Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 61)

முதல் ப்ரகரணம்

அழுநீர்துளும்பக் கடலும் மலையும் விசும்புந் துழாய் திருமாலென்று எங்கே காண்கே னென்னுமிவர லமாப்பு வவர்க்களுக்குப் புத்ர வியோகத்திலே.

இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் ப்ராக்ருத விஷயங்களில் நசையற்று பகவதேகபரரான விவர் தத்விரஹத்தில் படுமதெல்லாம் அவர்கள் ப்ராக்ருத விஷய ஸங்கம் அறாமையாலே அவ்விஷயங்களினுடைய விரஹத்திலே படுவர்களென்கிறார் - (அழு நீர் இத்யாதியால்).

இப்படியாக அனைத்துவிதங்களிலும் இந்த உலகியல் விஷயங்களில் உள்ள பற்றுதல்கள் அனைத்தையும் நீக்கும் ஸர்வேச்வரனிடம் மட்டுமே ஈடுபட்ட நம்மாழ்வார், ஸர்வேச்வரனைப் பிரிந்த காலங்களில் அடையும் துன்பங்கள் அனைத்தையும், ரிஷிகளானவர்கள் இந்த உலகியல் விஷயங்களுடன் தொடர்பு அறுக்காத காரணத்தால் உலகவிஷயங்களைப் பிரிந்தால் அடைவார்கள் என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச் செய்கிறார்.

– அதாவது, “சேயரிக்கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன” என்றும், “கடலும் மலையும் விசும்பும் துழாய்” என்றும், “சிந்தை கலங்கித் திருமா லென்றழைப்பன்” என்றும், “எங்கே காண்கேனீன் துழாயம்மான் தன்னை” என்றும், “உன்னைக் காண்பான் நானலப்பாய்” என்றும் சொல்லுகிறபடியே பகவத் விரஹ வ்யஸநத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு நீர் விவரமான மலையோடு அச்சமான ஆகாசத்தோடு வாசியற எங்கும் தேடி ஹ்ருதயம் கலங்கி “ச்ரிய:பதியே!” என்று கூப்பிட்டு எங்கே காணக்கடவேனென்று இவர் படுமலமாப்பு, ஸ்ரீவஸிஷ்டபகவான் புத்ரவியோக க்லேசத்தாலே, “ஸ மேரு கூடாதாத்மாநம் முமோச பகவாந் ருஷி;, சிரஸ் தஸ்ய சிலாயாஞ்ச தூலராசாவிவாபதத், ந மமார ச பாதேந ததா ஸ முநி ஸத்தம:, ததாக்நிமித்த்வா பகவாந் ஸ விவேச மஹாவநே, தம் ததா ஸுஸமித்தோபி ந ததாஹ ஹுதாசந:, தீப்யமாநோப்யமித்ரக்நம் சீதோக்நிரபவத் ததா ஸ ஸமுத்ரமபி ப்ரேத்ய சோகாவிஷ்டோ மஹாமுநி:, கண்டே பத்த்வா சிலாம் குர்வீம் நிபபாத ததாம்பஸி” என்கிறபடியே மலையிலே ஏறி விழுவது, நெருப்பிலே புகுவது, கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலிலே விழுவதாகையாலும், ஸ்ரீவேதவ்யாஸபகவான் புத்ர விரஹம் பொறுக்கமாட்டாமல் “த்வைபாயநோ விரஹகாதா ஆஜுஹாவ புத்ரேதி” என்கிறபடியே புத்ரனே யென்று வாய்விட்டுக் கூட்பிட்டு அழுது கொண்டு காணப் பெறாமையால் அலமந்து திரிகையாலும் அவர்களுக்குப் புத்ரவிச்லேஷத்திலே நடக்குமென்றபடி.

