Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 54)
முதல் ப்ரகரணம்
அன்றிக்கே ஸ்வரூபகுண விபூதி சேஷ்டிதங்களை விசதமாக்குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள் போலே நீலபாரூபோக்தி தெரியச் சொன்ன வேதோபப்ர்ம்ஹண மென்பர்கள்.
ஆக இப்படி இப்ப்ரபந்த சதுஷ்டயத்துக்கும் வேத ஸாம்யத்தை ஸாதித்தார் கீழ்; இங்ஙனன்றிக்கே இது தனக்கு வேதோப ப்ர்ம்ஹணஸாம்யமும் சொல்லுவர்க ளென்கிறார் மேல் - (அன்றிக்கே யென்று தொடங்கி).
– ஆக, இப்படியாக நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்தங்களுக்கும் வேதத்தின் ஒற்றுமையைக் கடந்த சில சூர்ணைகளில் நிரூபித்தார். இது மட்டும் அல்லாமல் இப்ப்ரபந்தங்கள் வேதங்களின் ஆழ்பொருளை விவரித்துக் கூறும் உபப்ரும்ஹணங்கள் என்றும் சிலர் கூறுவார்கள் என்று இந்த சூர்ணையில் அருளிச் செய்கிறார்.
– அதாவது, இப்படி வேதஸாம்யம் சொல்லுகையன்றிக்கே பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கெல்லாம் ப்ரதிபாதகமாயிருந்துள்ள வேதத்தில், “யத்த தத்ரேச்ய மக்ராஹ்ய மகோத்ர மவர்ண மசக்ஷுச்ச்ரோத்ரம் ததபாணி பாதம், நித்யம் விபூம் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம் ததவ்யயம் யத் பூதயோநிம் பரிபச்யந்தி தீரா:”, “ஸத்யம் ஜ்ஞாந மநந்த ப்ரஹ்ம:”, “நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜநம்”, “நிர்குணம்” இத்யாதிகளால் சொல்லப்படுகிற ஸ்வரூபத்தையும், – “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்”, “பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச”, “ஸத்யகாமஸ் ஸத்யஸங்கல்ப:” இத்யாதிகளால் சொல்லப்படுகிற குணங்களையும், – “ச்ருணு தத் பரமம் ஸூக்ஷ்மம் ஸர்வஜ்ஞம் ஸர்வப்ருத் ததா, ஜ்ஞாநரூப மநாத்யந்த மவிகாரி நிராமயம். அசக்ஷுச்ச்ரோத்ர மஸ்பர்ச மபாணிசரணம் த்ருவம், நாமஜாத்யாதி ரஹித மவர்ண மகுணம் த்வபி, விச்வச்ரவோ விச்வசக்ஷுர் விச்வபாணி பதம் பரம், அஸக்தமசரம் சாந்தம் ஸ்வயம் ஜ்யோதி ரநூபமம், தூரஸ்த்த மந்திகசரம் ஜ்ஞாந கம்யம் நிரஞ்ஜநம், பூதபர்த்ருஸமம் ஜ்யோதிர் ஜ்யோதிஷாம் தமஸ: பரம், அக்ஷரம் ஸர்வ பூதஸ்த்தம் தத் விஷ்ணோ: பரமம் பதம்” இத்யாதிகளாலும், “அப்ராக்ருத குண ஸ்பர்சாத் நிர்க்குணம் பரிகீயதே, ச்ருணு நாரத! ஷாட்குண்யம் கத்த்யமாநம் மயாநக, அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி நித்யம் ஸர்வாவகாஹநம், ஜ்ஞாநம் நாம குணம் ப்ராஹு: ப்ரதமம் குண சிந்தகா:, ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் தச்ச குணச்ச பரிகீயதே, ஜகத் ப்ரக்ருதிபாவோ ய: ஸா சக்தி: பரிகீர்த்திதா. கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாந்த்ர்ய