்களும் நிறைவேறப் பெற்று அனுபவிக்கிறான் – என்றும் உள்ளது போன்று பல இடங்களிலும், ஸர்வேச்வரன் பரம்பொருளாய் எழுந்தருளியுள்ள நிலையை உரைப்பதால் பரத்வத்தை வெளிப்படுத்துவதையே தனது இலக்காகவும், திருவாய்மொழி (1-6-2) - முதுவேதம் - என்பதற்கு ஏற்ப மனிதர்களின் புத்தி மூலம் ஏற்படவல்ல தோஷம் ஏதும் இல்லாதபடி எல்லையற்ற காலமாக இருந்து வருவதால் பழையதும் என்றுள்ள வேதமானது … (வ்யூஹ ஓதின நீதி) ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-39) - ஷாட்குண்யாத் வாஸுதேவ: பர இதி ஸ பவாந் முக்தபோக்ய: - ஸ்ரீரங்கநாதா! நீ பரவாஸுதேவனாய் ஆறு குணங்களுடன் கூடியவனாய் முக்தர்களுக்கு இனிமையானவனாக உள்ளாய் - என்று கூறுவதற்கு ஏற்ப ஆறு குணங்கள் பரிபூர்ணமாக நிறைந்தவனாகவும், முக்தர்கள் அனைவருக்கும் இன்பம் அளிக்கும்படி உளளவனும் ஆகிய அந்தப் பரமபுருஷன், ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-39) - பலாட்யாத் போதாத் ஸங்கர்ஷணாஸ் த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ர மைச்வர்ய வீர்யாத், ப்ரத்யும்நஸ் ஸர்ககதர்மௌ நயஸி ச பகவந் சக்தி தேஜோதிருத்தோ பிப்ராண: பாஸி தத்வம், கமயஸி ச ததா வ்யூஹ்ய - பலம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டு குணங்களுடன் கூடியவனாக, ஸங்கர்ஷணன் என்னும் வ்யூஹரூபம் எடுத்து, ஸம்ஹார செயலை நடத்துகிறாய், அனைத்து சாஸ்த்ரங்களையும் உலகிற்கு அளிக்கிறாய். ஐச்வர்யம் மற்றும் வீர்யம் ஆகிய இரண்டு குணங்கள் கொண்ட ப்ரத்யும்ந வ்யூஹமாக அவதரித்து, ஸ்ருஷ்டியைச் செய்கிறாய், அனைத்து தர்மங்களையும் வழி நடத்துகிறாய். சக்தி மற்றும் தேஜஸ் ஆகிய இரண்டு குணங்களுடன் கூடிய அநிருத்த ரூபம் எடுத்து, காப்பாற்றுதல் என்னும் செயலைச் செய்தபடி உள்ளாய், உண்மையான ஞானம் பெறும்படிச் செய்கிறாய் - என்பதற்கு ஏற்ப ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் போன்றவற்றைச் செய்யும் பொருட்டு வ்யூஹங்களாக அவதரித்த நிலையில், விஷ்வக்ஸேந ஸம்ஹிதை - ஸங்கர்ஷணாதி ஸத்பாவம் பஜே லோக ஹிதேப்ஸயா, க்ரமச: ப்ரளயோத்பக்தி ஸ்திதிபி: ப்ராண்யநுக்ரஹ: ப்ரயோஜந மதாந்யச்ச சாஸ்த்ர சாஸ்த்ரார்த்த தத்பரை:, தசாஸ் துர்ய ஸுஷுப் த்யாத்யாச் நதுர் வ்யூஹேபி லக்ஷயே - இந்த லோகத்திற்கு ஏற்ற நன்மைகளை அளிக்கவேண்டும் என்ற எண்ணத்தால் ஸங்கர்ஷணன் போன்ற நிலைகளை அடைகிறேன். சரியான வரிசையில் ஸம்ஹாரம், ஸ்ருஷ்டி, இருப்பு என்பது நடைபெறுவதன் மூலம் அனைத்து உயிர்களுக்கும் நான் அனுக்ரஹம் செய்கிறேன். சாஸ்த்ரம், தர்மம், இவை குறித்த ஞானம் என்ற பல பயன்களும் இந்த லோகத்தில் உள்ளன. நான்கு வ்யூஹங்களில் துர்யம், ஸுஷுப்தி போன்ற நான்கு நிலைகளை அறிதல் வேண்டும் - என்பது போன்ற வாக்கியங்களாலும், விஷ்வக்ஸேந ஸம்ஹிதை - தத்ர ஜ்ஞாந பலத்வந்த்வாத் ரூபம் ஸாங்கர்ஷணம் ஹரே:, ஐச்வர்ய வீர்ய ஸம்பேதாத் ரூபம் ப்ராத்யும்ந முச்யதே சக்தி தேஜஸ் ஸமுத்கர்ஷாத் அநிருத்த தநுர் ஹரே:, ஏதே சக்திமயா வ்யூஹா குணேந்மேஷ ஸ்வலக்ஷணா: - ஞானம், பலம் போன்றவற்றின் சேர்க்கையால் ஸர்வேச்வரனுக்கு ஸங்கர்ஷண ரூபம் ஏற்படுகிறது. ஐச்வர்யம், வீர்யம் ஆகியவற்றால் ப்ரத்யும்ந ரூபம் ஏற்படுகிறது. சக்தி மற்றும் தேஜஸ் ஆகியவற்றால் அநிருத்த