Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 58)
முதல் ப்ரகரணம்
தர்மவீர்ய ஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே உள்கலங்கிச் சோகித்து மூவாறு மாஸம் மோஹித்து ளருந்தியேங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிறவிவர்.
இப்படி இப்ப்ரபந்தங்களுக்கு மூலவைலக்ஷண்யத்தாலே வந்தவேற்ற முண்டென் றறிவித்தவளவு மன்றிக்கே வக்த்ரு வைலக்ஷண்யத்தால் வந்த வேற்ற முண்டென்று அறிவிக்கைக்காக ருஷிகளிற் காட்டில் ஆழ்வார்க்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்செய்கிறார் - (தர்மவீர்ய ஜ்ஞாநத்தாலே என்று தொடங்கி).
இப்படியாக ஆழ்வாரின் திவ்ய ப்ரபந்தங்களுக்கு, அவை ஸர்வேச்வரனுடைய க்ருபை காரணமாக ஏற்பட்டவை என்பதால் ஏற்றம் உண்டு என்பதைக் கூறினார். இது தவிர ஆழ்வாருடைய மேன்மை காரணமாகவும் அவற்றுக்கு ஏற்றம் உண்டு என்று உணர்த்துவதற்காக, ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வாருக்கு உள்ள வேறுபாட்டினை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது “ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம், தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம்ப்ரபச்யதி” என்கிறபடியே தாம் தாம் அநுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தினுடைய சக்தியாலே ஜனித்த ஜ்ஞாநத்தாலே, “கண்டும் தெளிந்தும்” என்கிறபடியே ஜ்ஞாதவ்யங்களைத் தெளியவறிந்து, அதுதான், “ந போதாத் அபரம் ஸுகம்” என்னும்படி யிருக்கையாலே ஹர்ஷயுக்தராய், அந்தத் தெளிவும் ஹர்ஷமுமடியாக உத்தரோத்தரம் சப்தங்களைத் தொடுக்கும் ருஷிகளைப் போலன்றே, தர்மவீர்யத்தால் வந்ததுக்கும் அதுதான் ஜ்ஞாநமாத்ரமானதுக்கும் எதிர்த்தட்டாம்படி “மயர்வற மதிநல மருளினன்” என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே வந்ததாய் ஜ்ஞாந விபாக ரூபையான பக்தியாலே, தெளிவுக்கும் ஹர்ஷத்துக்கும் எதிர்த்தட்டாம்படி “மதியெல்லாமுள் கலங்கி” என்கிறபடியே விரஹ வ்யதையாலே ஜ்ஞாநமெல்லாம் அடிமண்டியோடே கலங்கி, யதாமநோரதம் பகவதநுபவம் பெறாமையாலே சோகித்து மேலே மேலே தொடுக்குமதுக்கு எதிர்த்தட்டாம்படி “எத்திறம்” என்றும், “பிறந்தவாறும்” என்றும், “கண்கள் சிவந்து” என்றும் ஸர்வாதிகனாய் அவாப்த ஸமஸ்த காமனாயிருக்கச் செய்தே க்ஷுத்ரராய் சபலரா யிருப்பாரைப் போலே அவன் செய்த நவநீத சௌர்ய வ்ருத்தாந்தத்தையும், அகர்ம வச்யனாயிருக்கச் செய்தேயும் கர்மவச்யரைப் போலே பிறந்தபடியையும், “மாயக்கூத்த”னில் தாம் கண்ணும் வாயும் துவர்ந்தாப்போலே தம்மைப் பிரிகையாலே அவன் கண்ணும் வாயும் துவர்ந்து தம்மோடு கலந்த பின்பு அவை தன்னிறம் பெற்றபடியையும் அநுஸந்தித்து ‘ஈதென்ன ப்ரகாரம்! ஈதென்ன ப்ரகாரம்!’ என்று ஓரொன்றில் அவ்வாறு மாஸமாக மூவாறு மாஸம் மோஹித்து, – “வருந்தி நான் வாசக மாலை கொண்டு” என்கிறபடியே ஒரு சொல்லெடுக்கும்போது ஒரு மலையெடுக்குமாபோலே வருத்தப்பட்டு, “என்றென் றேங்கி யழுதக்கால்” என்கிறபடியே அநுபவா லாப க்லேசத்தாலே அவன் படிகளைப் பலகாலும் சொல்லிப் பொருமிப் பொருமி அழுது, “அங்கே தாழ்ந்த சொற்களால்” என்கிறபடியே, “எங்கே காண்கேன்” என்கிற மநச்சைதில்யத்தாலே கத்கத ஸ்வரமான சப்தங்களாலே “வண்டமிழ் நூற்க நோற்றேன்” என்று இப்ப்ரபந்தத்தை நிர்மிக்கிறவிவ ரென்கை.
