Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 43)
முதல் ப்ரகரணம்
வேத சதுஷ்டயாங்கோபாங்கங்கள் பதினாலும்போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவலாறும் மற்றையெண்மர் நன்மாலைகளும்.
ஆனால் அந்த வேதத்துக்கு அங்கோபாங்கங்களுண்டான வோபாதி இதுக்கும் அவை யுண்டோவென்னச் சொல்லுகிறது - (வேத சதுஷ்டயேத்யாதி).
வேதத்துக்கு அங்கங்கள், உபஅங்கங்கள் என்று பலவும் உள்ளது போன்று திருவாய்மொழி என்னும் தமிழ் வேதத்துக்கும் அது போன்று உண்டோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ருகாதிவேத சதுஷ்டயத்துக்கு சீக்ஷா வ்யாகரண நிருக்தச்சந்த: கல்ப ஜ்யோதிஷங்களாகிற ஆறங்கங்களும், மீமாம்ஸா ந்யாய புராண தர்மசாஸ்த்ராத் யுபாங்கங்க ளெட்டுமா யிருந்துள்ள பதினாலும்போலே, இந்த த்ராவிட வேத சதுஷ்டயத்துக்கும், “இருந்தமிழ் நூல் புலவன் மங்கையாளன்” என்று ஒருவரால் கரைகாண வொண்ணாதபடி யிருக்கிற த்ராவிட வேதசாஸ்த்ரத்தைக் கரைகண்ட ஜ்ஞாநாதிக்யத்தை யுடையரான திருமங்கையாழ்வாருடைய “கலியன் வாயொலி செய்த பனுவல்” என்று சாஸ்த்ரரூபமான ப்ரபந்தங்களாறும், மற்றையாழ்வார்கள் எண்மருடையவும் விலக்ஷணமான ப்ரபந்தங்களுமென்கை. (நன்மாலைகள்) என்றது, “நய நின்ற நன்மாலை” என்று முதலாழ்வார் ப்ரபந்தத்தி லருளிச்செய்தது எல்லாம் ப்ரபந்தத்துக்கு மொக்குமென்று நினைத்து. – “பொய்ந்நின்ற ஞானமும்” இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறியான தோஷங்களை முதலடியிலே பேசினாப்போலே, ப்ரதமத்திலே, “வாடினேன்” இத்யாதியாலே ஸ்வரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களைக் கண்டு நொந்து பேசுகையும், பகவத்ப்ராவண்ய ப்ராசுர்யமும், அதில் அர்ச்சாவதாரத்திலூற்றமும், கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும், அந்யா(யோ)பதேசப் பேச்சும், இது தன்னில் ராத்ரிவ்யஸநம், தூதப்ரேஷணம், அநுகாரம், மடலெடுக்கை, தோழி தாய் மகள் என்னு மவஸ்த்தா த்ரயா பத்திகளும், இந்த்ரிய பயாக்ரோசம், ஈச்வர ஸ்வாதந்த்ர்ய பயம், அஸக்ருத் ப்ரபத்திகரணம், ஆர்த்தியினுடைய கரைபுரட்சிகளும், பரதுக்காஸ ஹிஷ்ணுதையாலே பலகாலும் ஹிதம் சொல்லுகையும் தொடக்கமான கட்டளையாலே மற்றையாழ்வார் ப்ரந்தங்களிலும் காட்டில் இப்ப்ரபந்த சதுஷ்டயார்த்த ஜ்ஞாபகமா யிருக்கையாலே திருமங்கையாழ்வார் ப்ரபந்தங்களை இதுக்கு அங்கங்களென்கிறது; மற்றையாழ்வார் ப்ரபந்தங்களும் ஏததர்த்தாநுஸாரிகளாய், இதிலர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பாயிருக்கையாலே இதுக்கு உபாங்கங்களென்கிறது. ஆக, “சீக்ஷாயாம் வர்ணசிக்ஷா பதஸமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தச் சந்தச்சிதௌ ஸ்யாத் கமயதி ஸமயம் ஜ்யோதிஷம் ரங்கநாத, கல்பேநுஷ்ட்டாந முக்தம் ஹ்யுசித கமிதயோர் ந்யாய மீமாம்ஸயோஸ் ஸ்யாதர்த்த வ்யக்தி: புராண ஸ்ம்ருதிஷு ததநுகாஸ் த்வாம் விசிந்வந்தி வேதா:” என்கிறபடியே அவை அந்த வேதசதுஷ்டயத்துக்கும் உபாகாரகங்களா யிருக்குமாபோலே இவையும் கீழ்ச்சொன்னபடியே இந்த வேதசதுஷ்டயத்துக்கும் உபகாரகங்களா யிருக்குமென்றதாய்த்து.
