Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 37)
முதல் ப்ரகரணம்
அத்யயநஜ்ஞாநா நுஷ்டாநங்களாலே ப்ராஹ்மண்யமாகிறாப்போலே சந்தங்க ளாயிரமுமறியக் கற்றுவல்லாரானால் வைஷ்ணவத்வ ஸித்தி.
இனி இரண்டுதலைக்கும் ப்ராஹ்மண்ய வைஷ்ணவத்வ ஸித்திஹேது நியமங்களை தர்சிப்பிக்கிறார் - (அத்யயநே த்யாதியால்).
மேலே கூறப்பட்ட இரண்டு பிரிவினர்களில் ஒரு பிரிவினர் அந்தணர் ஆவதும், மற்றொரு பிரிவினர் வைஷ்ணவர் ஆவதும் எப்போது என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதாவது, “ஸ்வாத்யாயோத்யேதவ்ய:” என்கிறபடியே ப்ரதமம் வேதத்தை ஆசார்யோச்சாரணா நூச்சாரண முகேந அக்ஷரராசிக்ரஹணம் பண்ணுகையாகிற ததநுரூபமான அநுஷ்டாநமுண்டானால் ப்ராஹ்மண்யம் ஸித்திக்குமாபோலே, “சந்தங்களாயிரம்” என்கிறபடியே ச்சந்தோரூபமாய் ஸஹஸ்ர சாகையாயிருக்கிற திருவாய்மொழியை, “அறியக் கற்று வல்லார் வைட்டணவர்” என்கிறபடியே, “அத்யேதவ்யம் த்விஜ ச்ரேஷ்டை: வேதரூபமிதம் க்ருதம்” என்கிற ப்ரகாரத்திலே ஆசார்யோச்சாரணா நூச்சாரணமுகேந அப்யஸிக்கையாகிற அத்யயநத்தைப் பண்ணி, உபதேசமுகத்தாலே ததர்த்த ஜ்ஞாநம் பிறந்து ததநுரூபமாக அநுஷ்ட்டிக்கவும் வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம் ஸித்திப்பதென்கை.
ஸ்வாத்யாயோத்யேதவ்ய: - வேதங்கள் கற்கப்பட வேண்டியவை ஆகும் - என்பதற்கு ஏற்ப முதலில் வேதங்களை ஆசார்யன் உச்சரிக்கும் முறை மூலமாக எழுத்துக்களுடைய தொகுப்புகளை அறிந்து கொள்ளுதல் என்னும் செயலைச் செய்யவேண்டும். அடுத்து மீமாம்ஸ சாஸ்த்ரம் கேட்பது மூலமாக வேதவாக்கியங்களில் பொதிந்துள்ள ஆழ்பொருளை அறியும் ஞானம் உண்டாகுகிறது. பின்னர் அதற்கு ஏற்றபடி ஒழுக்கங்கள் உண்டாகும்போது அந்தணன் ஆகும் தன்மை உண்டாகிறது. இதே போன்று ….. திருவாய்மொழி (10-9-11) - சந்தங்களாயிரம் - என்பதற்கு ஏற்றபடி வேதங்களுடைய ரூபமாகவே ஆயிரம் சாகைகள் கொண்டதான திருவாய்மொழியை, திருவாய்மொழி (5-5-11) - அறியக் கற்று வல்லார் வைட்டணவர் - என்பதற்கு ஏற்ப, அத்யேதவ்யம் த்விஜ ச்ரேஷ்டை: வேதரூபமிதம் க்ருதம் - வேதரூபமாகச் செய்யப்பட்ட இந்தத் திருவாய்மொழி அந்தணர்களால் அத்யயனம் செய்யத்தக்கது - என்று கூறும் விதத்தில், ஆசார்யனுடைய உச்சரிக்கும் முறை மூலமாக அறிதல் என்ற அத்யயனம் செய்யவேண்டும். பின்னர் உபதேசம் மூலமாகத் திருவாய்மொழியின் ஆழ்பொருளை அறிந்து, அதற்கு ஏற்றபடி நடத்தல் வேண்டும். அப்போது வைஷ்ணவன் ஆகும் தன்மை ஏற்படுகிறது.