Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 46)

முதல் ப்ரகரணம்

சொல்லப்பட்டவென்றவிதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தா னென்றது போலே.

– ஆனால், அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாயிருக்க வேண்டாவோ? ஆழ்வார் இதுக்கு கர்த்தா வென்கையால் நித்யத்வாபௌருஷேயத்வங்கள் கூடாதீயென்னச் சொல்லுகிறது – (சொல்லப்பட்ட வித்யாதி).

இந்த வடமொழி வேதங்கள் யாராலும் செய்யப்படாதவை என்ற தன்மை கொண்டுள்ளது போன்று இந்தத் தமிழ் வேதங்களும் யாராலும் இயற்றப்படாதவை என்ற தன்மை கொண்டிருக்க வேண்டாமோ? ஆனால் நம்மாழ்வார் இதனை அருளிச்செய்தார் என்று கூறும்போது “எப்போதும் இருத்தல், யாராலும் இயற்றப்படாமல் இருத்தல்” போன்ற தன்மைகள், தமிழ் வேதம் என்னும் இதற்குப் பொருந்தது அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “சடகோபன் சொல்லப்பட்டவாயிரம்” என்று இதில் ஆழ்வாருக்குச் சொன்ன கர்த்ருத்வம், “அநாதிநிதநா ஹ்யாஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா” என்று ஸ்ம்ருதி அந்த வேதத்தை ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்தானென்று சொன்ன வோபாதி யென்கை. ஸ்வயம்பூ ஸ்ருஷ்டித்தானென்னாதே “படைத்தான்” என்றது, “முன்னம் திசைமுகனைத்தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்” என்ற ஆழ்வார் ஸூக்தியையும் தர்சிப்பிக்கைக்காக. அநாதி நிதநமான ஸந்தர்ப்பம் ப்ரஹ்மாவின் வாக்கில்நின்றும் ஆவிர்ப்பவித்த மாத்ரங் கொண்டு ப்ரஹ்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வத்தோபாதி இதிலும் ஆழ்வார்க்குச் சொன்ன கர்த்ருத்வமாகையாலே இத்தால் இதனை நித்யத்வாபௌருஷேயத்வ ஹாநி வாராதென்று கருத்து.

திருவாய்மொழி – (8-10-11) - சடகோபன் சொல்லப்பட்டவாயிரம் - என்று இதனை ஆழ்வார் அருளிச்செய்தார் என்றுள்ள தன்மையானது, அநாதிநிதநா ஹ்யாஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா – எப்போதும் இருந்த வருகின்ற வேதங்கள் நான்முகனால் உணடாக்கப்பட்டது – என்று ஸ்ம்ருதியானது அந்த வடமொழி வேதங்களை நான்முகன் உண்டாக்கினான் என்று கூறுவது போன்றே ஆகும். சூர்ணையில் “ஸ்வயம்பூ ஸ்ருஷ்டித்தான்” என்று கூறாமல், “ஸ்வயம்பூ படைத்தான்” என்றது ஏன் என்றால், பெரியதிருமடல் (10) - முன்னம் திசைமுகனைத்தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் - என்றுள்ள ஆழ்வார் பாசுரத்தை உணர்த்துவதற்காகவே ஆகும். “எப்போதும் இருந்து வருவதாகும்” என்னும் தன்மையுள்ள வேதங்கள், நான்முகன் வாக்கிலிருந்து வெளிப்பட்டவுடன், அதனை மட்டுமே கருத்தில் கொண்டு, நான்முகனுக்கு அவற்றை உண்டாக்கியதில் பங்கு உண்டு என்று கூறுவது போன்று, ஆழ்வாரின் மூலம் இவை உண்டானவை என்று கூறுவதால் மட்டுமே இந்தத் தமிழ் வேதங்களுக்கு “எப்போதும் இருந்து வருதல், யாராலும் செய்யப்படாதவை” போன்ற தன்மைகளின் பொருந்தாமை என்பது ஏற்படாது.