Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 55)

முதல் ப்ரகரணம்

கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர்முகன் சந்தஸ்ஸும், மோஹசாஸ்த்ர ப்ரவர்த்தகன் பிணச்சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறு ஏறிச் சுழன்று ஆடும் ஆலம் அமர் பிச்சுத் தெளிந்து தான் வணங்குமாறு உரைக்கக் கேட்ட ஸஜாதீயர் ப்ரஸாதமும் ஆர்ஷமூலம்.

உபப்ர்மஹணத்வ ஸாம்யமுண்டானாலும், இவ்வாழ்வார் ப்ரபந்தங்களுக்குள்ள வேற்றம் ஆர்ஷமான புராணாதிகளுக்கில்லை யென்னுமிடத்தை அறிவிக்கைக்காக, உபயத்தினுடையவும் உத்பத்தி மூலங்களை அருளிச்செய்யக் கோலி, ப்ரதமம் ஆர்ஷப்ரபந்தோத்பத்தி மூலத்தை அருளிச்செய்கிறார் - (கல்பாதியிலென்று தொடங்கி).

ஆழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களுக்கும், மஹரிஷிகள் ஏற்படுத்திய க்ரந்தங்களுக்கும், “இவை இரண்டும் வேதங்களுக்கு உபப்ரும்ஹணங்கள் ஆகும்” என்ற தன்மை ஒத்திருத்தாலும், ஆழ்வார் அருளிச்செய்த ப்ரபந்தங்களுக்கு உள்ள ஏற்றம் என்பது ரிஷிகள் ஏற்படுத்திய புராணங்கள் போன்றவற்றுக்கு இல்லை என்பதை உணர்த்த திருவுள்ளம் பற்றினார். ஆகவே ஆழ்வார் அருளிச்செய்த ப்ரபந்தங்கள், ரிஷிகள் ஏற்படுத்திய புராணங்கள் ஆகிய இரண்டும் தோன்றுவதற்கான காரணத்தை அருளிச்செய்ய எண்ணினார். இதற்காக முதலில் ரிஷிகள் ஏற்படுத்திய க்ரந்தங்கள் தோன்றுவதற்கான காரணத்தை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது “யஸ்மிந் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா, தஸ்ய தஸ்ய து மாஹத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே” என்கிறபடியே குணத்ரய வச்யனான தனக்கு காலபேதேந குணத்ரயமும் ஸங்கீர்ணமாயும், அதிலொரு குணம் ப்ரசுர மாயிருக்கும் விசேஷத்தையிட்டு “ஸங்கீர்ணாஸ் ஸாத்விகாச்சைவ ராஜஸாஸ் தாமஸாஸ் ததா” என்று ஸங்கீர்ணங்களென்றும் ஸாத்விகங்களென்றும் ராஜஸங்களென்றும் தாமஸங்களென்றும் சொல்லப்படுகிற அஹஸ்ஸுக்களாகிற கல்பங்களினுடைய ஆதிகளிலே உத்ரிக்தமான குணநுகுணமாக ப்ரதிபந்ந மானபடியே, “அக்நேச் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம், ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது:, ஸாத்விகேஷ்வத கல்பேஷு மஹாத்ம்யமதிகம் ஹரே:, தேஷ்வேவ யோக ஸம்ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம், ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ரூணாஞ்ச நிகத்யதே” என்கிறபடியே தாமஸ கல்பங்களில் அக்நி சிவர்களுடைய மஹாத்ம்யத்தையும், ராஜஸ கல்பங்களில் தன்னுடைய மாஹாத்ம்யத்தையும், ஸாத்விக கல்பங்களில் ஸர்வேச்வரனுடைய மாஹாத்ம்யத்தையும், ஸங்கீர்ண