Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 38)
முதல் ப்ரகரணம்
இந்தவுட்பொருள் கற்றுணர்ந்து மேலைத்தலைமறையோ ராகாதாரை அயற்சதுப்பேதிமாரென்று உத்பத்தி நிரூபிக்கும்.
அந்த வேதாத்யயநாதிகளுடைவர்களுக்கு இந்த வேதாத்தயயநாதிகள் இல்லாதவளவில் வைஷ்ணவத்வாஸித்தி யொழிய ப்ரஹ்மண்யஹாநி இல்லையே யென்னச் சொல்லுகிறது (இந்த வித்யாதி).
– ஒருவர் வேத அத்யயனம் செய்து, அவற்றின் ஆழ்பொருள் அறிந்து, அதன்படி ஒழுக்கத்துடன் நடக்கிறார்; ஆனால் அவர் திருவாய்மொழியை அத்யயனம் செய்யவில்லை என்றால் அவருக்கு வைஷ்ணவனாகும் தன்மை இல்லாமல் போகும் அல்லாமல், அவர் அந்தணர் என்றிருக்க எந்தக் குறையும் இல்லை அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்” என்று உபநிஷத் குஹ்யமான இந்த த்ராவிட வேதார்த்தத்தை, “கற்றுணர்ந்த மேலைத்தலை மறையோர்” என்கிறபடியே ஆசார்யோபதேச முகேந கற்றறிந்த உத்க்ருஷ்டரான வேதாந்திக ளாகாதாரை, “அயல்சதுப்பேதிமார்” என்று, வேதாத்யயந ப்ரயோஜநம் ஈச்வரனை யுள்ளபடி யறிந்து ஸ்வரூபாநுரூப புருஷார்த்தம் கைங்கர்யமென் றிருக்கையா யிருக்க இந்த ஜ்ஞாநபாவத்தாலே நாலு வேதங்களையும் அதிகரித்திருக்கச்செய்தே அந்த வேதத்தோடு தங்களுக்கு ஒட்டின்றி அதுக்கு அசலானவர்களென்று அறுதியிட்டு, “விஷ்ணுபக்தி விஹீநோ ய: ஸர்வசாஸ்த்ரார்த்த வேத்யபி, ப்ராஹ்மண்யம் தஸ்ய த பவேத் தஸ்யோத்பத்திர் நிரூப்யதாம்” என்கிறபடியே இவர்கள் ப்ராஹ்மணரல்லரென்று உத்பத்தி ஆராயப்படுமென்கை. “ய: புத்ர: பிதரம் த்வேஷ்டி தம் வித்யாதந்யரேதஸம், யோ விஷ்ணும் ஸததம் த்வேஷ்டி தம் வித்யாதந்த்யரேதஸம்” என்னக்கடவதிறே. – ஆக “கர்ம கைங்கர்யங்கள்” என்று தொடங்கி இவ்வளவாக இரண்டும் இன்னதுக் கநுகுணமென்றும், இவற்றுக்கு ப்ரேரக ஆச்ரய விஷயபேதங்களும், இவற்றின் ஸாதாரணாஸாதாரணத்வமும், அஸாதாரணாந்வயத்தில் ஸாதாரண நிவ்ருத்தியும், கைங்கர்ய நிஷ்டர்க்கு கர்மநிஷ்ட்டரோடு பொருந்தாமையும், அதுக்கடியான இருவருடையவும் ஜந்மநிரூபக கூடஸ்த பேதங்களும், இருவர்க்கும் ப்ராஹ்மண்ய வைஷ்ணவத்வ ஸித்தி ஹேதுக்களும் த்ராவிட வேதார்த்த ஜ்ஞாநாபாவத்தில் ஸ்வ அதீத வேதாநந்வயராய் நிஹீநத்வ புத்த்யர்ஹராம்படியும் சொல்லிற்று.
