Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 47)
முதல் ப்ரகரணம்
நால்வேதங்கண்ட புராணரிஷி மந்த்ர தர்சிகளைப்போலே இவரையும் ரிஷி முநி கவி யென்னும்.
– பூர்வ ஸந்தர்ப்ப ப்ரக்ரியையை இவர் தர்சித்துப் பேசினதே யுள்ளதென்னு மிடத்தை அறிவிக்கிறார் (நால்வேதமித்யாதியால்).
முன்பு பல ரிஷிகளின் சொற்களைக் காணும்போது, அவற்றின் சேர்க்கை என்பது இவர் உரைத்தபடியே உள்ளது என்று நம்மாழ்வார் உரைத்த இடங்களைக் கூறுகிறார்.
– அதாவது “நால்வேதங் கண்டானே” என்னும்படி ஈச்வரன் தானடியில் செய்தாப்போலே நாலு வேதங்களையும் ஸாக்ஷாத்கரித்து, “அஷ்டாதச புராணநாம் கர்த்தா ஸத்யவதீஸுத:” என்கிறபடியே அஷ்டாதச புராணங்களினுடைய ஆநுபூர்வியையும் தர்சித்துச் சொன்ன வேதவ்யாஸ பகவானைச் சொல்லுகிறது. “நால்வேதங் கண்டான்” என்கிறவிடத்தில் ஸ்வேந ரூபேண நின்று தர்சித்தமையன்றிக்கே வ்யாஸ ரூபேண நின்று தர்சித்தமைதன்னைச் சொல்லுகிறதென்று இவருக்குக் கருத்தாகவுமாம். “ஸங்கீர்ண புத்தயோ தேவா ப்ரஹ்மருத்ர புரஸ்ஸரா: சரண்யம் சரணம் ஜக்மு: நாராயணமநாமயம்; தைர் விஜ்ஞாப்தகார்யஸ்து பகவாந் புருஷோத்தம: அவதீர்ணோ மஹாயோகீ ஸத்யவத்யாம் பராசராத்” என்றும், “க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்” என்றும் பகவதாவேச அவதாரதயா பகவான் தானாகச் சொல்லக் கடவதிறே. இப்படியிருந்துள்ள ஸ்ரீவேதவ்யாஸ பகவானை வேதங்களின் பூர்வ ஸித்தாநுபூர்வியை தர்சித்துச் சொன்னபடியாலே, “தர்சநாத் ருஷி: மநநசீலோ முநி: கவி: க்ராந்த தர்சீ” என்கிறவர்த்தங்களை நினைத்துக்கொண்டு, “ச்ரூயதாம் ஸிம்ஹநாதோயம் ருஷே ஸ்தஸ்ய மஹாத்மந: தர்மே சார்த்தேச காமே ச மோக்ஷே ச பரதர்ஷப” என்றும், “ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் யேந மஹாத்மா, ஸோயம் நாராயணஸ் ஸாக்ஷாத் வ்யாஸ ரூபீ மஹாமுநி:” என்றும், “ஸாக்ஷால்லோகாத் பாவாமாந: கவிமுக்க்ய: பராசர்ய:” என்றும் ருஷி முநி கவி என்றும் சொல்லிற்றிறே. மந்த்ரதர்சிகளானவர்களை பூர்வ ஸித்த ஸந்தர்ப்பத்தை ஸாக்ஷாத்கரித்துச் சொன்னவர்களென்னுமிடம் தோற்ற “நம ருஷிப்யோ மந்த்ர க்ர்த்ப்ய:” என்றும், “பகவாத் சௌநக முநி:” என்றுமித்யாதிகளிலே ருஷி முநி என்று சொல்லிற்றிறே. இவர்கள் விஷயத்திலும் கவி சப்த ப்ரயோகமுண்டாகில் வந்த ஸ்த்தலங்களிலே கண்டு கொள்வது. ஆக இப்படி இவர்களைச் சொன்னாப்போலே த்ராவிடமானவிதின் பூர்வ ஸித்தாநுபூர்வியை ஸாக்ஷாத்கரித்துப் பேசின இவ்வாழ்வாரையும் “ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ண தத்வமிவோதிதம், ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷித் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்” என்றும், “சடகோபமுநிம் வந்தே சடாநாம் புத்திதூஷகம் அஜ்ஞாநாம் ஜ்ஞாந ஜநகம்திந்த்ரிணீ மூல ஸம்ச்ரயம்” என்றும், “உலகம் படைத்தான் கவியாயினேற்கு” என்றும் முன்புண்டான ஸந்தர்ப்பத்தை தர்சித்துப் பேசினவரென்னுமிடம் தோற்ற ருஷி யென்றும், முனியென்றும், கவியென்றும் சொல்லுமென்கை.
