Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 49)
முதல் ப்ரகரணம்
உறக்கந்தலைக் கொண்ட பின்னை மறைநான்குமுணர்ந்த தங்களப்பனொடே யோதின சந்தச்சதுமுகன் சலங்கலந்த வெண்புரிநூல் மானுரி திரிதந்துண்ணும் காமனுடலிருக்கிலங்கு ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப்போலே ஆதுமில் காலத்தெந்தையான வாய்முதலப்பன் பரமகுருவாய் இராப்பகல் முன்சொல்லக் கற்றனமே யென்றவிவரும் நாவினால் நன்மையாலென்று மோதவல்ல பிராக்களைக் கன்மின்க ளென்று சொல் பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே ஆதர்வணாதிகள்போலே இதுவும் பேர்பெற்றது.
ஏவம்பூதமானவிது பகவத்ப்ரஸாதத்தாலே ஆழ்வாருக்கு ஸித்தித்து ஆழ்வார் ப்ரஸாதத்தாலே இவ்வருகுள்ளார்க்கு உபஜீவ்யமாய் இவரையிட்டு நிரூபிக்கும்படி யானமையை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் - (உறக்கமித்யாதியால்).
இப்படிப்பட்டதான தமிழ்வேதமாகிய ப்ரபந்தங்கள் ஸர்வேச்வரனுடைய க்ருபை காரணமாக ஆழ்வாருக்குக் கிட்டியது; ஆழ்வாருடைய க்ருபை காரணமாக இங்கு உள்ளவர்கள் கரையேறக் காரணமாக உள்ளது; மேலும் இது இவருடைய திருநாமத்தோடு சேர்த்து உரைக்கப்படுகிறது; இவற்றுக்கு உதாரணங்கள் காண்பிக்கிறார்.
– அதாவது, “உன்னியயோகத்துறக்கம் தலைக்கொண்ட பின்னை” என்கிறபடியே ஸம்ஹ்ருதி ஸமயத்தில் நாமரூப விபாகாநர்ஹமாய் ஸதவஸ்த்தமாய்க் கிடந்தவித்தை ஸ்ருஷ்டிகாலம் வந்தவாறே விபக்தமாக்கி மஹதாதி ஸகல தத்வங்களையும் அண்டத்தையும் ஸ்ருஷ்டித்து சதுர்முக ஸ்ருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே “இவை நல்வழியாய்க் கரை சேரும் விரகேதோ” என்று அநுஸந்திக்கையாகிற யோகநித்ரையைச் செய்த வநந்தரம், “உணர்ந்தாய் மறைநான்கும்” என்கிறபடியே ஸுப்த ப்ரபுத்த ந்யாயத்தாலே ஸம்ஸ்கார கதமாய்க் கிடந்த நாலு வேதங்களையும் ஆநுபூர்வி தப்பாதபடி ஸ்மரித்த. – “திசைமுகனார் தங்களப்பன்” என்கிறபடியே தனக்கு ஜநகனான ஸர்வேச்வரனோடே, “யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை” என்னும்படி ஓதின “சந்தச் சதுமுகன்” என்கிறபடியே ச்சந்தஸ்ஸை நிரூபகமாகவுடைய சதுர்முகன், – “சலங்கலந்த செஞ்சடை”, “வெண்புரிநூல் மார்வன்”, “மானுரி யதளுமுடையவர்”, “பிறர் மனை திரிதந்துண்ணும்”, “காமனுடல் கொண்ட தவத்தார்”, “இருக்கிலங்கு திருமொழிவா யெண் தோளீசர்” என்று நித்ய ஸ்நாநோபவீத க்ருஷ்ணாஜிந தாரண பிக்ஷாந்ந போஜந இந்த்ரியஜய ஸதாத்யயந பரத்வங்களான ப்ரஹ்மசர்ய லக்ஷண யுக்தனாய், “ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய” என்கிறபடியே தனக்கு ஜ்யேஷ்ட்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும், “சரணாமறை பயந்த” என்கிறபடியே புருஷார்த்த ததுபாய ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப்போலே. – “ஆதுமில் காலத்தெந்தை” என்று “ஒன்றும் தேவும்” இத்யாதிப்படியே