Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 69)

முதல் ப்ரகரணம்

உதாத்தாதி பத க்ரம ஜடா வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த ப்ரச்ந காண்டாஷ்ட காத்யாயாம் ச பர்வாத்யலங்காரங்கள் போலே எழுத்தசை சீர்ப் பந்தமடி தொடை நிரைநிரையோசை தளை யினம் யாப்புப் பாத்துறை பண்ணிசை தாளம் பத்து நூறாயிரம் முதலான செய்கோலம் இதுக்குமுண்டு.

– ஆக இப்படி இப்ப்ரபந்தத்தை வேத ஸமமென்பது ததுபப்ரும்ஹண ஸமமென்பதாகா நின்றீர், அவை யிரண்டுக்கும் தத்ததநுரூபமா யிருப்பன சில அலங்காரங்களுண்டிறே, தாத்ருசாலங்காரங்கள் இதுக்குமுண்டோவென்ன, ஸம்ஸ்க்ருதமானவற்றுக்கு தத்ததநுகுணமான அலங்காரங்கள் பலவுமுண்டானாப்போலே த்ராவிடமான விதுக்கும் ஏததநுகுணமான அலங்காரங்கள் பலவுமுண்டென்கிறார் (உதாத்தாதியென்று தொடங்கி).

ஒரு சிலர் அழகியமணவாளப்பெருமாள்நாயனாரிடம், “திருவாய்மொழியானது வேதத்திற்குச் சமம், வேதத்தை விளக்கிக் கூறும் நூல்களுக்குச் சமம் என்று பலவிதமாக நீவிர் உரைத்தீர். ஆனால் அந்த இரண்டிற்கும், அந்தந்த க்ரந்தங்களுக்கு ஏற்றபடியான சில அலங்காரங்கள் (சொல் அல்லது வாக்கிய அமைப்பு) உள்ளது போன்று, திருவாய்மொழிக்கும் உள்ளதோ?”, என்றனர். வடமொழியில் அமையப் பெற்ற அந்தந்த க்ரந்தங்களுக்கு ஏற்ப அவற்றில் பல அலங்காரங்கள் உள்ளது போன்று, தமிழில் அமைந்துள்ள திருவாய்மொழிக்கு, தமிழுக்கே ஏற்ற அலங்காரங்கள் பலவும் உண்டு என்கிறார். குறிப்பு – இந்தச் சூர்ணையில் உள்ள பலவிதமான வடமொழி சொற்களை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். வேத வாக்கிற்கெல்லாம், சப்த உச்சரிப்பானது, உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம் என்று நான்கு வகைப்படும். உதாத்தம் - சாதாரண ஸ்வரத்தில் உச்சரிக்க வேண்டும். அனுதாத்தம் - சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும். ஸ்வரிதம் - சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும். ப்ரசயம் என்பதை ஸ்வரிதத்தில் மாறுபாடு கொண்ட ஸஞ்சாரம் எனலாம். ஜடை – ஒரு சொல்லை மாறி மாறி இரண்டு மூன்று முறை உச்சரித்தல். பஞ்சாதி – ஐம்பது சொற்கள் கொண்ட ஒரு தொகுப்பு.

– அதாவது, உதாத்தாதி யென்கிறவிடத்தில் ஆதிசப்தத்தாலே அநுதாத்த ஸ்வரித ப்ரசயங்களைச் சொல்லுகிறது. இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும், க்ரம ஜடா பஞ்சாதிகளும் ப்ரச்நாஷ்டகங்களும் வேதாஸாதாரணம். அம்ச பர்வாதிகள் உபப்ரும்ஹணா ஸாதாரணம். பர்வாதி யென்கிறவிடத்தில் ஆதிசப்தத்தால் ஸ்கந்தாதிகளைச் சொல்லுகிறது. பத வாக்கிய பாத வ்ருத்த காண்டாத்யாயங்கள் உபய ஸாதாரணம். ஸ்ரீராமாயணத்தில் ப்ரதாந பரிச்சேதங்களிலும் கண்ட வ்யவஹார முண்டிறே. கௌஷீதகி முதலான உபநிஷத்துக்களிலே அத்யாயமென்கிற பரிச்சேத வ்யவஹாரம் கண்டு கொள்வது. ஆக இப்படி வேதத்துக்கும் ததுபப்ரும்ஹணங்களுக்கு முண்டான அலங்காரங்களைச் சொல்லி, அப்படியே இதுக்குமுண்டான அலங்காரங்களை யெல்லாம் சொல்லுகிறது மேல் (எழுத்தித்யாதி). எழுத்தாவது குற்றேழுத்து நெட்டெழுத்து முதலான