Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 68)
முதல் ப்ரகரணம்
பாரதகீதைகளின் வேதோபநிஷத்த்வம்போலே இதுவும் வ்யாக்க்யையானாலும் வேதரஹஸ்யமாம்.
ஆனால் இத்தை உபப்ரும்ஹணமாகச் சொன்ன பக்ஷத்தில் வேதவ்யாக்க்யை யாமதொழிய, “வேதரூபமிதம் க்ருதம்”, “த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்”, “த்ராவிட வேத ஸூக்தை:” என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம் இதுக்குக் கூடுமோ வென்ன அருளிச்செய்கிறார் (பாரத கீதைகளினித்யாதியால்).
ஆனால் திருவாய்மொழியை இதிகாச புராணங்கள் போன்றுள்ளது என்று உரைக்கும்போது, அவை போன்று இதனையும், வேதத்திற்கு வ்யாக்யானம் என்று கூறலாமே அல்லாமல், வேதரூபம் இதம் க்ருதம் - வேதரூபமாகவே திருவாய்மொழி செய்யப்பட்டது - என்றும், ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1-6) - த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் - தமிழில் உள்ளதான ப்ரஹ்மத்தைக் குறித்ததான திருவாய்மொழி என்னும் உபநிஷத்தை - என்றும், ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1-16) - த்ராவிட வேத ஸூக்தை: - தமிழ் வடிவில் உள்ள வேதம் கொண்டு - என்று சான்றோர்கள் உரைப்பது போன்று, வேதமாகும் தன்மை திருவாய்மொழிக்கு உண்டோ என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, வேதோபப்ரும்ஹணமான மஹாபாரதமும், அதில் ஸாரமான ஸ்ரீகீதையும், “வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்” என்றும், “பகவத்கீதா ஸூபநிஷத்ஸு” என்றும் சொல்லுகிறபடியே வேதமும் உபநிஷத்துமாகிறாப் போலே, இது வேதவ்யாக்க்யையான உபப்ரும்ஹணமானாலும் வேதரஹஸ்யமா மென்கை. வேதரஹஸ்யமாவது, வேதத்தில் ரஹஸ்யபாகமான உபநிஷத்து. கீழ் ச்சாந்தோக்ய ஸமமாகவிறே சொல்லிற்று. ஆகையால் இந்தப் பக்ஷத்திலும் இதன் த்ராவிட வேதத்வ ஹாநி வாராதென்றும் கருத்து.
(பாரதகீதைகளின் வேதோபநிஷத்த்வம்போலே) – வேதத்திற்குத் துணை நூலாக, அதன் பொருளை விரிவாக உரைக்கவல்ல மஹாபாரதமும், அதன் சாரமாக உள்ள ஸ்ரீமத்பகவத்கீதையும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் - வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந் - மஹாபாரதமாகிற ஐந்தாவது வேதத்தை அத்யயனம் செய்வித்தார் - என்றும், பகவத்கீதாஸூபநிஷத்ஸு – பகவத்கீதை என்ற உபநிஷத்தில் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அவைகள் முறையே வேதமும் உபநிஷத்தும் ஆவது போன்று, (இதுவும் வ்யாக்க்யையானாலும் வேதரஹஸ்யமாம்) - இந்தத் திருவாய்மொழியும் வேதத்தினை விவரித்துக் கூறும் நூலாக உள்ளபோதிலும், வேதரஹஸ்யமான உபநிஷத்தே ஆகும். வேதரஹஸ்யம் என்றால் வேதத்தில் உள்ள ரஹஸ்ய பாகமான உபநிஷத் ஆகும். மேலே காணப்பட்ட பல சூர்ணைகளில், திருவாய்மொழியைச் சாந்தோக்ய உபநிஷத்திற்குச் சமமாகவே கூறினார் அல்லவோ? ஆகவே திருவாய்மொழியை, வேதத்தின் பொருள் விளக்கும் நூல் என்று கொண்டாலும், இது தமிழ்வேதம் என்ற நிலைக்கு எந்தவிதமான தாழ்வும் ஏற்படாது என்று கருத்து.