Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 57)

முதல் ப்ரகரணம்

கருவுள்வேறலாமை அரனயனெச் செய்யுவைபோலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரமகவிகளால் பாடுவியாது நேர்படச் சொல்லும் நீர்மையிலாவென்னைத் தன்னாக்கி யென் நா முதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்லவல்லே னென்று நானுஞ் சொல்லி நாடுங் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவியென் பித்தா னென்றாரிறே.

அவர்களுடைய ப்ரஸாதம் ஆர்ஷமூலமென்னுமிடம் “மச்சந்தாதேவ”, “புராண ஸம்ஹிதா கர்த்தா” இத்யாதியாலே ப்ரபந்த வக்தாக்களானவர்கள் வசந ஸித்தமாயிருந்தது; அப்படியே இவர் ப்ரபந்தங்களுக்கு மூலம் பகவத் ப்ரஸாத மென்னுமது இவர் வசந ஸித்தமோ வென்னுமபேக்ஷையிலே அத்தை மூதலிக்கிறார் (கருவுளென்று தொடங்கி).

– நான்முகனுடைய க்ருபை காரணமாக வால்மீகி முனிவர் இராமாயணத்தை அருளிச்செய்தார் என்பதை இராமாயணம் பாலகாண்டம் (2-30) - மச்சந்தாதேவ - வால்மீகி முனிவரே! இந்த வாக்கியம் எனது நினைவு காரணமாக உமக்கு வந்தது – என்றும், புலஸ்த்யருடைய க்ருபை காரணமாக பராசர மஹரிஷி ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை அருளிச்செய்தார் என்பதை ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-1-25) - புராண ஸம்ஹிதா கர்த்தா - பராசரரே! நீவிர் புராண ஸம்ஹிதைகளைச் செய்பவராக ஆவீர் - என்றும் உள்ள ச்லோகங்கள் மூலம் நாம் அறியலாம். இதன் மூலம், நான்முகன் உள்ளிட்டவர்களுடைய க்ருபையால் இதிஹாஸ புராணங்கள் ஏற்பட்டன என்றும், அவையே அவற்றுக்குக் காரணமாக உள்ளன என்றும் தெளிவாகிறது. இது போன்று நம்மாழ்வார் அருளிச்செய்த ப்ரபந்தங்களுக்குப் பகவத்க்ருபை என்பது நேரடிக் காரணம் என்பதை உணர்த்தவல்லதாக ஆழ்வாருடைய ப்ரபந்த வரிகள் ஏதும் உள்ளனவோ என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.

– அதாவது, “ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாமாவிச்ய ப்ரஜாபதே”, “கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரஸதே ஸகலம் ஜகத்”, “விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமி ததேஜஸ:” என்கிறபடியே, “திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்” என்றும், “வெள்ளை நீர்ச்சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்” என்றும் சொல்லும்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளைப் பண்ணா நிற்கச் செய்தே, “அரனயனென வுலகழித்து அமைத்துளனே” என்று ஜகத்ஸ்ருஷ்டி வேதோபதேசம் ஜகத்ஸம்ஹாரம் த்ரிபுர தஹந மாகிற விவற்றை ப்ரஹ்ம ருத்ரர்கள் தாங்களே செய்தார்களாக லோகத்தார் சொல்லும்படி செய்தாப்போலே, “மூவுருவா முதல்வனே” என்று ஸ்வேந ரூபேண நின்று கார்யம் செய்யுமிடத்தில் தனக்குத்தானே அடியானாப்போலே ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு தானே