Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 60)
முதல் ப்ரகரணம்
அவர்களுக்குக் காயோடென்னுமிவையே தாரகாதிகள்; இவர்க்கெல்லாம் கண்ணனிறே.
இவ்வளவு மன்றிக்கே தாரகாதி வைலக்ஷண்யத்தாலும் அவர்களில் இவர்க்குண்டான வ்யாவ்ருத்தியை யருளிச்செய்கிறார்.
இது மட்டும் அல்லாமல் உயிர் வாழ அவசியமான உணவு போன்றவற்றில் காணப்படும் வேறுபாடுகளாலும், ரிஷிகளைக் காட்டிலும் நம்மாழ்வாருக்கு உள்ள வேறுபாட்டின் மேன்மையை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, ருஷிகளானவர்களுக்கு “காயோடு நீடு கனியுண்டு வீசுகடுங்கால் நுகர்ந்து” என்றும், “வீழ்கனியு மூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே பலமூலபத்ரவாயு தோயங்களே தாரகபோஷக போக்யங்கள்; “ருஷிம் ஜுஷாம் மஹே” என்று இவரையும் ருஷியென்று சொல்லிற்றாகிலும் தாரகாதிகள் அவையன்று; க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமான விவர்க்கு “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்” என்கையாலே தாரக போக்ஷக போக்யங்க ளெல்லாம் க்ருஷ்ணனேயிறே யென்கை.
(அவர்களுக்கு) – பராசரர் போன்ற ரிஷிகளுக்கு, (காயோடு என்னுமிவையே தாரகாதிகள்) - பெரியதிருமொழி (3-2-2) - காயோடு நீடு கனியுண்டு வீசுகடுங்கால் நுகர்ந்து - என்றும், பெரியதிருமடல் (12) – வீழ்கனியு மூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப பழங்கள், கிழங்குகள், இலைகள், காற்று, நீர் ஆகியவையே உயிர் வாழத் தேவையான உணவு வகைகள் ஆகும். (இவர்க்கு எல்லாம் கண்ணனிறே) - பராங்குசாஷ்டகம் - ருஷிம் ஜுஷாம் மஹே - ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன் - என்று கூறுவதற்கு ஏற்ப நம்மாழ்வாரையும் ரிஷி என்று உரைத்தாலும், இவர் உயிர்வாழத் தேவையான உணவுகள் அவை அல்ல. க்ருஷ்ணன் மீது கொண்டுள்ள ஆழ்ந்த காதல் என்பதே உருவம் எடுத்தது போன்றுள்ள நம்மாழ்வாருக்கு, திருவாய்மொழி (6-7-1) - உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன் – என்பதற்கு ஏற்ப உயிர் தரிக்க வைப்பதும், பலன் அளிப்பதும், இன்பம் அளிப்பதும் ஆகிய அனைத்தும் க்ருஷ்ணனே ஆவான் என்று கருத்து.