பரிப்ரும்ஹிதம், ஐச்வர்யம் நாம் தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை:, ச்ரம ஹாநிஸ்து யா தஸ்ய ஸததம் குர்வதோ ஜகத், பலம் நாம குணஸ் தஸ்ய கதிதோ குணசிந்தகை:, தஸ்யோபாதாந பாவோபி விசுரவிரஹோ ஹி ய:, வீர்யம் நாம குணஸ் ஸோயம் அச்யுதத்வாபராஹ்வய:, ஸஹகார்ய நபேக்ஷா யா தத் தேஜஸ் ஸமுதாஹ்ருதம்” இத்யாதிகளாலும் விசதமாக்குகிற பஞ்சராத்ரம் போலேயும், – “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி”, “ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜந்ய: க்ருத:, ஊரூ ததஸ்ய யத் வைச்ய:, பத்ப்யாம் சூத்ரோ அஜாயத”, “அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம்”, “பாதோஸ்ய விச்வா பூதாநி” இத்யாதியாலும், “ஸ ஹேவாச மஹிமாந ஏவைஷாம். ஏதே த்ரயஸ் த்ரிம்ச தேவ தேவா இதி, கதமேதே த்ரயஸ் த்ரிம்சதிதி, அஷ்டௌ வஸவ: ஏகாதச ருத்ரா:, த்வாத சாதித்யா: த ஏகத்ரிம்சத். இந்த்ரச்சைவ ப்ரஜாபதிச்ச, த்ரயஸ்த்ரிம்சத்” இத்யாதியாலும், “பௌதிமாஷ்யோ கோபவநாத் கோபவாந: கௌசிகாத் கௌசிக:, கௌண்டிந்யாத் கௌண்டிந்ய:, சாண்டில்யாத் சாண்டில்ய:, கௌசிகாச்ச கௌதமாச்ச கௌதம:, ஆக்நிவைச்யாதாக்நி வைச்ய: சாண்டில்யாத்” இத்யாதியாலும், ஜகஜ் ஜந்மாதிகளையும் ப்ராஹ்மணாதி வர்ணங்களையும் தேவஜாதியில் வைவித்யத்தையும் ருஷி வம்சாதிகளையும் ப்ரதிபாதிக்கிற வாக்யங்களால் சொல்லப்படுகிற விபூதியை, “ஸர்க்கச்ச ப்ரதிஸர்க்கச்ச வம்சோ மந்வந்தராணி ச, வம்சாநுசரிதஞ்சைவ புராண பஞ்ச லக்ஷணம்” என்கிறபடியே ஸர்க்காதிகளையும் வம்சங்களையும் மந்வந்த்ரங்களையும் வம்சாநு சரிதங்களையும் விஸ்தரேண ப்ரதிபாதிக்கிற முகேந விசதமாக்குகிற புராணம் போலவும், – “உத்த்ர்தாஸி வராஹேண”, “இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம்” இத்யாதிகளாலே சொல்லப்படுகிற அவதார சேஷ்டிதங்களை “ராமாயணம் நாராயண கதாம்” என்னும்படி ராமக்ருஷ்ணாவதார சேஷ்டிதங்களை விஸ்தரேண ப்ரதிபாதிக்கையாலும், “அத விஷ்ணுர் மஹாதேஜா அதித்யாம் ஸமஜாயத வாமநம் ரூபமாஸ்த்தாய வைரோசநிமுபாகமத், த்ரீந் க்ரமாந் அத பிக்ஷித்வா ப்ரதிக்ருஹ்ய ச மாதவ:, ஆக்ரம்ய லோகாந் லோகாத்மா ஸர்வலோக ஹிதே ரத:, மஹேந்த்ராய புந: ப்ராதாத் நியம்ய பலிமோஜஸா” இத்யாதிகளாலே ப்ராஸங்கிகமாக அவதாராந்தர சேஷ்டிதங்களையும் ஸ்ரீராமாயணத்திலே சொல்லுகையாலும், மோக்ஷதர்மத்திலே ஸ்ரீஜந்மரஹஸ்யத்திலே “நாரதேநைவ முக்தஸ்து ப்ரத்யுவாச ஜநார்தந:” என்று தொடங்கி, “பூர்வம் மத்ஸ்யோ பவிஷ்யாமி ஸ்த்தாபயிஷ்யாமி மேதிநீம், வேதாம்ச்சைவ உத்தரிஷ்யாமி மஜ்ஜமாநாந் மஹார்ணவே, த்விதீயம் கூர்ம ரூபேண ஹேமகூட ஸமப்ரபம், மந்தரம் தாரயிஷ்யாமி அம்ருதார்த்தே த்விஜோத்தம” இத்யாதியாலே தசாவதார