– (தர்மவீர்யஜ்ஞானத்தாலே) - இராமாயணம் பாலகாண்டம் (3-4) - ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம், தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம்ப்ரபச்யதி - இராமனுடைய புன்முறுவலுடன் கூடிய சொற்கள், ஸஞ்சாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பலவற்றையும் நான்முகனிடமிருந்து பெற்ற வரபலத்தால் வால்மீகி உள்ளது உள்ளபடி நன்றாக அறிந்தார் - என்று கூறுவதற்கு ஏற்ப அந்தந்த ரிஷிகள், தாங்கள் தாங்கள் செய்த தவத்தின் ரூபமாக உள்ள தர்மத்தின் சக்தியால் பிறந்த ஞானத்தால், (தெளிந்து) - திருவாய்மொழி (7-2-7) - கண்டும் தெளிந்தும் – என்பதற்கு ஏற்ப அறிந்து கொள்ளவேண்டியவைகளைத் தெளிவாக அறிந்து, (ஹ்ருஷ்டராய்) - அந்த நிலை என்பது, ந போதாத் அபரம் ஸுகம் – ஞானத்தைத் தவிர வேறு இன்பம் இல்லை - என்பதற்கு ஏற்ப உள்ளதன் காரணமாக எப்போதும் மகிழ்வுடன் உள்ளவராக, (மேலே தொடுப்பாரைப் போலன்றே) - அப்படிப்பட்ட தெளிந்த அறிவு மற்றும் மகிழ்வு காரணமக மேன்மேலும் சொற்களைத் தொடுத்தபடி உள்ள ரிஷிகள் போன்று அல்லர் நம்மாழ்வார். (அருளின பக்தியால்) - தர்மத்தின் வலிமை காரணமாக வந்ததற்கும் அத்தகைய ஒன்று ஞானம் மட்டுமே என்று ஆனதற்கும் எதிர்த்தட்டாக ஆகும்விதமாக, திருவாய்மொழி (1-1-1) – மயர்வற மதிநலம் அருளினன் - என்பதற்கு ஏற்ப எந்தவிதமான காரணமும் இன்றி ஸர்வேச்வ்ரனுடைய க்ருபை காரணமாக மட்டுமே வந்ததாகவும், ஞானத்தைக் காட்டிலும் வேறுபட்ட நிலையான பக்தி காரணமாக, (உள்கலங்கி) - தெளிவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்த்தட்டாக ஆகும்விதத்தில், திருவாய்மொழி (1-4-3) - மதியெல்லாமுள் கலங்கி - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனைப் பிரிந்த காரணத்தால் ஞானம் முழுவதும் அடியுடன் கலங்கி, (சோகித்து) - தான் விரும்பிய பகவத் அனுபவம் என்பது கிட்டப்பெறாத காரணத்தால் சோகம் அடைந்து, (மூவாறு மாஸம் மோஹித்து) - மேன்மேலே சொற்கள் கொண்டு தொடுப்பதற்கு எதிர்தட்டாக ஆகும்விதமாக, திருவாய்மொழி (1-3-1) - எத்திறம் - என்பதற்கு ஏற்ப அனைவருக்கும் உயர்ந்தவனாகவும், விரும்பும் பொருள்கள் அனைத்தையும் அடையும்படி உள்ளவனாகவும் இருந்தபோதிலும், தாழ்ந்தவனாக மிகுந்த அற்பமான ஆசைகள் உள்ளவன் போன்று செய்த வெண்ணெய் களவு செய்து உண்ட நிகழ்வையும்; திருவாய்மொழி (5-10-1) - பிறந்தவாறும் - என்பதற்கு ஏற்ப கர்மங்களுக்குக் கட்டுபடாதவனாக உள்ளபோதிலும் அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் போன்று பிறந்த விதத்தையும்; திருவாய்மொழி (8-8-1) - கண்கள் சிவந்து - என்பதற்கு ஏற்ப “மாயக்கூத்தா” என்ற பாசுரத்தில் தான் எவ்விதம் கண்ணு வாயும் பிரிந்து நின்றது போன்று தன்னைப் பிரிந்த காரணத்தால் அவனும் தனது கண்ணும் வாயும் பிரிந்து நின்று, பின்னர் தன்னோடு சேர்ந்தவுடன் அவற்றை அவன் மீண்டும் பெற்றான் என்று உரைத்து; “இது என்ன விந்தை, இது என்ன விந்தை” என்று ஒவ்வொரு செயலையும் ஆறு ஆறு மாதமாக எண்ணி எண்ணி, மூன்று முறை ஆறு மாதங்கள் மயங்கிக் கிடந்து (அதாவது “பத்துடை அடியவர்” என்று பாடியவுடன் ஆறு மாதம், “பிறந்தவாறும்” என்று பாடியவுடன் ஆறு மாதம், “கண்கள் சிவந்து” என்று பாடியவுடன் ஆறு மாதம் மயங்கிக் கிடந்தார் என்று கருத்து). (வருந்தி) – திருவாய்மொழி (3-8-10) - வருந்தி நான் வாசக மாலை கொண்டு - என்பதற்கு ஏற்ப ஒரு சொல்லை உரைக்கும்போது ஒரு மலையையே எடுப்பது போன்று வருத்தம் அடைந்து, (ஏங்கி) - திருவாய்மொழி (8-5-3) - என்றென் றேங்கி யழுதக்கால் - என்பதற்கு ஏற்ப பகவத் அனுபவத்தைப் பெறாத வருத்தம் காரணமாக அவனுடைய செயல்களைப் பலமுறை உரைத்தபடி பொருமிப் பொருமி அழுது, (தாழ்ந்த சொற்களாலே நூற்கிறவிவர்) – திருவாய்மொழி (8-5-11) - அங்கே தாழ்ந்த சொற்களால் – என்பதற்கு ஏற்ப “எங்கே காண்கேன்” என்று தளர்ந்த போன மனதுடன், தளர்ந்த குரல் கொண்டு திருவாய்மொழி (4-5-10) - வண்டமிழ் நூற்க நோற்றேன் – என்பதற்கு ஏற்ப இந்தப் ப்ரபந்தங்களைச் செய்தவர் இந்த ஆழ்வார் என்று கருத்து.