Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 63)

முதல் ப்ரகரணம்

ராமாயணம் நாராயண கதையென்று தொடங்கி கங்காகாங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய் சுத்தி பண்ணாமல் திருமாலவன் கவியென்ற வாயோலைப்படியே மாற்றங்க ளாய்ந்து கொண்டு உரிய சொல்வாய்த்த விது வேதாதிகளில் பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்போலே அருளிச்செயலில் ஸாரம்.

– ஆக, “தர்ம வீர்யேத்யாதி” வாக்யம் தொடங்கி இவ்வளவும் இப்ப்ரபந்த வக்த்ரு வைலக்ஷண்யத்தை ப்ரதிபாதித்தார் கீழ். இனி இப்பரபந்த வைலக்ஷண்யந் தன்னை ப்ரதிபாதிக்கிறார் மேல் - (ராமாயணமென்று தொடங்கி).

– ஆக, தர்மவீர்ய (சூர்ணை 58) – என்பது தொடங்கி கடந்த சூர்ணை முடிய இந்தத் திவ்ய ப்ரபந்தங்களை அருளிச்செய்த நம்மாழ்வாருடைய மேன்மையைக் குறித்து அருளிச்செய்தார். இனி இந்த ப்ரபந்தங்களுடைய மேன்மையை அருளிச்செய்கிறார். குறிப்பு – இந்தச் சூர்ணையின் தொடக்கப் பகுதியை, “ராமாயணம் என்று தொடங்கி கங்காகாங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய் சுத்தி பண்ணாமல்” என்றும், “நாராயண கதையென்று தொடங்கி கங்காகாங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய் சுத்தி பண்ணாமல்” என்றும் இரண்டாகப் பிரிக்கவேண்டும். இது போன்று தொடங்கப்பட்ட இருவிதத்தில் மீதம் உள்ள சூர்ணையின் பகுதிகளைச் சேர்த்துப் படிக்கவேண்டும்.

– அதாவது, “காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஈத்ருசை: கரவாண்யஹம்” என்று ராம கதையைச் சொல்லுவதாக ராமாயணமென்று உபக்ரமித்து கங்கா ஸம்பவ ஸுப்ரஹ்மண்யோத்பத்தி புஷ்பக வர்ணந ரூப கதிகளைப் பரக்கப் பேசுகையாலே அஸத் கீர்த்தநம் பண்ணி வாகசுத்தி வந்ததிறே ஸ்ரீவால்மீகி பகவானுக்கு. “நாராயண கதாமிமாம்” என்கிறபடியே நாராயண கதையென்று உபக்ரமித்து ஸம்பவ பர்வத்திலே காங்கேயரான ஸ்ரீபீஷ்மருடைய உத்பத்தி தொடக்கமாக அநேகருடைய உத்பத்தி ப்ரகாரங்களை விஸ்தரேண ப்ரதிபாதிக்கையாலும், “பூசல் பட்டோலை” என்னும்படி பாரத யுத்த ப்ரகாராதிகளையே பரக்க நின்று வர்ணித்தபடியாலும், அஸத் கீர்த்தநத்திலே மிகவும் பரந்து அசுத்தையான வாக்கை, “அஸத் கீர்தந காந்தார பரிவர்த்த பாம்ஸுலாம், வாசம் சௌரிகதா லாப கங்கயைவ புநீமஹே” என்று அஸத் கீர்த்தநமாகிற காட்டிலே அலமந்து புழுதி படைத்த வாக்கை பகவத் கதா லாபமாகிற கங்கையாலே சுத்தமாக்குகிறேனென்று சுத்தி பண்ணினானிறே ஸ்ரீவேதவ்யாஸ பகவான். ஸ்ரீவால்மிகி பகவான் இப்படி அநுதபித்து வாக் சுத்தி பண்ணிற்றிலனாகிலும், இந்த ந்யாயமவனுக்கு மொக்குமென்று நினைத்திறே இவர் கூட்டியெடுத்தது. – ஆக இப்படி உபக்ரமித்ததுக்குச் சேராதபடி அஸத்கீர்த்தனத்தைப் பண்ணி வாக்கை அசுத்தையாக்கி, அதுக்கு சுத்தி பண்ணவேண்டாதபடி, “திருமாலவன் கவியாது கற்றேன்” என்று ஸ்ரீய:பதியினுடைய கவியென்று அடியில் வாயோலையிட்ட ப்ரகாரத்திலே “மாற்றங்களாய்ந்து கொண்டு” என்கிறபடியே, அந்யபரமான சப்தங்கள் ஒன்றும் ஊடு கலசாதபடி சப்தங்களைத் தெரிந்தெடுத்து “உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி” என்கிறபடியே, விஷயத்துக்குத் தகுதியான சொல்லாலே சொல்லப்பட்டதாய் “வாய்த்தவாயிரம்” என்று வாச்யனான ஸர்வேச்வரனுக்கு வாய்த்த இப்ப்ரபந்தம், – “வேதேஷு பௌருஷம் ஸூக்தம் தர்ம சாஸ்த்ரேஷு மாநவம், பாரதே பகவத்கீதா புராணேஷு ச வைஷ்ணவம்” என்று வேதங்களில் புருஷஷூக்தமும், தர்ம சாஸ்த்ரங்களில் மநுப்ரணீதமும், மஹாபாரதத்தில் ஸ்ரீகீதையும், புராணங்களில் ஸ்ரீவிஷ்ணுபுராணமும் ஸாரமாயிருக்குமாபோலே, அந்யகதாகந்த ரஹிதமான அருளிச்செயலில் ஸாரமாயிருக்குமென்கை. இத்தால் “தீதிலந்தாதி” என்கிறபடியே கதாந்தர ப்ரஸ்தாவ தோஷ ராஹித்யத்தாலே ஆர்ஷ ப்ரபந்தங்களில் வ்யாவ்ருத்தமாய், பகவத் ப்ரதிபாதந ஸாமர்த்த்யத்தாலே பகவதேகபரமான மற்றையாழ்வார்கள் ப்ரபந்தங்களிலும் ஸாரமாயிருக்குமென்று இப்பரந்த வைலக்ஷண்யம் சொல்லிற்றாயிற்று.

