Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 33)

முதல் ப்ரகரணம்

வேதவித்துக்களும் மிக்க வேதியரும் ச்சந்தஸாம் மாதாவாலும் அதுக்குத் தாயாய்த் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இவருக்கும் ச்ரேஷ்ட்ட ஜந்மம்.

கீழ் (ஜாத்யாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே) என்ற வித்தாலே ஸூசிதமான அதிகார பேதத்துக்கும் துறைவேறிட்டுப் போகும்படியான நெடுவாசிக்கும் ப்ரகாசகமான கர்ம கைங்கர்ய நிஷ்ட்டரிருவர்க்கு முண்டான ஜந்மாதி விசேஷத்தை தர்சிப்பிப்பதாகக்கோலி, ப்ரதமம் ஜந்ம விசேஷத்தைச் சொல்லுகிறது – (வேதவித்துக்க ளித்யாதி).

– சூர்ணை (31) - ஜாத்யாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே - என்பதில் குறிப்பால் உணர்த்தப்பட்ட அதிகார வேற்றுமை மற்றும் கடந்த சூர்ணையில் மற்றொரு இடத்திற்குச் சொல்லுதல் என்றுள்ள வேற்றுமை ஆகிய இரண்டிற்கும் மேலும் விளக்கம் அளிக்கத் திருவுள்ளம் பற்றினார். ஆகவே, கர்மத்தில் நிலை நிற்பவர்கள், கைங்கர்யத்தில் நிலைநிற்பவர்கள் என்ற இருவருக்கும் இடையே உள்ள பலவகையான விசேஷங்களை எடுத்துரைக்கத் திருவுள்ளம் கொண்டவராக, முதலில் இருவருக்கும் இடையே உள்ள பிறவியின் விசேஷத்தை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “யேச வேதவிதோ விப்ரா:” என்கிற வேதவித்துக்களான பூர்வபாக நிஷ்ட்டர், “காயத்ரீம் ச்சந்தஸாம் மாதா” என்கிறபடியே ச்சந்தஸ்ஸுக்களுக்கு மாதாவா யிருக்கிற காயத்ர்யுபதேசத்தாலே பிறப்பிக்குமது, கர்ம நிஷ்ட்டர்க்கு ச்ரேஷ்ட்ட ஜந்மம். “யோசாத்யாத்மவிதோ ஜநா:” என்கிற மிக்க வேதியரான வேத தாத்பர்ய வித்துக்கள், “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவாதர்வணா நிச, ஸர்வ மஷ்டாக்ஷராந்தஸ்ஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்று ஸகல வேதஸங்க்ரஹ மாகையாலே அந்த காயத்ரிக்கும் மாத்ருபூதமாய், “பெற்ற தாயினுமாயின செய்யும்” என்கிறபடியே சரீரோத்பாதிகையான மாதா மாத்ரமன்றிக்கே உஜ்ஜீவநத்துக் குறுப்பான ஜ்ஞாநத்தை யுண்டாக்கும் திருமந்த்ரோபதேசத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்ட்டர்க்கு ச்ரேஷ்ட்ட ஜந்மமென்கை. “ஸஹி வித்யாதஸ் தம் ஜநயதி தச்ச்ரேஷ்ட்டம் ஜந்ம” என்கையாலே கேவல ஜந்மமென்னாதே ச்ரேஷ்ட்ட ஜந்மமென்கிறது. அது வர்ணாநுகுணமான விதிநிஷேதங்களுக்கும் ததநுரூபாநுஷ்ட்டாநத்துக்கும் ததநுகுண பலப்ராப்திக்கும் உறுப்பாகையாலே அவர்களுக்கு ச்ரேஷ்ட்ட ஜந்மம். இது ஸ்வரூபாநு ரூபமான விதிநிஷேதங்களுக்கும் ததநுரூபாநுஷ்ட்டாநத்துக்கும் ததநுரூப பலப்ராப்திக்கும் உறுப்பாகையாலே இவர்களுக்கு ச்ரேஷ்ட்ட ஜந்மம்.