ஒன்றுமில்லாத ஸம்ஹார காலத்திலே நாமரூபங்களை இழந்தவோபாதி ஸத்தையுமிழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக்கொண்டு நோக்கி மீளவும் கரணாதிகளைத் தந்து ஜ்ஞாந விகாஸத்தைப் பண்ணின “வாய் முதலப்பன்” என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன். – “பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி” என்கிறபடியே தானே ஆசார்யனாய், “இராப்பக லோதுவித்து” என்கிறபடியே திவாராத்ர விபாகமற, “என் முன் சொல்லும்” என்கிறபடியே முன்னுருச் சொல்ல, “திருநாமச்சொல் கற்றனமே” என்று அநூச்சாரணம் பண்ணினேனென்று இப்படியே அவனோடே ஓதினவிவரும், – “நாவினால் நவிற்றின்ப மெய்தினேன்” என்று தொடங்கி, “குருகூர்நம்பி பாவினின்னிசை பாடித் திரிவன்” என்று ஸ்வாசார்ய ப்ரேமத்தையும், “நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதும்” படியான என்னை, “அன்னையா யத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்” என்று க்ருதஜ்ஞதையை முன்னிட்டுக் கொண்டு, “ஓதவல்ல பிராக்கள்” என்று இத்தை அப்யஸிக்கவல்ல உபகாரகரென்னும்படி ச்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை, “கன்மின்களென்றும்மை யான்” என்கிறபடியே “இத்தை அப்யஸியுங்கோள்” என்று சொல்லி “சொல் பயிற்றிய” என்கிறபடியே இச்சப்தத்தை அப்யஸிப்பிக்க, – வேதமானது “ஓதுவாரோத்து” என்று அத்யேதாக்களையிட்டு நிரூபிக்கப்படுமதாகையாலே ஆதர்வணம், தைத்திரீயம், காண்வம் என்று பேர் பெற்றாப் போலே இவர் இதுக்கு ப்ரதமாத்யேதாவானது கொண்டு இதுவும் “சடகோபன் சொல்” என்று பேர் பெற்றதென்கை. ஆக “அத்யயந” இத்யாதி வாக்யத்தில் “சந்தங்களாயிரம்” என்று ப்ரஸ்துதமான திருவாய்மொழியின் வேதத்வத்தை, “எவ்வுலகத்து” இத்யாதி வாக்யம் தொடங்கி இவ்வளவாக ஸாதித்தாராய்த்து.
பெரியதிருமடல் (8) - உன்னியயோகத்துறக்கம் தலைக்கொண்ட பின்னை - என்பதற்கு ஏற்ப ப்ரளய காலத்தில் பெயர் மற்றும் உருவம் ஏதும் இல்லாமல் (அல்லது பெயர், உருவம் கொண்டு பிரித்துக் காண்பிக்க இயலாமல் ஒன்றாக உள்ள), ஸத் என்பது மட்டுமே உள்ளது என்பது போன்று கிடந்த அனைத்தையும், ஸ்ருஷ்டி காலம் வந்தவுடன் ஸர்வேச்வரனாகிய தன்னைக் காட்டிலும் வேறாக்கி, மஹத் உள்ளிட்ட அனைத்து தத்வங்களையும் மற்றும் அண்டத்தையும் ஸ்ருஷ்டிக்கிறான்; அதனைத் தொடர்ந்து நான்முகனைப் படைப்பதற்கு முன்பாக ப்ரளய வெள்ளத்தில், “இவை அனைத்தும் நல்ல மார்க்கத்தில் செல்வதற்கான உபாயம் என்னவோ” என்று எண்ணியபடி கிடப்பதான யோகநித்திரையில் உள்ளான். அதன் பின்னர், இரண்டாம் திருவந்தாதி (48) - உணர்ந்தாய் மறைநான்கும் - என்பதற்கு ஏற்ப “விழித்திருக்கும்போது எதனை எண்ணியபடி உள்ளானோ, அதனையே உறங்கி எழுந்த பின்னரும் எண்ணியபடி உள்ளான்” என்ற ஸுப்த ப்ரபுத்த ந்யாயம் காரணமாக, தன்னுடைய நினைவின் காரணமாகவே உள்ளதான நான்கு