கல்பங்களில் பித்ர்ஸரஸ்வதிகளின் மஹாத்ம்யத்தையும் வர்ணியாநிற்கும் சதுர்முகனுடைய “மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ” என்கிறபடியே இவன் வாக்கிலே இச்சப்தம் பிறக்கைக்கடியான அநுக்ரஹ கார்யமான நினைவும். சந்தஸ்ஸென்கிறவிது நினைவென்றே இவ்விடத்தில் கொள்ளவேணும். ச்சதமென்றே நினைவுக்கும் வாசகம்; ச்சந்தஸ்ஸென்கிறவிதுவும் நினைவுக்கு வாசகமாக வந்தவிடங்களிலே கண்டு கொள்வது. – ஆக, இப்படியிருந்துள்ள சதுர்முகன் நினைவும், “அந்யம் தேஹி வரம் தேவ ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷு, மர்த்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ. மாம் வஹஸ்வ ச தேவேச! வரம் மத்தோ க்ருஹாணச, யேநாஹம் ஸர்வபூதாநாம் பூஜ்யாத் பூஜ்யதரோபவம்” என்று வரம் வேண்டின ஸ்வோத்கர்ஷ காமனாகையாலே, “த்வஞ்ச ருத்ர! மஹாபாஹோ மோஷசாஸ்த்ராணி காரய” என்று பகவான் நியோகித்தது வ்யாஜமாக ஆகமாதி மோஹ சாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்ரன், “பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகன்” என்றும், “சுடலையில் சுடுநீறன்” என்றும், “வெந்தாரென்பும் சுடுநீறும் மெய்யிற் பூசி” என்றும், “அக்கும் புலியினதளுமுடையார்” என்றும், “ஆறும் பிறையு மரவமுமடம்பும் சடை மேலணிந்து” என்றும், “ஏறேறி” என்றும், “சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன்” என்றும், “ஆலமமர் கண்டத்தரன்” என்றும் சொல்லுகிறபடியே தம: ப்ரசுரனாகையாலே நிஹீனவ்ருத்திபரனாய், “உந்மத்தவத் உந்மத்த: ப்ரபு: ப்ரபவதாமபி, ராத்ரௌ ச்மசாநேப்யடஸி தத் கிமேதத் தவேச்வர:” இத்யாதியாலே, “ச்மசாந பர்யடநம் தொடக்கமான நிஹீநவ்ருத்திகளை நீ அநுஷ்டிக்கைக்கு ஹேதுவென்” என்று தேவி கேட்கும்படி ச்மசாநங்களிலே ஸஞ்சரித்து, சவ பஸ்மத்தை உடம்பெங்கும் பூசி அஸ்த்தி மாலையைப் பூண்டு வ்யாக்ர சர்மத்தை யுடுத்தி, நதீ சந்த்ர ஸர்ப்பாதிகளை ஜடையிலே யணிந்து, ஸர்வேச்வரன் தன் ஸார்வஜ்ஞ்யாநுகுணாமாக வேதமயனான விஹகேச்வரனை மேற்கொண்டு உலாவுமா போலே தன்னறிவு கேட்டுக்கநுகுணமாக ஜ்ஞாந ஹீநமான ரிஷபத்தை வாஹநமாக உடையவனாய், மத்தர் களித்து ந்ருத்தம் பண்ணுமோபாதி சக்ர ப்ரமம் போலே சுழன்றாடுவது, விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே நம்மிற்காட்டில் அதிசயித சக்திகரில்லை யென்று தன்னை ஈச்வரனாக நினைத்திருப்பதாகிற ப்ராந்தி நீங்கி, ஸத்வ குணம் தலையெடுத்து, ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகமாகையாலே, “ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு நால்வர்க்கு மேலையுகத்துரைத்தான்” என்கிறபடியே அகடிதகடநா ஸமர்த்தனான ஸர்வேச்வரனைத் தான் உபாஸிக்கும் ப்ரகாரத்தை