Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 35)

முதல் ப்ரகரணம்

ஒரு தலையில் க்ராம குலாதி வ்யபதேசம் குலந்தருமென்னும் மாசிற் குடிப்பழியென்று பதியாகக் கோயிலில் வாழுமென்பார்கள்.

கேவலம் இவையோ நிரூபகம். க்ராம குலாதி வ்யபதேசங்களுமில்லையோ? என்னச் சொல்லுகிறது - (ஒருதலையிலித்யாதி).

கடந்த சூர்ணையில் உள்ளது போன்ற தன்மைகள் கொண்டு மட்டுமே அந்தந்த பிரிவினர் உணர்த்தப்படுவார்களா? அல்லவே, பெரும்பாலானவர்கள் அவர்களுடைய குலம், கிராமம் போன்றவற்றைக் கொண்டும் கூறப்படுகிறார்கள் அல்லவோ என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார் (குறிப்பு - ஒரு சிலர் தங்களுடைய பெயருக்கு முன்பாகத் தங்களுடைய குலப்பெயர், ஊரின் பெயர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வதை இங்கு அருளிச்செய்கிறார்).

– அதாவது, கர்மநிஷ்ட்டரென்று சொல்லப்பட்ட வொருதலையில் சரீராநுபந்திகளான க்ராம குலாதிகளையிட்டு வ்யபதேசிக்கும் அந்த வ்யபதேசத்தை, கைங்கர்ய நிஷ்ட்டரான மற்றைத் தலையிலுள்ளவர்கள், “குலந்தரும்” என்கிறபடியே திருமந்த்ர ஸித்த பகவத் ஸம்பந்த ஜ்ஞாந ப்ரயுக்தமாய், “மாசில் குடி” என்று சேஷத்வ விரோதியான அஹங்காராதிக ளில்லாமையாலே நிர்தோஷமா யிருக்கிற இக்குலத்துக்கு அவத்யகரமென்று கருதி, “வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்”, “கோயில் வாழும் வைட்டணவன்” என்று பகவதந்வயமுள்ள தேசஸம்பந்தத்தையிட்டு வ்யவஹரிப்பர்க ளென்கை. இது பகவத் ஸம்பந்தத்தையிட்டும், பகவதீய ஸம்பந்தத்தையிட்டும் வ்யபதேசிக்கு மதுக்குமுபலக்ஷணம். “ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோநைவ க்ராம குலாதிபி: விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி” என்னக் கடவதிறே.

– கர்மங்களில் நிலைநிற்பவர்கள் தங்களுடைய பெயர்களுக்கு முன்பாகச் சரீரஸம்பந்தம் காரணமாக ஏற்பட்ட குலம் மற்றும் கிராமங்களைக் கூறும் அடைமொழிகளைச் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் கைங்கர்யத்தில் மட்டுமே நிலைநிற்பவர்கள் செய்வது என்ன? பெரியதிருமொழி (1-1 9) - குலம் தரும் - என்பதற்கு ஏற்ப, திருமந்திரத்தின் மூலம் அறியப்பட்ட பகவத்ஸம்பந்த ஞானம் காரணமாக வந்ததும், மூன்றாம் திருவந்தாதி (10) - மாசில் குடி - என்பதற்கு ஏற்ப அடிமைத்தனத்திற்கு விரோதியான “நான், என்னுடையது” என்ற சிந்தனை இல்லாத காரணத்தால் தோஷம் இல்லாமல் உள்ளதும் ஆகிய பாகவதர்குலம் என்பதற்கு, தாங்கள் அந்தக் குலத்தின் பெயரை அடைமொழியாகச் சேர்த்துக்கொண்டால், அந்தக் குலத்தின் பெயருக்கு இழுக்கு உண்டாகும் என்று கருதுவார்கள். ஆகவே அவ்விதம் செய்யாமல், நாச்சியார் திருமொழி (8-9) - வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் - என்றும், பெரியாழ்வார் (5-1-3) – கோயில் வாழும் வைட்டணவன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுடைய தொடர்பு கொண்டுள்ள திவ்யதேசத்தின் பெயர்களைச் சேர்த்துக் கொண்டு உரைப்பார்கள் என்று கருத்து. இவ்விதம் அந்த திவ்யதேசத்தின் பெயர் கொண்டு உரைப்பது என்பது அங்குள்ள பகவானின் திருநாமம் என்ற ஸம்பந்தம் மற்றும் பகவத் ஸம்பந்தம் கொண்ட பொருள்களில் ஸம்பந்தம் ஆகியவற்றையும் குறிப்பதாகும். பரமைகாந்தி தர்மம் - ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோநைவ க்ராம குலாதிபி: விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி - பரமஞானியானவன் தனது குலம் மற்றும் கிராமம் ஆகியவற்றைக் கொண்டு கூறத்தக்கவன் அல்லன்; பகவானுடைய ஸம்பந்தம் கொண்டு மட்டுமே கூறத்தக்கவன் ஆவான்; காரணம், பரம ஞானிக்கு அனைத்தும் அவனே ஆவான் – என்றது காண்க.