Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 52)
முதல் ப்ரகரணம்
சந்தோகனென்று ஸாமாத்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ் பயில் காநஸ்வரூபியைப் பாலையாகியென்று விசேஷிக்கையாலே வேதகீதச்சாமி நானென்ற ஸாமந்தோன்ற உத்கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடிச் சரமகதி முடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹாகோஷ நல்வேத வொலிபோலே மஹாத்யயந மென்னப் பாடுகையாலே இத்தை சாந்தோக்ய ஸமமென்பர்கள்.
இனி இந்த ஸாமந்தான் அநேகவிதமாகையாலே இது எந்த ஸாமத்தோ டொக்குமென்ன வருளிச்செய்கிறார் மேல்.
அடுத்து ஸாமவேதம் பலவகைப்பட்டுள்ளதால், திருவாய்மொழி அந்த வகைகளில் எந்தச் ஸாமத்தோடு ஒப்பிடும்படியாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(சந்தோகனென்று ஸாமாந்யமாகாமல் முதலிலே பிரித்து) அதாவது, “சாமவேத கீதனாய”, “சாமியப்பன்”, “ஸாமவேதோஸ்மி” என்று அபியுக்தரும் அவன் தானும் சொன்ன ஸாமம் ஸாமாந்யமாகாமல், “சந்தோகன் பௌழியன் ஐந்தழலோம்பு தைத்திரியன் சாமவேதி” என்கிறவிடத்தில் “சாமவேதி” யென்று மேல் சொல்லா நிற்க, “சந்தோகன்” என்று முதலிலே பிரித்தென்கை. இது நினைவன்றாகில் “சாமவேதி” என்றதுக்குள்ளே இந்த ஸாமமும் அந்தர்ப்பவிக்குமாயிருக்க இங்ஙன் பிரித்துச் சொல்ல வேண்டாவிறே என்று கருத்து. (யாழ் பயில் காந ஸ்வரூபியைப் பாலையாகி யென்று விசேஷிக்கையாலே) அதாவது “யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவை” என்று யாழ் விஷயமாக அப்யஸிக்கப்படுவதான சாஸ்த்ரத்திற் சொன்ன லக்ஷணத்தையுடைய நரம்பிலே பிறந்த பண்பட்ட ரஸமென்னும்படி காநஸ்வரூபம்போலே இனியனானவனை, காநஸாமாந்யமாகாமல் “யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி” என்று அந்த ச்சந்தோக ஸாமத்தின் நிறமான பாலையாழென்கிற பண்ணையிட்டு விசேஷிக்கையாலே யென்கை. இப்போது இது சொல்லிற்று – “சாமவேத கீதன்” என்கிறவிடத்தில் வேதத்தோடன்றிக்கே இதின் கீதத்தோடே ஸமாநாதிகரிக்கையாலே அந்த கீதமும் ச்சந்தோக ஸாமகீதமென் றறிவிக்கைக்காக. (வேதகீதச்சாமி நானென்ற ஸாமந்தோன்ற) அதாவது இப்படி விசேஷிக்கையாலே பச்வதிகரண ந்யாயத்தாலே “சாமவேத கீதன், “சாமி”, “ஸாமவேதோஸ்மி” என்று சொன்ன ஸாமாந்யமான இஸ்ஸாமசப்தமும் கீதசப்தமும் கீழ்ச்சொன்ன ச்சந்தோக தத்கீதங்களாகிற விசேஷத்திலே பர்யவஸிக்குமிறே. ஆன பின்பு ச்சந்தோக ஸாமமே ஸமாநாதிகரிக்கும்படி உத்க்ருஷ்டமாய் அவனுக்கு ஆதரணீயமான ச்சந்தோக ஸாமம் ஈதென்னுமிடம் தோன்றும்படியாக வென்கை. (உத்கீதப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி) அதாவது, ஒரு