ரூபம் ஏற்படுகிறது. ஆக சக்திமயமாக உள்ள இந்த வ்யூஹங்கள் அனைத்தும் ஸர்வேச்வரனுடைய திருக்கல்யாண குணங்களின் வெளிப்பாடே ஆகும் – என்பது போன்ற வாக்கியங்களாலும், வ்யூஹங்களுடைய குணங்கள், ரூபங்கள், செய்கைகள் போன்றவற்றை விரிவாக உரைக்கும் பொருட்டு, மஹாபாரதம் – பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயண: ஸ்வயம் - அனைத்து பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களையும் உரைத்தவன் நாராயணனே ஆவான் - என்பதற்கு ஏற்ப, அனைத்தையும் கூறியவன் ஸர்வேச்வரனே என்றுள்ளபோது, (அந்த வேதங்கள்) இரண்டாம் திருவந்தாதி (48) - ஓதினாய் நீதி - என்று கூறப்பட்டதான பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களாக வெளிப்பட்டும் [ அதாவது அவன் வ்யூஹங்களாக நின்றபோது வேதங்கள் பாஞ்சராத்ரமாக வெளிப்பட்டன என்று கருத்து] … (வ்யாப்தி கேட்ட மநு) இவ்விதம் வ்யூஹமாக அவதரித்தது மட்டும் அல்லாமல், அனைத்து சொற்களாலும் கூறப்படுபவனாகவும், அனைத்து கர்மங்களையும் தனது ஆராதனையாகவும் கொள்பவனாகவும் உள்ள காரணத்தால் அனைத்து உயிர்களின் மநு ஸ்ம்ருதி (1-19) - ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூநவ:, தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண: ஸ்ம்ருத: - தண்ணீரானது நரன் எனப்படும் பரமாத்மாவிடமிருந்து உண்டானது. ஆகவே அது நாரம் எனப்படுகிறது, அத்தகைய நீரானது பரமாத்மாவின் சரீரம் என்பதால் அவன் நாராயணன் எனப்படுகிறான் – என்பது போன்ற வரிகளாலும், மநு ஸ்ம்ருதி (12-122) – ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸ மணீயஸாம், ருக்மாபம் ஸ்வப்நதீகம்யம் வித்யாத் து புருஷம் பரம் - அனைத்தையும் நியமிப்பவன் என்றும், நுண்ணியதைக் காட்டிலும் மிகவும் நுண்ணியவன் என்றும், பொன் நிறம் கொண்டவன் என்றும், கனவில் ஏற்படும் புத்தி முதலான போகத்தால் அடையத்தக்கவன் என்றும் பரமபுருஷனை அறிய வேண்டும் - என்பது போன்ற வரிகளாலும், மநு ஸ்ம்ருதி (12-123) - ஏநமேகே வதந்த்யக்நிம் மருதோந்யே ப்ரஜாபதிம், இந்த்ரமேகே பரே ப்ராணமபரே ப்ரஹ்ம சாச்வதம் - இவனை அக்னி என்றும், மருத்துக்கள் என்றும், நான்முகன் என்றும், இந்த்ரன் என்றும், அந்தணன் என்றும், பரப்ரஹ்மம் என்றும் கூறுகிறார்கள் - என்பது போன்றவற்றாலும், மநு ஸ்ம்ருதி (12-124) – ஏஷ ஸர்வாணி பூதாநி பஞ்சபீர் வ்யாப்ய மூர்த்திபி: ஜந்ம வ்ருத்தி க்ஷயைர் நித்யம் ஸம்ஸாரயதி சக்ரவத் - அனைத்து உயிர்களையும் பஞ்சபூதங்களாலான சரீரத்தால் நிரப்பி, பிறப்பு – வளர்தல் - இறப்பு என்பவற்றால் சக்கரம் போன்று சுழலும்படி இவன் செய்கிறான் - என்பது போன்ற வரிகளாலும், தைத்திரீய உபநிஷத் - ஸ ஆத்மா, அங்காந்யந்யா தேவதா: – அந்த ஆத்மா என்று கூறப்பட்டவன் பரமாத்மா ஆவான், மற்ற அனைத்து தேவர்களும் அவனுடைய சரீரங்கள் - என்பதற்கு ஏற்ப அனைத்து தேவர்களையும் தனது சரீரமாகக் கொண்டுள்ளதன் காரணமாக, [அந்த வேதங்கள்] அனைத்து கர்மங்களாலும் இவனே ஆராதிக்கப்படுபவன் என்பது வெளிப்படும்படியாக, வேதத்தின் முதல் பாகமாகிய கர்மகாண்டத்தின் பொருளை விவரிக்கும்விதமாக, அனைத்து உயிர்களிலும் இவன் அந்தர்யாமியாக வ்யாபித்து நிற்பதை