அடியாய் அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணி அவர்கள் செய்தார்களென்று ப்ரஸித்தமாக்குமவன். – “திறத்துக்கே துப்பரவாம்” என்கிறபடியே ஏதேனுமொரு காரியத்திலும் வந்தால் ஒரு த்ருணத்தைக் கொண்டு கார்யம் தலைக்கட்டிக் கொள்ளவல்ல ஸாமர்த்த்யத்தையு முடையவனாகையாலே “இன்கவி பாடும் பரமகவிகளால் தன் கவிதான் தன்னைப் பாடுவியாது” என்று சொல்லுகிறபடியே தன்னைக் கவிபாடுவிக்க வேண்டினால் அதுக்கீடான ஜ்ஞாநசக்த்யாதிகளால் குறைவற்றவர்களாய் இனிய கவிகளைப் பாடவல்ல மேலான கவிகளான வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகளும், செந்தமிழ் பாடுவாரான முதலாழ்வார்களு முண்டாயிருக்க, அவர்களைக் கொண்டு பாடுவித்துக் கொள்ளாதே, – “நேர்பட யான் சொல்லும் நீர்மையிலாமையில்” என்கிறபடியே தனக்குத் தகுதியாம்படி வாய்க்கச் சொல்லுகைக்கடியான ஜ்ஞாநாதி குணங்கள் எனக்கின்றிக்கே யிருக்க, “என்னைத் தன்னாக்கி” என்கிறபடியே என்னைத் தன்னோடொத்த ஜ்ஞாந சக்திகளை யுடையனாம்படி பண்ணி, “என் நா முதல் வந்து புகுந்து” என்கிறபடியே என்னுடைய வாக்ப்ரவ்ருத்திக்கு முதலாய் வந்து புகுந்து. “என்னாகியே தப்புதலின்றி” என்கிறபடியே என்னை உபகரணமாகக் கொண்டு பாடாநிற்கச் செய்தே என்னுடைய ஸ்பர்சத்தால் வந்த தோஷம் தட்டாதபடியாகக் கொண்டு, “தன்னை வைகுந்தனாகப் புகழ” என்கிறபடியே நான் புகழ்ந்தவித்தாலே வைகுண்டநாதனாய் அங்குத்தை ஐச்வர்யம் பெற்றானாக நினைத்து, “தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த” என்றும், “தன்னைத் தானே துதித்து” என்றும் சொல்லுகிறபடியே, ‘சொல்லும் தன்னது, சொன்னானும் தான், சொல்லிற்றும் தன்னை’ என்னும்படி எனக்கு அந்தராத்மாவாய் நின்று தன்னைத்தானே ஸ்துதித்து. – “வலக்கையாழி யிடக்கைச் சங்குமிவையுடை மால்வண்ணனை மலக்கு நாவுடையேற்கு” என்று ஒன்றுக்கும் விக்ருதனாகாத ஸர்வாதிகனை என்னுக்தி மாத்ரத்தாலே விக்ருதனாம்படி பண்ணவல்ல நாவீறுடைய வெனக்கென்றும், “நாவியலாலிசை மாலைகளேத்தி நண்ணப் பெற்றேன்” என்று நெஞ்சொழிய வாக் ப்ரவ்ருத்தி மாத்ரத்தாலே இசைமாலைகளைக் கொண்டு ஸ்துதித்துக் கிட்டப் பெற்றே னென்றும், “மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்” என்று செறிந்த சொல்லாலேயுண்டாய் இசையோடே கூடியிருந்துள்ள தொடைகளாலே யேத்தி அநுஸந்திக்கப் பெற்றேனென்றும், “வானக்கோனைக் கவி சொல்ல வல்லேற்கு” என்று ஸ்ரீவைகுண்டநாதனைக் கவி சொல்லவல்ல வெனக்கென்றும் நான் பாடினேனாக நினைத்து நானும் சொல்ல, – “சடகோபன் சொல்” என்றவாறே நானித்தைப் பாடினேனாக நினைத்து நாடும் அஞ்ஜலி பண்ணும்படி, “என் சொல்லால் யான் சொன்ன வின்கவி யென்பித்து” என்கிறபடியே என்னுடைய வசந வ்யக்தியாலே நா கர்த்தாவாகக் சொன்ன இனிய கவியென்று நாட்டிலே ப்ரஸித்தமாக்கினா னென்று அருளிச்செய்தாரிறே யென்கை. ஆகையால் இவர் ஸர்வேச்வர னருளடியாகவே பாடினமை நிச்சிதமென்று கருத்து.