“நால்வேதம் கண்ட புராணருஷி” என்று சூர்ணையில் கூறப்படுவது யார்? பெரியதிருமொழி (8-10-1) - நால்வேதங் கண்டானே - என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரன், தான் தொடக்கத்தில் அனைத்திற்கும் முன்பாகச் செய்தது போன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த, அஷ்டாதச புராணநாம் கர்த்தா ஸத்யவதீஸுத: - ஸத்யவதியின் புத்திரராகிய வ்யாஸர் பதினெட்டு புராணங்களையும் செய்தார் - என்பதற்கு ஏற்ப, பதினெட்டு புராணங்களையும் முன்னர் அவை இருந்த வரிசையைக் கண்டு உரைத்த வேதவ்யாஸ பகவானைக் கூறுகிறார். பெரியதிருமொழி (8-10-1) – நால்வேதங் கண்டான் - என்று கூறும்போது, ஸர்வேச்வரன் தன்னுடைய மேன்மையுடன் கூடிய ரூபத்துடன் நின்று பார்த்ததோடு மட்டும் அல்லாமல், வ்யாஸமுனிவரின் ரூபம் எடுத்தும் நின்று பார்த்தான் என்பதே திருமங்கையாழ்வாருடைய திருவுள்ளம் ஆகிறது. ஸங்கீர்ண புத்தயோ தேவா ப்ரஹ்மருத்ர புரஸ்ஸரா: சரண்யம் சரணம் ஜக்மு: நாராயணமநாமயம்; தைர் விஜ்ஞாப்தகார்யஸ்து பகவாந் புருஷோத்தம: அவதீர்ணோ மஹாயோகீ ஸத்யவத்யாம் பராசராத் - கலங்கின அறிவுள்ளவர்களான நான்முகன், சிவன் போன்ற தேவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களின் புகலிடமாகவும், எந்தவிதமான தோஷமும் அற்றவனாகவும் உள்ள ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகுந்தனர்; அவர்களுடைய விண்ணப்பத்திற்கு ஏற்ப புருஷோத்தமன் ஸத்யவதியின் புத்திரனாக பராசரமுனிவர் மூலம் மஹாயோகியான வ்யாஸமுனிவராக அவதரித்தான் - என்றும், க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் - க்ருஷ்ண த்வைபாயநர் என்னும் திருநாமம் கொண்ட வ்யாஸ பகவானை நாராயணனாகவே அறியவேண்டும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடைய அவதாரமாகவே உள்ளதால், பகவான் “இது நானே” என்று கூறிக்கொள்வது வ்யாஸமுனிவரை ஆகும். இப்படிப்பட்ட வேதவ்யாஸ பகவான், வேதங்கள் முன்பு எவ்விதம் இருந்தன என்று அவைகளை வரிசைப்படுத்திக் கண்டார்; இதன் காரணமாக வேதவ்யாஸரைக் குறித்து, தர்சநாத் ருஷி: மநநசீலோ முநி: கவி: க்ராந்த தர்சீ - காண்பதால் ரிஷி, மனனம் செய்யும் திறனால் முனிவன், நூல்களை ஆராய்வதால் கவிஞன் - என்று கூறப்படும் பொருளை எண்ணியே கீழே உள்ள வரிகளில் உள்ளது போன்று கூறினர்: மஹாபாரதம் - ச்ரூயதாம் ஸிம்ஹநாதோயம் ருஷே ஸ்தஸ்ய மஹாத்மந: தர்மே சார்த்தேச காமே ச மோக்ஷே ச பரதர்ஷப – ஜனமேஜயரே! அறம், பொருள், காமம், மோக்ஷம் ஆகிய நான்கிலும் மஹாத்மாவான வ்யாஸரிஷியின் ஸிம்ஹநாதம் போன்ற இது கேட்கப்படட்டும் (ரிஷி என்றது காண்க). மஹாபாரதம் - ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் யேந