Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 31)
முதல் ப்ரகரணம்
ஜாத்யாச்ரமதீக்ஷைகளில் பேதிக்கும் தர்மங்கள்போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்.
இவ்வஸாதாரண ஸேவையிலே அதிகரித்தார்க்கு ஸாதாரணமானவதில் அந்வயம் தன்னடையே கழியும்படியை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் - (ஜாத்யாச்ரமேத்யாதி).
– இப்படியாகச் சிறப்புள்ள கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்களுக்கு, சிறப்பற்றதான கர்மங்களுடைய சேர்க்கை என்பது தானாகவே கழிந்துவிடும் என்பதைத் தக்க உதாரணத்தோடு அருளிச்செய்கிறார்.
– அதாவது, “ஸ்வகர்ம ப்ராஹ்மணஸ்ய அத்யயநம், அத்யாபநம், யஜநம் யாஜநம், தாநம் ப்ரதிக்ரஹணம், தாயாத்யம் ஸிலோஞ்ச்ச: அந்யச்ச அபரிக்ருஹீதம், ஏதாந்யேவ க்ஷத்ரியஸ்ய அத்யாபந யாஜந ப்ரதிக்ரஹணாநி பரிஹார்யாணி; தண்டயுத்தாதிகார:, க்ஷத்ரியவத் வைச்யஸ்ய, தண்டயுத்தவர்ஜம் க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யாதிகம் க்ராஹ்யம்” என்கையாலே, அத்யயநாத்யாபந யஜந யாஜந தாந ப்ரதிக்ரஹ ரூப ஷட்கர்மமும் ப்ராஹ்மணனுக்கு கர்த்தவ்யமாய், க்ஷத்ரிய வைச்யர்களுக்கும் அத்யாபநாதி த்ரயமொழிய அத்யயநாதித்ரயமே கர்த்தவ்யமாய், அவர்கள் தங்களுள்ளும் தண்டயுத்தங்கள் க்ஷத்ரியனுக்கு அஸாதாரணமாய், க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யங்கள் வைச்யனுக்கு அஸாதாரணமாய், “சுச்ரூஷா சூத்ரஸ்ய இதரேஷாம் வர்ணாநாம்” என்கையாலே சூத்ரனுக்கு த்ரைவர்ணிக சுச்ரூஷையே தர்மமாய், இப்படி தத்தஜ்ஜாத்யநுகுணமாக ஒருவனுக்கு உபாதேயமானது ஒருவனுக்கு த்யாஜ்யமாய்க் கொண்டு தர்மங்கள் பேதித்திருக்குமிறே. ப்ரஹ்மசாரியான தசையில் உபாதேயமான பிக்ஷாசரண ஸாமிதாதாநாதிகள் க்ருஹஸ்தனான தசையில் த்யாஜ்யங்களாய், அக்நிஹோத்ர அதிதி ஸத்காராதிகள் உபாதேயமாகையாலும், வநஸ்த்தனான தசையில், “ஸந்த்யஜ்ய க்ராம்ய மாஹாரம் ஸர்வஞ்சைவ பரிச்சதம்” என்கையாலே பூர்வாச்ரமத்தி லுபாதேயமான க்ராம்யாஹார பரிச்சதாதிகள் த்யாஜ்யமாய், “வஸீத சர்ம சீரம் வா” என்று தொடங்கிச் சொல்லப்பட்ட சர்ம சீரவஸநத்வ ஜடிலத்வ ச்மச்ருலோம நகதாரண வந்யாஹாரங்கள் உபாதேயமாகையாலும், ஸந்ந்யாஸியான தசையில் பூர்வாச்ரம உபாதேயமான அக்நிஹேத்ராதிதி ஸத்காராதிகளும் ஜடிலத்வாதிகளும் த்யாஜ்யமாய், “அநக்நி ரநிகேதஸ் ஸ்யாத்” இத்யாதிப்படியே அநக்நித்வா நிகேதத்வா ஸஹாயத்வாதிகள் உபாதேய மாகையாலும் ப்ரத்யாச்ரமம் தர்மம் பேதியா நின்றதிறே. ஜ்யோதிஷ்டோமாதிகளிலே தீக்ஷித்தவனுக்கு வர்ணத்ரயாச்ரம சதுஷ்டய ஸாதாரணமாய் அசுரணே ப்ரத்யவாயதயா அவச்ய கர்த்தவ்யமாய்ப் போரும் நித்யகர்மம் அநநுஷ்டேயமாய், ஜ்யோதிஷ்டோமாதி தர்மமே அநுஷ்டேயமாகையாலே தீக்ஷையிலே தர்மம் பேதித்திருக்குமிறே. ஆக இப்படி ப்ராஹ்மணாதி