ஸாமந்தனக்கே ப்ரஸ்தாவம், உத்கீதம், ப்ரதிஹாரம், உபத்ரவம், நிதநம் என்ற அஞ்சு பாகங்களுண்டாகையாலே அவற்றுக்குள்ளே ஒன்றாயிருக்கச்செய்தே, “ஸாம்ந உத்கீதோ ரஸ:” என்று ஸாமத்துக்கு ரஸமாகச் சொல்லப்படுமதாய், ப்ரணவ பூர்வகமாக காநம் பண்ணப்படுமதா யிருப்பதொன்றிறே உத்கீதம்; ஆகையால், அந்த உத்கீதாவயவமான ப்ரணவத்தை, “ஓமித்யேததக்ஷர முத்கீத முபாஸீத” என்று சாந்தோக்யந் தன்னில் ப்ரதமத்திலே யெடுத்தாப்போலே இங்கும் ப்ரதமத்திலே யெடுக்கிறவளவில் “ஓம்” என்று ஸம்ஹிதாகாரேண வெடுத்தால் அதிக்ருதாதிகாரமா மென்று அஸம்ஹிதா காரேண அக்ஷர த்ரயத்தையும் ப்ரதம த்விதீய த்ருதீய பாதங்களில் எடா நிற்கச்செய்தே ப்ரதமாக்ஷரமான அகாரம் முதலாகவெடாதெ உகாரம் முதலாகவெடுக்கையாலே அக்ஷர க்ரமத்தை மாறாடியென்கை. இப்படி உகாரம் முதலாகவெடுத்ததுக்கு ப்ரயோஜநம் அந்த ச்சாந்தோக்ய ரஸமான உத்கீதத்துக்கு நோக்கான “உத்” என்கிற திருநாமம் இதுக்கு உள்ளுறையானமை தோன்ற உகாராதியாக வெடுத்து “உயர்ந்தே” என்று தகாராந்தமாக முடிக்கை. இதுதான் மேலில் சூர்ணையிலே வ்யக்தம். ஆக இப்படி அக்ஷர த்ரய ரூபேண ப்ரணவத்தை ப்ரதமத்திலே கீர்த்தியா நிற்கச்செய்தே ஏததபிப்ராயேண அக்ஷரக்ரமத்தை மாறாடி. (சரமகதி முடிவாக) அதாவது ச்சாந்தோக்ய மத்யே சொன்ன அர்ச்சிராதியான சரமகதியை “சூழ்விசும்பணிமுகிலிலே” பேசுகையாலே சரமகதியை முடிவாகக் கொண்டென்கை. இத்தை சரமகதியென்கிறது – கர்ப்ப யாம்ய தூமாதிகள் போலன்றிக்கே எல்லைநிலமான முக்திமார்க்கமாகையாலே. (தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி) அதாவது, அந்த ஸாமம், “ஏதத் ஸாம காயந்நாஸ்தே” என்கிறபடியே பகவதநுபவ ஜநித ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக, “ஹாவு ஹாவு ஹாவு” இத்யாதிப்படியே ஸாமகாநாம் பண்ணி, “அஹமந்நாத:” என்று களிக்கும் நித்யமுக்தரான தேவர்களுக்கு போக்யமாமாபோலே, “தொண்டர்க்கமுதுண்ண” என்கிறபடியே இதுவும் பகவதநுபவ சபலர்க்கு போக்யமாம்படியாக்கி யென்கை. (மஹாகோஷ நல்வேதவொலிபோலே மஹாத்யயநமென்னப் பாடுகையாலே) அதாவது – “ஸர்வேப்யோபி ஹி வேதேப்ய: ஸாமகோஷோ மஹாநபூத்; அந்வகோஷய தத்யர்த்தம் தேந ப்ரஹ்மாண்ட மண்டப:” என்றும், “பாடு நல்வேதவொலி” என்றும் சொல்லுகிற பெரிய கோஷத்தையுடைத்தான ஸாமவேதம்போலே பெரிய திருவத்யயன மென்னப்பாடுகையாலே யென்கை. (இத்தை ச்சாந்தோக்ய ஸமமென்பார்கள்) ஆக இப்படி கீழ்ச்சொன்ன ஆகாரங்களைக் கொண்டு இத்தை ச்சந்தோக ஸாமத்தில் உபநிஷத் பாகமான ச்சாந்தோக்யத்துக்கு ஸமமென்று அபியுக்தர்கள் சொல்லுவர்களென்கை.