– ருக் முதலான நான்கு வேதங்களுக்கு சீக்ஷை, வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ், கல்பம் மற்றும் ஜோதிஷம் என்ற ஆறு அங்கங்கள் உள்ளன; இதே போன்று மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்மசாஸ்த்ரம் போன்றதான எட்டு உப அங்கங்கள் உள்ளன. இப்படியாக உள்ள பதினான்கு அங்கங்கள் போன்று, “தமிழ்வேதம்” என்று போற்றப்படும் இந்த நான்கிற்கும் (நான்கு = நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்தங்களான திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரிய திருவந்தாதி) அங்கங்கள் உள்ளன. அவை என்ன? பெரியதிருமொழி (1-7-10) - இருந்தமிழ் நூல் புலவன் மங்கையாளன் - என்பதற்கு ஏற்ப யாராலும் முழுவதுமாகப் பொருள் உணர இயலாதபடி உள்ள தமிழ்வேதம் என்ற சாஸ்த்ரத்தை முழுவதுமாக அறிந்துள்ள ஞானம் நிரம்பிய திருமங்கையாழ்வாருடைய பெரியதிருமொழி (1-4-10) - கலியன் வாயொலி செய்த பனுவல் - என்பதற்கு ஏற்ப உள்ள சாஸ்த்ரவடிவமான திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்கள் ஆறும் (பெரியதிருமொழி, சிறிய திருமடல், பெரிய திருமடல் திருவெழுகூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்) மற்றும் மற்ற எட்டு ஆழ்வார்கள் அருளிச்செய்தவையும் முறையே தமிழ்வேதத்தின் அங்கங்கள் மற்றும் உப அங்கங்கள் ஆகின்றன. சூர்ணையில் உள்ள “நன் மாலைகள்” என்பதன் மூலம், முதல்திருவந்தாதி (57) – நய நின்ற நன்மாலை - என்று முதலாழ்வார் அருளிச்செய்தது, மற்ற ஆழ்வார்களுக்கும் பொருந்தும் என்று உணர்த்தவே ஆகும். திருவிருத்தம் (1) - பொய்ந்நின்ற ஞானமும் - என்பதில் நம்மாழ்வார் ஆத்மஸ்வரூபத்திற்கு இயல்பாக இல்லாமல், பின்னர் வந்து சேர்ந்த தோஷங்களை முதல் அடியில் உரைத்தார். இதே போன்று பெரியதிருமொழி (1-1-1) – வாடினேன் - என்பதன் மூலம், ஆத்மஸ்வரூபத்திற்கு வந்து சேர்ந்த தோஷங்களைக் கண்டு நொந்து உரைத்தல், பகவானிடம் உள்ள காதலின் மிகுதி, அதிலும் அர்ச்சாவதாரத்தின் மீது உள்ள ஆழ்ந்த ஈடுபாடு, அவனுடன் சேர்தலும் பிரிதலும் மாறி மாறி வருதல், மற்றவர்கள் ஆழ்வாரைப் பற்றியும் ஸர்வேச்வரன் பற்றியும் உரைக்கும் உபதேசச் சொற்கள், அதன் காரணமாக இரவில் துன்பம் உண்டாதல், தூது விடுதல், மடல் எடுத்தல், தோழி – தாய் – மகள் – என்று மூன்றுவிதமான நிலைகளை எடுத்தல், இந்த்ரியங்களுக்குப் பயந்து அவனை அழைத்தல், ஸர்வேச்வரனுடைய சுதந்திரத்தன்மை