ஜாதிகளிலும் ப்ரஹ்மசர்யாத் யாச்ரமங்களிலும் ஜ்யோதிஷ்டோமாதி தர்மாந்தர தீக்ஷைகளிலும் பேதிக்கும் தர்மங்கள் போலே அஸாதாரண விக்ரஹ ஸஹிதேச்வர விஷயமாகையாலே அஸாதாரணமாய், அதஏவ, “அத்தாணிச்சேவகம்” என்று அந்தரங்க ஸேவையாயிருக்கிற கைங்கர்யத்திலே அதிகரித்தவர்களுக்கு தேவதாந்தர்யாமி விஷயமாய் தச்சரீர பூத தேவதாத்வாரா ததாராதநமாகையாலே ஸாதாரணமாயிருந்துள்ள கர்மம் உறங்குவான் கைப்பண்டம் போலே தன்னடையே நழுவுமென்கை. இத்தால் வர்ணாச்ரமாதி நிஷ்ட்டர்க்கு தத்தததிகாராநுரூப தர்மமொழிய அநநுகுணாமானது த்யாஜ்யதயா கழிக்கப்படுமா போலே ஸ்வரூப யாதாத்ம்ய தர்சிகளானவர்களுக்கு ததநுரூப தர்மமொழிய அதநுரூபமானது த்யாஜ்யமாய் தன்னடையே விட்டுக் கழியுமென்றதாயிற்று. இப்படியிருக்கச் செய்தே சிஷ்டர்கள் அநுஷ்ட்டித்துப் போருகிறது - ஸ்வாநுஷ்ட்டாநத்தைப் பின்சென்று லோகம் நசிக்கவொண்ணாதென்னு மாந்ரு சம்ஸ்யத்தாலேயிறே. “யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:, மம வர்த்மாநு வர்த்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வச:; உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்மசேதஹம், ஸங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:” என்கிறபடியே பரார்த்தமாகவிறே இவர்களு மநுஷ்ட்டிப்பது.
ஆபஸ்தம்ப ஸூத்ரம் - ஸ்வகர்ம ப்ராஹ்மணஸ்ய அத்யயநம், அத்யாபநம், யஜநம் யாஜநம், தாநம் ப்ரதிக்ரஹணம், தாயாத்யம் ஸிலோஞ்ச்ச: அந்யச்ச அபரிக்ருஹீதம், ஏதாந்யேவ க்ஷத்ரியஸ்ய அத்யாபந யாஜந ப்ரதிக்ரஹணாநி பரிஹார்யாணி; தண்டயுத்தாதிகார:, க்ஷத்ரியவத் வைச்யஸ்ய, தண்டயுத்தவர்ஜம் க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யாதிகம் க்ராஹ்யம் - ஒரு அந்தணனுக்கான கர்மங்கள் என்னவென்றால் வேதம் ஓதுதல் ஓதுவித்தல், யாகம் செய்தல் செய்வித்தல், தானம் அளித்தல் அளிக்கும்படிச் செய்தல், தாயபாகம் கொண்டு கிட்டிய செல்வம் கதிர்நெல் சேககரித்தல், மற்றவர்களால் எடுத்துக்கொள்ளப்படாத பழங்கள் மற்றும் கிழங்குகளை விரும்புதல் ஆகும்; இந்த ஆறில் வேதம் ஓதுவித்தல், யாகம் செய்வித்தல், தானம் செய்வித்தல் என்று மூன்றுடன் சேர்ந்து, தண்டித்தல் மற்றும் யுத்தம் செய்தல் ஆகியவை க்ஷத்ரியனுக்கு மட்டுமே உரியவை ஆகும்; க்ஷத்ரியனுக்குக் கூறப்பட்ட தண்டித்தல் மற்றும் போர் செய்தல் ஆகியவை நீங்கலாக உள்ள மற்ற மூன்றும் (அதாவது வேதம் ஓதுவித்தல், யாகம் செய்வித்தல், தானம் செய்வித்தல்), வைசியனுக்கு உரிய கர்மங்கள் ஆகும்; இந்த மூன்றுடன் சேர்ந்து பயிர் செய்தல், பசுக்களைக் காத்தல் மற்றும் வியாபாரம் செய்தல் ஆகிய மூன்றும் வைசியனுக்கு மட்டுமே உரியதாகும் – என்று கூறியது காண்க. ஆக வேதம் ஓதுதல் ஓதுவித்தல், யாகம் செய்தல் செய்வித்தல், தானம் செய்தல் செய்வித்தல் ஆகிய