Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 36)

முதல் ப்ரகரணம்

விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாயநாதிகள்; ப்ரபந்ந ஜந கூடஸ்த்தர் பராங்குச பரகால யதிவராதிகள்.

இனி உபயருடையவும் கூடஸ்த்தரைச் சொல்லுகிறது - (விப்ரர்க்கித்யாதி).

அடுத்து இந்த இரண்டு பிரிவினர்களுக்கும் மூலபுருஷர்கள் யார் என்பதை அருளிச்செய்கிறர்.

– அதாவது, அந்தணர் மறையோர் என்கிற ப்ராஹ்மணர்க்கு கோத்ர கூடஸ்த்தர் பராசராதிகள்; கோத்ரமாவது = அபத்ய ஸந்ததி. “ஸந்ததிர் கோத்ர ஜநந குலாந்யபி ஜநாந் வயௌ” என்னக் கடவதிறே. அந்த கோத்ரந்தான் அநேகமாய், தத் தத் கூடஸ்ததரான வஸிஷ்ட்ட காச்யப பரத்வாஜ வத்ஸ ப்ரப்ருதிகள் பலருண்டாகையாலே பராசராதிகளென்கிறது. சரண கூடஸ்த்தர் பாராசர்யாதிகள். சரணங்களாவன - வேதசாகைகள்; ததத்யாயிகளையும் கௌணமாக சரண சப்தத்தாலே சொல்லக் கடவது. “சரண சப்த: காடக காலாபாதி சாகாவிசேஷேஷு முக்க்ய:, ததந்யாயிஷு புருஷேஷு கௌண:” என்கையாலே இவ்விடத்தில் சாகைகளைச் சொல்லுகிறது. ஸர்வ சாகைகளுக்கு ப்ரதாந ப்ரவர்த்தகன் பாராசர்யனாயிருக்கச் செய்தேயும், பின்பு தத்தச்சாகைகளுக்கு தனித்தனி ப்ரவர்த்தகரான கட கலாப கண்வாதிகளு முண்டாகையாலே பாராசர்யாதிகளென்கிறது. ஸூத்ர கூட்ஸ்த்தர்கள் போதாயநாதிகள். ஸுத்ரமாவது – கர்மாநுஷ்ட்டாந ப்ரதிபாதகமான கல்பம். “சீக்ஷாயாம் வர்ணசிக்ஷா” என்று தொடங்கிச் சொல்லிவருகிறவளவிலே, “கல்பேநுஷ்ட்டாநமுக்தம்” என்றதிறே. அதுதானும் பலவாய் தத்தத் கர்த்தாக்களான ஆபஸ்தம் பாச்வலாயநாதிகளு முண்டாகையாலே போதாயநாதிக ளென்கிறது. ஆக, இவர்கள் விப்ரர்கள் கூடஸ்த்த புருஷர்கள். – “அடியார், தொண்டர்” என்கிற ப்ரபந்ந ஜனங்களுக்கு கூடஸ்த்தர், “பத்யு: ச்ரிய: ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம், ப்ரபந்ந ஜந கூடஸ்த்தம் ப்ரபத்யே ஸ்ரீபராங்குசம்” என்கிற நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களும், எம்பெருமானார் முதலான ஆசார்யர்களுமென்கை. கூடஸ்த்தராகிறார் – மூலபூதரிறே. உபதேசாநுஷ்ட்டாநங்களாலே ப்ரபத்தி மார்க்கத்தைத் தலைப்பெறுத்தி வளர்த்தவர்க ளாகையாலே இவர்கள் ப்ரபந்ந ஜந கூடஸ்த்தர்க ளென்கிறது.

