Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 34)

முதல் ப்ரகரணம்

அந்தணர் மறையோரென்றும் அடியார் தொண்டரென்றும் இவர்களுக்கு நிரூபகம்.

இப்படி ச்ரேஷ்ட்ட ஜந்மாக்களான இருவர்க்கும் நிரூபகங்கள் இன்ன தென்கிறது - (அந்தணாரித்யாதி).

இப்படியாகச் சிறந்த பிறவிகள் கொண்ட இவர்கள் இருவருக்கும் பெயர்கள் இன்னவை என்று அருளிச்செய்கிறார் (நிரூபகம் என்றால் ஒரு பொருளை இன்னது என்று உணர்த்தவல்ல தனித்தன்மை).

– அதாவது, “சாதியந்தணர்”, “துணை நூல் மார்வி னந்தணர்”, “தீயோம்புகை மறையோர்”, “நந்தாவண்கை மறையோர்” என்று விசேஷண பூத சரீரத்வாரா வந்த வர்ணமும், தத்ப்ரயுக்தமான வைதிகத்வமும் அவர்களுக்கு நிரூபகம். “திருமாலடியார்”, “அணியரங்கன் திருமுற்றத்தடியார்”, “திருமாலுக்குரிய தொண்டர்”, “திருநாரணன் தொண்டர்” என்று ஆத்மவஸ்துவுக்கு ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டில் அந்தரங்க நிரூபகமான சேஷத்வமும் தத்ப்ரயுக்த கிஞ்சித்கரத்வமும் இவர்களுக்கு நிரூபகமென்கை.

இவர்களில் வேதங்கள் கூறுவதிலும், கர்மங்களிலும் நிலை நிற்பவர்களுக்கு திருமாலை (43) - சாதியந்தணர், பெரியதிருமொழி (1-5-9) - துணை நூல் மார்வி னந்தணர், பெரியதிருமொழி (7-9-7) - தீயோம்புகை மறையோர், பெரியதிருமொழி (6-7-8) - நந்தாவண்கை மறையோர் – என்றும் உள்ளவற்றில் கூறுவதற்கு ஏற்ப, சரீரம் காரணமாக உண்டான ஜாதி மற்றும் அதன் காரணமாக வந்த வேதமார்க்கத்தில் நிற்பது என்பது நிரூபகம் ஆகிறது. வேதங்களில் உள்ள சாரத்தைக் கூறும் திருமந்திரத்திலும், கைங்கர்யத்திலும் எப்போதும் நிலைநிற்பவர்களுக்கு, திருவாய்மொழி (5-9-11) - திருமாலடியார், பெருமாள் திருமொழி (1-10) - அணியரங்கன் திருமுற்றத்தடியார், திருவாய்மொழி (6-9-11) - திருமாலுக்குரிய தொண்டர், திருவாய்மொழி (3-7-4) - திருநாரணன் தொண்டர் - என்றும் உள்ளவற்றில் கூறுவதற்கு ஏற்ப, ஆத்மாவுக்கு ஞானம் மற்றும் ஆனந்தங்களைக் காட்டிலும் முக்கியமான இலக்கணமாகக் கூறப்படும் அடிமைத்தனமும், அதன் அடியாக உள்ள கைங்கர்யமும் நிரூபகம் ஆகிறது.