Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 50)

முதல் ப்ரகரணம்

இயற்பா மூன்றும் வேதத்ரயம்போலே; பண்ணார், பாடல் பண்புரை யிசைகொள் வேதம் போலே.

திருவாய்மொழி ஒன்றுக்குமன்றே வேதத்வம் ஸாதித்தது; இவருடைய ப்ரபந்தங்கள் நாலுக்குமொக்குமிறே. ஆகையிறே, “வேதசதுஷ்டய” இத்யாதி வாக்யத்தில் இவர் ப்ரபந்தங்கள் நாலையும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக வருளிச்செய்தது. அதில் எந்த ப்ரபந்தம் எந்த வேதத்தினுடைய ஸ்தாநத்திலே யென்ன வருளிச்செய்கிறார் - (இயற்பாவித்யாதி).

இப்படியாக உரைக்கப்பட்ட “வேதங்களாக உள்ள தன்மை” என்பது நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு மட்டும் அல்ல; அவர் அருளிச்செய்த நான்கு ப்ரபந்தங்களுக்கும் உண்டு. அதனால்தான் சூர்ணை (43) – வேதசதுஷ்டய - என்பதன் மூலம் இருவருடைய நான்கு ப்ரபந்தங்களையும் நான்கு வேதங்களுடைய இடத்தில் வைத்து அருளிச்செய்தார். இந்த ப்ரபந்தங்களில் எந்த ப்ரபந்தம் எந்த வேதத்தில் வைக்கப்படுகிறது என்று அருளிச்செய்கிறார்.

– அதாவது, இயற்பாவான திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி யென்கிற ப்ரபந்தங்கள் மூன்றும் அடைவே ருக் யஜுர் அதர்வணங்களாகிற மூன்று வேதத்தினுடைய ஸ்தாநத்திலே; “பண்ணார் பாடல்” என்று பண்ணோடே சேர்ந்திருந்துள்ள இசையையுடைய திருவாய்மொழி, “பண்புரை வேதம்” என்றும், “இசை கொள் வேதம்” என்றும் பண்ணையும் இசையையுடைத்தான ஸாமவேதம் போலே யென்கை. வ்யாக்க்யாநங்களில் “பண்புடை வேதம்” என்றொழிய “பண்புரை வேதம்” என்று பாடமும், “இசைகொள் வேதம்” என்கிறதுக்கு ஸாமவேத பரத்வமும் கண்டதில்லையேயாகிலும், ஆப்ததமரான இவர் இப்ப்ரபந்தத்திலே இப்படி யருளிச் செய்கையாலே இப்படியும் கொள்ளவேணும். அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் ஸாமவேத வைலக்ஷண்யத்தைப்பற்ற இத்தைச் சொன்னதேயுள்ளது. மற்றையவற்றுக்கும் இது உபலக்ஷணமென்று கொள்ளக் கடவது. – (பண்புரை வேதம்) என்றது, பண்ணைப் புரைந்திருக்கிற வேதமென்றதாய் அப்பண்ணுக்காச்ரயமான வேதமென்றபடி. “இசைகொள் வேதம்” என்றது இசையை யுடைத்தான வேதமென்றபடி. “பண்ணார் பாடல்” என்று திருவாய்மொழி பண்ணையும் இசையையுமுடைத்தாகையாலே ஸாமவேதத்துக்குப் பண்ணும் இசையுமுண் டென்னுமிடம் அறிவிக்கைக்காக வாய்த்து ஸாமவேதபரமான சந்தைகள் வேண்டுவதுண்டாயிருக்க இவற்றை இப்போது இவரெடுத்தது.

இயற்பாவாகிய திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி ஆகிய மூன்று ப்ரபந்தங்களும் முறையே ருக், யஜுர் மற்றும் அதர்வண வேதங்களுடைய இடங்களில் வைக்கப்படுகின்றன. திருவாய்மொழி (10-7-5) – பண்ணார் பாடல் - என்பதற்கு ஏற்ப பண்ணோடு சேர்த்துள்ள இசையைக் கொண்டதான திருவாய்மொழியை, திருவாய்மொழி (6-6-5) – பண்புரை வேதம், பெரியதிருமொழி (5-3-2) – இசைகொள் வேதம் - என்பதற்கு ஏற்ப உள்ளதான பண் மற்றும் இசை ஆகியவற்றுடன் கூடியதான ஸாமவேதத்தின் இடத்தில் வைத்தல் வேண்டும். ஆனால் திருவாய்மொழிக்கான வ்யாக்யானத்தில், “பண்புடை வேதம்” என்று காணப்படுகிறதே அல்லாமல் “பண்புரை வேதம்” என்று இல்லை; மேலும் “இசைகொள் வேதம்” என்பதற்கான வ்யாக்யானத்தில் ஸாமவேதம் என்ற தன்மையும் கூறப்படவில்லை என்ற சந்தேகங்கள் எழலாம். இவ்விதம் கூறப்படவில்லை என்றாலும், மிகுந்த நம்பிக்கைக்கு உரிய நம்மாழ்வாருடைய ப்ரபந்தங்களில் இவ்விதம் அருளிச்செய்கையால், இப்படியே கொள்ளவேண்டும். “பண்புரை வேதம், இசைக்கொள் வேதம்” என்றுள்ள இடங்களில் ஸாமவேதத்தின் மேன்மையைக் கருத்தில் கொண்டு ஸாமவேதத்தினை அருளிச்செய்தார்; இதனை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு மற்ற வேதங்களையும் கொள்ளவேண்டும். “பண்புரை வேதம்” என்று கூறப்பட்டது ஏன் என்றால் பண்ணைப் புரைந்துள்ள வேதம் என்ற பொருள்படும்படி, பண்ணுக்கு அண்டி நிற்கும்படியான வேதம் என்று கருத்து. “இசைகொள் வேதம்” என்றால் இசையுடன் சேர்ந்துள்ள வேதம் என்று கருத்து. ஸாமவேதத்தை எடுத்துக் காண்பிக்கின்ற பல பதங்கள் பல ப்ரபந்தங்களில் ஆங்காங்கு காணப்பட்டாலும் “பண்புரைவேதம், இசைகொள் வேதம்” என்பதை மட்டுமே இவர் அருளிச்செய்ததன் கருத்து என்ன? அதாவது “பண்ணார் பாடல்” என்று கூறுவதற்கு ஏற்ப திருவாய்மொழியானது பண் மற்றும் இசை ஆகிய இரண்டையும் அடங்கியது என்பதால், ஸாமவேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்று உணர்த்துவதற்காக ஆகும்.