ஆறும் அந்தணர்களுக்கு உரிய கர்மங்கள்; இவற்றில் வேதம் ஓதுவித்தல், யாகம் செய்வித்தல், தானம் செய்வித்தல் ஆகிய மூன்றும் க்ஷத்ரியன் மற்றும் வைசியன் ஆகிய இருவருக்கும் உரிய கர்மங்கள்; இவர்கள் இருவரில், போர் செய்தல் மற்றும் தண்டித்தல் ஆகிய இரண்டும் க்ஷத்ரியனுக்கு மட்டுமே உரிய கர்மங்கள்; பயிர் செய்தல், பசுக்களைக் காத்தல், வியாபாரம் செய்தல் ஆகியவை வைசியனுக்கு மட்டுமே உரிய கர்மங்கள் ஆகும். மேலும் ஆபஸ்தம்ப ஸூத்ரம் - சுச்ரூஷா சூத்ரஸ்ய இதரேஷாம் வர்ணாநாம் – அந்தணர், க்ஷத்ரியர், வைசியர் ஆகிய மூவரும் அந்தந்த காரியங்களைச் செய்யும்போது, அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை இயற்றுதலே மற்ற வர்ணமாகிய சூத்திரர்களுக்கு உரிய கர்மம் ஆகும் – என்பதால், மற்ற வர்ணத்தினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தலே சூத்திரர்களுக்குத் தர்மம் ஆகிறது. இப்படியாக அந்தந்த வர்ணத்தினரின் தர்மங்கள் வேறுபட்டுள்ளன அல்லவோ? ப்ரஹ்மசாரியாக உள்ளபோது பிக்ஷை எடுத்தல், ஸமித்தைச் சேகரித்தல் என்றுள்ள தர்மங்களை, அவன் க்ருஹஸ்தனாகும்போது கைவிட்டு, அக்னிஹோத்ரம் மற்றும் விருந்தினர் உபசாரம் என்பவை கைக்கொள்ளத்தக்கவைகளாக உள்ளன; வானப்ரஸ்தனாக உள்ள நிலையில், மநுஸ்ம்ருதி - ஸந்த்யஜ்ய க்ராம்ய மாஹாரம் ஸர்வஞ்சைவ பரிச்சதம் - கிராமத்தில் உள்ள அனைத்து உணவு, ஆடை ஆபரணங்களை கைவிட்டு – என்று கூறுவதற்கு ஏற்ப க்ருஹஸ்தனாக உள்ளபோது ஏற்கத்தக்கதான கிராமத்தில் உள்ள உணவுவகைகள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை கைவிடத் தக்கதாகவும், மநுஸ்ம்ருதி - வஸீத சர்ம சீரம் வா – தோல் அல்லது மரவுரி அணியவேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப மரவுரி அணிதல், சடை வளர்த்தல், தாடி மற்றும் நகங்கள் வளர்த்தல், காட்டில் கிட்டும் உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவை ஏற்கத்தக்கதாக உள்ளன; ஸந்ந்யாஸியாக உள்ளபோது க்ருஹஸ்தன் மற்றும் வானப்ரஸ்தன் ஆகிய நிலைகளில் உள்ள அக்னிஹோத்ரம், விருந்தினர் உபசாரம் போன்றவை தள்ளத்தக்கவையாகவும், மநுஸ்ம்ருதி – அநக்நி ரநிகேதஸ் ஸ்யாத் - அக்னி இல்லாமலும், வீடு இல்லாமலும் இருத்தல் வேண்டும் – என்பதற்கு ஏற்ப அக்னிகார்யம் இல்லாமலும், வீடு இல்லாமலும், துணை ஏதும் இல்லாமலும் இருத்தல் வேண்டும் என்று உள்ளது. இப்படியாக ஒவ்வொரு ஆச்ரமங்களிலும் உள்ள தர்மங்கள் வேறுபட்டுள்ளன அல்லவோ? – ஜ்யோதிஷ்டோமம் போன்ற யாகங்களை இயற்றும் பொருட்டு அதற்கான அனுமதியைக் கைக்கொண்டவனுக்கு, மூன்றுவிதமான வர்ணங்கள் மற்றும் நான்குவித ஆச்ரமங்கள் ஆகியவற்றில் உள்ளவர்கள் அவசியமாகச் செய்யவேண்டிய அன்றாட கர்மங்களை இயற்றாமல் விடுவதும், ஜ்யோதிஷ்டோமம் போன்றவை மட்டுமே