வெளிப்படுத்துவதற்காக, நான்முகன் திருவந்தாதி (76) - கேட்ட மனு – என்று கூறலாம்படி ஸத்யவாக்குகளாகவே உள்ளதான மநு ஸ்ம்ருதி முதலான ஸ்ம்ருதிகளாக வெளிப்பட்டு [அதாவது அவன் அந்தர்யாமி நிலையில் உள்ளபோது வேதங்கள் மநு ஸ்ம்ருதி முதலான ஸ்ம்ருதிகளக வெளிப்பட்டன], (அவதரணங்களில் படுகதைகளாய்) – இவ்விதம் வ்யூஹம் மற்றும் அந்தர்யாமியாக நிற்கும்போது கண்கள் முதலான இந்த்ரியங்களுக்குப் புலப்படாமல் உள்ளான்; இப்படிப்பட்ட அவன் ஸாதுக்களைப் பாதுகாப்பதற்காக இராமன், க்ருஷ்ணன் போன்ற விபவ அவதாரங்களை எடுக்கிறான். அந்த நிலைகளில், [வேதங்கள்] அந்தந்த அவதாரங்களில் அவன் செய்கின்ற வியக்கவைக்கும் செயல்களைக் கூறுவதற்காக, நான்முகன் திருவந்தாதி (76) - படுகதையும் - என்பதற்கு ஏற்ப அவனுடைய செயல்களை விவரிக்கும் ரூபமாக உள்ளதான இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களாக வெளிப்பட்டு [அவன் விபவ அவதாரங்களாக உள்ளபோது, வேதங்கள் இதிகாசங்களாக வெளிப்பட்டன], – (ஆகமுர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே) – இவ்விதம் அவதாரங்கள் எடுத்து பலரையும் காப்பாற்றிய பின்னர், அந்தந்த அவதார காலத்திற்கு பின்னர் உள்ள காலத்தில் பிறப்பவர்கள் தன்னுடைய அந்தக் காப்பாற்றுதல்களையும், தனது லீலைகளையும் இழந்து விடக்கூடாது என்று தீர்மானித்து, திருச்சந்தவிருத்தம் (17) - ஆகமூர்த்தியாய வண்ணமென்கொல் மூர்த்தி - என்பதற்கு ஏற்ப ஞானத்தில் சிறந்து விளங்கும் சான்றோர்கள் ஈடுபடும்படியாக அடியார்களுடைய இதயத்தில் வைத்து ஆராதிப்பதற்கு ஏற்றபடியாக, முதல் திருவந்தாதி (44) - தமருகந்ததெவ்வுருவம் - என்று கூறுவதற்கு ஏற்ப, பல பொருள்களைத் தனது திருமேனியாகவும், பல நாமங்கள் பல ரூபங்கள் என்றும், இருத்தல் சயனித்தல் என்பது போன்ற வடிவங்களிலும், தேசம் - காலம் – அதிகாரம் போன்றவற்றின் எல்லை இன்றியும், நீராடல் – உணவு உட்கொள்ளுதல் போன்ற செயல்களில் எந்தவிதமான நியமங்களும் இன்றியும், தன்னை மிகவும் எளியவனாகக் கொண்டு அர்ச்சாவதார நிலையில் நின்றான்; இந்த நிலையில், அர்ச்சாவதாரத்தின் மேன்மைகளை உரைக்கும்விதமாக, திருவாய்மொழி (2-7-13) - சடகோபன் பண்ணிய தமிழ் – என்பதற்கு ஏற்ப அர்ச்சாவதாரம் போன்று வேதமாகிய தானும், அனைவருக்கும் எளிதாகவும் அனைவரும் தகுதியுடன் கற்கலாம்படியாகவும் இருப்பதற்கு ஏற்றபடி தமிழ்மொழியில் நம்மாழ்வாரிடமிருந்து வெளிப்பட்டது; இதனால்தான், வடமொழியில் உள்ள வேதத்தை நம்மாழ்வார் தமிழில் அருளிச்செய்தார் என்று ஒரு சிலர் கூறுவது உண்டு. இராமாநுசநூற்றந்தாதி (18) - எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வரும் சடகோபனை – என்பது காண்க. மேலே கூறப்பட்டதான வேதங்கள், பாஞ்சராத்ரம், ஸ்ம்ருதிகள், இராமாயணம், மஹாபாரதம் போன்ற பலவற்றிலும் அனைத்துவிதமான விஷயங்களும் கூறப்பட்டன என்றபோதிலும், ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டுமே ஆழமாக உரைக்கின்றன (மஹாபாரதம் = இராமனின் சரிதம் போன்ற விஷயங்கள்). ஆனால் அனைத்து விஷயங்களும் ஒருங்கே இருத்தல் வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி அல்லவோ இவர் திருவாய்மொழியை அருளிச்செய்தது? இதனை “பரத்வபரம்” என்பதால் தெளியலாம்.