உபதேசிக்கக் கேட்டவர்களாகையாலே, ஸத்வநிஷ்ட்டராய் ருஷித்வத்தால் வந்த ஸாஜாத்யத்தையு முடையரான அகஸ்த்ய புலஸ்த்ய தக்ஷ மார்க்கண்டேயர்கள் நால்வரிலே ஒருவனான புலஸ்த்யன், “புராண ஸம்ஹிதாகர்த்தா பவாந் வத்ஸ பவிஷ்யதி, தேவதா பாரமார்த்த்யஞ்ச யதாவத் வேத்ஸ்யதே பவாந்” என்று ஸ்ரீபராசரபகவானுக்கு வரப்ரநாநம் பண்ணுகையாலே ஸஜாதீயரான ருஷிகள் ப்ரஸாதமும் ருஷி ப்ரோக்தங்களான ப்ரபந்தங்களினுடைய உதயத்துக்கு மூலமென்கை. ஸ்ரீவால்மீகி பகவானுக்கு அநுக்ரஹகரனான ப்ரஹ்மாவைப் போலே விஜாதீயனன்றிக்கே ஸ்ரீபராசரபகவானுக்கு வரப்ரதனான புலஸ்த்யனும் ருஷியாகையாலே இவனுக்கு ஸஜாதீயனென்னத் தட்டில்லையிறே. மற்றுண்டான இதிஹாஸ புராண கர்த்தாக்களுடைய ப்ரபந்தங்களுக்கு மூலமும் ஆராய்ந்தால் இப்புடையிலே யாயிருக்கு மத்தனையல்லது அத்வாரக பகவத் ப்ரஸாதம் ஒரு விஷயத்திலுமில்லை யென்று நினைத்திறே ஆர்ஷமூல மென்று திரளவருளிச் செய்தது.

(கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர்முகன் சந்தஸ்ஸும்) - மத்ஸ்யபுராணம் – யஸ்மிந் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா, தஸ்ய தஸ்ய து மாஹத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே - முன்பு நான்முகனால் எந்தக் கல்பத்தில் எது உரைக்கப்பட்டதோ, அதனுடைய பெருமை என்பதே அதன் தன்மையாக உரைக்கப்பட்டது - என்று கூறுவதற்கு ஏற்ற மூன்று குணங்களுக்கு வசப்பட்டவனாகிய நான்முகனாகிய தனக்கு, காலத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக மூன்று குணங்களும் கலந்தும், அந்த மூன்று குணங்களில் ஓரோரு காலத்தில் ஒவ்வொன்று அதிகமாகவும் உள்ள தன்மையின் விளைவாக [இந்தத் தன்மையின் விளைவாக நான்முகனுக்கு ஏற்படும் நினைவுகள் என்பவை, ரிஷிகள் ஏற்படுத்திய புராணங்கள் போன்றவற்றுக்கு ஒரு காரணம் என்று கூற உள்ளார். இதனை மேலும் விவரிக்கிறார். அதாவது நான்முகனுக்கு அந்த நினைவுகள் எப்படி உண்டாகின்றன என்பதை அடுத்து உரைக்கிறார்]. முதலில் மூன்று குணங்கள் கலந்திருப்பதற்கான ப்ரமாணம் கூறுகிறார். மத்ஸ்ய புராணம் - ஸங்கீர்ணாஸ் ஸாத்விகாச்சைவ ராஜஸாஸ் தாமஸாஸ் ததா - மூன்று குணங்களும் கலந்துள்ளதாகவும், ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்றுள்ளவையாகவும் - என்பதற்கு ஏற்றபடி மூன்று குணங்களும் கலந்துள்ளதாகவும், ஸாத்விகம் என்றும் ராஜஸம் என்றும் தாமஸம் என்றும் கூறப்படும் நாள்களாகிற கல்பங்களுடைய தொடக்கத்தில் உண்டாகும் குணங்களைப் பின்பற்றி உண்டாக்கப்படுபவை [சில வரிகளுக்கு முன்பு, “அதிகமாகவும் உள்ள தன்மையின் விளைவாக” என்று உள்ளது காண்க. அதனுடன் இங்கு கூறப்பட்ட “உண்டாக்கப்படுபவை” என்பதைச் சேர்க்கவும். அதாவது “அதிகமாகவும் உள்ள தன்மையின் விளைவாக உண்டாக்கப்படுபவை” என்று பொருள் கொள்க. அடுத்து எவை உண்டாக்கப்படுகின்றன என்று கூறுகிறார்]. மத்ஸ்ய புராணம் - அக்நேச் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம், ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது:, ஸாத்விகேஷ்வத கல்பேஷு மஹாத்ம்யமதிகம் ஹரே:, தேஷ்வேவ யோக ஸம்ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம், ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ரூணாஞ்ச நிகத்யதே – தாமஸம் நிறைந்த நாள்களில் அக்னி, சிவன் மாஹாத்ம்யம் அதிகமாக பேசப்படுகிறது; ராஜஸம் அதிகமாக உள்ள நாள்களில் நான்முகனின் மாஹாத்ம்யம் அதிகமாக உரைக்கப்படுகிறது; ஸத்வம் மிகுதியாக உள்ள நாள்களில் ஸ்ரீஹரியின் மாஹாத்ம்யம் அதிகமாகப் பேசப்படுகிறது; ஸத்வம் அதிகமாக உள்ள நாள்களில் யோகஸித்தி உள்ளவர்கள் உயர்ந்த கதியான மோக்ஷம் அடைவர்; மூன்று குணங்களும் கலந்துள்ள நாள்களில் ஸரஸ்வதி மற்றும் பித்ருக்கள் பெருமை கூறுப்படுகிறது - என்று கூறுவதற்கு ஏற்ப தாமஸம் அதிகமான உள்ள நாள்களில் அக்னி மற்றும் சிவன் ஆகியோரின் பெருமையும், ராஜஸம் அதிகமாக நாள்களில் நான்முகனாகிய தனது பெருமையும், ஸத்வம் அதிகமாக உள்ள நாள்களில் ஸர்வேச்வரனாகிய ஸ்ரீஹரியின் மாஹாத்ம்யத்தையும், மூன்று குணங்களும் கலந்துள்ள நாள்களில் ஸரஸ்வது மற்றும் பித்ருக்களுடைய மாஹாத்ம்யத்தையும் நான்முகன் வர்ணித்தபடி உள்ளான். இப்படிப்பட்ட நான்முகனுடைய, இராமாயணம் பாலகாண்டம் (2-30) - மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ - வால்மீகியே! இந்த வாக்கியம் எனது நினைவு காரணமாக உமக்கு வந்தது - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள நினைவும் [புராணங்கள் உண்டாக ஒரு காரணமாக உள்ளது என்று வாக்கியத்தை நிறைவு செய்து கொள்க. அடுத்த காரணத்தை அடுத்த பத்தியில் கூறுகிறார்]. சூர்ணையில் உள்ள “சந்தஸ்” என்ற பதம் “நினைவு” என்ற பொருளில் வந்ததாகவே கொள்ளவேண்டும். “சந்தம்” என்பது நினைவைக் குறிப்பதாகும். ஆகவே “ச்சந்தஸ்” என்பதும் நினைவு என்றே கொள்ளப்பட வேண்டும் (ஆக இப்படியாக உள்ள நான்முகனின் நினைவு என்பது புராணங்கள் வெளிப்பட ஒரு காரணம் என்றார். இனி அடுத்த காரணத்தை கூறுகிறார்). (மோஹசாஸ்த்ர ப்ரவர்த்தகன்) – இப்படியாக உள்ள நான்முகனின் நினைவும். அந்யம் தேஹி வரம் தேவ ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷு, மர்த்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ. மாம் வஹஸ்வ ச தேவேச! வரம் மத்தோ க்ருஹாணச, யேநாஹம் ஸர்வபூதாநாம் பூஜ்யாத் பூஜ்யதரோபவம் - தேவனே! கேசவா! தேவர்களுடைய தலைவனே! நீ மனிதனாக