மஹாத்மா, ஸோயம் நாராயணஸ் ஸாக்ஷாத் வ்யாஸ ரூபீ மஹாமுநி: – எந்த மஹாத்மாவால் இப்படியாகப் பாரதம் கூறப்பட்டதோ, அந்த வ்யாஸமுனி (முனி என்றது காண்க). மஹாபாரதம் – ஸாக்ஷால்லோகாத் பாவாமாந: கவிமுக்க்ய: பராசர்ய: – உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்கவல்ல கவிகளில் முதன்மையானவர் வ்யாஸர் (கவி என்றது காண்க). இப்படியாக இந்த மூன்று வரிகளில் ரிஷி, முனி மற்றும் கவி என்று உரைத்தது காண்க. மந்த்ரங்களில் உள்ளதை ஆராய்ந்து அறிந்து கொண்டு அவற்றை எடுத்துக் கூறியவர்களை, “அவர்கள் முன்பே உள்ளதான சொற்களின் சேர்க்கையை அறிந்து கொண்டு உரைத்தவர்கள்” என்னும் பொருள் விளங்கும்படியாக, நம ருஷிப்யோ மந்த்ர க்ர்த்ப்ய: - மந்த்ரங்களை உரைத்த ரிஷிகளுக்கு நமஸ்காரம் - என்றும், பகவாத் சௌநக முநி: - பகவானாகிய ஸௌநக முனிவர் - என்றும் அவர்களைக் குறித்து “ரிஷி, முனி” போன்ற பதங்கள் உபயோகப்படுத்தப்பட்டது; இது போன்று மந்த்ரங்கள் உரைத்த இவர்கள் குறித்து “கவி” என்னும் பதமும் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டதைக் காணலாம். – இவ்விதம் இவர்களைக் கூறியது போன்று, தமிழ் வேதமாகிய இவற்றை முன்பே இருந்த விவரங்களை அடியொட்டி அருளிச்செய்த ஆழ்வார் குறித்து கீழே உள்ள வரிகள் காண்க: ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1-6) - ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ண தத்வமிவோதிதம், ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷித் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் - ஸர்வேச்வரன் குறித்து தமிழில் உள்ள ஆயிரம் பாசுரங்களை உள்ளடக்கிய திருவாய்மொழி என்னும் உபநிஷத்தை யார் அறிந்தாரோ, அப்படிப்பட்டவரும், இந்த உலகில் உள்ள க்ருஷ்ண பக்தி முழுவதும் ஒரு உருவம் எடுத்தது போன்று அவதரித்தவரும் ஆகிய ரிஷியாகிய நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறோம். பராங்குச அஷ்டகம் – சடகோபமுநிம் வந்தே சடாநாம் புத்திதூஷகம் அஜ்ஞாநாம் ஜ்ஞாந ஜநகம்திந்த்ரிணீ மூல ஸம்ச்ரயம் - சடம் என்னும் வாயுவை வென்றவரும், அறிவற்றவர்களுக்கு ஞானம் அளிப்பவரும் புளியமரத்தின் கீழ் எழுந்தருளியுள்ளவரும் ஆகிய முனிவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன். திருவாய்மொழி (3-9-10) – உலகம் படைத்தான் கவியாயினேற்கு இப்படியாக உள்ள வரிகளில் “முன்னர் இருந்து வரும் சொற்களுடைய சேர்க்கையை அனுபவித்து உரைத்தவர்” என்னும் கருத்து வெளிப்படும்படியாக நம்மாழ்வாரையும் வ்யாஸபகவான் போன்றே ரிஷி என்றும், முனி என்றும், கவி என்றும் சொல்வது காண்க.