சேஷ்டிதங்களையும் விசதமாக்குகிற இதிஹாஸம் போலவும், – “நீலதோயத மத்த்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா”, “மநோமய: ப்ராண சரீரோ பாரூப” இத்யாதிகளாலே விக்ரஹத்தைச் சொன்னவித்தை, ஆதிமத்யாந்தம் விக்ரஹத்தைப் பலவிடங்களிலும் வர்ணித்துக் கொண்டு பேசுகையாலே “தெரியச் சொன்ன” என்கிறபடியே விசதமாக்கிச் சொன்ன வேதோப ப்ரும்ஹணமென்று இத்தைச் சொல்லுவர்களென்கை. இப்ப்ரபந்த சதுஷ்டயமும், “முழுநீர் முகில் வண்ணன்”, “மைப்படி மேனி”, “பச்சைமேனி – தாமரைக்காடு”, “நற்பூவைப் பூவீன்ற”, “கார்கலந்த மேனி”, “துயரறு சுடரடி”, “புனக்காயா நிறத்த” என்று உபக்ரமமே பிடித்து உபஸம்ஹார பர்யந்தம் விக்ரஹத்தை வர்ணித்துக் கொண்டு செல்லாநிற்குமிறே. “தெரியச் சொன்ன” என்கிறவிது - திருவாய்மொழிச் சந்தையேயாகிலும் - உபப்ரும்ஹணத்வம் ப்ரபந்தாந்தரங்களுக்கும் ஒக்குமென்றே கொள்ள வேணும். வேதத்வம் சொல்லுகிறபோது ஸாதாரணமாகச் சொன்னது இங்குமொக்குமிறே. பஞ்சராத்ர புராணேதி ஹாஸங்களிலும் இப்ப்ரபந்தத்திலும் ஸ்வரூபாதி ஸமஸ்தார்த்தங்களும் சொல்லப்பட்டதேயாகிலும் இவ்வோ வர்த்தங்களிலே இவற்றுக்கு நோக்காகையாலே இப்படி வகையிட்டுச் சொல்லக் குறையில்லை.
இவ்விதம் வேதங்களுடன் ஒத்துள்ள தன்மையைக் கூறுவது மட்டும் அல்லாமல், ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம், ரூபம், குணங்கள், விபூதிகள், செயல்பாடுகள் என்ற இவற்றை உணர்த்துகின்ற வேதத்தில் - முண்டக உபநிஷத் - யத்த தத்ரேச்ய மக்ராஹ்ய மகோத்ர மவர்ண மசக்ஷுச்ச்ரோத்ரம் ததபாணி பாதம், நித்யம் விபூம் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம் ததவ்யயம் யத் பூதயோநிம் பரிபச்யந்தி தீரா: - ஞானேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது, கை முதலான கர்மேந்த்ரியங்களுக்கும் அறிய இயலாதது, கோத்ரம் அற்றது, நான்கு வர்ணங்களைச் சாராதது, கண் போன்ற கர்மேந்த்ரியங்களின் அவசியம் அற்றதால் அவை இல்லாதது, கை முதலான கர்மேந்த்ரியங்களின் அவசியம் அற்றதால் அவை இல்லாதது, எப்போதும் உள்ளது, அனைத்து இடங்களிலும் உள்ளது, அனைத்து பொருள்களின் உள்ளும் புறமும் வ்யாபித்துள்ளது, மிகவும் நுண்ணியது, அக்ஷரம் என்று கூறப்படுவது, இப்படிப்பட்டதான அக்ஷரம் என்று சொல்லப்படும் எந்த ஒன்றை ப்ரஹ்மஞானிகள் அனைத்திற்கும் காரணம் என்று பார்க்கிறார்களோ தைத்திரீய உபநிஷத் - ஸத்யம் ஜ்ஞாந மநந்த ப்ரஹ்ம: - ப்ரஹ்மம் எப்போதும் ஸ்திரமாக உள்ளது, ஞானமயமானது, காலதேச எல்லைகள் அற்றது ச்வேதாஸ்வதர உபநிஷத் - நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜநம் – எந்தவிதமான செயலும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் செயல்கள் செய்யாமல் உள்ளது, பசி