பின்பற்றவேண்டும் என்பதும் விதிக்கப்பட்டது என்பதால், தீக்ஷை பெற்ற பின்னர் தர்மங்கள் வேறுபட்டுள்ளன அல்லவோ? ஆகவே இப்படியாக அந்தணன் முதலான வர்ணங்களிலும், ப்ரஹ்மசர்யம் முதலான ஆச்ரமங்களிலும், ஜ்யோதிஷ்டோமம் போன்றதான வேறுபட்ட தர்மங்கள் கொண்ட தீக்ஷை நிலைகளிலும் தர்மங்கள் வேறுபட்டு, அந்தந்த கட்டங்களில் சில சில கர்மங்கள் தாங்களாகவே மறைகின்றன. இதே போன்று - கைங்கர்யம் என்பது, தனக்கே உண்டான திவ்யமங்கள விக்ரஹம் என்பதுடன் கூடிய ஸர்வேச்வரன் விஷயமாக உள்ளதால் சிறப்பு வாய்ந்ததாகவும், திருப்பல்லாண்டு (8) – அத்தாணிச் சேவகமும் - என்பதற்கு ஏறப அவனுக்குச் செய்யப்படும் அந்தரங்கத் தொண்டாகவும் உள்ளதால், அத்தகைய கைங்கர்யத்தில் நிலை நிற்பவர்களுக்கு, தேவர்களுடைய அந்தர்யாமியாக ஸர்வேச்வரன் உள்ள அந்தர்யாமி நிலை என்பதற்கு விஷயமாகவும், ஸர்வேச்வரனாகிய தனது சரீரமாக உள்ள தேவர்கள் மூலம் தனக்குச் செய்யப்படும் ஆராதனம் என்பதாகவும் உள்ளதால் அதிக மேன்மை அல்லாத கர்மங்கள், உறங்கும் ஒருவனிடம் உள்ள பொருள் போன்று தாங்களாகவே மறைந்துவிடும் என்று கருத்து. இதன் மூலம், நான்குவிதமான வர்ண தர்மங்கள், நான்குவிதமான ஆச்ரம தர்மங்கள் போன்ற தர்மங்களில் ஆழ்ந்து நிற்பவர்களுக்கு, அந்தந்த வர்ணாச்ரம தர்மங்கள் அல்லாமல் மற்ற தர்மங்கள், தாங்களாகவே விலக்கப்படுவது போன்று – ஆத்மஸ்வரூபத்தினை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களுக்கு அதற்குரிய தர்மங்கள் அல்லாமல் மற்ற அனைத்தும் கைவிடத் தக்கதான தர்மங்களாகவே அகன்றுவிடும். இவ்விதம் உள்ளபோதிலும் ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள், அன்றாடம் கர்மங்களை இயற்றுவது ஏன் என்றால், தங்களுடைய நடவடிக்கைகளைக் கண்டு மற்றவர்களும் கர்மம் இயற்றாமல் இருக்கக்கூடாது என்பதால் ஆகும். இதனைக் கீதையில் பகவான் கீழே உள்ளது போன்று உரைத்தமை காண்க: (3-23) – யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:, மம வர்த்மாநு வர்த்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வச: – பார்த்தா! நான் எனது கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால் பெருத்த தீமை உண்டாகும். காரணம், மனிதர்கள் அனைத்து விதங்களிலும் என்னுடைய வழியைப் பின்பற்றியபடியே உள்ளனர். (3-24) - உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்மசேதஹம், ஸங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: - நான் கர்மம் இயற்றாவிட்டால் இந்த உலகில் உள்ள அனைவரும் சீர்குலைந்து போவர். இப்படிப்பட்ட பேரழிவை நானே உண்டாக்கியவன் ஆகிவிடுவேன். இந்த மனிதர்களைக் கொன்றவனாகவும் ஆகிவிடுவேன். மேலே உள்ள வரிகளுக்கு ஏற்ற, மற்றவர்களுக்காக அல்லவோ இவர்கள் தங்களுடைய தர்மங்களைச் செய்தபடி உள்ளனர்!!