Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 51)
முதல் ப்ரகரணம்
ருக்கு ஸாமத்தாலே ஸரஸாமாய் ஸ்தோபத்தாலே பரம்புமாபோலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவையாயிரமாயிற்று.
ஆனால் அந்த சதுஷ்டயத்திலே ருக்கு ஸாம ரூபேண விஸ்த்ருகமாமாகாரம் இங்குமொக்குமோ வென்னுமாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் - (ருக்கித்யாதி).
ஆனால் ருக்வேதமானது ஸாமவேதம் போன்று வடிவம் எடுத்து மலர்ந்து நிற்கும் தன்மை, நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு ப்ரபந்தங்களில் காணப்படுகிறதோ என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸாமஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வவிவரணமாய், “ருசஸ் ஸாம ரஸ:” என்கிறபடியே தனக்கு ரஸமாயிருந்துள்ள காந ரூபமான ஸாமத்தாலே ரஸஸஹிதமாய் “ஹாவு ஹாவு ஹாவு” இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்த்ருதமாமாபோலே ருக்வேத ஸ்தாநேயாயிருக்கிற “சொல்லார் தொடையலான” திருவிருத்தம் நூறு பாட்டும், “இசை கூட்டி” என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே ஸாமவேத ஸ்தாநேயாய், “அமர்சுவையாயிரம்” என்கிறபடியே ஸரஸமாயிருந்துள்ள வாயிரம் பாட்டாகப் பரம்பிற்றென்கை.
– ஸாமவேதத்தின் சுருக்கமாக உள்ள ருக்வேதமானது தனது விரிவாக உள்ளதும், சாந்தோக்ய உபநிஷத் – ருசஸ் ஸாம ரஸ: - ருக்வேதத்தின் ரஸம் (ஆதாரம் அல்லது உற்பத்தி அல்லது சுவை) ஸாமவேதம் ஆகும் - என்று கூறுவது போன்று தனக்கு ஆதாரமாக உள்ளதும் ஆகிய இசைவடிவமாக உள்ள ஸாமவேதத்தால் சுவை நிறைந்ததாக, “ஹாவு ஹாவு ஹாவு” என்பது போன்று இசைச்சொற்களால் விரிந்து நிற்கிறது. இது போன்றே ருக்வேதத்தின் இடத்தில் வைக்கப்பட்டுள்ள திருவிருத்தம் (100) - சொல்லார் தொடையலான - என்பதற்கு ஏற்ப உள்ள திருவிருத்தத்தின் நூறு பாசுரங்களும், திருவாய்மொழி (2-4-11) - இசை கூட்டி - என்பதற்கு ஏற்ப இசையில் சேர்ந்தவுடன் ஸாமவேதத்தின் இடத்தை அடைந்து, திருவாய்மொழி (1-3-1) – அமர்சுவை ஆயிரம் - என்பதற்கு ஏற்ப சுவையுடன் கூடி நிற்கும் ஆயிரம் பாசுரங்களாக விரிந்து நின்றது என்று கருத்து.