குறித்து பயம் அடைதல், பலமுறை ப்ரபத்தி செய்தல், எல்லையற்ற பிரிவாற்றாமை, மற்றவர்கள் பிரிவாற்றாமை கண்டு தன்னைப் போன்று அவையும் வருந்துவதாக எண்ணி ஆறுதல் உரைத்தல் போன்ற பலவிதமான தன்மைகள் காரணமாக, திருமங்கையாழ்வாருடைய ப்ரபந்தங்கள் அனைத்தும், நம்மாழ்வர் அருளிச்செய்த தமிழ்வேதத்தின் தன்மைகளை நினைவுபடுத்துவதாக உள்ளன; ஆகவே இந்தப் பாசுரங்கள் தமிழ்வேதத்தின் அங்கங்கள் ஆகின்றன. மற்ற ஆழ்வார்களுடைய பாசுரங்கள் இவற்றின் பொருளை அண்டி கூறப்பட்டவைகளாக, இவற்றுடைய பொருளையே மேலும் உறுதியாக உரைப்பதாக உள்ளதால் அவை இவற்றுக்கு உப அங்கங்கள் என்றாகின்றன. ஆகவே ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் (2-18) - சீக்ஷாயாம் வர்ணசிக்ஷா பதஸமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தச் சந்தச்சிதௌ ஸ்யாத் கமயதி ஸமயம் ஜ்யோதிஷம் ரங்கநாத, கல்பேநுஷ்ட்டாந முக்தம் ஹ்யுசித கமிதயோர் ந்யாய மீமாம்ஸயோஸ் ஸ்யாதர்த்த வ்யக்தி: புராண ஸ்ம்ருதிஷு ததநுகாஸ் த்வாம் விசிந்வந்தி வேதா: – ஸ்ரீரங்கநாதா! வேதங்களின் ஆறு அங்கங்களாக – சீக்ஷா, வ்யாகரணம், நிருக்தம், சந்தோவிசிதி, கல்பஸூத்ரம் மற்றும் ஜ்யோதிஷம் உள்ளன. இவற்றில் சீக்ஷை என்பது அக்ஷரங்களின் உச்சரிப்பு முதலானவற்றைக் கூறுகிறது. வ்யாகரணம் மூலம் பதங்களின் இலக்கணமும், நிருக்தி மூலமாக அந்தப் பதங்களின் அர்த்தப் ப்ரயோகங்களும் விளக்கப்படுகின்றன. சந்த சாஸ்த்ரம் மூலமாக – காயத்ரீ, உஷ்ணிக், அனுஷ்டுப், த்ரிஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி மற்றும் ஜகதீ என்னும் ஏழு சந்தஸ்ஸுகள் விளக்கப்படுகின்றன. ஜ்யோதிஷம் மூலம் அனுஷ்டான காலங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. கல்பஸூத்ரம் மூலம் அனுஷ்டான விதிமுறைகள் கூறப்பட்டன. வைதிக மார்க்கத்திற்கு உபாயமாக உள்ள ந்யாயம், மீமாம்ஸை, புராணங்கள், ஸ்ம்ருதிகள் முதலானவை மூலம் வேதங்களின் ஆழ்பொருள் புலப்படும். இப்படியாக மேலே கூறப்பட்ட பலவற்றாலும் சூழப்பட்டு நிற்கும் வேதங்கள் உன்னை எப்போதும் தேடியபடியே உள்ளன - என்பதற்கு ஏற்ப, அத்தகைய அங்கங்கள் மற்றும் உப அங்கங்கள் ஆகியவை வடமொழி வேதங்களாகிய நான்கு வேதங்களுக்கு உபகாரம் செய்வதாக உள்ளது போன்று, திருமங்கையாழ்வாருடைய பாசுரங்களும், மற்ற ஆழ்வார்களுடைய பாசுரங்களும், தமிழ்வேதமாகிய நம்மாழ்வார் பாசுரங்களுக்கு உபகாரம் செய்வதாகவே உள்ளன என்று கருத்து.