பதின்மூன்றெழுத்து. அசையாவது நேரசை, நிரையசை ஆகிறவிரண்டசையும். சீராவது ஆசிரிய உரிச்சீர் நான்கும், வெண்பாவுரிச்சீர் நான்கும், வஞ்சியுரிச்சீர் நான்கும். பொதுச்சீர் பதினாறும், ஓரசைச்சீரிரண்டும் ஆக முப்பது சீரும். பந்தமெனிலும் தளையெனிலும் ஒக்குமென்று தமிழ் சொல்லுகையாலே பந்தமும் தளையுமொன் றாகையால் இங்கே பந்தமென்றும், மேலே தளையென்றும் சொல்லுமளவில் புநருக்த மாகையாலே இரண்டத்தொன்று வர்ஜிக்க வேணும். அடியாவது, குறளடி, சிந்தடி முதலான அடியைந்தும், தொடையாவது மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை என்கிற ஐந்திலும் அடிமோனை முதலாக ஓரொன்றிலே எவ்வெட்டுத் தொடையாக நாற்பதும், அந்தாதித்தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை யென்கிற மூன்றுமாக நாற்பத்துமூன்று தொடையும், நிரைநிரையாவது, நேர்நிரைநிரை, நிரைநிரைநிரை முதலானவை. ஓசையாவது செப்பலோசை அகவலோசை முதலான நாலோசையும், தளையாவது, நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை முதலான ஏழு தளையும், இனமாவது, “தாழிசை, துறை, விருத்தம்” என்கிற பாக்களினம் மூன்றும். யாப்பாவது ப்ரபந்த ரூபமாயிருக்கை. பாவாவது வெண்பா ஆசிரியப்பா முதலான பாக்கள், துறை என்கிறவிதுவும், இனத்தின் வகையிலொன்றாகையாலே புநருக்தமாம். அர்த்தாந்தர முண்டாகில் கண்டு கொள்வது. பண்ணாவது முதிர்ந்த குறிஞ்சி, நட்டபாஷை, நட்டராகம், செந்திரி பியம்தைந்தளம் முதலானவை இசையாவது. குறள், துத்தம், கைக்கிளை, உழையினம், விளரிதாரம் என்கிற பேரால் சொல்லப்படுகிற நிஷாதர்ஷப காந்தாரஷட்ஜ மத்யம தைவம் பஞ்சமங்களாகிற ஏழிசையும். தாளமாவது “கஜகர்ணச் சோரகதிர் மகாத்வஜ தாளக: லக்ஷ்மீ கீர்த்தி: பாணிபாதௌ கௌரீ பஞ்சாநநஸ் ததா, சதுராம்நாய தாளச்ச தாளோயம் கருடத்வஜ:, ஸங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா: ப்ரகீர்த்திதா:” என்கிறபடியே, கஜகரணம், சோரகதி, மகரத்வஜம் முதலான தாளங்கள். பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான அத்யாயாதிகள்போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய், “இப்பத்தும்”, “இவை பத்தும்” என்று சொல்லப்படுகிற திருவாய்மொழிகள். – நூறாவது, ப்ரதாந பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே, “நூறே சொன்ன”, “பத்து நூறு” என்னும்படி நூறு நூறு பாட்டாயிருந்துள்ள ப்ரதாந பரிச்சேதங்கள். ஆயிரமாவது, “சதுர்விம்சத் ஸஹஸ்ராணி ச்லோகாநாம்” என்னுமாபோலே யிருந்துள்ள மஹாபரிச்சேதம், முதலான வென்கையாலே, முதலிட்டு மூன்று பத்து உத்தரகண்ட விவரணமாய் நடுவிட்டு மூன்று பத்து பூர்வகண்ட விவரணமாக, மேலிட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த ப்ரதிபாதகமாய் மேலில் பத்து பாலாவாப்தி கதநமா யிருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவக்ஷிதங்கனென்று தோற்றுகிறது. “முதலான செய்கோல மிதுக்குமுண்டு” என்றது, “செய்கோலத்தாயிரம்” என்று கவிக்குச் சொல்லுகிற அலங்காரங்களால் குறைவற்ற வாயிர மென்கையாலே ஏவமாதிகளான ஸர்வாலங்காரங்களும் இதுக்குமுண்டென்கை.

