Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 29)

முதல் ப்ரகரணம்

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோரருள் தன்னாலே நன்று மெளியனாகிறதும் விஷயம்.

இவற்றுக்கு விஷயமேதென்னச் சொல்லுகிறது – (அருள்முடிய வித்யாதி).

– கர்மம் மற்றும் கைங்கர்யம் ஆகிய இரண்டையும் இயற்றுவதற்கான இலக்கு எது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “எத்தவம் செய்தார்க்கும் அருள் முடிவதாழியான் பால்” என்கிறபடியே ஆச்ரயண பலஸித்தி தன்னுடைய ப்ரஸாதத்தாலேயாம்படி, “தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக” என்கிறபடியே தனக்கு தநுபூதரான தேவதைகளை நிறுத்தி “அவரவர் விதிவழி யடைய நின்றனர்” என்கிறபடியே ஆச்ரயிக்கிற சேதநர் வித்யுக்த ப்ரகாரேண ஆச்ரயித்து பலம் பெறும்படி தேவதாந்தர்யாமியாய் நின்றவிடம் கர்மத்துக்கு விஷயம்; “நல்லதோரருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம்” என்றும், “கருத்துக்கு நன்று மெளியனாய்” என்றும் சொல்லுகிறபடியே கேவல ஸ்வ க்ருபையாலே அத்யந்த ஸுலபனாய்க் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிறவிடமே கைங்கர்யத்துக்கு விஷய மென்கை.

– நான்முகன் திருவந்தாதி (2) - எத்தவம் செய்தார்க்கும் அருள் முடிவதாழியான் பால் - என்று கூறுவதற்கு ஏற்ப, எந்தத் தெய்வங்களை அண்டினாலும் கிட்டவல்ல பயன் என்பது ஸர்வேச்வரனாகிய தன் மூலமாகவே ஆகும் என்னும் விதத்தில், திருவாய்மொழி (5-2-8) - தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக - என்பதற்கு ஏற்றபடி, தனக்குச் சரீரமாக உள்ள மற்ற தெய்வங்களை ஏற்படுத்தினான்; திருவாய்மொழி (1-1-5) - அவரவர் விதிவழி யடைய நின்றனர் - என்பதற்கு ஏற்ப அந்தந்த தேவதைகளை அண்டி நின்று, விதிக்கப்பட்ட கர்மங்கங்களை இயற்றி, அதன் மூலம் பயன் பெறும்படியாகத் தான் அந்த தெய்வங்களின் அந்தர்யாமியாக நிற்பதே கர்மத்தின் இலக்கு ஆகும் (உதாரணமாக, வேதவரிகளில் வரும் இந்த்ரன், அக்னி போன்ற தேவதைகளின் அந்தர்யாமி என்று கருத்து). திருமாலை (10) - நல்லதோரருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் - என்றும், திருவாய்மொழி (3-6-11) - கருத்துக்கு நன்று மெளியனாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தனது க்ருபை என்பதால் மட்டுமே அடைவதற்கு மிகவும் எளியவனாக அர்ச்சாவதாரமாக நிற்கும் நிலையே கைங்கர்யத்துக்கு இலக்கு ஆகும்.