Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 62)
முதல் ப்ரகரணம்
பலஸாதந தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்.
இம்மாத்ரமேயன்றியே பலஸாதநாதிகளில் ப்ரதிபத்தி விசேஷத்தாலும் இரண்டு தலைக்குமுண்டான நெடுவாசியை அருளிச்செய்கிறார் மேலே - (பலஸாதநேத் யாதியால்).
– இதுவரை கூறப்பட்டது மட்டுமே அல்லாமல், பலன் பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவற்றிலும் இந்த இருவருக்கும் உள்ள சிந்தனைகளின் விசேஷம் காரணமாகவும், ரிஷிகள் மற்றும் நம்மாழ்வார் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாட்டினை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, “நிரஸ்தாதிசயாஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத்யந்திகீ மதா, தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ந: கர்த்தவ்ய: பண்டிதைர் நரை:, தத் ப்ராப்தி ஹேதுர் ஜ்ஞாநஞ்ச கர்ம சோக்தம் மஹாமுநே” இத்யாதிகளாலே பகவத்ப்ராப்தியே பலமாகவும், கர்மஜ்ஞாநாதிகளே உபாயமாகவும், இந்த்ராதி தேவதாந்தர்யாமியான ஈச்வரனே உத்தேச்யனாகையாலே இந்த்ராதி தேவதைகள் அநுவர்த்த நீயராகவுமிறே ருஷிகள் சொல்லுவது. “தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே”, “வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம்” என்று கைங்கர்யம் புருஷார்த்தமாகவும், தத் ஸாதநமும் “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்”, “அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” என்கிற ப்ரபத்தியாகவும், “மற்றொரு தெய்வம் தொழாள்” என்று தேவதாந்தரங்கள் அநுவர்த்த நீயரல்லாராகவுமிறே இவரருளிச் செய்தது. ஆகையால் பலத்திலும் ஸாதநத்திலும் தேவதாந்தரங்களிலும் அவர்கள் ப்ரதிபத்தியும் இவர் ப்ரதிபத்தியும் இரண்டு தலை பேச்சிலும் தெரியுமென்கை. ஸகல வேதஸங்க்ரஹமான திருமந்த்ரத்தில் ப்ரதம பதத்தாலே சேஷத்வைக நிரூபணீயமாக ப்ரதிபாதிக்கப்பட்ட ஆத்மாவுக்கு ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தம் சரமபதத்தில் சதுர்த்தியால் சொல்லப்பட்ட கைங்கர்யமே யாகையாலும், மத்யபத ப்ரதிபாதிதமான பகவதத்யந்த பாரதந்த்ர்யத்துக்கு ததேகோபாயத்வ மொழிய ஸ்வரக்ஷணே ஸ்வப்ரவ்ருத்தி சேராமையாலும், மத்யமாக்ஷர ப்ரதிபாதிதமான பகவதநந்யார்ஹத்வத்துக்கு தேவதாந்தராநு வர்த்தந கந்தமும் ஸஹியாமையாலும், பகவத் ப்ராப்தி மாத்ரம் பலமாகவும், ஸ்வயத்ந ரூப கர்மாதிகள் உபாயமாகவும், அஹங்கார யுக்த தேவதைகள் பகவத் விசேஷணதயா உபாதேயராகவும் கொள்ளுமது ஸ்வரூப யாதாத்ம்ய தர்சிகளுக்குப் பரித்யாஜ்யமாயிறே யிருப்பது. ஆன பின்பு பலாதி த்ரயத்தில் அவர்கள் ப்ரதிபத்திக்கும் இவர் ப்ரதிபத்திக்கும் நெடுவாசியுண்டாகையாலே இவ்வழியாலும் அவர்களில் இவர் அத்யந்த வ்யாவ்ருத்தம் என்றதாயிற்று.