முதலானவை அற்றது, எந்தவிதமான தோஷங்களும் அற்றது, தாழ்மையான தன்மைகள் அற்றது, யாராலும் பழிக்கப்படாதது நிர்குணம் – ஸத்வம், ரஜஸ், தமஸ் குணங்கள் அற்றது இப்படிப்பட்ட வேதவாக்கியங்களால் கூறப்படும் ஸ்வரூபத்தைக் குறித்தும், – முண்டக உபநிஷத் - யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் - எந்த ஒரு அக்ஷர ப்ரஹ்மம் அனைத்தும் அறியுமோ, அனைத்து பொருள்கள் குறித்தும் அறியுமோ ச்வேதாஸ்வதர உபநிஷத் - பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச - பரமாத்மாவுடைய பலவிதமான சக்தி, ஞானம், பலம், நியமனம் போன்றவை மிகவும் உயர்ந்தவைகள் மற்றும் அவை இயற்கையாகவே பரமாத்மாவுக்கு அமைக்கப்பெற்றவை என்று கேட்கப்பட்டுகின்றன. சாந்தோக்ய உபநிஷத் - ஸத்யகாமஸ் ஸத்யஸங்கல்ப: - நிறைவேறப்பெறும் விருப்பங்கள் மற்றும் ஸங்கல்பங்கள் உள்ளவன். இப்படிப்பட்ட வேதவாக்கியங்களால் கூறப்படும் குணங்கள் குறித்தும் (இந்த இரண்டையும் - அதாவது ஸ்வரூபம், குணங்கள் குறித்து - மிகவும் விவரமாகக் கூறும் நூல்களை அடுத்து கூறுகிறார். அதாவது இவற்றைப் பாஞ்சராத்ரம் விவரித்துக் கூறுகிறது என்கிறார்). – பாஞ்சராத்ரம் - ச்ருணு தத் பரமம் ஸூக்ஷ்மம் ஸர்வஜ்ஞம் ஸர்வப்ருத் ததா, ஜ்ஞாநரூப மநாத்யந்த மவிகாரி நிராமயம். அசக்ஷுச்ச்ரோத்ர மஸ்பர்ச மபாணிசரணம் த்ருவம், நாமஜாத்யாதி ரஹித மவர்ண மகுணம் த்வபி, விச்வச்ரவோ விச்வசக்ஷுர் விச்வபாணி பதம் பரம், அஸக்தமசரம் சாந்தம் ஸ்வயம் ஜ்யோதி ரநூபமம், தூரஸ்த்த மந்திகசரம் ஜ்ஞாந கம்யம் நிரஞ்ஜநம், பூதபர்த்ருஸமம் ஜ்யோதிர் ஜ்யோதிஷாம் தமஸ: பரம், அக்ஷரம் ஸர்வ பூதஸ்த்தம் தத் விஷ்ணோ: பரமம் பதம் – உயர்ந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் குறித்துக் கேட்பாயாக. மிகவும் ஸூக்ஷ்மமானது, அனைத்தும் அறிந்தது, அனைத்தையும் தாங்குவது, ஞானமயமானது, தொடக்கமும் முடிவும் அற்றது, மாற்றம் அற்றது, உறக்கம் அற்றது, கண் காது போன்றவை அற்றது, ஸ்பர்சம் அற்றது, கை கால்கள் அற்றது, எப்போதும் உள்ளது, நாமம் மற்றும் குலம் ஆகியவற்றால் வரையறுக்கப்படாதது, நான்கு வர்ணங்களுக்கு உட்படாதது, மூன்று குணங்களான ஸத் ரஜஸ் தமஸ் ஆகியவற்றால் பீடிக்கப்படாதது, அனைத்தையும் கண்களாகக் கொண்டது, அனைத்தையும் கைகால்களாகக் கொண்டது, பற்றுதல்கள் இல்லாதது, ஸஞ்சரிக்கவேண்டிய அவசியம் இன்றி உள்ள இடத்திலிருந்தே அனைத்தையும் செய்யவல்லது, சாந்தமானது, ஸ்வயம் ப்ரகாசிப்பது, ஒப்பற்றது, தூரமாகவும் உள்ளது அண்மையிலும் உள்ளது, ஞானத்தால் அடையத்தக்கது, தோஷங்கள் அற்றது, பஞ்சபூதங்களைத் தாங்கி நிற்பது, அனைவரிடமும் ஒரே போன்று உள்ளது, ஜ்யோதிகள் அனைத்திற்கும் ஜ்யோதியாக