Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 53)
முதல் ப்ரகரணம்
புரவியேழுருகாலுடைய தேரிலே திருச்சக்கர மொத்துக் கால சக்கரச்செங்கோல் நடாவி ஜ்யோதிச்சக்ர வொளிசுருக்கி அக்நீஷோமீயதே ஜோம்ருதத்துக் கூற்றும் மந்தேஹர்க்குச் செந்தீயும் முக்தி மார்க்கத்தலைவாசலும் கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்கத் தோள்வளையும் குழையும் திருச்செய்ய முடியு மாரமும் படையும் திகழும் பொன்மேனியும் செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய் அணிநிறமூர்த்தி யீதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதாத்யேய தேஜஸ்ஸின் ஸாமர ஸோத்காந நாம முள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிரமுகத்தினாலருளின தீர்த்தம்போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிகிறாரென்று வேதகுரூபதேசம்.
– “உத்கீதப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி” என்று கீழ்ச்சொன்னதின் கருத்தை ஆப்தோபதேசமுகேந அறிவிக்கிறார் மேல் – (புரவியேழித்யாதி சூர்ணையாலே).
“உத்கீதப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி” என்று கடந்த சூர்ணையில் கூறப்பட்ட கருத்தினை நல்லதை மட்டுமே உபதேசிப்பவர்களுடைய உபதேசம் மூலமாக இந்தச் சூர்ணையில் அறிவிக்கிறார் (இந்தச் சூர்ணை சாந்தோக்ய உபநிஷத்தில் - ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: - என்று தொடங்கி, தஸ்ய உத் இதி நாம – என்பது முடிய உள்ளவற்றின் சுருக்கமே ஆகும் என்பர்).
(புரவியேழொருகாலுடைய தேரிலே) அதாவது “காரார்புரவியேழ் பூண்ட” என்றும், “ஒருகாலுடைய தேர்” என்றும் சொல்லுகிறபடியே காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி: என்கிற ஏழு ச்சந்தஸ்ஸுக்களும் ஏழு குதிரைகளாய்க் கொண்டு வஹிக்கையாலே ஸப்தாச்வ யுக்தமாய், காலசக்ரமயமான ஏக சக்ரத்தையு முடையதான ரதத்திலே யென்கை. “ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்” என்றும், “ஹயாச்ச ஸப்த சந்த்ரம்ஸி தேஷாம் நாமாநி மே ச்ருணு, காயத்ரீ ச ப்ருஹத் யுஷ்ணிக் ஜகதீ த்ரிஷ்டுபேவ ச, அநுஷ்டுப் பங்க்திரித்யுக்தா: ச்சந்தாம்ஸி ஹரயோ ரவே” என்று சொல்லக் கடவதிறே. “ஏகோ அச்வோ வஹதி ஸப்தநாமா” என்றதுக்கு ஹ்ருதயம் ஏததநுகுணமாக வ்யாக்க்யாதமான விடங்களிலே கண்டுகொள்வது. “த்ரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணேமிந்யக்ஷயாத்மகே, ஸம்வத்ஸரமயே க்ருத்ஸ்நம் காலசக்ர ப்ரதிஷ்டிதம்” என்கிறபடியே சாதுர்மாஸ்ய த்ரயாத்மகமான நாபியை யுடைத்தாய் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இதாவத்ஸரம், அநுவத்ஸரம், இத்வத்ஸரம் என்று சொல்லப்பட்ட அஞ்சு வத்ஸரத்தையும் அரங்களாகவுடைத்தாய், வஸந்த க்ரீஷ்ம வர்ஷா சரத் தேமந்த சிசிரங்களாகிற ஆறு ருதுக்களையும் நேமியாக வுடைத்தாய், ப்ரவாஹ பரிவ்ருத்தியாலே அக்ஷயரூபமாயிருக்கிற காலசக்ரத்திலே ஸர்வம் ப்ரதிஷ்டித மென்கையாலே இந்த ஏக சக்ரம் காலசக்ரபரமாயிறே யிருப்பது. ஆக இப்படி யிருந்துள்ள ஸப்தாச்வங்களையும் ஏக சக்ரத்தையு முடைத்தாகையாலே இதரவ்யாவ்ருத்த வைபவமான ரதத்திலே யென்றபடி. இனிமேல் மண்டலத்தை வர்ணிக்கிறது, (திருச்சக்கரமொத்து) அதாவது “அம்மேருவில் செஞ்சுடரோன் திருமல் திருக்கைத் திருச்சக்கரமொக்கும்” என்னும்படி வ்ருத்தாகாரதையாலும் தேஜோவிசேஷத்தாலும் திருவாழியோ டொத்திருக்கை. (காலசக்கரச் செங்கோல் நடாவி) அதாவது “திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனுமிருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” என்கிறபடியே உபயவிபூதியிலும் ஈச்வரன் தன் ஆஜ்ஞையை நிர்வஹிக்கைக்கு உபகரணமான திருவாழியைப்போலே “கால சக்கரத்தாய்” என்னும்படி காலசக்ர நிர்வாஹகனானவனுடைய காலசக்ர விஷயமான ஆஜ்ஞையை “தனிவளர் செங்கொல் நடாவு” என்கிறபடியே நடத்துகை. (ஜ்யோதிச்சக்ர வொளிசுருக்கு) அதாவது “சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்” என்னும்படி ஸர்வதோதிக்கமாக வ்யாப்தமான ஸ்வதேஜ: ப்ரகர்ஷத்தாலே “துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி” இத்யாதிப்படியே நக்ஷத்ராதியான