Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 32)
முதல் ப்ரகரணம்
ஸாதந ஸாத்யங்களில் முதலும் முடிவும் வர்ணதர்மிகள் தாஸவ்ருத்திக ளென்று துறைவேறிடுவித்தது.
இந்த கைங்கர்ய நிஷ்ட்டர்க்கு கர்ம நிஷ்ட்டரோடு சேர்த்தியில்லாமையைச் சொல்லுகிறது – (ஸாதநேத்யாதி).
பகவத் கைங்கர்யத்தில் நிலைநிற்பவர்களுக்கு, கர்மங்களில் ஆழ்ந்து நிற்பவர்களுடன் எந்தவிதமான சேர்த்தியும் இல்லாமை என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸாதநத்தில் முதலடியான கர்மமும் ஸாத்யத்தில் முடிந்த நிலையான கைங்கர்யமும் - இந்த நெடுவாசி யறிந்தவர்களை, “நீங்கள் வர்ணதர்மிகள், நாங்கள் தாஸவ்ருத்திகள்” என்று உறவறுத்துத் துறைவேறிட்டுப் போகப் பண்ணிற்றென்கை. அதாவது, திருவயிந்திரபுரத்திலே “வில்லிபுத்தூர்ப் பகவர்” என்பாரொருவர், எல்லாருமொரு துறையில் அநுஷ்ட்டாநம் பண்ண, தனியே ஒரு துறையிலே அநுஷ்ட்டாநம் பண்ணுவாராய், ஒருநாள் அநுஷ்ட்டாநம் பண்ணி மீளாநிற்கச் செய்தே இருந்த ப்ராஹ்மணர், “ஜீயரே! எங்கள் துறையிலே அநுஷ்ட்டாநம் பண்ணவாராதொழிகிறதென்?” என்ன; “விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண:, அஸ்மாகம் தாஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று துறை வேறிட்டுப் போனாராய்த்து.
பேற்றினை அடையவைக்கும் உபாயங்களில் முதல் நிலையான கர்மம் மற்றும் அந்தப் பேற்றினை அடைந்த வழிகளின் எல்லை நிலமாக உள்ள கைங்கர்யம் ஆகிய இரண்டும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அறிந்தவர்களை, “நீங்கள் வர்ணாச்ரமத்தின் தர்மங்களில் நிற்பவர்கள், நாங்கள் கைங்கர்யத்தில் வளர்பவர்கள்” என்று உறவுகளை அறுத்துக்கொண்டு போகச்செய்தது. இதற்கு ஒரு நிகழ்வைக் கூறுகிறார். திருவயிந்திரபுரத்தில் வில்லிபுத்தூர்ப்பகவர் என்னும் ஒருவர், அன்றாடம் அனைவரும் ஒரு இடத்திற்குத் தங்களுடைய காலைக்கடன்களை முடிக்கச் செல்லும்போது, தான் வேறு ஒரு இடத்திற்குச் செல்வது வழக்கம் ஆகும். அப்போது அங்கு வந்த ஒரு சில அந்தணர்கள் அவரிடம், “ஜீயரே! நாங்கள் செல்லும் இடத்திற்கு நீவிர் வராமல் இருப்பதன் காரணம் என்ன?”, என்றனர். இதற்கு அவர், “விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண:, அஸ்மாகம் தாஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி: - நாங்கள் விஷ்ணுவிற்குக் கைங்கர்யம் செய்யும் வைஷ்ணவர்கள், நீங்கள் வர்ணாச்ரம விதிகளுக்கு உட்பட்டுக் கர்மம் செய்யும் அந்தணர்கள்; கைங்கர்யம் செய்தபடி உள்ள எங்களுக்கு, கர்மங்கள் செய்தபடி உள்ள உங்களுடன் எந்தச் சேர்த்தியும் இல்லை”, என்று உரைத்துச் சென்றார்.