உள்ளது, ப்ரக்ருதி மண்டலத்துக்கும் அப்பால் உள்ளது, அழிவற்றது, அனைத்திலும் உள்ளது - மஹாவிஷ்ணுவின் உயர்ந்த ஸ்வரூபம் இப்படிப்பட்டது. அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை - அப்ராக்ருத குண ஸ்பர்சாத் நிர்க்குணம் பரிகீயதே, ச்ருணு நாரத! ஷாட்குண்யம் கத்த்யமாநம் மயாநக, அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி நித்யம் ஸர்வாவகாஹநம், ஜ்ஞாநம் நாம குணம் ப்ராஹு: ப்ரதமம் குண சிந்தகா:, ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் தச்ச குணச்ச பரிகீயதே, ஜகத் ப்ரக்ருதிபாவோ ய: ஸா சக்தி: பரிகீர்த்திதா. கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாந்த்ர்ய பரிப்ரும்ஹிதம், ஐச்வர்யம் நாம் தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை:, ச்ரம ஹாநிஸ்து யா தஸ்ய ஸததம் குர்வதோ ஜகத், பலம் நாம குணஸ் தஸ்ய கதிதோ குணசிந்தகை:, தஸ்யோபாதாந பாவோபி விசுரவிரஹோ ஹி ய:, வீர்யம் நாம குணஸ் ஸோயம் அச்யுதத்வாபராஹ்வய:, ஸஹகார்ய நபேக்ஷா யா தத் தேஜஸ் ஸமுதாஹ்ருதம் - ப்ரக்ருதியுடன் ஸம்பந்தம் கொண்டவையான ஸத்வ ரஜ தமஸ் என்ற மூன்று குணங்கள் அற்றதும், பரம்பொருள் என்பதும் ஆகிய அந்த வஸ்துவைக் குறித்து நாரதரே, நான் உரைக்கக் கேட்பீராக. அதன் ஆறு குணங்கள் குறித்துக் கூறுகிறேன். ப்ரஹ்மத்தின் திருக்கல்யாண குணங்களை எப்போதும் த்யானித்தபடி உள்ளவர்கள் - அறிவுள்ளதும், மற்றதன் உதவி இன்றி தானே ப்ரகாசிப்பதும், மற்ற பொருள்களையும் ப்ரகாசிக்கச் செய்வதும் ஆகிய ஞானம் என்ற குணத்தை முதலாவதாக உரைக்கிறார்கள். அது ப்ரஹ்மத்திற்கு ஸ்வரூபமாகவும், குணமாகவும் உள்ளது. உலகிற்கு முதன்மையான காரணமாக எது உள்ளதோ அது சக்தி எனப்படுகிறது. ப்ரஹ்மத்தின் குணங்களுடைய உண்மையை எப்போதும் த்யானித்தபடி உள்ளவர்கள், ப்ரஹ்மத்தின் சுதந்திரமான தன்மையுடன் கூடிய செயலாற்றும் தன்மை எதுவோ அதனை ஐச்வர்யம் என்று கூறுகிறார்கள். எப்போதும் அனைத்தையும் படைத்தபடி உள்ள அவனுக்குச் சிரமம் இல்லாத தன்மை என்பது பலம் எனப்படுகிறது. அச்சுதன் என்று வழங்கப்படும் அந்தப் பரம்பொருள், உலகின் முதற்காரணம் என்றபோதிலும் மாற்றம் அடையாமல் உள்ளது; இந்தத் தன்மை வீர்யம் எனப்படுகிறது. மற்றவர்களின் உதவியை நாடாமல் உள்ள தன்மை தேஜஸ் எனப்படுகிறது. இப்படிபட்ட வரிகள் மூலம் விவரித்துக் கூறுகின்ற பாஞ்சராத்ரம் போன்றது (அடுத்து ஸ்வரூபம், குணங்கள் போன்றவற்றை விவரிக்கும் புராணங்கள் குறித்துக் கூறுகிறார்). – தைத்திரீய உபநிஷத் – யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி - எந்த ஒன்றிடமிருந்து இந்த உயிர்கள் அனைத்தும் தோன்றினவோ, எதனால் இவை