(பல ஸாதந தேவதாந்தரங்களில்) - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-59, 60) - நிரஸ்தாதிசயாஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத்யந்திகீ மதா, தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ந: கர்த்தவ்ய: பண்டிதைர் நரை:, தத் ப்ராப்தி ஹேதுர் ஜ்ஞாநஞ்ச கர்ம சோக்தம் மஹாமுநே - தனக்கு மேல் ஏதும் இல்லாதபடியான ஆனந்தவடிவமான சுகம் ஒன்றை மட்டுமே வடிவாகக் கொண்டதும், துக்கம் என்பதே இல்லாததும், மீண்டும் லீலாவிபூதிக்குத் திரும்புதல் என்பது இல்லாததும் ஆகிய ஸர்வேச்வரனை அடையும் பேறு என்பது ஸம்ஸார துக்கத்துக்கு ஏற்ற மருந்தாகும். ஆகவே பண்டிதர்கள் ஸர்வேச்வரனை அடைவதற்கே முயல்வார்கள். அவனை அடைவதற்கு ஞானமும் கர்மமும் உபாயமாகக் கூறப்பட்டன - என்றுள்ள பல வரிகளின் மூலம், ஸர்வேச்வரனை அடைதல் என்பதே பலனாகவும், கர்மம் மற்றும் ஞனாம் ஆகியவை அவனை அடைவதற்கான வழியாகவும் உள்ளதாலும், இந்த்ரன் உள்ளிட்ட தேவர்களுடைய அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரனே அடையத்தக்கவன் என்பதாலும், இந்த்ரன் உள்ளிட்ட தேவர்களே பற்றத்தக்கவர்கள் என்பதாகவும் ரிஷிகள் கூறுவர். ஆனால், திருவாய்மொழி (2-9-4) - தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே - என்றும், திருவாய்மொழி (3-3-1) - வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம் - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுக்குச் செய்யப்படும் கைங்கர்யமே உயர்ந்த பலன் என்றும், திருவாய்மொழி (5-10-11) - நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் – என்றும், திருவாய்மொழி (6-10-10) - அடிக்கீழமர்ந்து புகுந்தேனே - என்றும் கூறுவதற்கு ஏற்ப ப்ரபத்தி என்பதே அந்தக் கைங்கர்யத்தை அடைவிக்கவல்ல உபாயம் என்றும், திருவாய்மொழி (4-6-10) - மற்றொரு தெய்வம் தொழாள் - என்று கூறுவதற்கு ஏற்ப மற்ற தேவதைகள் வணங்கி அண்டத்தக்கவர்கள் அல்லர் என்றும் அல்லவோ நம்மாழ்வார் அருளிச்செய்தார்! ஆகவே பலன், அந்தப் பலனை அடைவிக்கும் உபாயம், மற்ற தேவதைகள் ஆகிய விஷயங்களில் அவர்களுடைய சிந்தனையும், நம்மாழ்வாருடைய சிந்தனையும், இந்த இருவர் உரைத்த வாக்கியங்களில் புலப்படுகிறது. அனைத்தும் வேதங்களின் சுருக்கமாக உள்ள திருமந்திரத்தில் காணப்படும் முதல் பதமான ப்ரணவத்தின் மூலம் பகவத் அடிமைத்தனத்தால் மட்டுமே ஆத்மஸ்வரூபம் அறியப்படுகிறது என்று கூறப்படுகிறது. இத்தகைய ஆத்மாவுக்கு, அதன் ஸ்வரூபத்திற்கு ஏற்றபடியான பயன் என்பது பகவத் கைங்கர்யமே ஆகும் என்பது “நாராயணாய” என்பதில் உள்ள “ஆய” என்ற நான்காம் வேற்றுமை மூலம் கூறப்படுகிறது. ஆக, ஆத்மாவுக்கு ஏற்ற பயன் கைங்கர்யமே என்பதாலும்; “நம:” என்ற பதம் மூலம் கூறப்படுவதான “ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டு இருத்தல்” என்னும் “ஸர்வேச்வரனிடன் கொண்ட எல்லையில்லாத பாரதந்த்ர்யம்” என்ற நிலைக்கு, ஸர்வேச்வரனை மட்டுமே உபாயமாகக் கொள்ளுவது அல்லாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தானே முயலும் முயற்சி என்பது இருத்தல் கூடாது என்பதாலும்; ப்ரணவத்தின் நடு எழுத்தான “உ” என்பதன் மூலம் கூறப்படுவதான “ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமை” என்னும் “பகவத் அநந்யார்ஹ சேஷத்வம்” என்ற நிலைக்கு, மற்ற தெய்வங்களை ஆராதித்தல் என்பது சற்றும் பொருந்தாது என்பதாலும் - பகவானை அடைதல் மட்டுமே பலன் என்றும் (கைங்கர்யம் என்பதே பலன் என்று கொள்ளாமல்), தனது முயற்சியால் செய்யக்கூடிய கர்மங்களே அதற்கு உபாயம் என்றும் (ஸர்வேச்வரன் தனக்காக அனைத்தும் செய்வான் என்று எண்ணாமல்), அஹங்காரத்துடன் கூடிய மற்ற தெய்வங்கள் பகவானுக்குச் சரீரமாக உள்ளதால் அவர்களும் ஆராதிக்கத்தக்கவர்களே என்றும் சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்தும், ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களுக்குக் கைவிடத்தக்கவையாகவே உள்ளன. எனவே பலன், பலனை அடைவிக்கும் உபாயம், பலனை அளிக்கும் தேவதைகள் ஆகிய மூன்றைக் குறித்து ரிஷிகளுடைய சிந்தனைகளுக்கும், நம்மாழ்வாருடைய சிந்தனைகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு; இந்தக் காரணத்தாலும் ரிஷிகளைக் காட்டிலும் நம்மாழ்வாருக்கு அதிகமான வேறுபாடுகள் உண்டு என்றாகிறது.