(கருவுள் வேறலாமை) - ஸ்ரீவிஷ்ணுதர்மம் (69-50) - ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாமாவிச்ய ப்ரஜாபதே - நான்முகனே! உனக்கு அந்தர்யாமியாக இருந்தபடி நான் அனைத்தையும் ஸ்ருஷ்டிக்கப் போகிறேன் – என்றும், கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரஸதே ஸகலம் ஜகத் - யார் ஒருவன் கல்பத்தின் முடிவில் ருத்ரன் ரூபத்தில் நின்றபடி அனைத்தையும் ஸம்ஹாரம் செய்கிறானோ - என்றும், மஹாபாரதம் கர்ணபர்வம் - விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமி ததேஜஸ: – அளவற்ற தேஜஸ்ஸை உடைய ருத்ரனுக்கு விஷ்ணு அந்தராத்மாவாக உள்ளான் – என்றும் கூறுவதற்கு ஏற்றபடியும்; திருவாய்மொழி (5-10-8) - திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் – என்றும், திருவாய்மொழி (5-10-4) - வெள்ளை நீர்ச்சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் - என்றும் கூறுவதற்கு ஏற்றபடியும்; நான்முகன் மற்றும் ருத்ரனுக்கு அந்தராமியாக நின்று ஸ்ருஷ்டி மற்றும் ஸம்ஹாரங்களை ஸர்வேச்வரனாகிய விஷ்ணு செய்தபடி உள்ளபோதிலும், (அரன் அயன் எனச் செய்யுமவை போலே) - திருவாய்மொழி (1-1-8) – அரனயனென வுலகழித்து அமைத்துளனே - என்றுள்ள பாசுரத்திற்கு ஏற்ப அனைத்து உலகங்களையும் படைத்தல், வேதங்களை உபதேசித்தல், அனைத்தையும் ஸம்ஹாரம் செய்தல், மூன்று புரங்களையும் எரித்தல் போன்றவற்றை விஷ்ணுவாகிய தான் செய்தபோதிலும், ருத்ரன் போன்றவர்கள் செய்தார்கள் என்னும்படியாக உலகில் உள்ளவர்கள் கூறும்படியாகச் செய்வது போன்று. – (மூவுருவா முதல்வன்) - திருவாய்மொழி (7-9-2) – மூவுருவா முதல்வனே - என்பதற்கு ஏற்ப விஷ்ணுவாகிய தனது ரூபத்துடன் நின்று செயலாற்றும்போது தனக்குத்தானே காரணனாக உள்ளது போன்று, நான்முகன் மற்றும் ருத்ரன் ஆகியவர்களுக்கும் தானே காரணனாக நின்று, அவர்களைத் தனது சரீரமாகக் கொண்டு நின்று, ஸ்ருஷ்டி மற்றும் ஸம்ஹாரம் ஆகியவற்றைத் தானே செய்து, அவர்கள் செய்தவர் என்று ப்ரஸித்தம் ஆக்குபவன். – (துப்புரவாலே) - திருவாய்மொழி (7-9-9) - திறத்துக்கே துப்பரவாம் – என்பதற்கு ஏற்ப எந்த ஒரு செயலைச் செய்யும்படி இருந்தாலும், ஒரு சிறிய புல்லைக் கொண்டே அந்தச் செயலைச் செய்து முடிக்கும்படியான சாமர்த்யம் உள்ளவன். ஆகவே, (பரமகவிகளால் பாடுவியாது) – திருவாய்மொழி (7-9-6) - இன்கவி பாடும் பரமகவிகளால் தன் கவிதான் தன்னைப் பாடுவியாது – தன்னைக் குறித்துக் கவி பாடும்படியாகச் செய்யவேண்டும் என்றால், அதற்குத் தகுதியான ஞானம், சக்தி போன்ற பலவும் குறைவில்லாமல் உள்ளவர்களும், இனிமையான கவிகளைப் புனையவல்லவர்களும் ஆகிய கவிகளான வ்யாஸர், பராசரர், வால்மீகி முதலானவர்களும், செந்தமிழில் பாடுபவர்களான முதலாழ்வார்களும் உள்ளபோதிலும், அவர்களைக் கொண்டு பாடும்படிச் செய்யாமல், – (நேர்பட சொல்லும் நீர்மையிலா வென்னைத் தன்னாக்கி) - திருவாய்மொழி (7-9-5) - நேர்பட யான் சொல்லும் நீர்மையிலாமையில் - என்று கூறுவதற்கு ஏற்ப தனக்குத் தகுதியானபடி ஞானம் போன்ற ஏதும் எனக்கு [நம்மாழ்வார்] இல்லாமல் உள்ளபோதிலும், திருவாய்மொழி (7-9-1) - என்னைத் தன்னாக்கி – என்பதற்கு ஏற்ப என்னைத் தனக்கு