– (அழுநீர் துளும்ப) – திருவிருத்தம் (2) - சேயரிக்கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனைப் பிரிந்த விரஹ துன்பம் காரணமாகக் கண்ணும் கண்ணிருமாக நின்று, (கடலும் மலையும் விசும்பும் துழாய்) – திருவாய்மொழி (2-1-4) - கடலும் மலையும் விசும்பும் துழாய் - என்பதற்கு ஏற்ப அளவிட இயலாத கடல், அசைவற்று நிற்கும் மலை, அச்சம் ஏற்படுத்தும் ஆகாயம் ஆகிய அனைத்து இடங்களிலும் எந்தவிதமான வேறுபாடும் இன்றி எங்கும் தேடியபடி, (திருமால் என்று) - திருவாய்மொழி (9-8-10) – சிந்தை கலங்கித் திருமா லென்றழைப்பன் - என்பதற்கு ஏற்ப தனது இதயம் கலங்கி “மஹாலக்ஷ்மியின் நாயகனே” என்று அழைத்தபடி, (எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு) - திருவாய்மொழி (8-5-11) - எங்கே காண்கேனீன் துழாயம்மான் தன்னை - என்றும், திருவாய்மொழி (5-8-4) - உன்னைக் காண்பான் நானலப்பாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, “எங்கே நான் காண்பேன்” என்று இவர் அடையும் நிம்மதியற்ற நிலையானது (…. இப்படிப்பட்ட இவருடைய இந்த நிலையானது ஸர்வேச்வரனைப் பிரிந்த காரணத்தால் இவருக்கு ஏற்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட நிலை, ரிஷிகளுக்குப் புத்திரர் பிரிவால் ஏற்படுகிறது என்று கூற உள்ளார்…) (அவர்களுக்குப் புத்ர வியோகத்திலே) - வசிஷ்ட முனிவர் தனது புத்திரனைப் பிரிந்த துக்கம் காரணமாக, ஸ மேரு கூடாதாத்மாநம் முமோச பகவாந் ருஷி;, சிரஸ் தஸ்ய சிலாயாஞ்ச தூலராசாவிவாபதத், ந மமார ச பாதேந ததா ஸ முநி ஸத்தம:, ததாக்நிமித்த்வா பகவாந் ஸ விவேச மஹாவநே, தம் ததா ஸுஸமித்தோபி ந ததாஹ ஹுதாசந:, தீப்யமாநோப்யமித்ரக்நம் சீதோக்நிரபவத் ததா ஸ ஸமுத்ரமபி ப்ரேத்ய சோகாவிஷ்டோ மஹாமுநி:, கண்டே பத்த்வா சிலாம் குர்வீம் நிபபாத ததாம்பஸி - வசிஷ்ட மஹரிஷி மேரு மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்தார்; அப்போது அவருடைய தலையானது, கல் ஒன்று பஞ்சுக்குவியலில் விழுவது போன்று விழுந்தது; ஆனால் முனிவர்களில் உயர்ந்த அவர், அப்போதும் இறக்கவில்லை; பின்னர் அவர் அக்னியை வளர்த்து அதில் புகுந்தார்; அவரை அக்னியானது எரிக்கவில்லை; சோகத்தால் வருந்திய அந்த வசிஷ்டர் ஸமுத்திரத்தை அடைந்து ஒரு பெரிய கல்லைத் தனது கழுத்தில் கட்டிக்கொண்டு ஸமுத்திரத்தில் குதித்தார் - என்பதற்கு ஏற்ப, மலை ஏறி குதித்தல், அக்னியில் புகுதல், கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு ஸமுத்திரத்தில் விழுதல் போன்ற பலவற்றையும் செய்தார். வேத வ்யாசர் தனது புத்திரசோகம் தாங்காமல், ஸ்ரீமத் பாகவதம் (1-2-2) - த்வைபாயநோ விரஹகாதா ஆஜுஹாவ புத்ரேதி - தனது புத்திரராகிய சுகமுனிவரின் பிரிவைத் தாங்க இயலாத வ்யாஸர், “புத்திரனே வருவாய்” என்று அழைத்தார் - என்பதற்கு ஏற்ப “புத்திரனே” என்று வாய்விட்டு அலறியும், அழுது புலம்பியும் தனது புத்திரனைக் காண இயலாத காரணத்தால் துயரத்துடன் உடைந்து திரிந்தார். ஆக இது போன்ற செயல்களை காரணமாக ரிஷிகளான அவர்களுக்குப் புத்திரப் பிரிவால் துயரம் ஏற்படுகிறது என்று கருத்து.