(சந்தோகனென்று ஸாமாந்யமாகாமல் முதலிலே பிரித்து) – [இங்கு சந்தோகன் என்பது ஸாமவேதத்தின் உபநிஷத் பாகமான சாந்தோக்ய உபநிஷத் ஆகும். அதாவது வேதங்களில் சிறந்தது ஸாமவேதம், ஸாமவேதத்தில் சிறந்தது அதன் உபநிஷத்தான சாந்தோக்யம், அதுவே திருவாய்மொழி என்று கருத்து] திருச்சந்தவிருத்தம் (14) - சாமவேத கீதனாய - என்றும், பெரியதிருமொழி (2-2-7) - சாமியப்பன் - என்றும் சான்றோர்களான ஆழ்வார்களும், கீதையில் (10-22) - வேதாநாம் ஸாமவேதோஸ்மி - வேதங்களில் நான் ஸாமவேதம் ஆவேன் - என்று ஸவேச்வரனாகிய தானும் கூறிய இடங்களில் காணப்படும் “ஸாமம்” என்ற பதம் பொதுவாக ஸாமவேதத்தை முழுவதுமாகக் கூறவில்லை; மாறாக சாந்தோக்ய உபநிஷத்தையே கூறுகிறது. இதனை உணர்த்தவே, பெரியதிருமொழி (5-5-9) - சந்தோகன் பௌழியன் ஐந்தழலோம்பு தைத்திரியன் சாமவேதி – என்ற பாசுரத்தில் “சாமவேதி” என்று கூறுவதற்கு முன்பாகவே “சந்தோகன்” என்று பிரிக்கப்பட்டது என்று கருத்து. இவ்விதம் ஆழ்வாருக்கு திருவுள்ளம் இல்லையென்றால் “சாமவேதி” என்றுள்ள சொல்லிலேயே “ஸாமம்” அடங்கிவிடும் என்னும்போது, “சந்தோகன்” என்று தனியாகப் பிரித்து உரைக்கவேண்டிய அவசியம் இல்லை அல்லவோ? (யாழ் பயில் காந ஸ்வரூபியைப் பாலையாகி யென்று விசேஷிக்கையாலே) – திருவாய்மொழி (2-3-7) - யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவை – என்ற வரியில் யாழ் என்னும் இசைக்கருவி குறித்துக் கற்பிக்கும் சாஸ்த்ரத்தில் கூறப்படும் இலக்கணங்கள் அனைத்தையும் கொண்டதும், அந்த யாழின் நரம்பில் உண்டாவதும் ஆகிய நேர்த்தியான சுவை என்று கூறும்படியாக உள்ள கானம் எத்தனை இனிமையாக இருக்குமோ அது போன்று இனிமையாக உள்ளவனை, கானத்தோடு பொதுவாக உரைக்காமல், பெரியதிருமொழி (7-3-7) – யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி - என்று சாந்தோக்ய உபநிஷத் ஓதும் வடிவமான “பாலையாழ்” என்பதான பண் மூலம் சிறப்பித்து கூறுவது காண்க. இந்த உதாரணம் இங்கு ஏன் கூறப்படுகிறது? “சாமவேத கீதன்” என்று ஸர்வேச்வரனை வேதங்களுடன் மட்டும் ஒற்றுமைப்படுத்திக் கூறாமல், அதன் கீதத்துடன் சேர்த்து ஒற்றுமைப்படுத்தியே கூறுகின்றனர்; அந்தக் கீதமும், சாந்தோக்ய உபநிஷத் ஸாமகீதமாகும் என்று உணர்த்தவே ஆகும். – இப்படியாக “சந்தோகன்” என்று முதலில் உரைத்து, “பாலையாகி” என்று சிறப்பித்துக் கூறுவதால், பச்வதிகரண ந்யாயம் காரணமாக (பசு என்னும் சொல் பொதுவாக நான்கு கால்கள் கொண்ட விலங்குகளைக் குறிக்கும் என்றாலும், யாகத்தில் “பசுவைக் கொண்டு வா” என்றால் “வெள்ளாட்டைக் கொண்டு வா” என்று அர்த்தம். இதுவே பச்வதிகரண ந்யாயம் – பொதுவாக உள்ள ஒன்றை ஒரு இடத்தில் சிறப்பித்தல்), “சாமவேத கீதன், சாமி, ஸாமவேதோஸ்மி” போன்ற இடங்களில் காணப்படும் “ஸாமம்” மற்றும் “கீதம்” என்ற பதங்கள் பொதுவாக முறையே “ஸாமவேதம்” மற்றும் “இசை” என்ற பொருளை அளிக்காமல் (பச்வதிகரண ந்யாயம் காரணமாக), ஸாமவேதத்தில் உள்ள சாந்தோக்ய உபநிஷத்தையும், அதன் பண்ணாகிற பாலையாழ் என்பதையும் உணர்த்தும். இப்படியாக ஸாமவேதத்தின் சாந்தோக்ய