கண்ணிநுண்சிறுத்தாம்பு (9) - மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் - என்பதற்கு ஏற்ப உபநிஷத்துக்களுடைய மறைபொருளாக உள்ள தமிழ் வேதமாகிய திருவாய்மொழியின் ஆழ்பொருளை, முதல் திருவந்தாதி (66) - கற்றுணர்ந்த மேலைத்தலை மறையோர் - என்று கூறுவதற்கு ஏற்ப ஆசார்யனிடமிருந்து கற்று அறிந்து கொண்டு, மிகவும் சிறந்த வேதாந்திகள் என்று ஆகாமல் சில அந்தணர்கள் இருக்கக்கூடும். இப்படிப்பட்டவர்கள், திருமாலை(39) - அயல்சதுப்பேதிமார் - என்பதற்கு ஏற்ப வேதங்களைக் கற்று அவற்றின் ஆழ்பொருளை அறிவதன் பயனாவது, ஸர்வேச்வரனை உள்ளபடி அறிந்துகொண்டு, ஆத்மஸ்வரூபத்தின் உயர்ந்த பேறு என்பது அவனுக்குச் செய்யும் கைங்கர்யம் மட்டுமே ஆகும் என்னும் ஞானம் இல்லாமல், நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்திருந்தாலும், அத்தகைய வேதங்களுடன் தங்களுக்கு ஒட்டுதல் இல்லாத காரணத்தால் அதற்கும் புறம்பானவர்களே ஆகிறார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆகவே, விஷ்ணுபக்தி விஹீநோ ய: ஸர்வசாஸ்த்ரார்த்த வேத்யபி, ப்ராஹ்மண்யம் தஸ்ய த பவேத் தஸ்யோத்பத்திர் நிரூப்யதாம் – யார் ஒருவன் அனைத்து வேதங்களையும் நன்றாக அறிந்தவனாக உள்ளபோதிலும், மஹாவிஷ்ணுவிடம் பக்தி இல்லாமல் இருந்தான் என்றால், அவனுக்கு அந்தணனாக உள்ள தன்மை எற்படாது; அவனுடைய பிறவியானது ஆராயப்படவேண்டும் - என்பதற்கு ஏற்ப, அவர்கள் அந்தணர்கள் அல்லர் என்று கருதப்பட்டு, அவர்கள் பிறவி குறித்து ஆராயப்படும். மேலும் ய: புத்ர: பிதரம் த்வேஷ்டி தம் வித்யாதந்யரேதஸம், யோ விஷ்ணும் ஸததம் த்வேஷ்டி தம் வித்யாதந்த்யரேதஸம் - எந்த ஒரு புத்திரன் தந்தையை வெறுக்கிறானோ அவன் வேறு ஒருவனுக்குப் பிறந்தவன் என்று அறியப்படவேண்டும்; யார் ஒருவன் மஹாவிஷ்ணுவை வெறுக்கிறானோ அவன் சண்டாளனுக்குப் பிறந்தவன் என்று அறியப்படவேண்டும் - என்றது காண்க. ஆகவே சூர்ணை (26) - கர்ம கைங்கர்யங்கள் – என்று தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய கீழே உள்ள பலவும் கூறப்பட்டது: கர்மம் மற்றும் கைங்கர்யம் ஆகிய இரண்டும் இதற்கு, இதற்கு ஏற்றது கர்மம் மற்றும் கைங்கர்யம் ஆகிய இரண்டையும் செய்யும்படியாகத் தூண்டுவது இன்னது இவை இரண்டுக்கும் அதிகாரிகள் யார் இவை இரண்டுக்கும் இலக்கு இன்னது, தனித்தன்மை இன்னது கைங்கர்யத்தின் தனித்தன்மை என்பதை ஒட்டிச் செய்யும்போது, பொதுத்தன்மை தானாகவே அகலுதல் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்களுக்கு, கர்மங்களில் ஈடுபடுபவர்களிடம் பொருந்தாமை இதற்கு அடிப்படையாக உள்ள இருவருடைய பிறவி, பெயர், மூலபுருஷர்களில் உள்ள பேதங்கள். இவர்களுக்கு அந்தணனாகும் தன்மை மற்றும் வைஷ்ணவனாகும் தன்மை ஏற்படும் காரணங்கள் தமிழ்வேதமாகிய திருவாய்மொழியின் ஆழ்பொருளை அறியாதபோது, தாங்கள் நன்றாகக் கற்ற வேதங்களுடைய தொடர்பும் அற்றுப்போனவர்களாக, இவர்கள் அந்தணர்கள்தானோ என்று பிறவியை ஆராயும்படி உண்டாகும் நிலை.