வந்து என்னை உனது தலைவனாக ஏறறு ஆராதிக்கவேண்டும். என்னிடம் வரங்களை நீ பெறவேண்டும்; எந்த ஒரு வரம் காரணமாக அனைத்து உயிர்களிலும் வணங்கப்படுபவர்களைக் காட்டிலும் உயர்ந்த வணங்கப்படுபவனாக நான் மாறுவேனோ, அந்த வரத்தை நீ எனக்கு அளிக்கவேண்டும் - என்று வரம் வேண்டிய சிவன், தனது பெருமையில் மிகவும் நாட்டம் உள்ளவன் ஆவான்; ஆகவே அவன், த்வஞ்ச ருத்ர! மஹாபாஹோ மோஷசாஸ்த்ராணி காரய - பரந்த தோள்கள் உள்ள ருத்ரனே! மயக்க வைக்கும் சாஸ்த்ரங்களை நீ ஏற்படுத்துவாயாக - என்று ஸர்வேச்வரனால் கட்டளை இடப்பட்டதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஆகமம் போன்ற மயங்க வைக்கும் சாஸ்த்ரங்களை சிவன் ஏற்படுத்தினான். – (பிணச்சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறு ஏறிச் சுழன்று ஆடும் ஆலம் அமர் பிச்சுத் தெளிந்து). இப்படிப்பட்ட சிவன், பெரியதிருமொழி (2-6-9) - பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகன் - என்றும், பெரியதிருமொழி (10-1-5) - சுடலையில் சுடுநீறன் - என்றும், பெரியதிருமொழி (1-5-8) – வெந்தாரென்பும் சுடுநீறும் மெய்யிற் பூசி - என்றும், பெரியதிருமொழி (9-6-1) - அக்கும் புலியினதளுமுடையார் - என்றும், பெரியதிருமொழி (6-7-9) - ஆறும் பிறையு மரவமுமடம்பும் சடை மேலணிந்து, இரண்டாம் திருவந்தாதி (63) - ஏறேறி - என்றும், பெரிய திருமடல் (70) - சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் - என்றும், முதல் திருவந்தாதி (4) – ஆலமமர் கண்டத்தரன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப தாமஸகுணம் நிறைந்தவன் என்பதால் தாழ்ந்த செயல்களுடன் கூடியவனாக உள்ளவன். உந்மத்தவத் உந்மத்த: ப்ரபு: ப்ரபவதாமபி, ராத்ரௌ ச்மசாநேப்யடஸி தத் கிமேதத் தவேச்வர: - ஈச்வரனே! பைத்தியத்தன்மை இல்லாதவரும், ப்ரபுக்கள் அனைவருக்கும் ப்ரபுவும் ஆகிய நீவிர் பித்துப் பிடித்தவர் போன்று இரவில் இடுகாட்டில் அலைகிறீர்; இது போன்ற நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன - என்று கூறுவதற்கு ஏற்ப, பார்வதியானவள் சிவனாகிய தன்னிடம், “இடுகாட்டில் திரிந்தபடி இருத்தல் போன்ற தாழ்வான செயல்களை நீவீர் செய்வதற்குக் காரணம் என்ன?”, என்று கேட்கும்படியாக, மயானத்தில் திரிந்தபடி, எரிந்த பிணங்களுடைய சாம்பலைத் தனது உடல் முழுவதும் பூசியபடி, எலும்புத்துண்டுகளால் ஆகிய மாலையை அணிந்து கொண்டு, புலித்தோலை ஆடையாக உடுத்தியபடி, கங்கை சந்த்ரன் மற்றும் நாகத்தைத் தனது ஜடையில் தரித்தபடி, ஸர்வேச்வரன் தன்னுடைய அனைத்தும் அறிந்த தன்மைக்கு ஏற்ப வேதமயமான கருடனில் ஏறி ஸஞ்சரிப்பது போன்று சிவனாகிய தனது அறிவு கேட்டுக்கும் ஏற்றபடியாக