Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 64)
முதல் ப்ரகரணம்
குருசிஷ்ய க்ரந்தவிரோதங்களைப் பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செந்தமிழின் கவி பரவி யழைக்குமென்று அந்யோந்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசுமேக கண்டரில் என்னில் மிகுவென்னு மிவ ருரைகொளின் மொழி கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங்கொண்ட விதுக்குச் சேராதவை மநு விபரீதங்கள் போலே.
இனிமேல் இப்படி அருளிச்செயலில் ஸாரமான இதன் ப்ராமாண்யாதிசயத்தை ப்ரகாசிப்பிக்கைக்காக ஆழ்வார்களுடைய ஐககண்டயத்தையும், அவர்களில் தலைவரான இவரருளிச்செய்த இப்ப்ரபந்தத்தினுடைய ப்ராபல்யத்தையும் ப்ரதிபாதியா நின்று கொண்டு, ஏவம்பூதமான விதுக்குச் சேராத சாஸ்த்ரங்கள் பரீக்ஷக பரித்யாஜ்யங்களாம்படியை அருளிச்செய்கிறார் (குருசிஷ்யேத்யாதியால்).
அடுத்து மற்ற ஆழ்வார்களுடைய அருளிச்செயல்கள் அனைத்திற்கும் சாரமாக உள்ள திருவாய்மொழியின் மிகவும் உயர்ந்த ப்ரமாணமாக உள்ள தன்மையை வெளிப்படுத்தத் திருவுள்ளம் பற்றினார். ஆகவே மற்ற ஆழ்வார்கள் அனைவரையும் கூறியதையே கூறுபவர்கள் என்பதையும், அவர்களுடைய தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியின் மேன்மையையும் அருளிச்செய்ய எண்ணினார். ஆகவே, இப்படிப்பட்டதான திருவாய்மொழிக்கு சேராத சாஸ்த்ரங்கள் ஏதும் ஆராயத் தகுந்தவை அல்ல என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, ருஷிகளில் குருசிஷ்யர்களான வ்யாஸ ஜைமிநிகளில் குருவான வ்யாஸனுடைய க்ரந்தமான ப்ரஹ்மஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமிநியுடைய க்ரந்தமான கர்மஸூத்ரத்துக்கு நிரீச்வரவாதாதிகளால் வந்த விரோதத்தை, “ஸம்பத்தேரிதி ஜைமிநி”, “அந்யார்த்தம் து ஜைமிநி:”, “பரம் ஜைமிநிர் முக்க்யத்வாத்”, “ப்ராஹ்மேண ஜைமிநி:” இத்யாதியான ப்ரஹ்மஸூத்ரங்களாலே ஜைமிநிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத்குண ததுபாஸந தத்பலாதிகளினுடைய அங்கீகார முண்டென்னுமிடம் தோற்றுகையாலும், மஹாபாரதத்திலே ஹயசிர உபாக்யாநாதிகளிலே பகவத் வ்யாஸோபதேச லப்த பரமாத்ம தத்வஜ்ஞாநமுடையவனாகச் சொல்லுகையாலும், ஸ்ரீவேதவ்யாஸனும் ஜைமிநியும் ஏககண்டர்கள். இனி தேவதா நிராகரணம் பண்ணினவிது ஈச்வரப்ரணீதமாக வேதத்தைச் சிலர் சொல்லுய்கையாலே அந்த பௌருக்ஷேயத்வமடியாக விப்ரலம்பாதி தோஷங்களைக் கல்பித்து வேதப்ராமாண்யம் சொல்லுவது, வைதிக கர்மங்களை நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து, வேதப்ராமாண்ய கர்மாவச்ய கர்த்தவ்யதைகளை ஸாதிக்கையி லுண்டான இச்சையாலே ஸ்வமதமன்றியிலே யிருக்கப் பர மதத்தை அவலம்பித்துச் சொன்னா னென்றாதல், அன்றிக்கே தேவதா நிராகணத்தில் தாத்பர்யமில்லை. அச்ருத வேதாந்தர்க்கு கர்மத்தில் அச்ரத்தையை