ஜ்யோதிர்கணங்களின் தேஜஸ்ஸை ஸங்கோசிப்பிக்கை. (அக்நீஷோமீய தேஜோம் ருதத்துக் கூற்றும்) அதாவது “அக்நிம் வாவாதித்யஸ் ஸாயம் ப்ரவிசதி, தஸ்மாதக்நிர் தூராந் நக்தம் தத்ருசே, உபே ஹி தேஜஸீ ஸம்பத்யேதே” என்றும், “ப்ரபா விவஸ்வதோ ராத்ரௌ அஸ்தம் கச்சதி பாஸ்கரே, விசத்யக்நிமதோ ராத்ரௌ வஹ்நிர் தூராத் ப்ரகாசதே” என்றும் சொல்லுகிறபடியே அஸ்தமய ஸமயத்திலே தன்னுடைய ப்ரபையை அக்நியிலே ப்ரவேசிப்பித்து ராத்ரியில் அக்நிக்கு தேஜோவ்ருத்தியை யுண்டாக்குகையாலே அக்நியினுடைய தேஜஸ்ஸுக்கு ஊற்றென்கிறது. “க்ஷீணம் பீதம் ஸுரைஸ் ஸோமம் ஆப்யாயயதி தீப்திமாந், மைத்ரேயைககலம் ஸந்தம் ரச்மிநைகேந பாஸ்கர: க்ரமேண யேந பீதோஸௌ தேவைஸ் தேந நிசாகரம், ஆப்யாயத்யநுதிதம் பாஸ்கரோ வாரிதஸ்கர:” என்கிறபடியே அபர பக்ஷத்தில் ப்ரதமை தொடங்கி சதுர்தசி யளவும் நித்யம் ஒரு கலையாக அம்ருதமயமான பதினாலு கலைகளையும் தேவர்கள் புஜித்துப் பதினஞ்சாவது கலையை பஞ்சதசியினன்று அபராஹ்ணத்திலே பித்ருக்கள் புஜிக்க, இப்படி க்ஷீணனான சந்த்ரனுக்கு பூர்வபக்ஷ ப்ரதமை தொடங்கி நித்யம் ஒரு கலையாக பஞ்சதசியளவும் பதினஞ்சு கலைகளையும் தன்னுடைய ரச்மிகளாலே வர்த்திப்பிக்கையாலே ஸோமனுடைய அம்ருதத்துக்கு ஊற்றென்கிறது. ஆக இப்படி அக்நியினுடைய தேஜஸ்ஸுக்கும் ஸோமனுடைய அம்ருதத்துக்கும் உத்பத்தி ஸ்தானமாயிருக்கு மென்கை. (மந்தேஹர்க்குச் செந்தீயும்) அதாவது மந்தேஹரென்பார் சில ராக்ஷஸர் ஸந்த்யா ஸமயத்திலே ஆதித்ய ரதத்தைப் பற்றிக்கொண்டு போகவொட்டாதே ஆதித்யனோடே மஹாயுத்தம் பண்ணி அவனைக் கொல்லத் தேடுவர்களாய், அவ்வளவிலே ப்ராஹ்மணர் காயத்ர்யபிமந்த்ரிதைகளான அப்புக்களை அர்க்க்ய ரூபேண ஊர்த்த்வமாக ப்ரக்ஷேபிக்க, அந்த காயத்ரீபூதார்க்கய சக்தியாலே ஆதித்யமண்டலத்திலே ஜ்வலித்துக்கொண்டு தோற்றின சிவந்தவக்நியிலே விழுந்து முடிந்து போவர்களென்று, “மீண்டுவற்று ளெரிகொள் செந்தீவீழசுரரைப்போல” என்றாழ்வாரருளிச் செய்கையாலே மந்தேஹர்க்கு ஜ்வலிக்கிற அக்நியாயிருக்கு மென்கிறது. ராக்ஷஸரை அஸுரரென்று ஆழ்வாரருளிச் செய்தது – “தானவனாகம் தரணியில் புரள” என்றும், “தானவன் வாளரக்கன்” என்றும் சொன்னவைபோலே ஆஸுரப்ரக்ருதிகளான ஆகாரத்தாலே. “ததுஹ வா ஏதே ப்ரஹ்மவாதிந: பூர்வாபிமுகா: ஸந்த்யாயாம் காயத்ரியாபிமந்த்ரிதா ஆப ஊர்த்த்வம் விக்ஷிபந்தி” என்றும், “ஸந்த்யாகாலே து ஸம்ப்ரரப்தே ரௌத்ரே பரமதாருணே மந்தேஹா ராக்ஷஸா கோராஸ் ஸூர்ய மிச்சந்தி காதிதும், ப்ரஜாபதிக்ருதச் சாபஸ் தேஷாம் மைத்ரேய ரக்ஷஸாம், அக்ஷயத்வம் சரீராணாம் மரணம் ச திநே திநே, ததஸ் ஸூர்யஸ்ய தேஷாம் வை யுத்தமாஸீத் ஸுதாருணம், ததோ த்விஜோத்தமாஸ்தோயம் ப்ரக்ஷிபந்தி மஹாமுநே ஓங்கார ப்ரஹ்ம ஸம்யுக்தம் காயத்ர்யா சாபி மந்த்ரிதம், தேந தஸ்யந்தி தி தே பாபா வஜ்ரபூதேந வாரிணா” என்றும் ப்ராஹ்மணர் இங்கு ப்ரக்ஷேபிக்கிற அர்க்க்யஜலந்தானே வஜ்ரீபூதமாய்க்கொண்டு அந்த ராக்ஷஸரை நிரஸிக்குமென்று ச்ருதியிலும் புராணத்திலும் சொல்லுகையாலும், அந்த அர்க்க்ய ஜலம் ஆதித்ய மண்டலத்தையும் ஜ்வலிப்பித்து அணுகச் செல்லில் நசிக்கும்படி யாக்குமென்றும் சொல்லலாமிறே. (முக்திமார்க்கத் தலைவாசலும்) அதாவது, அர்ச்சிராதிகதியாகிற முக்தி மார்க்கத்தாலே போமளவில், “அர்ச்சிஷமேவாபி ஸம்பவந்தி” இத்யாதிப்படியே அர்ச்சி: ப்ரப்ருதிகளைச் சென்று கிட்டிப் போகிற மாத்ரமன்றிக்கே, “பித்வா ஸூர்யஸ்ய மண்டலம்” என்றும், “தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு”, “வெங்கதிர்ப்பரிதி வட்டத்தூடுபோய்” என்றும் சொல்லுகிறபடியே இம்மண்டலத்தூடே போகையாலும், அண்டகடாஹத்தை பேதித்துப் புறப்படுமதுக்கு முற்பட்டதாகையாலும் இத்தை இம்மார்க்கத்துக்குத் தலைவாசலென்கிறது. (கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும்) – அதாவது “கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு”, “சக்ஷுர் தேவநாமுத மர்த்யாநாம்” என்கிறபடியே ஸர்வர்க்டிம் த்ருஷ்டி பூதனான ஸர்வேச்வரன் கண்ணிலே “சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத” என்கிறபடியே ஜனிப்பதும் செய்து, “ஜகதேக சக்ஷுஷே” என்கிறபடியே ஜகத்துக்கு த்ருஷ்டிபூதமுமாயிருக்கு மென்கை. (த்ரயீமயமுமான மண்டலத்திலே) அதாவது, “த்ரயீமயாய” என்கிறபடியே வேதமயமாயிருக்கிற ஆதித்ய மண்டத்திலே யென்கை. இத்தால், “த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண! ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட:, கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரி ஹிரண்மயவபு: த்ருதசங்க சக்ர:” என்கிறவிதில் அவனெழுந்தருளி யிருக்கிற ஸவித்ரு மண்டலத்தை வர்ணித்தாராயிற்று. இனி அதிலெழுந்தருளி யிருக்கிறபடியை வர்ணிக்கிறார். (தண்டாமரை சுமக்க) அதாவது, “தண்டாமரை சுமக்கும் பாதப்பெருமான்” என்கிறபடியே ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்டனா யிருக்கை. (தோள் வளையும் குழியும்) இத்தால் “கேயூரவாந் மகர குண்டலவாந்” என்றத்தைச் சொல்லுகிறது. (திருச் செய்யமுடியு மாரமும் படையும்) இத்தால் “கிரீடீ ஹாரி த்ருத சங்கசக்ர:” என்றதைச் சொல்லுகிறது. (திகழும் பொன் மேனியும்) அதாவது, “ஆரமும் படையும் திகழ” என்கிறபடியே கீழ்ச்சொன்ன ஆயுதாபரணங்க ளெல்லாம் விளங்கும்படி யிருப்பதாய், “பொன்மேனி கண்டேன்” என்னும்படி ஹிரண்மயமான திருமேனியும், “ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷோ த்ருச்யதே ஹிரண்யச்மச்ருர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:” என்றும், “ஹிரண்மயவபு:” என்றும் சொல்லக்கடவதிறே. (செஞ்சுடர்த் தாமரைக்கண்ணுமாய்) அதாவது, “அஞ்சுடர் வெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால்” என்ற வநந்தரம், “செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வலும் வாரான்” என்றது - அந்த ஆதித்யமண்டலத்தில் எழுந்தருளி யிருக்கிறவனையிறே. ச்ருதியும், “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷிணீ” என்றது அவ்விருப்பிலேயிறே. ஆகையால் ஆதித்ய கிரணங்களாலே விகஸிதமானபோதைச் சிவந்த வொளியை யுடைய தாமரை போன்ற திருக்கண்களுமா யென்கை. (அணிநிற மூர்த்தி யீதென்னும்படி இரண்டையும் தன்னிற மாக்குகிற செய்யாளான வித்யையோடே) அதாவது, “திருக்கண்டேன்” என்று முதலிலே தன்னைக் கண்ட வநந்தரம், “ருக்மாபம்” என்னும்படி யிருக்கிற அவன் திருமேனியைக் கண்டு, “பொன்மேனி கண்டேன்” என்றிருக்கச் செய்தேயும் தன் திருமேனி நிறத்தில் வ்யாப்தியாலே இளவெய்யில் கலந்தாப்போலே விளங்கி தர்சநீயமா யிருக்கிற அவன் திருமேனி நிறத்தைக் கண்டு, “திகழுமருக்கனணி நிறமும் கண்டேன்” என்னும்படியாகவும், “செய்யதோர் நாயிற்றை காட்டிச் சிரீதரன் மூர்த்தி யீதென்னும்” என்று அந்த மண்டலவாஸிநியான தன் விக்ரஹ தேஹோ வ்யாப்தியாலே சிவந்த வொளியாலே அத்விதீயமா யிருக்கிறபடியைக் கண்டு ஸ்ரீதரனுடைய வடிவு இதென்று ப்ரமித்துச் சொல்லும்படியாகவும் பகவத் விக்ரஹமும் ஆதித்யமண்டலமுமாகிற இரண்டையும் தன்னிறமாம்படி பண்ணுகிற சிவந்த நிறத்தை யுடைய ளாகையாலே, “ஹிரண்யவர்ணாம்” இத்யாதிப்படியே, “கமல மலர்மேல் செய்யாள்” என்று நிரூபகமாம்படி யிருப்பாளாய் “வித்யா ஸஹாய மாதித்ய ஸம்ஸ்தம் வித்யா ப்ரஸாதகம்” என்றும், “வித்யா ஸஹாயவந்தம் மாம் ஆதித்யஸ்தம் ஸநாதநம்” என்றும் சொல்லுகிறபடியே வித்யா சப்த வாச்யையான பிராட்டியோடே கூட. (அருக்கன் மேவின) – “வானிடை யருக்கன் மேவி நிற்பாற்கு” என்கிறபடியே ஸவித்ருமண்டலமத்ய வர்த்தியான “ய ஏஷோந்த ராதித்யே” என்றத்தைச் சொல்லுகிறது. (ஸதாத்யேய தேஜஸ்ஸின்) அதாவது, “த்யேயஸ் ஸதா” என்கிறபடியே ஸர்வகாலமும் த்யாநம் பண்ணுவார்க்கு விஷயமாய், “ஹிரண்மயச் சகுநிர் ப்ரஹ்ம நாம யேந ஸூர்யஸ் தபதி தேஜஸேத்த:” என்றும், “தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்க:” என்றும், “தேஜ: பரம் தத் ஸவிதுர் வரேண்யம் தாம்நா பரேணா ப்ரணாகாத் ஸுவர்ணம்” என்றும் சொல்லுகிறபடியே தேஜோமயமாயிருக்கிற வஸ்துவினுடைய. (ஸாமரஸோத்காந நாம முள்ளுறையான ஆத்யந்தங்களாலே) அதாவது, “ஸாம்ந உத்கீதோ ரஸ” என்கையாலே ச்சந்தோக ஸாமத்துக்கு ரஸமாயிருந்துள்ள உத்காந முண்டு - உத்கீதம், அதில் “உத்” என்று சொல்லப்பட்ட “தஸ்ய உதிதி நாம” என்கிற திருநாமம் இதுக்கு உள்ளுறையானமை தோற்றும்படியான ஆத்யந்தங்களை உடைத்தா யிருக்கையாலே யென்கை, “உயர்வு” என்று எடுத்து “உயர்ந்தே” என்று தலைக்கட்டுகையால் உகாரம் ஆதியும் தகாரம் அந்தமுமாயிறே யிருக்கிறது. (ஆத்யந்தங்களாலே) என்றது மேல் சொல்லுகிறதுக்கு ஹேது இதென்று தோற்றுகைக்காக. (ஓராயிரமாமவற்றிலே ஒன்றை) அதாவது, “ஓராயிரமா யுலகே ழளிக்கும் பேராயிரம்” என்கிறபடியே ஒரு திருநாமமே ஆயிரமுகமாக நின்று ஜகத்ரக்ஷணம் பண்ண வல்ல திருநாமங்களிலே ஒரு திருநாமத்தை. (ஆயிரமுகத்தினா லருளின வித்யாதி) அதாவது “ஆயிரமுகத்தினா லருளி மந்தரத் திழிந்த கங்கை” என்று கங்கைதானும் ஒன்றாயிருக்க, லோகபாவநார்த்தமாக ஸஹஸ்ரமுகமாக ப்ரவஹித்தாப்போலே, “தீர்த்தங்க ளாயிரம்” என்கிறபடியே லோகபாவநமான ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறா ரென்று வேதாசார்ய பட்டர் உபதேசித்தருளும்படி யென்கை. விஸ்தரிக்கிறா ரென்று கர்த்ருத்வத்தை அபௌருஷேயத்வ விரோதமறக் கீழ்ச்சொன்னபடியே கொள்வது. – ஆக, “எவ்வுலகத் தெவ்வெவையும்” என்று தொடங்கி, இவ்வாழ்வார் ப்ரபந்த சதுஷ்டயத்துக்கும் வேதரூபத்வமும் அங்கோபாங்க ஸாஹித்யமும், சாஸ்த்ரத்வாதி வேதலக்ஷண ஸாம்யமும், இதில் இவர்க்குத் தோற்றுகிற கர்த்ருத்வத்தால் இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹாநியில்லாமையும், இவற்றில் இன்ன ப்ரபந்தம் இன்ன வேத ஸ்த்தாநே யென்னுமதுவும்; இதில் ஸாமவேத ஸ்த்தாநீயமான திருவாய்மொழி – ஸாமவேத ச்ரேஷ்ட்டமான ச்சந்தோக ஸாமோபநிஷத் ஸமமென்னு மதுவும் சொல்லிற்றாய்த்து.
(புரவியேழொருகாலுடைய தேரிலே) - சிறிய திருமடல் – காரார்புரவியேழ் பூண்ட - என்றும், பெரியதிருமொழி (5-7-8) - ஒருகாலுடைய தேர் - என்றும் கூறுவதற்கு ஏற்ப காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ருஷ்டுப், அநுஷ்டுப் மற்றும் பங்க்தி: என்னும் ஏழு சந்தஸ்ஸுகளையும் ஏழு குதிரைகளாக உடையதாகவும், காலசக்ரம் என்பதான ஒரு சக்கரத்தை உடையதாகவும் உள்ள ரதத்தில் என்று பொருள். ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம் – ஒரு சக்ரத்தைக் கொண்ட ரதத்தை ஏழு குதிரையில் தாங்குகின்றன - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-8-4) - ஹயாச்ச ஸப்த சந்த்ரம்ஸி தேஷாம் நாமாநி மே ச்ருணு, காயத்ரீ ச ப்ருஹத் யுஷ்ணிக் ஜகதீ த்ரிஷ்டுபேவ ச, அநுஷ்டுப் பங்க்திரித்யுக்தா: ச்சந்தாம்ஸி ஹரயோ ரவே - குதிரைகளாக உள்ளவை ஏழு ஸந்தஸ்ஸுகள்; அவற்றின் பெயர்களை நான் உரைக்கக் கேட்பாயாக; காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ருஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி: என்றுள்ள ஏழும் சூரியனுக்குக் குதிரைகள் – என்றும் கூறியது காண்க. ஏகோ அச்வோ வஹதி ஸப்தநாமா – ஏழு பெயர்கள் கொண்ட ஒரு குதிரை சூரியனின் தேரைத் தாங்குகிறது – என்ற வரிக்கான விளக்கத்தை அந்த இடத்தில் காண்க. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-8-3) - த்ரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணேமிந்யக்ஷயாத்மகே, ஸம்வத்ஸரமயே க்ருத்ஸ்நம் காலசக்ர ப்ரதிஷ்டிதம் - மூன்று நாபிகள் (சக்கரத்தின் நடுவில் உள்ள குடம் போன்ற அமைப்பு நாபி ஆகும்), ஐந்து அரங்கள் (அரக்கால்கள்), ஆறு நேமிகள் (வட்டை) கொண்டதாக உள்ள கால சக்கரம் - என்று கூறுவதற்கு ஏற்ப நான்கு நான்கு மாதங்களாகப் பிரிக்கப்பட்ட மூன்று பாகங்கள் கொண்ட நாபிகள்; ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இதாவத்ஸரம், அநுவத்ஸரம், இத்வத்ஸரம் என்றுள்ள ஐந்து ஆண்டுகள் அரக்கால்கள்; இளவேனில், முதுவேனில், மழைக்காலம், கூதிர்காலம், முன்பனி, பின்பனி என்றுள்ள ஆறு ருதுக்கள் நேமிகள் என்றுள்ளதும்; எப்போதும் பெருகியபடி உள்ள வெள்ளம் போன்ற அழிவற்றதானதும் ஆகிய காலசக்கரத்தில் அனைத்தும் அடங்கி உள்ளன என்று கூறுவதால், ஒரே சக்கரம் கொண்ட இது “கால சக்கரம்” என்று கூறும்படி உள்ளது. ஆக, இவ்விதம் உள்ள ஏழு குதிரைகளையும் ஒரு சக்கரத்தையும் கொண்டதால் மற்றவற்றைக் காட்டிலும் வேறுபட்ட மேன்மை உடைய தேரில் என்று கருத்து. – அடுத்து சூரியமண்டலத்தை வர்ணிக்கிறார். (திருச்சக்கரமொத்து) - திருவிருத்தம் (88) - அம்மேருவில் செஞ்சுடரோன் திருமல் திருக்கைத் திருச்சக்கரமொக்கும் - என்று