அனைத்தும் வாழ்க்கின்றனவோ, எதில் சென்று அனைத்தும் இறுதியில் லயிக்கின்றனவோ அந்த ப்ரஹ்மத்தை நீ அறிய வேண்டும். புருஷஸூக்தம் - ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜந்ய: க்ருத:, ஊரூ ததஸ்ய யத் வைச்ய:, பத்ப்யாம் சூத்ரோ அஜாயத – அந்தப் பரமபுருஷனுடைய திருமுகத்திலிருந்து அந்தணனும், தோளிலிருந்து க்ஷத்ரியனும், தொடையிலிருந்து வைசியனும், திருவடிகளிலிருந்து சூத்ரனும் உண்டானார்கள் அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம் - அந்தப் பரமபுருஷன் அனைத்தின் உள்ளிலும் ப்ரவேசித்து அனைத்தையும் நியமிக்கிறான். புருஷஸூக்தம் - பாதோஸ்ய விச்வா பூதாநி - பரமபுருஷனுக்கு அனைத்து உயிர்களும் கால் பாகம் ஆகும் (ஒரு பாதம் என்பர் – அதாவது நான்கில் ஒரு பங்கு). ஸ ஹேவாச மஹிமாந ஏவைஷாம். ஏதே த்ரயஸ் த்ரிம்ச தேவ தேவா இதி, கதமேதே த்ரயஸ் த்ரிம்சதிதி, அஷ்டௌ வஸவ: ஏகாதச ருத்ரா:, த்வாத சாதித்யா: த ஏகத்ரிம்சத். இந்த்ரச்சைவ ப்ரஜாபதிச்ச, த்ரயஸ்த்ரிம்சத் - இந்த 33 தேவர்களுக்கு, முதலில் கூறப்பட்ட 3306 தேவர்கள், குணமாக உள்ளவர்கள் மட்டுமே ஆவர். ஆக தேவர்கள் 33 பேர் மட்டுமே ஆவர். 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள் என்று இவர்கள் 31 பேர்; இவர்களுடன் இந்த்ரனையும் நான்முகனையும் சேர்த்தால் 33 தேவர்கள் ஆவர். பௌதிமாஷ்யோ கோபவநாத் கோபவாந: கௌசிகாத் கௌசிக:, கௌண்டிந்யாத் கௌண்டிந்ய:, சாண்டில்யாத் சாண்டில்ய:, கௌசிகாச்ச கௌதமாச்ச கௌதம:, ஆக்நிவைச்யாதாக்நி வைச்ய: சாண்டில்யாத் - பௌதிமாநுஷ்யர் கோபவநரிடம் பயின்றார்; கௌண்டின்யர் சாண்டில்யரிடம் பயின்றார்; சாண்டில்யர், கௌசிகர் மற்றும் கௌதமர் ஆகியவர்களிடம் பயின்றார்; கௌதமர் ஆக்நிவைச்யரிடம் பயின்றார்; ஆக்நிவைச்யர் சாண்டில்யரிடம் பயின்றார். இது போன்ற பல வரிகள் மூலம் உலகின் படைப்பு போன்றவற்றையும், அந்தணர் முதலான வர்ணங்களையும், தேவகுலங்களின் பிரிவுகளையும், ரிஷிகளின் பரம்பரைகளையும் குறித்துள்ள வாக்கியங்கள் மூலம் கூறப்படும் உலகத்தைக் குறித்து, அமரகோசத்தில் - ஸர்க்கச்ச ப்ரதிஸர்க்கச்ச வம்சோ மந்வந்தராணி ச, வம்சாநுசரிதஞ்சைவ புராண பஞ்ச லக்ஷணம் - படைத்தல், அழித்தல், பரம்பரை, மந்வந்த்ரங்கள், பரம்பரை குறித்துள்ள சரிதங்கள் ஆகிய ஐந்தையும் கூறும் தன்மை கொண்டவை புராணங்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸ்ருஷ்டி முதலாவற்றையும், பரம்பரைகளையும், மந்வந்த்ரங்களையும், பரம்பரை குறித்த சரிதங்களையும் விரிவாக உரைப்பதன் மூலம் தெளிவாக்குகிற புராணங்கள் போன்றும், (அடுத்து இதிஹாஸங்கள் குறித்து அருளிச்செய்கிறார்) தைத்திரீய உபநிஷத் - உத்த்ர்தாஸி