Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 59)

முதல் ப்ரகரணம்

ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றுந் தெளிந்தும் கண்ட மைப்பாலே ஓதி யுணர்ந்தவர் இன்னு மாசாபாச பத்தர்; அவன் வழங்கும் திவ்ய சக்ஷுஸ்ஸாஸே நேரே கார்செறிந்த நீறாடி கட்கரிய அரும்பொருளைக் கண்டபோதே யாமுறாமை யென்னும்படி இவர்க்கு வன்பாசங்கள் நீங்கிற்று.

இப்படி பகவத் ப்ரேமத்தாலே ருஷிகளில் வ்யாவ்ருத்தரான வளவன்றிக்கே இதர விஷய வைராக்யத்தாலும் அவர்களில் இவர் வ்யாவ்ருத்தர் என்கிறார் - (ஸ்வாத்யாயேத்யாதியால்).

இப்படியாக பகவத் ப்ரேமை காரணமாக ரிஷிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வேறுபட்டுள்ளார். இது மட்டும் அல்லாமல், மற்ற விஷயங்களில் விருப்பம் இல்லாத தன்மையுடன் கூடியவர் என்பதாலும் இவர் அவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, “ஸ்வாத்யாயாத் யோகமாஸீத் யோகாத் ஸ்வாத்யாய மாமநேத், ஸ்வாத்யாய யோகஸம்பத்த்யா பரமாத்மா ப்ரகாசதே, ததீக்ஷணாய ஸ்வாத்யாயச் சக்ஷுர் யோகஸ் ததா பரம், ந மாம்ஸ சக்ஷுஷா த்ரஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் ஸ சக்யதே” என்கிறபடியே ஸ்வாத்யாய யோகங்களாகிற இரண்டு த்ருஷ்டிகளாலுமொழிய மாம்ஸ சக்ஷுஸ்ஸால் பரமாத்மாவைக் காணப்போகாமையாலே ஸ்வாத்யாய சப்தவாச்யமான வேதத்தை ஓதியும், யம நியமா த்யஷ்டாங்க யோகத்தை அப்யஸித்தும் அவ்வழியாலே ததுபய விஷயமான பரமாத்மாவை ஏவம் பூதனென்று தெளிந்தும் இம்முகத்தாலே ஸ்வயத்நேந கண்ட காட்சியில் (அ)வைசத்யத்தாலே “ஓதியுணர்ந்தவர்” என்கிறபடியே வேதசாஸ்த்ரக்களையோதி த்யாஜ்யோபாதேயங்களை யுணர்ந்திருக்கிற ருஷிகள் இன்றளவும் “ஆசாபாச சதைர் பத்தா:” என்கிறபடியே ஸாம்ஸாரிக போக விஷயங்களான ஆசாக்க்ய பாச சதங்களாலே பந்திக்கப்பட்டிருப்பார்கள், – “திவ்யம் ததாமி தே சக்ஷு:” என்கிறபடியே தன்னைக் காண்கைக்கு ஸாதநமாக அவன் கொடுத்த திவ்ய ஜ்ஞாந ரூப சக்ஷுஸ்ஸாலே, “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான்” என்றும், “கார் செறிந்த கண்டத்தா னென்கண்ணான் காணான்” என்றும், “நீறாடி தான் காணமாட்டாத தாரகல சேவடி” என்றும், “கட்கரிய பிரமன் சிவனிந்திர னென்றிவர்க்கும் கட்கரிய கண்ணன்” என்றும் சொல்லுகிறபடியே இவ்வருகுள்ளாரிற் காட்டில் ஜ்ஞாந சக்தியாதிகளா லதிகராய, “தாமோதரனைத் தனி முதல்வனை ஞானமுண்டவனை – ஒருவர்க்குத் தரமறியலாமோ” என்று தங்களை யொழிய ஒருவர்க்கு மறியப்போகா தென்றிருக்கும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காணவரியனாய், “அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும்பொருளாதல்” என்கிறபடியே “யஸ்யாமதம் தஸ்ய மதம்” இத்யாதியாலே வேதங்களும் அறியவரிய வஸ்துவென்றே அரியும்படியாய் “கேட்பார்க்கரும் பொருளாய நின்ற” என்று, “நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ச்ருதேந” என்கிறபடியே தன் ப்ரஸாதமொழிய ஸ்வயத்நத்தாலே ச்ரவணாதிகள் பண்ணுவார்க்கு துர்லப வஸ்துவான ஸர்வேச்வரனை, “கண்டேன் கமலமலர்ப்பாதம்” என்கிறபடியே அவன் தானே காட்டுகையாலே விசததமமாகக் கண்டபோதே “பொய்ந்நின்ற ஞானமும்” என்று தொடங்கி, “இந்நின்ற நீர்மையினியாமுறாமை” என்று அவித்யாதிகளை விடுவித்தருள வேணுமென்று அவனைக் கால்கட்டும்படி இவர்க்கு “மற்ற வன்பாசங்கள்” என்று ஸ்வயத்ந நிவர்த்யமல்லாதபடி ப்ரபலமான பாஹ்ய ஸங்கங்கள் “பாசங்கள் நீக்கி” என்னும்படி தத்ப்ரஸாதத்தாலே ஸவாஸநமாக விட்டகன்ற தென்கை.

(ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும்) - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-6-2, 3) - ஸ்வாத்யாயாத் யோகமாஸீத் யோகாத் ஸ்வாத்யாய மாமநேத், ஸ்வாத்யாய யோகஸம்பத்த்யா பரமாத்மா ப்ரகாசதே, ததீக்ஷணாய ஸ்வாத்யாயச் சக்ஷுர் யோகஸ் ததா பரம், ந மாம்ஸ சக்ஷுஷா த்ரஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் ஸ சக்யதே - வேதத்தின் மூலம் ஆழ்பொருளை அறிந்து யோகத்தை அடைவானாக, யோகம் மூலம் மீண்டும் வேதத்தை ஓதுவானாக, யோகம் மற்றும் வேதம் ஆகியவற்றின் முழுமை காரணமாக அவனுக்குப் பரமாத்மா ப்ரகாசிக்கிறான்; அப்படிப்பட்ட பரமாத்மாவைக் காண்பதற்கு வேதம் ஒரு கண்ணாகவும், யோகம் ஒரு கண்ணாகவும் உள்ளது; அந்தப் பரமாத்மாவை சாதாரண மாமிசக்கண் கொண்டு காண இயலாது - என்று கூறுவதற்கு ஏற்ப வேதங்கள், யோகங்கள் ஆகிய இரண்டு கண்கள் அல்லாமல் மாமிசக் கண்கள் கொண்டு பரமாத்மாவைக் காண இயலாது என்பதால், ஸ்வாத்யாயம் என்ற பதம் முலம் கூறப்படும் வேதத்தை ஓதியும், யமம், நியமம் போன்ற எட்டு அங்கங்களுடன் கூடிய யோகத்தைக் கற்றும், அதன் வழியாக வேதம் மற்றும் யோகம் ஆகிய இரண்டாலும் காணக்கூடிய பரமாத்மா இத்தகையவன் என்று தெளிந்தும், (கண்டமை) - இவ்விதம் தனது முயற்சி மூலம் கண்ட காட்சியில், (மைப்பாலே) - தெளிவு இல்லாமையால், (ஓதி உணர்ந்தவர் இன்னும் ஆசாபாச பத்தர்) - திருவாய்மொழி (3-5-5) - ஓதி உணர்ந்தவர் - என்பதற்கு ஏற்ப வேத சாஸ்த்ரங்களை எப்போதும் ஓதி, கைவிட வேண்டியவை இன்னவை என்றும் கைக்கொள்ளத்தக்கவை இன்னவை என்றும் அறிந்துள்ள ரிஷிகள், இது நாள் முடிய, கீதை (16-12) - ஆசாபாச சதைர் பத்தா: - ஆசைகள் என்னும் நூற்றூக்கணக்கான கயிறுகளால் கட்டப்பட்டவர்களாக - என்பதற்கு ஏற்ப, இந்த உலக வாழ்க்கை என்னும் இன்பம் அளிக்க விஷயங்களான பலவிதமான கயிறுகளால் கட்டப்பட்டிருப்பார்கள். – (அவன் வழங்கும் திவ்ய சக்ஷுஸ்ஸாலே) - கீதை (11-8) - திவ்யம் ததாமி தே சக்ஷு: - உனக்குத் தெய்வீகமான ஞானக்கண்ணை அளிக்கிறேன் - என்று கூறுவதற்கு ஏற்ப தன்னைக் காண்பதற்கு இயலக்கூடியதான அவன் அளித்த ஞானரூபமான தெய்வீகமான கண்கள் கொண்டு, (நேரே கார்செறிந்த நீறாடி கட்கரிய) - முதல் திருவந்தாதி (56) - நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் – என்றும், நான்முகன் திருவந்தாதி (73) - கார் செறிந்த கண்டத்தா