Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 41)

முதல் ப்ரகரணம்

செந்திறந்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமு மநாதி.

அப்படி சொல்லலாமோ? ஸம்ஸ்க்ருத பாஷைபோலே த்ராவிட பாஷை அநாதியன்றே, ஆகஸ்த்யமன்றோவிது? என்னச் சொல்லுகிறது – (செந்திறத்த வித்யாதி).

– இவ்விதம் கூற இயலுமோ? வடமொழி என்பது எல்லையற்ற காலமாக இருந்து வருவதாகும். ஆனால் தமிழ் என்பது அவ்விதம் அல்லவே! தமிழானது அகஸ்த்தியரால் ஏற்பட்டது அல்லவோ என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, “செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி” என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹ படிதமும் ப்ரதமோக்தமுமாகையாலே அகஸ்த்ய ப்ரகாசிதமான மாத்ரங் கொண்டு ஆகஸ்த்யமென்று சொல்லப்படுகிற த்ராவிடமும் அநாதியாயுள்ள தென்கை. இத்தால் அநாதித்வம் ஸம்ஸ்க்ருத த்ராவிட ஸாதாரண மென்றதாய்த்து.

– திருநெடுந்தாண்டகம் (4) – செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி - என்று கூறுவதற்கு ஏற்ப தமிழானது வடமொழியோடு ஒன்றாகவே கூறப்படுவதாலும், வடமொழிக்கு முன்பே உள்ளது என்று கூறப்படுவதாலும், தமிழ் மொழியானது எல்லையற்ற காலமாக உள்ளது என்பது தெளிவாகிறது. அகஸ்த்தியரால் உலகத்தில் விளக்கப்பட்ட காரணத்தால் தமிழானது “ஆகஸ்த்யம்” என்று கூறப்படுகிறது. ஆகவே எல்லையற்ற காலமாக உள்ள தன்மை என்பது வடமொழி மற்றும் தமிழ் ஆகிய இரண்டுக்கும் உள்ளது என்று கருத்து.