வேதங்கலையும், அவற்றின் உச்சரிப்பு முறை தவறாதபடி நான்முகனுக்கு உணர்த்துகிறான் (இவ்விதம் நான்முகன் உணர்ந்தான் என்பதையே சூர்ணையில் “மறைநான்கும் உணர்ந்த” என்றார்). – (அடுத்து யார் இவ்விதம் உணர்ந்தார்கள் என்ற கேள்விக்கு “நான்முகன்” என்று விடை அருளிச்செய்கிறார்) பெரியதிருமொழி (2-2-7) - திசைமுகனார் தங்களப்பன் - என்பதற்கு ஏற்ப தனது தந்தையான ஸர்வேச்வரனுடன், ச்வேதாஸ்வதர உபநிஷத் – யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை - எந்தப் பரமபுருஷன் நான்முகனுக்கு வேதங்களை உபதேசம் செய்கிறானோ – என்பதற்கு ஏற்ப ஓதின, பெரியாழ்வார் திருமொழி (2-5-8) - சந்தச் சதுமுகன் – என்பதற்கு ஏற்ப வேதங்களைத் தனக்கு அடையாளமாகக் கொண்ட நான்முகன். (அடுத்து நான்முகன் செய்தது என்ன என்பதை அருளிச்செய்கிறார்) திருச்சந்தவிருத்தம் (113) - சலங்கலந்த செஞ்சடை - என்பதற்கு ஏற்ப கங்கை நீரால் எப்போதும் ஸ்நாநம் செய்தபடி உள்ளவனும், முதல் திருவந்தாதி (46) - வெண்புரிநூல் மார்வன் – என்பதற்கு ஏற்ப யஜ்ஞோபவீதம் தரித்தவனும், பெரியதிருமொழி (10-9-4) – மானுரி யதளுமுடையவர் – என்பதற்கு ஏற்ப மான் தோலை ஆடையாக அணிந்துள்ளவனும், திருக்குறுந்தாண்டகம் (19) - பிறர் மனை திரிதந்துண்ணும் - மற்றவர்கள் வீட்டில் பிச்சை எடுத்து உண்பவனும், நான்முகன் திருவந்தாதி (78) - காமனுடல் கொண்ட தவத்தார் - என்பதற்கு ஏற்ப ஐந்து புலன்களையும் வென்றவனும், பெரியதிருமொழி (6-6-8) - இருக்கிலங்கு திருமொழிவா யெண் தோளீசர் - என்பதற்கு ஏற்ப எப்போதும் வேதங்களை ஓதியபடி உள்ளதன் காரணமாக ப்ரம்மசர்ய நிலைக்குத் தகுதியானவனும், ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய - நான்முகனுக்கு முதல் புத்திரன் - என்றுள்ளவனும் ஆகிய சிவன் முதலானவர்களுக்கு, முதல் திருவந்தாதி (60) - சரணாமறை பயந்த - என்பதற்கு ஏற்ப புருஷார்த்தம் மற்றும் அதன் உபாயம் ஆகியவற்றுக்குத் தேவையான ஞானம் அளிக்கவல்ல வேதத்தை ஓதுவித்தான். (இதே போன்று தமிழ் வேதத்தைக் குறித்து அடுத்து கூறுகிறார்) இதே போன்று. திருவாய்மொழி (3-4-4) - ஆதுமில் காலத்தெந்தை - என்று, திருவாய்மொழி (4-10-1) - ஒன்றும் தேவும் - என்று கூறுவதற்கு ஏற்ப, வேறு ஏதும் இல்லாத ஸம்ஹார காலத்தில், பெயர் மற்றும் ரூபங்களை இழந்த ஜீவாத்மாக்கள் தங்களுடைய இருப்பு என்பதை மட்டும் இழக்காமல் இருந்தபோது, அவற்றுக்குத் தந்தை என்ற முறை காரணமாக, அவை படும் துன்பங்கள் அனைத்தையும் தன் மேலிட்டுக் கொண்டு, கருணையுடன் நோக்கி, அவற்றுக்கு மீண்டும் கைகால் போன்றவற்றை அளித்து, அவற்றுக்கு ஞான மலர்ச்சியை ஏற்படுத்தி, திருவாய்மொழி (7-9-3) – வாய் முதலப்பன் - என்பதற்கு ஏற்ப இயல்பான உதவிகள் செய்யும் ஸர்வேச்வரன். (ஸர்வேச்வரன் தமிழ் வேதம் குறித்துச் செய்தது என்ன என்று கூறுகிறார்) பெரியாழ்வார் திருமொழி (5-2-8) – பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி - என்பதற்கு ஏற்ப, தானே ஆசார்யனாக வந்து, பெரியாழ்வார் திருமொழி (5-2-3) - இராப்பகல் ஓதுவித்து - என்பதற்கு ஏற்ப இரவு மற்றும் பகல் என்ற வேறுபாடு ஆராயாமல், திருவாய்மொழி (7-9-2) – என் முன் சொல்லும் - என்பதற்கு ஏற்றபடி அவன் வேதங்களை உரைக்க, திருவிருத்தம் (64) - திருநாமச்சொல் கற்றனமே – என்பதற்கு ஏற்ப “தொடர்ந்து நான் உரைத்தேன்” என்று இவ்விதம் அவனுடன் இணைந்து ஓதிய நம்மாழ்வாராகிய இவரும். – (நம்மாழ்வார் செய்தது என்ன என்று அருளிச்செய்கிறார்) கண்ணிநுண் சிறுத்தாம்பு (2) - நாவினால் நவிற்றின்ப மெய்தினேன் - என்று தொடங்கி, கண்ணிநுண் சிறுத்தாம்பு (2) – குருகூர்நம்பி பாவினின்னிசை பாடித் திரிவன் - என்று கூறுவதற்கு ஏற்ப தனது ஆசார்யனிடம் கொண்டுள்ள ப்ரேமத்தையும்; கண்ணிநுண் சிறுத்தாம்பு (4) - நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் - என்னும்படியான என்னை, கண்ணிநுண் சிறுத்தாம்பு (4) - அன்னையா யத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் - என்பதற்கு ஏற்ப, எனது அடிமைத்தனம் என்னும் ஒன்றை மட்டுமே கொண்டு என்னைப் பாதுகாத்தல் என்பதை நம்மாழ்வார் செய்வது கொண்டு அத்தகைய செய்ந்நன்றி அறிதலையும் [மேலே ஐந்து வரிக்கு முன்பாகக் கூறப்பட்ட ஆசார்யனிடம் கொண்ட ப்ரேமை மற்றும் செய்ந்நன்றி அறிதல் ஆகிய இரண்டையும்] முன்னிட்டுக்கொண்டு, திருவாய்மொழி (9-1-11) - ஓதவல்ல பிராக்கள் - என்பதற்கு ஏற்ப இந்தத் தமிழ்வேதத்தைக் கற்கவல்ல உபாகாரகர்கள் (அதாவது தாங்கள் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு உபதேசம் செய்யவல்லவர்கள்) என்னும்படி உள்ள மதுரகவியாழ்வார் போன்றவர்களை, திருவாய்மொழி (6-8-6) - கன்மின்களென்றும்மை யான் – என்று கூறுவதற்கு ஏற்ப, “இதனைத் தொடர்ந்து பயில்வீர்களாக” என்று கூறி, திருவாய்மொழி (9-5-8) - சொல் பயிற்றிய – என்பதற்கு எற்ப இந்தத் தமிழ் வேதத்தை பயில்விக்க. (இவ்விதம் நம்மாழ்வார் செய்ததால் நிகழ்ந்தது என்ன என்று அருளிச் செய்கிறார்) வேதங்கள், திருவாய்மொழி (3-1-6) – ஓதுவாரோத்து - என்பதற்கு ஏற்ப அவற்றை ஓதுகின்றவர்களில் தலைவராக உள்ளவர்களைக் கொண்டு அடையாளம் காண்பிக்கப்படுவதன் காரணமாக அவை “ஆதர்ணவம், தைத்திரீயம், காண்வம்” என்று பல்வேறு பெயர்கள் பெற்றன. இதே போன்று நம்மாழ்வார், தமிழ்வேதமாகிய இதனை முதலில் அருளிச்செய்ததன் காரணமாக இந்தத் தமிழ்மறையானது, திருவாய்மொழி (1-2-11) - சடகோபன் சொல் - என்று பெயர் பெற்றது. ஆக சூர்ணை (39) – எவ்வுலகத்து - என்று தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய, சூர்ணை (37) - அத்யயந – என்பதில் காணப்படும் “சந்தங்கள் ஆயிரம்” என்ற பதங்கள் மூலம் திருவாய்மொழிக்கு உணர்த்தப்பட்ட வேதத்தன்மையை நிரூபித்தார் என்று கருத்து.