ஒத்தபடியான ஞானம், சக்தி போன்றவற்றைக் கொண்டவனாகும்படிச் செய்து, (யென் நா முதல் வந்து புகுந்து) - திருவாய்மொழி (7-9-3) - என் நா முதல் வந்து புகுந்து - என்பதற்கு ஏற்ப என்னுடைய வாக்கின் செயல்களுக்கு ஏற்றபடி வந்து நின்று, (தப்புதல் அற) - திருவாய்மொழி (7-9-4) – என்னாகியே தப்புதலின்றி - என்பதற்கு ஏற்ப என்னை ஒரு சாதனமாக வைத்துக்கொண்டு தன்னைப் பாடும்படிச் செய்தபோதிலும் என்னுடைய மனித சரீரத் தொடர்பு காரணமாக ஏற்படவல்ல தோஷம் ஏதும் உண்டாகாதபடி, (தன்னை வைகுந்தனாக) – திருவாய்மொழி (7-9-7) - தன்னை வைகுந்தனாகப் புகழ - என்பதற்கு ஏற்ப நான் புகழ்ந்த இவை மூலம் மட்டுமே தான் தன்னை ஸ்ரீவைகுண்டநாதன் என்று கொண்டு அங்குள்ள ஐச்வர்யங்களைத் தான் பெற்றதாக எண்ணியபடி, (தன் சொல்லால் தானே துதித்து) - திருவாய்மொழி (7-9-2) - தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த - என்றும், திருவாய் (10-7-2) – தன்னைத் தானே துதித்து - என்றும் உள்ளதற்கு ஏற்ப, “கூறப்பட்ட சொற்கள் தன்னுடையது, கூறியவனும் தானே, கூறப்பட்டதும் தன்னைக் குறித்தே ஆகும்” என்றபடி எனக்கு அந்தர்யாமியாக நின்று, தன்னைக் குறித்து தானே ஸ்துதித்துக் கொண்டு [நிற்கும் ஸர்வேச்வரன்…] – (மலக்கு) திருவாய்மொழி (6-4-9) - வலக்கையாழி யிடக்கைச் சங்குமிவையுடை மால்வண்ணனை மலக்கு நாவுடையேற்கு - என்பதற்கு ஏற்ப எந்தச் சூழ்நிலையிலும் எதனாலும் தனது நிலை மாறாதபடி மிகவும் உயர்ந்தவனாகிய ஸர்வேச்வரனை எனது சொற்களால் மட்டுமே நிலை மாறும்படியாகலாம் என்னும்படிச் செய்யவல்ல நாக்கு வலிமை கொண்ட எனக்கு என்றும், (நாவியல்) - திருவாய்மொழி (4-5-4) - நாவியலாலிசை மாலைகளேத்தி நண்ணப் பெற்றேன் - என்பதற்கு ஏற்றபடி மனம் அல்லாமல் வாக்கு கொண்டு மட்டுமே இசைமாலைகளைத் தொகுத்து அவனைத் துதித்துக் கிட்டப்பெற்றேன் என்றும், (மொய்ய சொல்லால்) – திருவாய்மொழி (4-5-2) - மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, செறிந்த சொற்களால் அமையப்பெற்று இசையுடன் கூடிய தொடைகள் கொண்டு புகழ்ந்து எப்போதும் எண்ணியபடி இருக்கப்பெற்றேன் என்றும், (சொல்ல வல்லேன்) – திருவாய்மொழி (4-5-9) - வானக்கோனைக் கவி சொல்ல வல்லேற்கு - என்பதற்கு ஏற்ப ஸ்ரீவைகுண்டநாதனைக் குறித்து கவிபாடவல்ல எனக்கு என்றும், (நானும் சொல்லி) – இப்படியாக நான் சொந்தமாக அவனைக் குறித்துப் பாடினேன் என்று எண்ணி இவ்விதம் பலவாறாக உரைத்துள்ளேன். (நாடும் கை எடுக்கும்படி) - திருவாய்மொழி (2-2-11) - சடகோபன் சொல் - என்பதற்கு ஏற்ப இவற்றை நான் பாடினேன் என்று எண்ணி நாட்டில் உள்ள அனைவரும் கைகுவித்து வணங்கும்படியாக, (என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்தான்) - திருவாய்மொழி (7-9-2) - என் சொல்லால் யான் சொன்ன வின்கவி யென்பித்து - என்பதற்கு ஏற்ப எனது சொற்கள் மூலமாக நான் இவற்றை இயற்றியவன் என்னும்படி இந்த இனிய கவிகளை நான் செய்ததாக உலகிற்கு ப்ரஸித்தம் செய்தான், (என்றாரிறே) - என்று இவரே அருளிச்செய்தார் அல்லவோ? ஆகவே இவர் ஸர்வேச்வரனுடைய நேரடியான க்ருபையால்தான் திருவாய்மொழியை அருளிச்செய்தார் என்பது உறுதி என்று கருத்து.