வேதங்களில் கூறப்பட்டுள்ள கர்மங்களில் நிலைநிற்கும் அந்தணர்களுடைய குலத்திற்கு மூலபுருஷர்கள் பராசரர் முதலானவர்கள் ஆவர். கோத்ரம் என்பது அந்தக் குலத்தின் பரம்பரை என்று பொருள். அமரகோசத்தில் - ஸந்ததிர் கோத்ர ஜநந குலாந்யபி ஜநாந் வயௌ - ஸந்ததி, கோத்ரம், பிறவி, குலம், அபிஜநம், அந்வயம் என்பவை ஒரே பொருள் - என்றுள்ளது காண்க. அப்படிப்பட்ட கோத்ரங்கள் பல உள்ளன. அந்தந்த கோத்ரத்திற்கு ஆதிபுருஷர்கள் என்று வசிஷ்டர், காச்யபர், பரத்வாஜர், ஸ்ரீவத்ஸர் என்று பலரும் உள்ளதால் “பராசரர் முதலானவர்கள்” என்றார். மேலும் அந்தணர்களுடைய சரணத்திற்கு மூலபுருஷார்கள் பாராசர்யர் (பராசரமுனிவரின் புத்திரர், வியாசர்) முதலானவர்கள் ஆவர். சரணம் என்பது வேதத்தின் சாகைகள் மட்டும் அல்லாமல், அந்தந்த சாகைகளுடன் தொடர்புள்ள புருஷர்களையும் குறிக்கும். ஆனால் அவ்விதம் கூறப்படும்போது “சரண” என்ற பதம் சாகைகளையே குறிக்கிறது. அனைத்து வேதசாகைகளையும் இந்த உலகம் எங்கும் பரவச் செய்பவர்களின் தலைவராக வியாஸர் உள்ளபோதிலும், அதன் பின்னர் ஒவ்வொரு சாகையாகத் தனித்தனியே பரவும்படிச் செய்தவர்கள் கடர், கலாபர், கண்வர் என்று பலர் ஆகையால் “பாராசர்யர் முதலானவர்கள்” என்கிறார். அந்தணர்களுக்கு ஸூத்ரத்திற்கான ஆதிபுருஷர்கள் போதாயனர் போன்றவர்கள் ஆவர். ஸூத்ரம் என்றால் அன்றாடம் இயற்றவேண்டிய கர்ம விதிமுறைகள் குறித்த கல்பம் ஆகும். ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-18) - சீக்ஷாயாம் வர்ணசிக்ஷா - சிக்ஷை என்னும் வேத அங்கத்தில் எழுத்துக்களுடைய உச்சரிப்பு முறை கூறப்படுகிறது - என்று தொடங்கிக் கூறும்போது, ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-18) - கல்பேநுஷ்ட்டாநமுக்தம் - கல்பஸூத்ரத்தில் கர்ம அனுஷ்டான முறை கூறப்படுகிறது - என்று உரைத்தார். அத்தகைய கல்பங்களும் பலவாக, அந்தந்த ஸூத்ரங்களை ஏற்படுத்தியவர்கள் ஆபஸ்தம்பர், ஆச்வலாயனர் என்று பலர் உண்டு என்பதால், “போதாயனர் போன்றவர்கள்” என்றார். ஆக இப்படிப்பட்டவர்கள் அந்தணர்களுக்கு மூல புருஷர்கள் ஆவர். – “அடியார்கள், தொண்டர்கள்” என்று கொண்டாடப்படும் ப்ரபந்நர்களுக்கு மூல புருஷர்கள் - பராங்குசாஷ்டகம் (4) - பத்யு: ச்ரிய: ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம், ப்ரபந்ந ஜந கூடஸ்த்தம் ப்ரபத்யே ஸ்ரீபராங்குசம் - ஞானம் என்ற செல்வம் கொண்டவரும் ப்ரபந்நர்களுடைய மூலபுருஷரும் ஆகிய நம்மாழ்வாரை நான் சரணம் அடைகிறேன் - என்பதற்கு ஏற்ப உள்ள நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் தொடக்கமாக உள்ள ஆழ்வார்கள் மற்றும் எம்பெருமானார் தொடக்கமாக உள்ள ஆசார்யர்கள் ஆவர். கூடஸ்தர் என்றால் மூலமாக உள்ளவர்கள். உபதேசங்கள், தாங்கள் பின்பற்றும் விதிமுறைகள் ஆகியவற்றால் ப்ரபத்தி வழியை நிலைநிறுத்தி வளர்த்தவர்கள் என்பதால் இவர்கள் ப்ரபந்நர்களுடைய மூலபுருஷர்கள் என்கிறார்.