உதாத்தம் போன்றவைகளும். “உதாத்தாதி” என்பதில் உள்ள “ஆதி” என்பதன் மூலம் அனுதாத்தம், ஸ்வரிதம் மற்றும் ப்ரசயங்களும் சேர்த்துக் கூறப்பட்டன. இப்படிப்பட்ட உதாத்தம் போன்ற ஒலி பிரிவுகளும், க்ரமங்கள் - ஜடா - பஞ்சாதி – ப்ரச்ந - அஷ்டகங்களும் வேதத்திற்கே உரிய அமைப்புகள் ஆகும். அம்சம், பர்வம் [உதாரணமாக மஹாபாரதத்தில் உள்ள ஆதிபர்வம்] போன்ற அமைப்புகள் இதிகாசம், புராணங்கள் போன்றவைகளுக்கே உரியவை ஆகும். “பர்வாதி” என்பதில் உள்ள “ஆதி” என்பதன் மூலம் ஸ்கந்தம் [ஸ்ரீமத் பாகவதத்தில் முதல் ஸ்கந்தம், இரண்டாம் ஸ்கந்தம் என்று பன்னிரண்டு உள்ளன] போன்றவை கூறப்பட்டன. பதம், வாக்கியம், பாதம், விருத்தம், காண்டம், அத்யாயம் போன்றவை வேதங்கள் மற்றும் இதிகாச புராணங்கள் ஆகிய இரண்டிற்கும் உள்ள பொதுவான அமைப்புகள் ஆகும். இராமாயணத்தில் முக்கியமான பிரிவுகளைக் காண்டம் என்று கூறுவது உண்டு [உதாரணமாக, அயோத்யாகாண்டம் போன்றவை]. கௌஷீதகீ உபநிஷத் போன்றவற்றில், அத்யாயம் என்ற பிரிவுகள் கூறப்படுவது காணலாம். ஆக, இப்படியாக வேதங்கள் மற்றும் அவற்றை விளக்கவல்ல நூல்களான இதிகாச புராணங்கள் ஆகியவற்றுக்கு உள்ள அலங்காரங்களை உரைத்து, இது போன்றே திருவாய்மொழிக்கும் உள்ள அனைத்து அலங்காரங்களையும் இனி உரைக்கிறார். (எழுத்து) - எழுத்து என்றால் குறில், நெடில் என்றுள்ள பதிமூன்று வகைகள் ஆகும் [குறில், நெடில், உயிர், மெய், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம், அளபெடை]. (அசை) - அசை என்பது நேரசை மற்றும் நிரையசை ஆகும். (சீர்) என்பது ஆசிரிய உரிச்சீர் நான்கு [நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை], வெண்பாவுரிச்சீர் நான்கு [நேர்நேர்நேர், நிரைநேர்நேர், நேர்நிறைநேர், நிரைநிரைநேர்],வஞ்சி உரிச்சீர் நான்கு [நேர்நேர்நிரை, நிரைநேர்நிறை,நேர்நிரைநிரை, நிரைநிரைநிரை), பொதுச்சீர் பதினாறு [ஆசிரியவுரிச்சீரான ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றைத் தொடர்ந்தும் நேர்நேர், நேர்நிரை, நிரைநேர், நிரைநிரை என்பதைச் சேர்த்தால் 4 X 4 = பதினாறு அசைச்சீர்கள் கிட்டும்], ஓர் அசைச்சீர்கள் இரண்டு [நேர், நிரை] என்று மொத்தம் முப்பது சீர்கள். (பந்தம்) - பந்தம் என்பதும், தளை என்பதும் ஒன்றே ஆகும் என்று கூறுவர்; ஆகவே சூர்ணையில் வருகின்ற தளை என்ற சொல் “கூறியது கூறல்” என்ற புநருக்தி தோஷத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் இரண்டில் ஒன்றை நீக்கிக் கொள்ளவேண்டும். (அடி) - அடி என்பது குறளடி, சிந்தடி என்னும் ஐந்து விதம் ஆகும் [குறளடி - இருசீர் கொண்டவை, சிந்தடி – முச்சீர் கொண்டவை, நேரடி - நான்கு ஒரு சீர் கொண்டவை, நெடிலடி - ஐந்து சீர் கொண்டவை, கழிநெடிலடி - ஐந்து சீர்க்கு மேல் கொண்டவை]. (தொடை) - தொடை என்பது மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை என்ற ஐந்தில், மோனை தொடக்கி ஒவ்வொன்றிலும் எட்டு எட்டு தொடையாக வைத்து நாற்பது தொடைகள் மற்றும் அந்தாதித்தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை என்று மூன்றையும் சேர்ந்து நாற்பத்துமூன்று தொடைகள் ஆகும். (நிரைநிரை) - நிரைநிரை என்பது நேர்நிரைநிரை, நிரைநிரைநிரை போன்றவை ஆகும். (ஓசை) – ஓசை