Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 40)
முதல் ப்ரகரணம்
இதில் ஸம்ஸ்க்ருதம் த்ராவிடமென்கிற பிரிவு ருகாதி பேதம்போலே.
ஆனால் ஏகபாஷையா யிருக்கவேண்டாவோ? ஸம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அந்யோந்யம் பேதித்திரா நின்றதீ யென்னுச் சொல்லுகிறது – (இதில் இத்யாதி).
– ஆனால் ஒரே போன்ற மொழியில் அமைந்திருக்க வேண்டாமோ? வடமொழி, தமிழ்மொழி என்று ஒன்றுக்கொன்று மாறுபட்ட மொழிகளில் அமையுமோ என்ற கேள்விகளுக்கு இங்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது, இப்படி பஹுவிதமான இவ்வேதத்தில் “ஸம்ஸ்க்ருத வேதம், த்ராவிடவேதம்” என்கிற பிரிவு ஸம்ஸ்க்ருத அம்சந் தன்னில் ருக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம் என்கிற பிரிவுபோலே யென்கை. இத்தால் வேதராசி ஒன்றாயிருக்கச் செய்தே ஸம்ஸ்க்ருத பாஷா ரூபமான வஸ்து தன்னிலே ருகாதி ரூபேண பலபடியாகப் பிரிந்தாப்போலே பாஷாபேதேதநவும் இப்படி பிரிந்திருக்கு மென்றபடி.
இப்படியாகப் பலவிதமாக உள்ள வேதத்தில், “வடமொழி வேதம், தமிழ் வேதம்” என்றுள்ள பிரிவு என்பது, வடமொழியில் உள்ள வேதமானது ருக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் மற்றும் அதர்வண வேதம் என்று பிரிந்துள்ளது போன்றாகும். ஆக, வேதங்களுடைய தொகுப்பு என்பது ஒன்றாகவே இருந்தாலும், வடமொழியில் உள்ள வேதத்தில் ருக்வேதம் போன்ற பிரிவுகள் உள்ளது போன்று மொழி வேற்றுமை காரணமாகவும் இவ்விதம் பிரிந்துள்ளது என்று கருத்து.