Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 48)

முதல் ப்ரகரணம்

படைத்தான் கவியென்றபோதே இதுவும் யதாபூர்வ கல்பநமாமே.

இன்னும் இதினுடைய அநாதித்வ ஸூசகமான தொன்றை தர்சிப்பிக்கிறார் - (படைத்தானித்யாதி).

– மேலும் இந்தத் தமிழ் வேதமானது எல்லையற்ற காலமாகவே இருந்து வருகிறது என்பதை மறைமுகமாக உணர்த்தவல்ல ப்ரமாணத்தைக் காண்பிக்கிறார்.

– அதாவது, “உலகம் படைத்தான் கவி” என்கையாலே “ஒன்றியொன்றி யுலகம் படைத்தான்” என்கிறபடியே ஒருப்பட்டொருப்பட்டு மேன்மேலும் லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுமிடத்தில், “ஸூர்யாசந்த்ரமஸௌ தாதா யதாபூர்வ மகல்பயத்” என்கிறபடியே ஸ்ருஷ்டிதோறும் சந்த்ரஸூர்யாதி ஸகல பதார்த்தங்களும் யதாபூர்வ கல்பநமாய் வருமாபோலே த்ராவிட வேதமான இப்ப்ரபந்தமும் ஸ்ருஷ்டிதோறும் யதாபூர்வ கல்பநமாய் வருமென்று தோன்றுமிறே யென்கை.

திருவாய்மொழி (3-9-10) - உலகம் படைத்தான் கவி - என்று கூறும்போது, திருவாய்மொழி (3-9-10) - ஒன்றியொன்றி யுலகம் படைத்தான் - என்று கூறுகிறார்; இதன் கருத்து - ப்ரளயத்தின் பின்னர் உலகைப் படைக்கும்போது முன்னர் இருந்தது போன்று படைக்கும் ஸர்வேச்வரனைக் குறித்து கவி பாடுபவன் - என்பதாகும். அதாவது மீண்டும் உலகைப் படைக்கும்போது தைத்திரீயத்தில் - ஸூர்யாசந்த்ரமஸௌ தாதா யதாபூர்வ மகல்பயத் - சூரியனையும் சந்த்ரனையும் முன்பு இருந்த கல்பம் போன்றே படைத்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப, சந்த்ரன் சூரியன் போன்ற அனைத்து வஸ்துக்களும் முன்னர் இருந்த கல்பத்தில் எவ்விதம் இருந்தனவோ அது போன்றே இருந்து வருவது போன்று, தமிழ் வேதமான இந்த ப்ரபந்தமும், படைப்பு தோன்றும் முன்னர் இருந்த கல்பங்களில் உள்ளது போன்றே மீண்டும் உண்டானது என்று கருத்து.