வராஹேண - பூமியே! வராஹ அவதாரம் எடுத்த ஸர்வேச்வரன் செய்த செயலால் நீ உயரே எடுக்கப்பட்டாய் - என்றும், ஸ்ரீவிஷ்ணுஸூக்தம் - இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் - ஸர்வேச்வரன் இந்த உலகங்களை அளந்தான், மூன்றுவிதமாக அடியை வைத்தான் - என்று காணப்படும் வரிகள் மூலமாக உணர்த்தப்பட்ட அவதாரத்தின் செயல்கள் குறித்து, ராமாயணம் நாராயண கதாம் – இராமாயணம் என்பது நாராயணனின் சரிதம் - என்பதற்கு ஏற்ப, இராமனாகவும் க்ருஷ்ணனாகவும் அவதரித்தபோது செய்த செயல்கள் விரிவாக உரைக்கப்படுகின்றன. எங்கு உரைக்கப்படுகின்றன என்பதற்கு அடுத்து விடை அருளிச் செய்கிறார். இராமாயணம் பாலகாண்டம் (29-19) - அத விஷ்ணுர் மஹாதேஜா அதித்யாம் ஸமஜாயத வாமநம் ரூபமாஸ்த்தாய வைரோசநிமுபாகமத், த்ரீந் க்ரமாந் அத பிக்ஷித்வா ப்ரதிக்ருஹ்ய ச மாதவ:, ஆக்ரம்ய லோகாந் லோகாத்மா ஸர்வலோக ஹிதே ரத:, மஹேந்த்ராய புந: ப்ராதாத் நியம்ய பலிமோஜஸா - பின்னர் மிகுந்த சக்தி பொருந்திய மஹாவிஷ்ணு, அதிதியிடம் அவதரித்தான். வாமனனாக நின்று விரோசனனின் புத்திரனாகிய மஹாபலியிடம் சென்றான். அனைத்து உலகிற்கும் ஆத்மாவும், அனைத்து உயிர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டவனும் ஆகிய ஸர்வேச்வரன், எந்தவிதமான கர்வமும் இன்றி மூன்று அடிகளை யாசகமாகப் பெற்றான். பின்னர் அனைத்து உலகங்களையும் தன்னுடையதாக ஆக்கிக் கொண்டு, மஹாபலியை அடக்கி, இந்த்ரனிடம் அவன் இழந்த பதவியை மீண்டும் அளித்தான் - என்று மற்ற அவதாரங்கள் குறித்தும், அவற்றில் செய்யப்பட்ட செயல்கள் குறித்தும் இராமாயணம் ஆங்காங்கு உரைக்கிறது. மஹாபாரதம் மோக்ஷ தர்மத்தில் அவதார ரஹஸ்யம் கூறும் இடத்தில் (மஹாபாரதம் சாந்தி பர்வம் 348 - 3,4) - நாரதேநைவ முக்தஸ்து ப்ரத்யுவாச ஜநார்தந: - நாரதரால் இவ்விதம் கூறப்பட்ட பகவான் பதில் உரைக்கத் தொடங்கினான் - என்றுள்ள வரியில் தொடங்கி, பூர்வம் மத்ஸ்யோ பவிஷ்யாமி ஸ்த்தாபயிஷ்யாமி மேதிநீம், வேதாம்ச்சைவ உத்தரிஷ்யாமி மஜ்ஜமாநாந் மஹார்ணவே, த்விதீயம் கூர்ம ரூபேண ஹேமகூட ஸமப்ரபம், மந்தரம் தாரயிஷ்யாமி அம்ருதார்த்தே த்விஜோத்தம - முதலில் மீனாகப் போகிறேன், பூமியை நிலை நிறுத்துவேன், ஆழமான கடலில் மறைந்து கிடக்கும் வேதங்களை மேலே எடுப்பேன்; உத்தமமான நாரதரே! கூர்மாவதாரத்தில் எடுத்து ஹேமகூடம் என்ற மலைக்கு ஒப்பான மந்தர மலையை, அமிர்தத்திற்காக நான் தாங்கி நிற்கப் போகிறேன்; இது இரண்டாவது அவதாரம் – என்பது போன்ற வரிகளில் தசாவதாரத்தின்போது செய்த செயல்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட விஷயங்கள் கூறும் இதிஹாஸம் போன்றும் (அதாவது வேத வாக்கியங்களால் கூறப்படும் ஸ்வரூபமானது