Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 67)

முதல் ப்ரகரணம்

ஆப்திக்கு இவர் சுருதி மார்க்கண்டேயன் பார்த்தனென்கிற விவை வ்யாஸ மநு ப்ரஹ்மவாதிகளை வேதம் சொல்லுமாபோலே.

இப்படி அபியுக்தரானவர்கள் இது கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்கும்படி ஸகல வேதோப ப்ரும்ஹணங்களிலும் அதிப்ரபலமாய், இவ்வளவு மன்றிக்கே கீழ்ச் சொன்னபடியே த்ராவிட வேதமாய்க் கொண்டு வேத ஸமமாயிருக்கிற ஆப்ததமமான இப்ப்ரபந்தத்திலே ஆப்திக்கு உறுப்பாக இவர் வேறே சில விஷயங்களை எடுப்பானென் னென்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார் (ஆப்திக்கித்யாதி).

இப்படியாக ப்ரமாணங்களைக் கொண்டு பலவற்றையும் நிரூபிக்கும் சான்றோர்கள், இந்தத் திருவாய்மொழியின் துணை கொண்டு சாஸ்த்ரங்களின் ஆழ்பொருளை நிரூபிக்கும்படியாக, அனைத்து வேதங்களைக் காட்டிலும், இதிகாசங்கள் மற்றும் புராணங்களைக் காட்டிலும், இந்தத் திருவாய்மொழி மிகவும் ப்ரபலமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல், மேலே கூறப்பட்டபடி, தமிழ்வேதமாகவே உள்ள காரணத்தால் வேதத்திற்குச் சமமாகவே உள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த இந்தத் திருவாய்மொழியில், பகவத்விஷயத்தில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக நம்மாழ்வார், மற்ற சில உதாரணங்களை ஏன் காண்பிக்கவேண்டும் என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச் செய்கிறார்.

– அதாவது, இதில் சொல்லுகிற அர்த்தங்களில் ஆப்திக்குறுப்பாக, இவர் “உளன் சுடர்மிகு சுருதியுள்” என்றும், “மார்க்கண்டேயனும் கரியே” என்றும், “பார்த்தன் தெளிந்தொழிந்த” என்றும் ச்ருதியையும், மார்க்கண்டேயனையும், பார்த்தனையும் சொல்லுகிறவை, பரமாப்தமான வேதம், “ஸ ஹோவாச வ்யாஸ: பாராசர்ய” என்றும், “யத் வை கிஞ்ச மநுரவதத் தத பேஷஜம்” என்றும், “ப்ரஹ்மவாதிநோ வதந்தி” என்றும் ஆப்திக் குறுப்பாக வ்யாஸனையும் மநுவையும் ப்ரஹ்மவாதிகளையும் சொல்லுகிறாப்போலே யென்கை. ஆனபின்பு அது தாழ்வல்ல, ஆப்த்யதிசயத்துக்கு உறுப்பென்று கருத்து. இத்தால், கீழ் வேதஸாம்யம் சொன்னவிடத்திலே சொல்ல வேண்டியிருக்க, அநுக்தமாய்க் கிடந்தவற்றை இங்கே அருளிச்செய்தாராய்த்து.

(ஆப்திக்கு) - இந்தத் திருவாய்மொழியில் கூறப்படும் பகவத்விஷயத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக. (இவர் சுருதி மார்க்கண்டேயன் பார்த்தன் என்கிற இவை) - திருவாய்மொழி (1-1-7) - உளன் சுடர்மிகு சுருதியுள் - என்றும், திருவாய்மொழி (5-2-7) - மார்க்கண்டேயனும் கரியே – என்றும், திருவாய்மொழி (2-8-8) - பார்த்தன் தெளிந்தொழிந்த - என்றும் நம்மாழ்வார் ச்ருதி, மார்க்கண்டேயன், பார்த்தன் ஆகியவற்றைக் குறித்து உரைத்தல் என்பது. (வ்யாஸ மநு ப்ரஹ்மவாதிகளை வேதம் சொல்லுமாபோலே) - உண்மைகளைக் குறித்து உள்ளது உள்ளபடி உரைக்கும் வேதங்கள், ஸ ஹோவாச வ்யாஸ: பாராசர்ய - பராசரரின் புத்திரரான வ்யாஸர் உரைத்தார் - என்றும், யஜுர்வேதம் - யத் வை கிஞ்ச மநுரவதத் தத பேஷஜம் - எதனை மனு உரைத்தாரோ அது மருந்து - என்றும், யஜுர்வேதம் - ப்ரஹ்மவாதிநோ வதந்தி - ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள் - என்றும் நம்பிக்கை உண்டாக்கும் விதத்தில் வ்யாஸர், மனு, ப்ரஹ்மத்தை அறிந்த மனிதர்கள் குறித்துக் கூறுவது போன்றதாகும். ஆகவே நம்மாழ்வார் அவ்விதம் மற்ற விஷயங்களை அருளிச்செய்தமை என்பது, திருவாய்மொழிக்குத் தாழ்வு அல்ல, மாறாக நம்பிக்கை ஏற்படுத்தவல்லதாகும் என்று கருத்து. இதன் மூலம், வேதத்துடன் திருவாய்மொழிக்கு உள்ள ஒற்றுமை குறித்து அருளிச்செய்த இடத்தில் இதனைக் குறித்து கூறியிருக்கவேண்டும்; ஆனால், அதனை அங்கு உரைக்காமல் விடுத்த காரணத்தால், இங்கு அருளிச்செய்தார் என்பது தெளிவாகிறது.