கூறுவதற்கு ஏற்ப வட்டமான வடிவம் மற்றும் மிகுந்த ஒளி ஆகியவற்றின் காரணமாகச் சக்கரத்தாழ்வான் போன்று உள்ளது. (காலசக்கரச் செங்கோல் நடாவி) - திருவிருத்தம் (33) - திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனுமிருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர் - என்பதற்கு ஏற்ப லீலாவிபூதி மற்றும் நித்யவிபூதி ஆகிய இரண்டிலும் ஸர்வேச்வரன் தனது ஆணைகளை நடைமுறைப்படுத்த உபயோகிக்கும் கருவியாக உள்ள சக்கரத்தாழ்வான் போன்று, திருவாய்மொழி (7-2-7) – கால சக்கரத்தாய் - என்பதற்கு ஏற்ப காலசக்கரத்தை செலுத்துபவனுடைய காலசக்கரத்தைக் குறித்துள்ள ஆணைகளை திருவிருத்தம் (13) – தனிவளர் செங்கொல் நடாவு – என்பதற்கு ஏற்ப சூரியனாகிற தான் நடத்தியபடி இருத்தல். (ஜ்யோதிச்சக்ர வொளிசுருக்கு) - திருப்பள்ளியெழுச்சி (3) - சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் - என்பதற்கு ஏற்ப, அனைத்து திசைகளிலும் நிறைந்து நிற்கின்ற தனது ப்ரகாசத்தின் மிகுதி காரணமாக, திருப்பள்ளியெழுச்சி (3) - துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி - என்பதற்கு ஏற்ப நக்ஷத்திரங்கள் போன்றவற்றின் ஒலியை மங்கும்படியாக செய்த. (அக்நீஷோமீய தேஜோம் ருதத்துக் கூற்றும்) - அக்நிம் வாவாதித்யஸ் ஸாயம் ப்ரவிசதி, தஸ்மாதக்நிர் தூராந் நக்தம் தத்ருசே, உபே ஹி தேஜஸீ ஸம்பத்யேதே – சூரியன் அந்திப்பொழுதில் அக்னியில் நுழைகிறான், ஆகவே அக்னியானது தூரத்தில் இரவில் காணப்படுகிறது, இந்த இரண்டு ஒளிகளும் சேர்கின்ற - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-8-20) - ப்ரபா விவஸ்வதோ ராத்ரௌ அஸ்தம் கச்சதி பாஸ்கரே, விசத்யக்நிமதோ ராத்ரௌ வஹ்நிர் தூராத் ப்ரகாசதே – சூரியன் அஸ்தமிக்கும்போது சூரியனுடைய ப்ரகாசம் அக்னியில் புகுகின்றது, ஆகவே இரவில் அக்னியானது தூரத்தில் ப்ரகாசிக்கிறது - என்றும் கூறுவதற்கு ஏற்ப சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் தனது ப்ரகாசத்தை அக்னியில் புகுத்தி, இரவில் அக்னிக்கு ஒளி உண்டாக்குவதால் சூரியனை “அக்னியின் ஊற்று” என்கிறார். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-12-3) – க்ஷீணம் பீதம் ஸுரைஸ் ஸோமம் ஆப்யாயயதி தீப்திமாந், மைத்ரேயைககலம் ஸந்தம் ரச்மிநைகேந பாஸ்கர: க்ரமேண யேந பீதோஸௌ தேவைஸ் தேந நிசாகரம், ஆப்யாயத்யநுதிதம் பாஸ்கரோ வாரிதஸ்கர: - மைத்ரேயரே! தேவர்களால் அமிர்தத்தை உண்ணப்பட்டவனும், அதனால் தனது கலைகள் குறைந்தவனும், ஒரு கலை மட்டுமே உள்ளவனும் ஆகிய சந்த்ரனை, ஒளி பொருந்திய சூரியன் தனது ஒரு கிரணம் மூலம் வளரும்படியாகச் செய்கிறான்; தேவர்களால் எவ்விதம் ஒவ்வொரு நாளும் உண்ணப்பட்டானோ அதே போன்று ஒவ்வொரு நாளும் சூரியனால் வளர்க்கப்படுகிறான் – என்பதற்கு ஏற்ப, க்ருஷ்ண பக்ஷத்தில் ப்ரதமை தொடங்கி சதுர்தசி முடிய ஒவ்வொரு நாளும் அமிர்தமயமாக உள்ள சந்த்ரனின் பதினான்கு கலைகளைத் தேவர்கள் உண்கிறார்கள். பதினைந்தாவது கலையை அமாவாஸ்யை நாளில் மாலை நேரத்தில் பித்ருக்கள் உண்கிறார்கள். இப்படியாகத் தேய்ந்த சந்த்ரனை, சுக்லபக்ஷம் ப்ரதமை தொடங்கி அன்றாடம் ஒவ்வொரு கலையாக பௌர்ணமி முடிய பதினைந்து கலைகளைத் தனது கிரணங்களால் வளரச் செய்வதால் சூரியனை “அக்னியின் தேஜஸ் மற்றும் சந்த்ரனுடைய அமிர்தம் ஆகிய இரண்டுக்கும் சூரியனே பிறப்பிடமாக உள்ளான்” என்று கருத்து. (மந்தேஹர்க்குச் செந்தீயும்) - “மந்தேஹர்” என்றால் ராக்ஷஸர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் ஸந்த்யாகாலத்தில் சூரியனின் தேரைப் பிடித்துக் கொண்டு போகவிடாமல் தடுத்து அவனோடு பெரிய யுத்தம் செய்து அவனைக் கொல்ல முயல்வார்கள். அப்போது அந்தணர்கள் (ஸந்த்யாவந்தனம் செய்யும்போது) காயத்ரி மந்த்ரம் கொண்டு ஜபிக்கப்பட்ட தண்ணீரை மேலே அர்க்க்ய ரூபத்தில் விடுவார்கள். அந்த காயத்ரி மந்த்ர ஜப அர்க்யத்தின் சக்தி காரணமாக, சூரிய மண்டலத்தில் சிவந்த அக்னியானது மிகுந்த ப்ரகாசத்துடன் ஓங்கி எழுகிறது. அதில் அவர்கள் விழுந்து மடிவார்கள். திருவிருத்தம் (82) - மீண்டுவற்று ளெரிகொள் செந்தீவீழசுரரைப்போல - என்று