(ராமாயணம் என்று தொடங்கி) - இராமாயணம் பாலகாண்டம் (2-42) - காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஈத்ருசை: கரவாண்யஹம் - இராமாயண காவியம் முழுவதையும் இந்த ச்லோகங்கள் கொண்டு உரைக்கப் போகிறேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, இராமனின் திவ்யசரிதத்தை உரைக்கப் போவதாக இராமாயணத்தைத் தொடங்கி. (கங்காகாங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய்) - கங்கையின் பிறப்பு, முருகனின் பிறப்பு, புஷ்பக விமானத்தின் வர்ணனை போன்றதான மற்ற கதைகள் குறித்து விவரித்து உரைப்பதால் வாக்குத்தூய்மை என்பது வால்மீகி பகவானுக்கு இல்லாமல் போனது. – (நாராயண கதையென்று தொடங்கி) - மஹாபாரதம் ஆதிபர்வம் - நாராயண கதாமிமாம் - நாராயணனின் கதையை இங்கு உரைக்கப்போகிறேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, நாராயணனுடைய சரிதத்தை உரைக்கப் போவதாகத் தொடங்கி. (கங்காகாங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய்) - மஹாபாரதத்தின் ஸம்பவ பர்வத்தில் பீஷ்மருடைய பிறப்பு தொடக்கமாக உள்ள பலருடைய பிறப்புக்களை மிகவும் விரிவாக விளக்கியபடி உள்ளதாலும், பூசல்பட்டோலை – யுத்தத்தைப் பற்றி உரைக்கும் நூல் - என்பதற்கு ஏற்ப மஹாபாரத யுத்தம் குறித்தே மிகவும் விரிவாக வர்ணிப்பதாலும், மற்றவற்றைக் குறித்து உரைப்பதால் மிகவும் விரிவாக வளர்ந்து வாக்குத் தூய்மை இல்லாமல் போனது. இதனை உணர்த்த வ்யாஸபகவான், ஹரிவம்சம் - அஸத் கீர்தந காந்தார பரிவர்த்த பாம்ஸுலாம், வாசம் சௌரிகதா லாப கங்கயைவ புநீமஹே - பொருள் அல்லாதவற்றைக் குறித்து மிகவும் விரிவாகப் பேசுதல் என்றும் காட்டில் சுற்றிய காரணத்தால் எனது வாக்கு புழுதி அடைந்தது; இதனைக் க்ருஷ்ணனின் சரிதையைக் கூறுதல் என்பதான கங்கை நீர் கொண்டு தூய்மை ஆக்குவேனாக - என்று கூறுவதற்கு ஏற்ப, “தேவை அற்றவை குறித்து உரைத்தல் என்னும் காட்டில் அலைக்கழிக்கப்பட்டு எனது வாக்கு புழுதி அடைந்தது. இதனைப் பகவானின் சரிதத்தை உரைத்தல் என்னும் கங்கைநீர் கொண்டு நான் தூய்மை ஆக்கக் கடவேன்”, என்று உரைத்து, அது போன்றே செய்தார். வால்மீகி மஹரிஷி தனது வாக்கில் தூய்மை இல்லாதது கண்டு வருந்தி, வ்யாஸர் செய்தது போன்று, தனது வாக்கைத் தூய்மை செய்ததாக இராமாயணதில் காணப்படவில்லை என்றாலும், இந்த ந்யாயம் இவருக்கும் பொருந்தும் என்று ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் திருவுள்ளம் கொண்டதால், வ்யாஸரையும் இங்கு சேர்த்தே அருளிச்செய்தார் (அதாவது இராமாயணம் போன்றே மஹாபாரதத்திலும் வ்யாஸர் வருத்தம் கொண்டு ஏதும் உரைக்கவில்லை. ஹரிவம்சத்திலேயே இவ்விதம் உரைத்தார்). (சுத்தி பண்ணாமல்) – இப்படியாகத் தொடங்கிய செயலுக்குச் சேராதவிதத்தில் பொருள் தராதவற்றைக் குறித்து