மஹாபாரதம் - யேச வேதவிதோ விப்ரா: - எந்த அந்தணர்கள், வேதத்தின் பூர்வபாகத்தை அறிந்தவர்களோ - என்று கூறுவதற்கு ஏற்ப, வேதங்களுடைய முற்பாகத்தை நன்றாக அறிந்து, அதில் மட்டுமே நிலைத்து நிற்கும் நிஷ்டர்கள், தைத்திரீயத்தில் - காயத்ரீம் ச்சந்தஸாம் மாதா - சந்தஸ் அனைத்திற்கும் காயத்ரீயே தாய் ஆவாள் - என்பதற்கு ஏற்ப, சந்தஸ்ஸுகளுடைய தாயாக உள்ள காயத்ரி உபதேசம் மூலம் உண்டாகும் பிறப்பு என்பது (அதாவது யஜ்ஞோபவீதம் தரித்த பின்னர் ஏற்படுவது இரண்டாவது பிறப்பு என்பர்) கர்மங்களில் நிலைநிற்கும் தங்களுக்கு உயர்ந்த பிறப்பு என்று கொள்வர். – மஹாபாரதம் - யோசாத்யாத்மவிதோ ஜநா: – எந்த ஒருவன் வேதாந்தங்களை அறிந்துள்ளானோ – என்பதற்கு ஏற்ப வேதங்களுடைய தாத்பர்யம் அல்லது சாரமாக உள்ள வேதாந்தம் அறிந்தவர்கள், பாஞ்சராத்ரம் - ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவாதர்வணா நிச, ஸர்வ மஷ்டாக்ஷராந்தஸ்ஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம் – ருக், யஜுர், ஸாமம், அதர்வண வேதங்கள் மற்றும் இதிகாச புராணங்கள் அனைத்தும் அஷ்டாக்ஷர மந்திரத்தில் பொதிந்து உள்ளன - என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்து வேதங்களுடைய சாரமாக உள்ளதால் காயத்ரிக்குத் தாய் போன்று, பெரியதிருமொழி (1-2-9) - பெற்ற தாயினுமாயின செய்யும் - என்பதற்கு ஏற்ப சரீரம் உண்டாவதற்குக் காரணமாக இருந்த தாய்தந்தையாக மட்டும் அல்லாமல் கரையேறுவதற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பதான திருமந்த்ர உபதேசம் பெற்ற பின்னர் உண்டாகும் பிறப்பை, கைங்கர்யத்தில் நிலைநிற்கும் தங்களுக்கு மிகவும் உயர்ந்த பிறப்பு என்று கொள்வர். ஆபஸ்தம்ப ஸூத்ரத்தில் - ஸஹி வித்யாதஸ் தம் ஜநயதி தச்ச்ரேஷ்ட்டம் ஜந்ம - ஆசார்யன் ஞானத்தால் ஒருவனுக்குப் பிறவி அளிக்கிறான், அந்த ஞானத்தால் ஏற்படும் பிறவியே ஒருவனுக்கு மிகவும் உயர்ந்த பிறவி – எனறு கூறுவதன் காரணமாக “ஜன்மம்” என்று மட்டுமே கூறாமல், “ச்ரேஷ்ட ஜன்மம் = உயர்ந்த பிறவி” என்று கூறுகிறார். – கர்மங்களில் நிலைநிற்பவர்களுக்கு - முதலில் கூறிய பிறப்பு என்பது அவரவர்களுடைய வர்ணங்களுக்குத் தகுதியான விதிவிலக்குகள், அந்தந்த வர்ணத்திற்குத் தேவையான நடத்தைகள், அதற்கு ஏற்ப பலன்களை அடைதல் ஆகியவற்றை அடைவதற்குக் காரணமாக உள்ளதால் அவர்களுக்கு அது சிறந்த பிறப்பு ஆகிறது, கைங்கர்யத்தில் நிலைநிற்பவர்களுக்கு – இரண்டாவதாகக் கூறிய பிறப்பு என்பது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தகுதியான விதிவிலக்குகள், ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்ற விதிகள், அதற்கான பலனை அடைதல் ஆகியவற்றுக்குக் காரணமான பிறப்பு என்பதால், அவர்களுக்கு இந்தப் பிறவி சிறந்ததாக உள்ளது.