என்பது செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை மற்றும் தூங்கலோசை என்னும் நான்கு ஆகும். (பா) - பா என்பது வெண்பா, ஆசிரியப்பா போன்றவை ஆகும் [மேலும் உள்ள பாக்கள் - கலிப்பா, வஞ்சிப்பா என்று மொத்தம் நான்கு]. (துறை) - துறை என்பது பாக்களின் இனத்தில் ஒன்று என்பதால், அங்கே கூறப்பட்டது மீண்டும் இங்கு வந்தது எனலாம். வேறு பொருள் இருப்பின் அதனை எடுத்துக் கொள்ளலாம். (பண்) - பண் என்பது முதிர்ந்த குறிஞ்சி, நட்டபாஷை, நட்டராகம், செந்திரி, பியந்தை, இந்தளம் போன்றவை ஆகும். (இசை) - இசை என்பது குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் பெயர்களால் கூறப்படும் நிஷாதம், ரிஷபம், காந்தாரம், ஷட்ஜமம், மத்யமம், தைவதம் மற்றும் பஞ்சமம் என்றுள்ள ஏழு ஆகும். (தாளம்) - கஜகர்ணச் சோரகதிர் மகாத்வஜ தாளக: லக்ஷ்மீ கீர்த்தி: பாணிபாதௌ கௌரீ பஞ்சாநநஸ் ததா, சதுராம்நாய தாளச்ச தாளோயம் கருடத்வஜ:, ஸங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா: ப்ரகீர்த்திதா: - கஜகர்ணம், சோரகதி, மகரத்வஜம், லக்ஷ்மிகீர்த்தி, பாணி, பாதம், கௌரீ, பஞ்சானனம், சதுராம் நாயம், கருடத்வஜம் போன்றவை சங்கீதம் அறிந்தவர்களால் தாளங்கள் எனப்படுகின்றன - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளதான கஜகரணம், சோரகதி, மகரத்வஜம் போன்ற தாளங்கள் ஆகும். (பத்து) - வடமொழி நூல்களில் காணப்படும் அம்சம், பர்வம் போன்றவற்றின் உட்பிரிவுகளாக உள்ள அத்யாயம் போன்றவை போல, நூற்றின் உட்பிரிவுகளாக உள்ளதான திருவாய்மொழி (9-4-11) – இப்பத்து, திருவாய்மொழி (5-5-11) - இவை பத்தும் - போன்று கூறப்படும் திருவாய்மொழிகள் பத்து. (நூறு) - வடமொழியில் உள்ள நூல்களில் காணப்படும் பெரும்பிரிவுகளான அம்சம், பர்வம், காண்டம் போன்று, திருவாய்மொழி (9-4-11) - நூறே சொன்ன, திருவாய்மொழி (6-7-11) – பத்து நூறு - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள நூறு நூறு பாசுரங்களாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகள் [முதல் பத்து, இரண்டாம் பத்து போன்றவை]. (ஆயிரம்) - இராமயணம் பாலகாண்டம் (4-2) - சதுர்விம்சத் ஸஹஸ்ராணி ச்லோகாநாம் - இருபத்துநான்காயிரம் ச்லோகங்களை வால்மீகி உரைத்தார் - என்று கூறுவது போன்றுள்ள மிகப் பெரிய பாகம் [அதாவது, ஆயிரம் பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி]. (முதலான) – திருவாய்மொழியின் முதல் மூன்று பத்துக்கள் த்வயத்தின் இரண்டாவது வாக்கியத்தின் விளக்கமாகவும், அடுத்துள்ள மூன்று பத்துக்கள் த்வயத்தின் முதல் வாக்கியத்தின் விளக்கமாகவும், அடுத்துள்ள மூன்று பத்துக்கள் அந்த இரண்டு வாக்கியத்திற்கு ஏற்படும் ஆழ்பொருள் உரைப்பதாகவும், இறுதியாக உள்ள பத்துக்கள் பலனைக் கூறுவதாகவும் உள்ளதால், இப்படியாகப் பிரிக்கப்பட்ட விதங்கள் ஆழ்வாரின் திருவுள்ளத்தில் உள்ளதே ஆகும் என்று தேறுகிறது. (முதலான செய்கோலம் இதுக்கும் உண்டு) – திருவாய்மொழி (4-1-11) - செய்கோலத்தாயிரம் - என்று பொதுவாகக் கவிக்குச் சொல்லப்படும் அலங்காரங்களால் குறைவில்லாத ஆயிரம் என்பதால், இவை போன்று அனைத்து வடமொழி நூல்களில் உள்ள அலங்காரங்கள், திருவாய்மொழிக்கும் உண்டு என்றாகிறது.