உரைத்து, வாக்கானது தூய்மை இழந்து போகும்படியாகச் செய்து, அதன் பின்னர் அப்படிப்பட்ட வாக்கினைத் தூய்மை செய்ய வேண்டாதபடியாக, (திருமாலவன் கவி என்ற வாயோலைப்படியே) – திருவிருத்தம் (48) - திருமாலவன் கவியாது கற்றேன் - என்பதற்கு ஏற்ப மஹாலக்ஷ்மியின் நாயகனாகிய நாராயணனைக் குறித்த கவிகள் என்று முதல் ப்ரபந்தமாகிய திருவிருத்தத்தில் தனது வாக்கு கொண்டு உரைத்த விதத்தில், (மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு) - திருவாய்மொழி (6-8-11) - மாற்றங்களாய்ந்து கொண்டு - என்பதற்கு ஏற்ப மற்ற பொருள்கள் எதனையும் குறித்து உரைக்காதபடியான சொற்களை நன்றாகத் தெரிந்து எடுத்து, (உரிய சொல் வாய்ந்த இது) – திருவாய்மொழி (4-5-6) – உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி - என்பதற்கு ஏற்ப உரைக்கப்படும் வஸ்துவான நாராயணனுக்குச் சேரும்விதத்தில் உள்ள தகுதியான சொற்கள் கொண்டு உரைக்கப்பட்டதாக, திருவாய்மொழி (2-2-11) - வாய்த்தவாயிரம் - என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்து சொற்களாலும் கூறப்படும் பொருளாகிய ஸர்வேச்வரனுக்கு ஏற்பட்டதாக உள்ள இந்த ப்ரபந்தம் … (அடுத்து இந்த ப்ரபந்தம் குறித்து உரைக்கிறார்) (வேதாதிகளில் பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்போலே) - வேதேஷு பௌருஷம் ஸூக்தம் தர்ம சாஸ்த்ரேஷு மாநவம், பாரதே பகவத்கீதா புராணேஷு ச வைஷ்ணவம் - வேதங்களில் புருஷஸூக்தம், தர்மசாஸ்த்ரங்களில் மநுதர்மம், மஹாபாரதத்தில் ஸ்ரீமத்பகவத்கீதை, புராணங்களில் ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஆகியவை உயர்ந்தவைகள் ஆகும் - என்று கூறுவதற்கு ஏற்ப வேதங்களில் புருஷஸூக்தமும், தர்மசாஸ்த்ரங்களில் மனுவால் கூறப்பட்ட மநுதர்மமும், மஹாபாரதத்தில் ஸ்ரீகீதையும், புராணங்களில் ஸ்ரீவிஷ்ணுபுராணமும் அந்தந்த பிரிவுகளுக்குச் சாரமாக உள்ளன; இது போன்று, (அருளிச்செயலில் ஸாரம்) – இந்த ப்ரபந்தம் மற்ற எந்தவிதமான கதைகளின் ஸம்பந்தம் சற்றும் இல்லாதபடி உள்ள நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களின் சாரமாக உள்ளது. இதன் மூலம், திருவாய் (8-2-11) - தீதில் அந்தாதி - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் குறித்து அல்லாமல் மற்ற கதைகளை உரைத்தல் என்ற தோஷம் சற்றும் இல்லாத காரணத்தால், மஹரிஷிகள் அருளிச்செய்த நூல்கலைக் காட்டிலும் வேறுபட்ட மேன்மை கொண்டதாகவும், ஸர்வேச்வரனைக் குறித்து மட்டுமே உரைக்கின்ற ஸாமர்த்யம் காரணமாக ஸர்வேச்வரன் குறித்து மட்டுமே கூறுகின்ற மற்ற ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களுக்குச் சாரமாகவும் உள்ளது என்பதே திருவாய்மொழியின் சிறப்பு என்றார்.