Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 45)
முதல் ப்ரகரணம்
வேதநூல் இருந்தமிழ்நூல் ஆஜ்ஞையாணை வசையி லேதமில் சுருதி செவிக்கினிய ஓதுகின்றதுண்மை பொய்யில்பாடல் பண்டைநிற்கும் முந்தையழிவில்லாவென்னும் லக்ஷணங்க ளொக்கும்.
– ஆனால், அந்த வேத வைபவத்துக்கு உடலான சாஸ்த்ரத்வ பகவதாஜ்ஞா ரூபத்வ நிர்தோஷத்வ ச்ருதித்வ ஸத்யத்வாநாதி நிதநத்வங்கள் இதுக்குமுண்டோ வென்னச் சொல்லுகிறது – (வேதநூலித்யாதி).
– ஆனால், வேதங்களுடைய ஏற்றத்திற்கு அவை சாஸ்த்ரமாக இருத்தல், ஸர்வேச்வரனுடைய ஆணைகளாக இருத்தல், தோஷம் அற்றதாக இருத்தல், செவி மூலம் கேட்பதால் தொடர்ந்து வருதல், மெய்ம்மையாக இருத்தல் போன்ற பல தன்மைகள் காரணங்களாக உள்ளன. இது போன்ற தன்மைகள், தமிழ்வேதமாகிய நம்மாழ்வாருடைய ப்ரபந்தங்களுக்கு உள்ளதோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “வேத நூல்” என்று அத்தை வேதசாஸ்த்ர மென்றாப்போலே இத்தையும், “இருந்தமிழ்நூல்” என்று பெரிய த்ராவிட சாஸ்த்ரமென்கையாலும்; அத்தை “ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்று பகவதாஜ்ஞா ரூபமாகச் சொன்னாப்போலே, இத்தை “ஆணையாயிரம்” என்று ததாஜ்ஞா ரூபமாகச் சொல்லுகையாலும்; அத்தை “வசையில் நான்மறை” என்று விப்ரலம்பாதி தோஷ ரஹிதமென்றாப்போலே, இத்தையும் “ஏதமில் லாயிரம்” என்று நிர்தோஷமாகச் சொல்லுகையாலும்; அத்தை “சுடர்மிகு சுருதி” என்று “ச்ரூயதே இதி ச்ருதி:” என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்திலே ச்ரவணேந்த்ரியத்தாலே க்ரஹிக்கப்படுமதாகச் சொன்னாப்போலே, இத்தையும் “செவிக்கினிய செஞ்சொல்லே” என்று ச்ராவ்யமாகச் சொல்லுகையாலும்; அத்தை “வேத நூலோதுகின்ற துண்மை” என்று சொல்லுமதிலொரு பொய்யில்லை யென்றாப்போலே, இத்தையும் “பொய்யில் பாடல்” என்று அஸத்ய கந்த ரஹிதமென்கையாலும்; அத்தை “பண்டை நான்மறை”, “நிற்கும் நான்மறை” என்று அநாதியாகவும் மேல் அழிவில்லாததாகவும் சொன்னாப்போலே, இத்தையும் “முந்தையாயிரம்”, “அழிவில்லா வாயிரம்” என்று அநாதியாய் அழிவற்றிருக்குமதாகச் சொல்லுகையாலும் இந்த லக்ஷணங்களெல்லாம் இரண்டுக்கு மொக்குமென்கை.
கீழே உள்ள பல தன்மைகள் இரண்டுக்கும் பொதுவாக உள்ளதால் இவ்விதம் கூறுவதில் குறையில்லை என்கிறார். திருமாலை(3) - வேத நூல் – என்றுள்ள பாசுரத்தில் அதனை “வேத சாஸ்த்ரம்” என்று கூறுவது போன்று, பெரியதிருமொழி (1-7-10) – இருந்தமிழ்நூல் - என்பதில் இதனைப் பெரிய தமிழ் சாஸ்த்ரம் என்று கூறுவதாலும். பாஞ்சராத்ரத்தில் - ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா - ச்ருதிகள் மற்றும் ஸ்ம்ருதிகள் ஆகியவை என்னுடைய கட்டளைகள் – என்று வடமொழி வேதங்களைப் பகவானின் கட்டளைகளாகக் கூறியது போன்று, திருவாய்மொழி (6-3-11) – ஆணையாயிரம் - என்று இதனையும் பகவானுடைய கட்டளைகளாகவே உரைப்பதாலும். பெரியதிருமொழி (5-3-2) – வசையில் நான்மறை - என்று வடமொழி வேதமானது வஞ்சித்தல் உள்ளிட்ட தோஷங்கள் ஏதும் அற்றது என்று கூறுவது போன்று, திருவாய்மொழி (1-6-11) – ஏதமில் ஆயிரம் - என்று இதனையும் தோஷம் அற்றது என்று கூறுவதாலும். திருவாய்மொழி - (1-1-7) - சுடர்மிகு சுருதி – என்று, ச்ரூயதே இதி ச்ருதி: - சாதுகளால் கேட்கப்பட்டு வரும் காரணத்தால் ச்ருதி எனப்படுகிறது - என்பதற்கு ஏற்ப முன்பு உள்ளவர்கள் அவர்களுக்கும் முன்பு உள்ளவர்கள் என்று பலரும் உச்சரித்த முறைப்படி காதுகளால் கேட்டு அறியப்படுவது வேதங்கள் ஆகும் என்று உரைப்பது போன்று, திருவாய்மொழி (10-6-11) – செவிக்கினிய செஞ்சொல்லே - என்பதற்கு ஏற்ப இதனையும் கேட்கப்படுவதாகவே உரைப்பதாலும். திருச்சந்தவிருத்தம் (72) – வேத நூலோதுகின்ற துண்மை – என்று வடமொழி வேதங்களில் உண்மைக்குப் புறம்பானவை ஏதும் இல்லை என்பது போன்று, திருவாய்மொழி (4-3-11) - பொய்யில் பாடல் – என்று பொய்யானது திருவாய்மொழியில் விலக்கப்பட்ட ஒன்று என இதனைக் கூறுவதாலும். பெரியதிருமொழி (5-7-1) - பண்டை நான்மறை – என்று எல்லையற்ற காலமாக உள்ளதாகவும், திருவாய்மொழி (6-5-4) - நிற்கும் நான்மறை - என்று அழிவற்றதாகவும் வடமொழி வேதம் கூறப்பட்டது போன்று, திருவாய்மொழி (6-5-11) – முந்தை ஆயிரம் – என்றும், திருவாய்மொழி (9-7-11) - அழிவில்லா வாயிரம் - என்றும் இதனை எல்லையற்ற காலமாக அழிவில்லாமல் உள்ளது என்று கூறுவதாலும்.