ஆழ்வார் அருளிச்செய்துள்ளதன் காரணமாக மந்தேஹர்க்கு எரியும் அக்னியாகவும் சூரியன் உள்ளான் என்று கருத்து. ராக்ஷஸர்களை அஸுரர்கள் என்று ஆழ்வார் அருளிச்செய்தது எப்படியென்றால், பெரியதிருமொழி (1-4-1) - தானவனாகம் தரணியில் புரள - என்றும், பெரியதிருமொழி (2-2-2) - தானவன் வாளரக்கன் - என்றும் அருளிச்செய்தது போன்று அசுரத்தன்மை கொண்டவர்கள் என்பதால் ஆகும். ததுஹ வா ஏதே ப்ரஹ்மவாதிந: பூர்வாபிமுகா: ஸந்த்யாயாம் காயத்ரியாபிமந்த்ரிதா ஆப ஊர்த்த்வம் விக்ஷிபந்தி – இந்தக் காரணத்தினால்தான் வேதத்தை அறிந்தவர்கள் ஸந்த்யாகாலத்தில் காயத்ரியால் மந்திரிக்கப்பட்ட தண்ணீரை அர்க்யமாக மேலே எறிகிறார்கள் - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-8-48) – ஸந்த்யாகாலே து ஸம்ப்ரரப்தே ரௌத்ரே பரமதாருணே மந்தேஹா ராக்ஷஸா கோராஸ் ஸூர்ய மிச்சந்தி காதிதும், ப்ரஜாபதிக்ருதச் சாபஸ் தேஷாம் மைத்ரேய ரக்ஷஸாம், அக்ஷயத்வம் சரீராணாம் மரணம் ச திநே திநே, ததஸ் ஸூர்யஸ்ய தேஷாம் வை யுத்தமாஸீத் ஸுதாருணம், ததோ த்விஜோத்தமாஸ்தோயம் ப்ரக்ஷிபந்தி மஹாமுநே ஓங்கார ப்ரஹ்ம ஸம்யுக்தம் காயத்ர்யா சாபி மந்த்ரிதம், தேந தஸ்யந்தி தி தே பாபா வஜ்ரபூதேந வாரிணா - பயங்கரம் மற்றும் கொடூரம் நிறைந்த ஸந்த்யாகாலம் வந்தவுடன் தீயவர்களான மந்தேஹர் என்ற ராக்ஷஸர்கள் சூரியனைக் கொல்ல எண்ணுகிறார்கள். மைத்ரேயரே! சரீரத்தில் எந்தவிதமான குறையும் இல்லாத தன்மை மற்றும் ஒவ்வொரு நாளும் மரணம் என்ற இரண்டும் அவர்களுக்கு நான்முகனால் அளிக்கப்பட்ட சாபமாகும்; ஆகவே சூரியனுக்கும் அவர்களுக்கும் யுத்தம் தொடங்கியது; இதற்காகவே அந்தணர்களில் சிறந்தவர்கள் “ஓம்” என்பதுடன் இணைந்ததான காயத்ரி மந்த்ரம் கொண்டு ஜபிக்கப்பட்ட நீரை அர்க்யம் என்று மேலே எறிகிறார்கள். வஜ்ரமாக மாறும் அந்த நீரால் அந்த ராக்ஷஸர்கள் மடிகிறார்கள் – என்றும் கூறுவது காண்க. அந்தணர்கள் மேலே தூக்கி எறிகின்ற அர்க்யஜலம் வஜ்ரமாக மாறி, அந்த ராக்ஷஸர்களை அழிக்கும் என்று ச்ருதியிலும் புராணத்திலும் கூறப்படுவதாலும், அந்த அர்க்யஜலமானது ஆதித்ய மண்டலத்தையே ப்ரகாசம் அடையச் செய்வதுடன், அருகில் சென்றால் அழியும்படியும் செய்யவல்லது என்று கூறலாம். (முக்திமார்க்கத் தலைவாசலும்) - பரமபதம் போகும் ஜீவாத்மா அர்ச்சிராதிகதி என்பதான முக்தி மார்க்கத்தில் செல்லும் போது, அர்ச்சிஷமேவாபி ஸம்பவந்தி - அர்ச்சிஷ் என்னும் பகல்பொழுது தேவதையை அடைகிறார்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப அர்ச்சிஷ் என்னும் தேவதையை அடைவது மட்டும் அல்லாமல், பித்வா ஸூர்யஸ்ய மண்டலம் - சூரியனுடைய மண்டலத்தைப் பிளந்துகொண்டு – என்றும், சிறிய திருமடல் - தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு - என்றும், பெரியதிருமொழி (4-5-10) - வெங்கதிர்ப்பரிதி வட்டத்தூடுபோய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, இந்தச் சூரிய மண்டலத்தின் வழியே செல்வதாலும், அண்டகடாஹத்தைப் பிளந்து கொண்டு செல்வதற்கும் முன்பு இது நிகழ்வதாலும், இந்தச் சூரியமண்டலத்தினை அர்ச்சிராதி மார்க்கத்தின் தலைவாசல் என்கிறார். (கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும்) - திருவாய்மொழி (1-8-3) - கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு - என்றும், யஜுர்வேதம் - சக்ஷுர் தேவநாமுத மர்த்யாநாம் - விண்ணில் உள்ளவர்களுக்கும் மண்ணில் உள்ளவர்களுக்கும் கண் ஆவான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைவருக்கும் கண்கள் போன்றுள்ள ஸர்வேச்வரனுடைய திருக்கண்ணில், புருஷஸூக்தம் - சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத - அவனுடைய கண்ணிலிருந்து சூரியன் உண்டானான் - என்பதற்கு ஏற்ப, சூரியன் பிறந்து, ஜகதேக சக்ஷுஷே - உலகத்திற்கு ஒரே கண்ணாக உள்ளவன் - என்று கூறுவதற்கு ஏற்ப உலகிற்குக் கண் போன்றவனாக உள்ளான். (த்ரயீமயமுமான மண்டலத்திலே) - த்ரயீமயாய - வேதமயமான - என்பதற்கு ஏற்றபடி, வேதமயமாகவே உள்ள ஆதித்ய மண்டலத்தில். இதன் மூலம், த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண! ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட:, கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரி ஹிரண்மயவபு: த்ருதசங்க சக்ர: - தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்றுள்ளவனும், தோள் வளைகளைக் கொண்டவனும், மகரகுண்டலங்களை அணிந்தவனும், பொன்மயமான திருமேனி உள்ளவனும், சங்குசக்கரங்களை ஏந்தியுள்ளவனும் ஆகிய நாராயணன் எப்போதும் சூரியமண்டலத்தின் நடுவில் உள்ளவனாக த்யானிக்கப் படவேண்டியவன் ஆவான் - என்று கூறுவதற்கு ஏற்ப அவன் எழுந்தருளியுள்ள சூரிய மண்டலத்தை விவரித்தார். – அடுத்து அந்தச் சூர்யமண்டலத்தில் அவன் எழுந்தருளியுள்ள நிலையை வர்ணிக்கிறார். (தண்டாமரை சுமக்க) - திருவாய் (4-5-8) - தண்டாமரை சுமக்கும் பாதப்பெருமான் – என்பதற்கு ஏற்ப, “ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்டன்” என்பது கூறப்பட்டது. (தோள் வளையும் குழியும்) - இதன் மூலம் “கேயூரவாந் மகர குண்டலவாந்” என்பது கூறப்பட்டது. (திருச் செய்யமுடியு மாரமும் படையும்) - இதன் மூலம் “கிரீடீ ஹாரி த்ருத சங்கசக்ர:” என்பது கூறப்பட்டது. (திகழும் பொன் மேனியும்) - திருவாய்மொழி (8-4-7) - ஆரமும் படையும் திகழ - என்பதற்கு ஏற்ப மேலே கூறியுள்ள ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை விளக்கும்படி உள்ளதாக, மூன்றாம் திருவந்தாதி (1) - பொன்மேனி கண்டேன் - என்பதற்கு ஏற்ப தங்கம் போன்ற ப்ரகாசம் கொண்ட திருமேனியும்; ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷோ த்ருச்யதே ஹிரண்யச்மச்ருர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: - சூரியனின் நடுவில் பொன்மயமாக உள்ள எந்த ஒரு புருஷன் யோகிகளால் காணப்படுகிறானோ, அவன் பொன்மயமான மீசை மற்றும் கேசங்கள் கொண்டவனாக உள்ளான்; அவனுடைய நகங்கள் போன்ற அனைத்தும் பொன்மயமாக உள்ளன - என்றும், ஹிரண்மயவபு: - பொன்மயமான திருமேனி – என்றும் கூறப்பட்டது காண்க. (செஞ்சுடர்த் தாமரைக்கண்ணுமாய்) – திருவாய்மொழியில் (5-4-9) - அஞ்சுடர் வெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் - என்று கூறியதைத் தொடர்ந்து, (5-4-9) - செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வலும் வாரான் - என்று கூறியது, சூரியமண்டலத்தில் எழுந்தருளியுள்ள ஸர்வேச்வரனைக் குறித்து மட்டுமே அல்லவோ? ச்ருதியும் - தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷிணீ - பரம்பொருளான அவனுடைய திருக்கண்கள் தாமரை போன்றுள்ளன - என்று கூறியது காண்க. ஆகவே சூரிய ஒளியால் மலர்ந்த சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற திருக்கண்கள் என்று கருத்து. (அணிநிற மூர்த்தி யீதென்னும்படி இரண்டையும் தன்னிற மாக்குகிற செய்யாளான வித்யையோடே) - மூன்றாம் திருவந்தாதி (1) - திருக்கண்டேன் - என்று பெரியபிராட்டியாகத் தன்னைக் கண்டதைத் தொடர்ந்து, ருக்மாபம் – பொன் போன்ற - என்பதற்கு ஏற்ப உள்ள அவனுடைய திருமேனியைக் கண்டு, மூன்றாம் திருவந்தாதி (1) - பொன்மேனி கண்டேன் - என்று கூறுவதற்கு ஏற்றபடி உள்ளபோதிலும், பெரியபிராட்டியாராகிய தனது திருமேனியில் இளஞ்சூரிய ஒளி கலந்தது போன்றுள்ளதும், காண்பதற்கு அழகாக உள்ளதும் ஆகிய அவனுடைய திருமேனி நிறத்தைக் கண்டு மூன்றாம் திருவந்தாதி (1) - திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் - என்று அருளிச்செய்தார். திருவாய்மொழி (4-4-2) - செய்யதோர் நாயிற்றை காட்டிச் சிரீதரன் மூர்த்தி யீதென்னும் - என்று, சூரியமண்டலத்தில் வசிக்கும் பெரியபிராட்டியான தனது திருமேனியின் ஒளி வெள்ளம் காரணமாகச் சிவந்த ஒளியால் ஒப்பற்றதாக உள்ள நிலையைக் கண்டு ஸ்ரீதரனுடைய வடிவம் இது என்று கலங்கி உரைத்தார். ஸர்வேச்வரனுடைய திருமேனி, சூரியமண்டலம் ஆகிய இரண்டையும் தனது நிறம் போல் செய்கின்ற சிவந்த நிறம் கொண்டவள் பெரியபிராட்டி என்பதால், ஸ்ரீஸூக்தம் - ஹிரண்யவர்ணாம் – என்பதற்கு ஏற்ப திருவாய்மொழி (9-4-1) - கமல மலர்மேல் செய்யாள் - என்று நிரூபகம் செய்யும்படி உள்ளவனாகவும்; வித்யா ஸஹாய மாதித்ய ஸம்ஸ்தம் வித்யா ப்ரஸாதகம் - வித்யை எனப்படும் பிராட்டியுடன் உள்ளவனும், வித்யையை