Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 56)

முதல் ப்ரகரணம்

பரம ஸத்வத்தோடே உள்ளி உரைக்கும், நிறை ஞானத்து அயனாம் சிவனாம் திருமால் அருள்கொண்டு இவர் பாடினார்.

இனி இவ்வாழ்வார் ப்ரபந்தங்களுக்கு மூலம் இன்னதென்கிறார் (பரமஸத்வேத்யாதியால்).

இனி நம்மாழ்வார் ப்ரபந்தங்கள் உண்டாகக் காரணம் என்ன என்பதை அருளிச் செய்கிறார்.

– அதாவது, கல்பாதியில் உத்ரிக்தமான குணாநுகுணமாகத் தோற்றிற்று வர்ணிக்குமென்றதுக்கு எதிர்த்தட்டாம்படி பரமஸத்வத்தோடே “உள்ளியுரைத்த” என்று ரஜஸ் தமஸுக்களோடும் தத்ஸஹபடிதமான ஸத்வத்தோடும் அந்வயமின்றிக்கே, “பரம ஸத்வ ஸமாச்ரய:” என்கிறபடியே தனக்குமேல் இல்லை யென்னும்படியான சுத்த ஸத்வ யுக்தனாய், தான் சொல்லிற்றடைய வேதார்த்தமா யிருக்கச்செய்தே சடக்கெனச் சொன்னால் “வாய் வந்தபடி சொன்னான் நிரூபியாதே” என்பர்களென்று சேதனர்பக்கல் வாத்ஸல்யாதிசயத்தாலே இவர்களுக்கு ஆப்திக்குறுப்பாக “நெறியுள்ளியுரைத்த” என்கிறபடியே வேதமார்க்கத்தை விசாரித்து அருளிச்செய்யுமவனுமாய், பிச்சுத் தெளிந்து சொன்னவன் வார்த்தை கேட்டுண்டான ஜ்ஞாநமாத்ரத்தை யுடையவர்களைப் போலன்றியே “நிறை ஞானத்தொரு மூர்த்தி” என்கிறபடியே பரிபூர்ண ஜ்ஞானத்தை நிரூபகமாகவுடையனுமாய் “அயனாம் சிவனாம் திருமாலால்” என்கிறபடியே கீழ்ச்சொன்ன ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் அந்தர்யாமியாய் நின்று அவ்வவகார்யங்களை நிர்வஹிக்கையாலே தத்தச்சப்த வாச்யனாய் ஸர்வாதிகனான ஸ்ரீய:பதியினாலே, “அருளப்பட்ட சடகோபன்” என்கிறபடியே “மயர்வற மதிநலம் அருளப்பெற்றவராய்”, “அருள் கொண்டாயிர மிந்தமிழ் பாடினான்” என்கிறபடியே அந்த அத்வாரக பகவத் ப்ரஸாதத்தை மூலமாகக் கொண்டு இவர் இப் ப்ரபந்தங்கள் பாடியருளினாரென்கை.

– (பரம ஸத்வத்தோடே) - கல்பத்தின் தொடக்கத்தில் மிகுதியாக உள்ள குணங்களுக்கு ஏற்றபடியாகத் தோன்றியதை உரைப்பது என்ற நிலைக்கு எதிர்த்தட்டாக உள்ள பரமஸத்வத்துடன் கூடியபடியே, திருவாய்மொழி (1-3-5) - உள்ளி உரைத்த - என்பதற்கு ஏற்ப ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களுடன் ஒன்றாகவே பேசப்படுகின்ற ஸத்வகுணத்துடன் எந்தவிதமான ஸம்பந்தமும் இல்லாமல், ஸ்தோத்ரரத்னம் (12) - பரம ஸத்வ ஸமாச்ரய: - யார் ஒருவன் பரமஸத்வமும் அண்டி நிற்கும்படியாக உள்ளவனோ - என்பதற்கு ஏற்ப, தனக்கு மேல் யாரும் இல்லை என்னும்படியாக சுத்த ஸத்வத்தை உடையவன். (உள்ளி உரைக்கும்) - தன்னால் கூறப்பட்டவை அல்லது தனது ஆணைகளே ஆன வேதங்களின் ஆழ்பொருளாக உள்ளபோதிலும், சட்டென்று அவற்றை உரைத்தால், “இவன் எதனையும் ஆராயாமல் வாய்க்கு வந்தபடி உரைக்கிறான்” என்று பழி கூறுவர் என்பதற்காக, அனைத்து உயிர்கள் மீதும் கொண்ட வாத்ஸல்யத்தின் மிகுதி காரணமாக “இவர்கள் நம்பவேண்டும்” என்பதற்காக, திருவாய்மொழி (1-3-5) – நெறி உள்ளி உரைத்த – என்பதற்கு ஏற்ப வேதநெறியை நன்றாக ஆராய்ந்து அருளிச்செய்பவன். (நிறை ஞானத்து) - மனக்குழப்பம் அல்லது புத்தி தடுமாற்றம் நீங்கி சிவன் கூறிய சொற்கள் கேட்டு ஏற்பட்ட ஞானத்தை மட்டுமே உடையவர்கள் போன்று அல்லாமல், (அயனாம் சிவனாம் திருமாலால்) - திருவாய்மொழி (4-8-6) – அயனாம் சிவனாம் திருமாலால் - என்பதற்கு ஏற்ப மேலே உரைக்கப்பட்ட நான்முகன் மற்றும் சிவன் போன்றவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து அவர்கள் செய்கின்ற செயல்களான ஸ்ருஷ்டி மற்றும் ஸம்ஹாரத்தை நிர்வாகம் செய்பவன் என்பதால் “நான்முகன், சிவன்” என்று கூறினால் அது தன்னையே உரைக்கும் என்னும்படி அனைத்தையும் நியமிக்கும் மஹாலக்ஷ்மியின் நாயகன். இப்படிப்பட்ட ஸர்வேச்வரனால் திருவாய்மொழி (8-8-1) - அருளப்பட்ட சடகோபன் - என்பதற்கு ஏற்ப, திருவாய்மொழி (1-1-1) – மயர்வற மதிநலம் அருள் - என்னும்படி க்ருபை செய்யப்பட்ட இவர், கண்ணிநுண்சிறுத்தாம்பு (8) - அருள் கொண்டாயிர மிந்தமிழ் பாடினான் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடைய நேரடியான கருணை மூலம் ப்ரபந்தங்களை பாடி அருளினார்.