உபநிஷத்தே இங்கு கூறப்பட்டது என்பதாலும், ஸர்வேச்வரனாகிய தானும் ஸர்வேச்வரனாகிய தன்னுடன் ஒற்றுமைப்படுத்திக் காணபிக்கவல்லது என்பதால் மிகவும் உயர்ந்ததாக உள்ளதன் காரணமாக அவனுக்கும் விரும்பத்தக்கதாக உள்ளதாலும், சாந்தோக்ய ஸாமவேதமே இந்தத் திருவாய்மொழி என்று கருத்து. (உத்கீதப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி) - ஒரு ஸாமவேதத்திற்கு ப்ரஸ்தாவம், உத்கீதம், ப்ரதிஹாரம், உபத்ரவம், நிதநம் மற்றும் ஐந்து பாகங்கள் உள்ளன (குறிப்பு - யாகத்தின்போது யாக தேவதையைத் துதிக்கும் பொருட்டு ஸாமவேதத்தைப் பாடும்போது ப்ரஸ்தாவம், உத்கீதம், ப்ரதிஹாரம், உபத்ரவம், நிதநம் என்று ஐந்து பிரிவுகளாகப் பிரித்துப் பாடுவர்) இவற்றுள் உத்கீதம் என்பது மற்றவை போன்று உள்ளபோதிலும், சாந்தோக்ய உபநிஷத்தில் - ஸாம்ந உத்கீதோ ரஸ: – சாமத்திற்கு உத்கீதம் ரஸமாக உள்ளது – என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. இதன் காரணம் என்ன? “ஓம்” என்ற ப்ரணவத்தை முன்னிட்டுக் கொண்டு இசைக்கப்படுவதாக உள்ளது உத்கீதம் என்பதால் ஆகும் (குறிப்பு - உத்கீதத்தைப் பாடும்போது ஒவ்வொரு பதங்களுடனும் “ஓம்” என்பதைச் சேர்க்கவேண்டும். உதாரணமாக – ஓம் தத்ஸ விதுர்வரேண்யம், ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி, ஓம் தியோ யோ ந: ப்ரசோதயாத் – என்பது காண்க. இதில், “ஓம்” என்பது ஒவ்வொரு பதத்தின் உறுப்பாக உள்ளது காண்க. இதனால்தான் “ஓம்” என்னும் அக்ஷரமானது உத்கீதத்தின் அவயவம் – உறுப்பு என்று கூறப்படுகிறது). ஆகவே அத்தகைய உத்கீதத்தின் உறுப்பான ப்ரணவம், சாந்தோக்ய உபநிஷத்தில் - ஓம் இதி ஏதத் அக்ஷரம் உத்கீதம் உபாஸீத - “ஓம்” என்ற பரணவத்தையே உத்கீதம் என்று உபாஸிக்கக்கடவன் - என்று முதலில் எடுக்கப்பட்டது (சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் வரியே - ஓம் இதி ஏதத் அக்ஷரம் உத்கீதம் உபாஸீத – என்பதாகும்). இது போன்றே திருவாய்மொழியைத் தொடங்கும்போது “ஓம்” என்ற எழுத்து கொண்டு தொடங்கினால் “வேதம் போன்று இந்தத் திருவாய்மொழியும் ஒரு சிலருக்கு மட்டுமே ஓதத்தக்கது, எல்லாரும் கூற இயலாது” என்று கருத வாய்ப்பு உள்ளது; இதன் காரணமாகவே ப்ரணவத்தின் தொகை வடிவமான “ஓம்” என்று அமைக்காமல், “அ, உ, ம” என்ற மூன்று அக்ஷரங்களாகப் பிரிக்கும் முறையை எடுத்துக் கொண்டார்; அவற்றை முதல் பாசுரத்தின் முதல், இரண்டாவது, மூன்றாவது வரிகளின் தொடக்க எழுத்தாக அமைக்கத் திருவுள்ளம் பற்றினார். இவ்விதம் “அ, உ, ம” என்று அமைத்தாலும் அதனைக் கூட்டிக் கொண்டு “ஓம்” என்று பொருள் கொண்டு, “திருவாய்மொழி அனைவருக்கும் தகுதியானது அல்ல” என்று கூறிவிடுவர் என்று எண்ணியவராக, “அ” என்பதை முதலடியில் வைக்காமல், “உ” என்பதை முதலடியில் வைத்து, “அ, உ, ம” என்பதை “உ, அ, ம” என்று மாற்றி அமைத்தார். (“அ, உ, ம” என்பதை மாற்றி அமைக்கவேண்டும் என்றால், முதலடியில் “ம” என்பதை வைத்திருக்கலாமே, “உ” என்று வைத்ததன் காணம் ஏதும் உண்டோ என்ற கேள்வி எழ அதற்கு விடை