அறிவில் குறைந்த ரிஷபத்தை வாகனமாகக் கொண்டு திரிந்தபடி, மனநிலை சரியில்லாதவர்கள் வேடிக்கையாக ஆடுவது போன்றும் சக்கரம் சுற்றுவது போன்றும் சுழன்று ஆடியபடி, கொடிய விஷத்தைத் தனது கழுத்தில் நிறுத்தியதன் காரணமாகத் தன்னைக் காட்டிலும் அதிக சக்தி உள்ளவர் வேறு யாரும் இல்லை என்று தன்னை எண்ணியபடி உள்ள சிவன், இப்படிப்பட்ட மயக்கம் நீங்கப் பெற்று. – (தான் வணங்குமாறு உரைக்கக் கேட்ட) – [மயக்கம் நீங்கப் பெற்ற சிவன்] ஸத்வகுணம் மேம்பட்டு, ஸத்வகுணம் என்பது மஹாவிஷ்ணுவை உணர்த்துவது என்பதால், நான்முகன் திருவந்தாதி (17) - ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு நால்வர்க்கு மேலையுகத்துரைத்தான் - என்பதற்கு ஏற்ப யாராலும் செய்ய இயலாதவற்றைச் செய்யவல்லவன் ஸர்வேச்வரன் என்றுள்ள ஸர்வேச்வரனை, சிவனாகிய தான் வணங்கும் விதத்தைத் தன்னிடமிருந்து கேட்டறிந்து கொண்டதாலும் [அதாவது சிவனாகிய தான், மஹாவிஷ்ணுவை வணங்கும் விதத்தைக் குறித்து தன்னிடம் ரிஷிகள் கேட்டு அறிந்ததால்] (ஸஜாதீயர் ப்ரஸாதமும்) – இவற்றைக் கேட்டறிந்த காரணத்தால் ஸத்வகுணத்தில் மட்டுமே எப்போதும் நிலைநிற்பவர்களும், மஹரிஷிகள் என்றுள்ள தங்கள் இனத்துக்கு ஏற்றதான தன்மை கொண்டவர்களும் ஆகிய அகஸ்தியர், புலஸ்த்யர், தக்ஷர், மார்க்கண்டேயர் ஆகிய நால்வரில் ஒருவரான புலஸ்த்யர் என்பவர், ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் (1-1-25) – புராண ஸம்ஹிதாகர்த்தா பவாந் வத்ஸ பவிஷ்யதி, தேவதா பாரமார்த்த்யஞ்ச யதாவத் வேத்ஸ்யதே பவாந் - பராசரே! நீவிர் புராணம், ஸம்ஹிதைகளுக்குக் கர்த்தா ஆகப்போகிறீர் - என்று பராசரபகவானுக்கு வரம் அளித்த காரணத்தால் தங்கள் இனத்தவர்களாக உள்ள ரிஷிகளின் க்ருபையும் [நான்முகனின் நினைவு, சிவனுடைய உபதேசம், தங்களைப் போன்ற ரிஷிகளின் க்ருபை ஆகியவையே ரிஷிகள் புராணங்களை ஏற்படுத்தக் காரணம் ஆகும் என்கிறார்], – (ஆர்ஷ மூலம்) – [மேலே கூறப்பட்ட பலவும்] ரிஷிகள் உண்டாக்கிய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் தோன்றுவதற்குக் காரணங்கள் ஆகின்றன. அதாவது வால்மீகி பகவானுக்கு க்ருபை செய்த நான்முகன் போன்று வேறு இனமாக அல்லாமல், பராசர பகவானுக்கு க்ருபை செய்த புலஸ்த்யரும் பராசரர் போன்றே ரிஷி என்பதால், அவரைப் பராசரரின் இனம் என்று கூறுவதில் குற்றம் இல்லை. மேலும் மனிதர்களால் ஏற்பட்ட இதிகாசம் மற்றும் புராணங்களைச் செய்த கர்த்தாக்களுடைய ப்ரபந்தங்களுக்கு மூலம் எது என்று ஆரய்ந்தால், இது போன்றே இருக்கும் அல்லாமல், நேரடியாகப் பகவானின் க்ருபை என்பது எந்த ஒரு ப்ரபந்தத்துக்கும் இல்லை என்பதால் “ஆர்ஷ மூலம் - ரிஷிகள் உண்டாக்கியது” என்றார்.