Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 66)
முதல் ப்ரகரணம்
அதுக்கு மூலம் “விதயச்ச” என்கிற பரமாசார்ய வசநம்.
அவர்தாம் அப்படி அருளிச்செய்தருளுகைக்கு மூலம் ஏதென்னு மபேக்ஷையிலே அருளிச்செய்கிறார் (அதுக்கு மூலமித்யாதி).
அவ்விதம் எம்பெருமானார் அருளிச்செய்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, பாஷ்யகாரர் அப்படி செய்தருளுகைக்கடி, “விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீரமநோநுஸாரிண:” என்று, “இதம் குரு” “இதம் மாகார்ஷீ:” என்கிற ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் அநந்ய ப்ரயோஜநரா யாச்ரயித்திருக்கும் த்வதீயருடைய ஐச்வர்யாதிகளால் கலக்கவொண்ணாதபடி கம்பீரமான மநஸ்ஸைப் பின் செல்லுமென்று – இவ்வாழ்வார் போல்வார் நினைவை சாஸ்த்ரங்கள்தான் பின் செல்லுமதாகப் பரமாசார்யரான ஆளவந்தார் அருளிச்செய்த வசநமென்கை.
(அதுக்கு மூலம்) - எம்பெருமானார் திருவாய்மொழியை அடியாகக் கொண்டு ப்ரஹ்மஸூத்ர வாக்கியங்களைத் தெளிவுப்படுத்தியன் காரணம். (விஷயச்ச என்கிற பரமாச்சார்ய வசநம்) - இங்கு பரமாசார்யார் என்பது ஆளவந்தாரைக் குறிப்பதாகும். ஸ்தோத்ரரத்னம் (20) - விதயச்ச - வேதங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை ஆராய்ந்தால், உன்னையே சரணம் என்று பற்றி நிற்கும் அடியார்களுடைய கம்பீரமான திருவுளத்தைப் பின்பற்றியே அவை உள்ளன என்று புலப்படுகிறது - என்றுள்ள ச்லோகத்தில், “இதம் குரு – இதனைச் செய், இதம் மாகார்ஷீ: - இதனைச் செய்யாதே” என்பதனான சுதந்திரமான வேத விதிமுறைகள் கூட, மற்ற எந்த ஒரு பலனையும் கருத்தில் கொள்ளாததும், செல்வம் முதலானவற்றால் மாசு அடையாததும் ஆகிய அடியார்களுடைய கம்பீரமான மனதைப் பின்தொடர்ந்தே உள்ளன என்று கூறுவது கானலாம்; ஆகவே அப்படிப்பட்டவராகிய நம்மாழ்வார் போன்றவர்களுடைய சிந்தனைகளைப் பின்பற்றியே சாஸ்த்ரங்கள் செல்கின்றன என்பது ஆளவந்தாரின் சொற்களாகும். இதுவே எம்பெருமானார் இவ்விதம் செய்ததன் காரணமாகும்.