அருளிச்செய்கிறார்). “உ” என்ற எழுத்தை முதலில் அமைத்ததன் காரணம், சாந்தோக்ய உபநிஷத்தின் ஆதரமான உத்கீதம் என்பதற்குத் தொடக்க எழுத்துக்களான “உத்” என்பதிலேயே திருவாய்மொழி அடங்கிவிடுகிறது என்பதை உணர்த்தவே, “உ” என்பதை முதலில் வைத்து “உயர்வற” என்று தொடங்கினார். “உத்” என்பதில் உள்ள “உ” என்பது இவ்விதம் முதல் எழுத்தானது போன்று, “த்” என்ற தகாரம் திருவாய்மொழி (10-10-11) - உயர்ந்தே – என்பதில் இறுதி எழுத்தாக உள்ளது. இந்தக் கருத்து இந்தச் சூர்ணையில் விளங்குகிறது. இப்படியாக மூன்று எழுத்துக்களுடைய கூட்டாக உள்ள “ஓம்” என்ற ப்ரணவத்தைத் திருவாய்மொழியின் தொடக்கத்தில் வைத்தவர், மேலே கூறப்பட்ட கருத்தினை உணர்த்துவதற்காக எழுத்துக்களை மாற்றி அமைத்தார். (சரமகதி முடிவாக) - சாந்தோக்ய உபநிஷத்தின் நடுப்பகுதியில் கூறப்பட்ட அர்ச்சிராதி மார்க்கம் என்பதான இறுதி கதியை இவர் திருவாய்மொழி (10-9-1) - சூழ்விசும்பு – என்பதில் கூறுவதால், இறுதியை இறுதியாகவே அருளிச்செய்தார் என்று கொள்ளவேண்டும். அர்ச்சிராதிகதியை ஏன் இறுதி மார்க்கம் என்கிறார்? கர்ப்பகதி - மீண்டும் கருவில் புகுதல், யாம்யகதி – மீண்டும் யமலோகம் செல்லுதல், தூமாதிகதி – மீண்டும் ஸ்வர்க்கம் புகுதல் போன்று அல்லாமல், இறுதியாக உள்ள முக்தி மார்க்கம் என்பதால் இவ்விதம் உரைத்தார். (தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி) - தைத்திரீயத்தில் - ஏதத் ஸாம காயந்நாஸ்தே – ஸாமவேதத்தைக் கானம் செய்து மகிழ்கிறான் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனை அனுபவிக்கும் அனுபவம் மூலம் ஏற்படும் பரமானந்தத்தை வெளிப்படுத்துவிதமாக “ஹாவு ஹாவு ஹாவு” என்ற முறையில் ஸாமகானம் செய்து, தைத்திரீயத்தில் - அஹமந்நாத: - நான் பரமாத்மாவை அனுபவிப்பவன் – என்று களிக்கின்ற நித்யஸூரிகளுக்கு ஸாமவேதமானது இனிமையான பொருளாக உள்ளது போன்று, திருவாய்மொழி (9-4-9) - தொண்டர்க்கமுதுண்ண - என்பதற்கு ஏற்ப திருவாய்மொழியும் பகவானை அனுபவிப்பதில் ஆசை கொண்டவர்களுக்கு இன்பமாக இருக்கும் என்று கருத்து. (மஹாகோஷ நல்வேதவொலிபோலே மஹாத்யயநமென்னப் பாடுகையாலே) - ஸர்வேப்யோபி ஹி வேதேப்ய: ஸாமகோஷோ மஹாநபூத்; அந்வகோஷய தத்யர்த்தம் தேந ப்ரஹ்மாண்ட மண்டப: - அனைத்து வேதங்களைக் காட்டிலும் ஸாமவேதத்தின் ஒலியானது அதிகமானது; அதன் ஒலி காரணமாக நடுவில் இருந்த மிகப் பெரிய மண்டபமும் எதிரொலித்தது – என்றும், திருவாய்மொழி (5-9-3) – பாடு நல்வேதவொலி - என்றும் கூறப்படுவதான மிகுந்த ஒலியுடன் கூடிய ஸாமவேதம் போன்று இந்தத் திருவாய்மொழியை “பெரிய திருவத்யயனம்” என்று பாடுவர் [திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின்போது இராப்பத்து காலத்தில் திருவாய்மொழியைக் கானம் செய்வதை அருளிச்செய்கிறார்]. (இத்தை ச்சாந்தோக்ய ஸமமென்பார்கள்) - இப்படியாகக் கூறப்பட்ட பலவிதமான தன்மைகளின் அடிப்படையில் திருவாய்மொழியை சந்தோக ஸாமத்தின் உபநிஷத் பாகமான சாந்தோக்ய உபநிஷத்துக்குச் சமம் என்று சான்றோர்கள் கூறுவர்கள் என்று கருத்து.