னென்கண்ணான் காணான் - என்றும், நான்முகன் திருவந்தாதி (27) - நீறாடி தான் காணமாட்டாத தாரகல சேவடி – என்றும், திருவாய்மொழி (7-7-11) - கட்கரிய பிரமன் சிவனிந்திர னென்றிவர்க்கும் கட்கரிய கண்ணன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப மற்றவர்களைக் காட்டிலும் ஞானம், சக்தி போன்றவைகளால் மிகவும் உயர்ந்தவர்களும்; திருவாய்மொழி (2-7-12) - தாமோதரனைத் தனி முதல்வனை ஞானமுண்டவனை – ஒருவர்க்குத் தரமறியலாமோ - என்பதற்கு ஏற்ப தங்களை அல்லாமல் மற்ற யாருக்கும் அவனை எளிதாக அறிய இயலாது என்றுள்ளவர்களும் ஆகிய நான்முகன் மற்றும் ருத்ரன் ஆகியவர்களுக்கும் காண்பதற்கு அரியவனாகவும், (அரும்பொருளை) - திருவாய்மொழி (9-3-3) - அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும்பொருளாதல் - என்பதற்கு ஏற்ப, கேந உபநிஷத் – யஸ்யாமதம் தஸ்ய மதம் – யார் ஒருவன் பரம்பொருளை அளவிட இயலாத ஒன்று என அறிகிறானோ அவன் பரம்பொருளை அறிந்தவன் ஆகிறான் - என்பதன் மூலம் வேதங்களும் தங்களுக்கு அறிவதற்கு அரியதான வஸ்து என்று அறியப்படுபவனாகவும், நான்முகன் திருவந்தாதி (60) - கேட்பார்க்கரும் பொருளாய நின்ற – என்று கூறுவதற்கு ஏற்ப கட உபநிஷத் - நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ச்ருதேந - பரம்பொருள் மனம் மற்றும் த்யானத்தால் அடையத்தக்கவன் அல்லன், வேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன் - என்பதற்கு ஏற்ப தனது க்ருபை காரணமாக அல்லாமல் தங்களுடைய சுயமுயற்சியால் அறியலாம் என்றுள்ளவர்களுக்கு அரியவனாகவும் உள்ள ஸர்வேச்வரனை, (கண்டபோதே) - திருவாய்மொழி (10-4-9) - கண்டேன் கமலமலர்ப்பாதம் - என்பதற்கு ஏற்ப அவன் தன்னைக் காண்பித்துக் கொள்வதால் மிகவும் தெளிவாகக் கண்டபோதே, (யாம் உறாமை என்னும்படி) - திருவிருத்தம் (1) – பொய்ந்நின்ற ஞானமும் - என்று தொடங்கி, திருவிருத்தம் (1) - இந்நின்ற நீர்மையினியாமுறாமை - என்று கூறுவதற்கு ஏற்ப அறியாமை போன்றவற்றை விலக்கித் தந்தருளவேண்டும் என்று அவனுடைய திருவடிகளைப் பிடிக்கும்படியாக உள்ள நம்மாழ்வாருக்கு, திருவாய்மொழி (8-2-11) - மற்ற வன்பாசங்கள் – என்பதற்கு ஏற்ப தனது முயற்சியால் நீக்க இயலாதபடியாக உள்ள உலகியல் பற்றுக்கள் அனைத்தும் திருவாய்மொழி (7-8-5) - பாசங்கள் நீக்கி - என்பதற்கு ஏற்ப அவனுடைய க்ருபை காரணமாக வாசனையுடன் சேர்ந்து விலகின என்று கருத்து.