Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 39)
முதல் ப்ரகரணம்
எவ்வுலகத் தெவ்வெவையு மென்கையாலே வேதம் பஹுவிதம்.
– இனிமேல் “சந்தங்களாயிரம்” என்று திருவாய்மொழிக்குச் சொன்ன வேதத்வத்தை ஸாதிக்கக்கோலி ப்ரதமம் ஏவம்விதமாயிருப்பதொரு வேதமுண்டோ வென்கிற சங்கைக்குப் பரிஹாரம் பண்ணுகிறார் – (எவ்வுலகத்தித் யாதியால்).
– அடுத்து, திருவாய்மொழியில் (10-9-11) - சந்தங்களாயிரம் - என்று திருவாய்மொழிக்கு வேதத்தின் தன்மை கூறப்பட்டது; இதனை உறுதியாக உரைக்கும் விதத்திலும், இப்படிப்பட்ட தன்மை கொண்ட வேதம் உள்ளதா என்று கேட்கும் கேள்விக்கு விடை அளிக்கும் விதத்திலும் அருளிச்செய்கிறார்.
– அதாவது, “ஓதுவாரோத்தெல்லாம் மெவ்வுலகத் தெவ்வெவையும்” என்கையாலே வேதமானது அத்யேதாக்களினுடைய பேதத்தாலும் லோக பேதத்தாலும் பஹுவிதமாயிருக்குமென்கை. ஆகையால் அதிலே இதுவும் ஒருவிதமென்று கருத்து.
– திருவாய்மொழி (3-1-6) - ஓதுவாரோத்தெல்லாம் மெவ்வுலகத் தெவ்வெவையும் – என்று கூறப்படுவதால், வேதமானது அத்யயனம் செய்யும் அதிகாரிகளுக்கிடையே காணப்படும் வேற்றுமை, உலகில் உள்ள வேற்றுமை போன்றவற்றால் பலவிதமாக உள்ளது. ஆகவே அவற்றில் திருவாய்மொழியும் ஒரு விதம் ஆகிறது என்று கருத்து.