நிவாரிக்கைக்காக கர்மப்ராதாந்யம் சொல்லுகையிலே தாத்பர்யமாகையாலே, “நஹி நிந்தா நித்த்யம் நிந்திதும் ப்ரவர்த்ததே, நிந்திதாத் இதரத் ப்ரசம்ஸிதும்” என்கிற ந்யாயத்தாலே தேவதா நிராகரணம் பண்ணினவிது கர்ம ப்ரசம்ஸார்த்த மாகையாலே அந்யபரமென்றாதல் கொள்ள வேணுமென்று, இப்படி பர மதாந்ய பரத்வங்களாலே பரிஹரிக்க வேண்டிற்றிறே. அப்படியே யிங்கும் அந்யோந்ய வசந விரோதமுண்டாய் அதுக்கு ஒரு பரிஹாரம் பண்ணவேண்டாதபடி, “செஞ்சொற்கவிகாள்” என்றும், “செந்தமிழ் பாடுவார்” என்றும், “இன்கவி பாடும் பரமகவிகள்” என்றும், “பதியே பரவத் தொழும் தொண்டர்” என்றும், “அரங்கவோ வென்றழைக்கும் தொண்டர்” என்றும் பரஸ்பரம் ச்லாகித்துக் கொண்டு, “பேசிற்றே பேசலல்லால்” என்கிறபடியே ஒருவர் பேசினதே எல்லாரும் பேசுமேக கண்டரான ஆழ்வார்களில் வைத்துக்கொண்டு, “என்னில் மிகு புகழார் யாவர்” என்று சேஷிக்கு அதிசயகரராகப் பெற்ற ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே என்னிற்காட்டில் மிக்க புகழையுடையார் ஆரென்னும் ஸர்வாதிகரான இவருடைய “உரைகொளின் மொழி” என்கிறபடியே ஸ்ரீராமாயணாதிகளையும் ஸ்வவைலக்ஷண்யத்தாலே ஜயிக்கும்படியான உக்திகளைக் கொண்டு வேத ததுப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ஸம்சயிதமான அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும்படியா யிருக்கையாலே “வலங்கொண்ட வாயிரம்” என்கிறபடியே ப்ரதிபாத்ய வஸ்துவை உள்ளபடி ப்ரதிபாதிக்கவல்ல ஸாமர்த்யத்தை யுடைத்தான இப்ப்ரபந்த்த்துக்குச் சேராத சாஸ்த்ரங்கள், “மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே” என்று சொல்லப்பட்ட மநுவிபரீதமான ஸ்ம்ருதிகள் போலக் கழிக்கப்படுமென்கை.
(குருசிஷ்ய க்ரந்த விரோதங்களை) - ரிஷிகளில் குருவும் சிஷ்யருமாக உள்ள வ்யாஸர் மற்றும் ஜைமிநி ஆகியவர்களில் ஆசார்யனாகிய வ்யாஸருடைய க்ரந்தமான ப்ரஹ்மஸூத்ரத்துடன், சிஷ்யனாகிய ஜைமிநியின் க்ரந்தமான கர்மஸூத்ரத்துக்கு “ஸர்வேச்வரன் இல்லை” என்று கூறப்படும் வாதங்களால் முரண்பாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டினை …. (இந்த வாக்கியத்தை அடுத்த விளக்கத்தின் இறுதியில் காணப்படும் “சமாதானம் உரைத்தார்கள்” என்பதுடன் சேர்த்து முடிக்கவேண்டும்). ப்ரஹ்மஸூத்ரம் (1-2-32) - ஸம்பத்தேரிதி ஜைமிநி - வைச்வாநர வித்யையின் அங்கமாக உள்ள ப்ராணாஹுதியை அக்னிஹோத்ரம் என்று உணர்துவதற்காகவே உபாஸகனின் மார்பு முதலான உடல் உறுப்புகளை வேதி முதலான யாகத்திற்குப் பயன்படும் உபகரணங்கள் என்று ஜைமினி கூறினார் - என்றும், ப்ரஹ்மஸூத்ரம் (1-4-18) - அந்யார்த்தம் து ஜைமிநி: - வேறு ஒரு கருத்தைக் கொண்டு இங்கு ஜீவன் குறித்து ஜைமிநி கூறுகிறார் - என்றும், ப்ரஹ்மஸூத்ரம் (4-3-11) - பரம் ஜைமிநிர் முக்க்யத்வாத் - ப்ரஹ்மத்தை உபாஸிப்பவர்களை