பாஞ்சராத்ரம், புராணம், இதிஹாஸம் போன்றவற்றில் விரிவாகக் கூறப்படுகிறது. இவற்றைப் போன்றே ….), – நாராயண அநுவாகம் - நீலதோயத மத்த்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா - கருத்த மேகத்தின் நடுவே காணப்படும் மின்னற்கொடி போன்ற ப்ரகாசம் உள்ள – என்றும், முண்டக உபநிஷத் (2-2-7) - மநோமய: ப்ராண சரீரோ பாரூப - தூய்மையான மனதால் அறியத்தக்கவன், ப்ராணனைச் சரீரமாகக் கொண்டவன் - என்றும் கூறப்படுவதான ஸர்வேச்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹம் குறித்து, திருவாய்மொழியிலும் தொடக்கம், நடு, இறுதி ஆகிய அனைத்து இடங்களிலும் விரிவாக அருளிச்செய்யப்படுகிறது. ஆகவே, திருவாய்மொழி (6-9-11) – தெரியச் சொன்ன - என்பதற்கு ஏற்ப திவ்யமங்கள விக்ரஹத்தைக் குறித்து தெளிவாக உரைக்கும் நம்மாழ்வாருடைய ப்ரபந்தங்களை, வேத உபப்ரும்ஹணம் என்றே கூறுவார்கள். – திருவிருத்தம் (2) - முழுநீர் முகில் வண்ணன் – என்று தொடங்கி, இறுதியில் (94) – மைப்படி மேனி - என்றும்; திருவாசிரியம் (1) - பச்சைமேனி - என்று தொடங்கி, இறுதியில் (5) - தாமரைக்காடு - என்றும்; பெரியதிருவந்தாதி (1) – நற்பூவைப் பூவீன்ற - என்று தொடங்கி, இறுதியில் (86) - கார்கலந்த மேனி – என்றும்; திருவாய்மொழி (1-1-1) - துயரறு சுடரடி - என்று தொடங்கி, இறுதியில் (10-10-6) - புனக்காயா நிறத்த – என்றும் நான்கு ப்ரபந்தங்களிலும் தொடக்கம் முதலாக இறுதிவரை ஸர்வேச்வரனுடைய திருமேனியைக் குறித்து வர்ணித்தபடி உள்ளதைக் காணலாம். திருவாய்மொழி (6-9-11) - தெரியச் சொன்ன - என்ற வாக்கியம் திருவாய்மொழியில் மட்டுமே உள்ளது, ஆகவே மற்ற ப்ரபந்தங்களுக்கு இது பொருந்துமோ என்ற சந்தேகம் எழலாம். இது திருவாய்மொழியில் மட்டும் காணப்பட்டாலும், உபப்ரும்ஹணமாக உள்ள தன்மை என்பது, திருவாய்மொழி போன்றே மற்ற மூன்று ப்ரபந்தங்களுக்கும் உண்டு என்றே கொள்ளவேண்டும். சூர்ணை 39 தொடக்கமாக, வேதங்களின் தன்மையானது திருவாய்மொழி போன்றே மற்ற மூன்று ப்ரபந்தங்களுக்கும் உண்டு என்று கூறியது போன்றே இங்கு கொள்ளவேண்டும் என்று கருத்து. பாஞ்சராத்ரம், புராணம், இதிஹாஸம் மற்றும் நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்தங்கள் ஆகிய அனைத்திலும் ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம், குணம், விபூதி போன்ற பலவும் விரிவாக உரைக்கப்பட்டுள்ளன. புராணங்களுக்கு உலகங்கள் குறித்துக் கூறுதல், இதிஹாஸங்களுக்கு அவதாரங்கள் பற்றிக் கூறுதல் என்பது போன்று, நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களுக்கு ஸர்வேச்வரனுடைய திருமேனி குறித்துக் கூறுதல் என்று வகைப்படுத்துவதில் எந்தக் குறையும் இல்லை.