அளிப்பவனும், சூரியனிடம் உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரன் - என்றும், வித்யா ஸஹாயவந்தம் மாம் ஆதித்யஸ்தம் ஸநாதநம் - பிராட்டியை எப்போதும் துணையாகக் கொண்டவனும், சூரியனிடம் உள்ளவனும், எப்போதும் உள்ளவனும் ஆகிய என்னை - என்றும் கூறுவதற்கு ஏற்ப “வித்யா” என்ற சொல்லுக்குப் பொருளாக உள்ள பெரியபிராட்டியுடன் சேர்ந்தபடி. (அருக்கன் மேவின) - பெரியதிருமொழி (2-1-7) - வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு - என்பதற்கு ஏற்ப, சூர்யமண்டலத்தில் உள்ளவனைக் குறித்து சாந்தோக்ய உபநிஷத்தில் - ய ஏஷோந்த ராதித்யே – சூரியனின் நடுவில் பொன்மயமான - என்று கூறப்பட்டது. (ஸதாத்யேய தேஜஸ்ஸின்) - சாந்தோக்ய உபநிஷத் – த்யேயஸ் ஸதா - எப்போதும் த்யானிக்கத்தக்கவன் - என்பதற்கு ஏற்ப எப்போது த்யானித்தபடி உள்ளவர்களுக்கு ஏற்ற விஷயமாகவும்; காடகத்தில் - ஹிரண்மயச் சகுநிர் ப்ரஹ்ம நாம யேந ஸூர்யஸ் தபதி தேஜஸேத்த: – ப்ரஹ்மம் என்னும் பறவை பொன்நிறமானது, அதன் எந்த ஒளியால் சூரியன் ப்ரகாசமாக உள்ளானோ – என்றும், காயத்ரியில் - தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்க: - உலகின் காரணமாக உள்ள பகவானின் உபாஸிக்கத்தக்க அந்த ஒளியை த்யானிக்கிறோம் – என்றும், ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் – தேஜ: பரம் தத் ஸவிதுர் வரேண்யம் தாம்நா பரேணா ப்ரணாகாத் ஸுவர்ணம் - வேதங்களில் கூறப்பட்டதாகவும் , சிறந்ததாகவும், உபாஸிக்கத்தக்கதாவும் உள்ள சூரியனுடன் தொடர்புடைய ஒளியாக வேதங்கள் ஓதுகின்றன; அதன் உயர்ந்த ஒளி காரணமாக விரல்நுனி முடிய பொன்நிறமாகவே உள்ளது – என்றும் கூறப்படுகிற தேஜோமயமாக உள்ள பகவானுடைய. (ஸாமரஸோத்காந நாம முள்ளுறையான ஆத்யந்தங்களாலே) - ஸாம்ந உத்கீதோ ரஸ - ஸாமத்தின் ரஸமாக உத்கீதம் உள்ளது - என்று கூறுவதால் சாந்தோக்ய உபநிஷத்துக்கு ரஸமாக உத்கீதம் உள்ளது என்றாகிறது. அதில் “உத்”, தஸ்ய உதிதி நாம - அந்த ஸாமத்தில் கூறப்பட்ட உத் - என்பது திருவாய்மொழிக்குத் தொடக்கமும் முடிவுமாக உள்ளது என்பதால். இது எப்படி? திருவாய்மொழி “உயர்வு” என்று தொடங்கி “உயர்ந்தே” என்று முடிவதால், “உ” என்பது தொடக்கமாகவும் “த” என்பது முடிவாகவும் உள்ளது காண்க. (ஆத்யந்தங்களாலே) - என்று கூறியது ஏன் என்றால், அடுத்துக் கூற உள்ளதற்கான காரணம் இது என்று உணர்த்தவே ஆகும். (ஓராயிரமாமவற்றிலே ஒன்றை) - திருவாய்மொழி (9-3-1) – ஓராயிரமா யுலகே ழளிக்கும் பேராயிரம் - என்பதற்கு ஏற்றபடி அவனுடைய ஒரு திருநாமம் மட்டுமே ஆயிரமாக நின்று உலகைக் காக்கவல்லது. இப்படிப்பட்ட எண்ணற்ற திருநாமங்களில் ஒரு திருநாமத்தை. (ஆயிரமுகத்தினா லருளின வித்யாதி) - அதாவது, பெரியதிருமொழி (1-4-7) - ஆயிரமுகத்தினா லருளி மந்தரத் திழிந்த கங்கை - என்பதற்கு ஏற்ப கங்கையானது ஒன்றாகவே இருக்க, உலகில் உள்ள அனைத்தையும் தூய்மைப்படுத்த எண்ணி, ஆயிரம் முகங்களாகப் பெருக்கெடுத்து ஓடுவது போன்று, திருவாய்மொழி (7-10-11) – தீர்த்தங்கள் ஆயிரம் - என்று உலகில் மிகவும் உயர்ந்த ஆயிரம் திருப்பாசுரங்களாக விரிவாக உரைக்கிறார் என்று வேதாசார்யபட்டர் உபதேசிப்பார். “விஸ்தரிக்கிறார்” என்ற பதத்தை முன்னர் கூறியது போன்று, “யாராலும் செய்யப்படாத தன்மையுடன் கூடியது” என்ற பொருளிலேயே கொள்ளவேண்டும். ஆகவே சூர்ணை (39) - எவ்வுலகத் தெவ்வெவையும் - என்று தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்தங்களுக்கும் [திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி] நான்கு வேதங்களின் தன்மை உள்ளது என்றும், வேதங்களுக்குக் கூறப்பட்ட அங்கங்கள் போன்ற பலவும் இந்த அருளிச் செயல்களுக்கும் உள்ளன என்றும், “இதனை இவர் அருளிச்செய்தார்” என்று கூறுவதன் மூலம் இவை என்றும் உள்ளவை மற்றும் யாராலும் இயற்றப்படாதவை என்று கூறும் கருத்துக்களுடன் முரண்பாடு தோன்றவில்லை என்றும், “இன்ன ப்ரபந்தம் இன்ன வேதத்துக்கு ஒத்தது” என்றும், ஸாமவேதத்துடன் ஒத்துள்ள திருவாய்மொழியானது மிகவும் குறிப்பாக, ஸாமவேதத்தின் மிகவும் உயர்ந்த பகுதியான சாந்தோக்ய உபநிஷத்துடன் ஒத்தது என்றும் கூறப்பட்டது.