ஆதிவாஹிகர்கள் அழைத்துச் செல்வதாக ஜைமிநி எண்ணுகிறார் - என்றும், ப்ரஹ்மஸூத்ரம் (4-4-5) - ப்ராஹ்மேண ஜைமிநி: - பாவம் அற்ற தன்மை போன்ற ப்ரஹ்மத்தின் தன்மைகளுடன் முக்தன் உள்ளதாக ஜைமிநி கருதுகிறார் - என்றும் காணப்படும் ப்ரஹ்மஸூத்ரங்கள் மூலம், ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம், ப்ரஹ்மத்தின் குணங்கள், ப்ரஹ்ம உபாஸனை, உபாஸனை மூலம் கிட்டும் பலன்கள் ஆகியவற்றில் வ்யாஸருடன் ஜைமிநிக்குக் கருத்து உடன்பாடு உண்டு என்று வெளிப்படுகிறது; மேலும் மஹாபாரதத்தில் காணப்படும் ஹயசிர சரிதம் போன்றவற்றின் மூலமாக வ்யாஸரின் உபதேசத்தால் ஜைமிநி, பரமாத்மாவைக் குறித்த ஞானத்தை உள்ளது உள்ளபடி பெற்றார் என்று கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் வ்யாஸரும், ஜைமிநியும் ஒரே போன்று பேசும் தன்மை கொண்டவர்கள் என்று தேறுகிறது. (பர மதாதிகளாலே பரிஹரியாமல்) - இப்படியாக உள்ளபோது, ஜைமிநி “ஸர்வேச்வரன் இல்லை” என்று கூறியது வ்யாஸருடன் முரணாகிறதே என்ற சந்தேகத்திற்கு அடுத்து விடை அளிக்கிறார். இவ்விதம் ஜைமிநி கூறினார் என்றாலும், “வேதங்கள் ஸர்வேச்வரனால் ஏற்படுத்தப்பட்டது” என்று சிலர் உரைப்பதன் காரணமாக ஜைமிநி செய்தது என்னவென்றால் – “வேதங்கள் மனிதர்களால் கூறப்பட்டது” என்று சிலர் உரைத்து, அதன் காரணமாக அவற்றில் வஞ்சித்தல் முதலான தோஷங்கள் உள்ளன என்று கூறி, வேதம் ப்ரமாணங்கள் அல்ல என்றும், வேதங்களில் உரைக்கப்பட்ட கர்மங்களை மறுத்தல் என்பதான செயல்களைச் சிலர் செய்வதால், அந்தச் மதங்களின் அந்தக் கொள்கைகளை மறுத்து, வேதங்களின் ப்ரமாணமாகும் தன்மையை நிரூபித்து, அவற்றின் உள்ள கர்மங்கள் அவசியம் செய்யத்தக்கவை என்று ஆணித்தரமான ஜைமினி எடுத்துரைத்தார்; இது போன்ற கருத்துக்கள் தனது “ஸர்வேச்வரன் இல்லை” என்பதுடன் முரணாக இருப்பினும், வேதங்களைக் காக்கவேண்டும் என்னும் இச்சை காரணமாக, மற்ற மதங்களில் உள்ள கருத்துக்களைத் தள்ளும்விதமாக உரைத்தார். அல்லது வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். “ஸர்வேச்வரன் இல்லை” என்றி ஜைமிநி கூறியதற்கு நேரடியான பொருள் ஏற்பது கூடாது. அதன் பொருள் என்னவென்றால் - வேதங்களைக் கேட்பதற்குத் தகுதி அற்றவர்களுக்கு அவற்றில் கூறும் கர்மங்களைச் செய்வதில் விருப்பம் இருக்காது; இந்த விருப்பம் இன்னையைத் தள்ளுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டதால், கர்மங்களின் முக்கியத்வத்தை உணர்த்துவதையே தனது முக்கிய செயலாக ஜைமிநி கொண்டார். ஆகவே, நஹி நிந்தா நித்த்யம் நிந்திதும் ப்ரவர்த்ததே, நிந்திதாத் இதரத் ப்ரசம்ஸிதும் - நிந்தை என்பது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்காக வரவில்லை, நிந்திக்கும் பொருள் அல்லாமல் உள்ள மற்றொரு பொருளைத் துதிப்பதற்காகவே வந்தது - என்ற நியாயத்தின்படி, “ஸர்வேச்வரன் இல்லை” என்று கூறப்பட்ட கருத்தானது, கர்மங்களைச் செய்தே தீரவேண்டும் என்ற அடிப்படையில் உரைக்கப்பட்டது என்று கொள்ளவேண்டும். ஆகவே மற்றவர்கள் மதத்தைத் தள்ளுவதற்காக, அவர்கள் மதத்தினை அடியொட்டி இவ்விதம் “ஸர்வேச்வரன் இல்லை” என்று உரைத்ததாக இந்த முரண்பாட்டிற்குச் சமாதானம் உரைத்தார்கள். (செஞ்சொல் செந்தமிழின் கவி பரவி யழைக்குமென்று அந்யோந்யம் கொண்டாடி) - இது போன்று ஒருவர் உரைத்த கருத்துக்கு மற்றொருவர் முரணாக உரைத்துவிட்டு, பின்னர் அதற்கான சமாதானம் கூறவேண்டாதபடி திவ்ய ப்ரபந்தங்கள் உள்ளன. இதனை விளக்குகிறார். திருவாய்மொழி (10-7-1) - செஞ்சொற்கவிகாள் – என்றும், பெரியதிருமொழி (2-8-2) - செந்தமிழ் பாடுவார் - என்றும், திருவாய்மொழி (7-9-6) - இன்கவி பாடும் பரமகவிகள் - என்றும், பெருமாள் திருமொழி (2-2) - அரங்கவோ வென்றழைக்கும் தொண்டர் - என்றும் ஒருவருக்கு ஒருவர் மற்றவர்களுடைய மேன்மையை உரைத்துக் கொண்டாடியபடி, (பேசிற்றே பேசும் ஏக கண்டரில்) - திருமாலை (22) - பேசிற்றே பேசலல்லால் - என்பதற்கு ஏற்ப ஒரு ஆழ்வார் அருளிச்செய்த கருத்தையும் சொல்லையுமே அனைவரும் பேசும்படியான ஒரே குரல் கொண்டவர்களான ஆழ்வார்களில், (என்னில் மிகும் என்று இவர்) – பெரியதிருவந்தாதி (4) - என்னில் மிகு புகழார் யாவர் - என்பதற்கு ஏற்ப எஜமானனுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுத்துவதன் காரணமாக உண்டான ப்ரீதியின் மிகுதி யாருக்கு உள்ளது என்பதைக் காட்டிலும், மிகுந்த புகழ் நிரம்பியவர் யார் என்ற காரணத்தால் அனைவரையும் விட உயர்ந்தவராகிய நம்மாழ்வார், (உரைகொள் இன்மொழி கொண்டு) – திருவாய்மொழி (6-5-3) - உரைகொளின் மொழி - என்பதற்கு ஏற்ப இராமாயணம் உள்ளிட்டவற்றையும் தனது வேறுபட்ட மேன்மை காரணமாக வெல்லவல்ல சொற்கள் கொண்டு, (சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே) - வேதங்கள் மற்றும் அவற்றின் ஆழ்பொருளை விவரிக்கின்ற புராணங்கள் போன்றவற்றில் சந்தேகம் எழுப்பவல்ல கருத்துக்களை தெளிவாக்க வேண்டும்படி உள்ள காரணத்தால், (வலம் கொண்ட இதுக்குச் சேராதவை) - திருவாய்மொழி (3-8-11) - வலங்கொண்ட வாயிரம் – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடைய ஸ்வபாவம், ஸ்வரூபம் போன்ற பல தன்மைகளையும் உள்ளது உள்ளபடி கூறவல்லதான இந்தத் திருவாய்மொழியின் பொருளுடன் பொருந்தாத மற்ற சாஸ்த்ரங்கள் அனைத்தும், (மநு விபரீதங்கள் போலே) மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே - எந்த ஒரு ஸ்ம்ருதி மநுவால் கூறப்படும் கருத்துக்களுக்கு மாறுபட்டதாக உள்ளதோ அது கொண்டாடப்படுவதில்லை - என்பதற்கு ஏற்ப மநு சாஸ்த்ரத்திற்கு விரோதமான ஸ்ம்ருதிகள் தள்ளப்படுவது போன்று, தள்ளப்படத் தக்கவையே ஆகும் என்று கருத்து.