Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 26)

முதல் ப்ரகரணம்

கர்மகைங்கர்யங்கள் ஸத்யாஸத்ய நிந்யாநித்ய வர்ண தஸ்யாநுகுணங்கள்.

இந்த க்ரியாவ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள் இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாயிருக்குமென்னச் சொல்லுகிறது – (கர்மேத்யாதி).

கடந்த சூர்ணையில் கூறப்பட்ட “க்ரியா, வ்ருத்தி” என்ற இரு பதங்களால் கூறப்பட்டதான “கர்மம், கைங்கர்யம்” ஆகியவை இந்த இருவருக்கும் (சாஸ்த்ரத்தில் நிலை நிற்பவர், திருமந்த்ரத்தில் நிலைநிற்பவர்) செய்வது என்ன என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார் (இங்கு கர்மம் என்பது சாஸ்த்ரங்களில் “இயற்றப்பட வேண்டும்” என்று விதிக்கப்பட்ட செயல்கள் ஆகும்).

– அதாவது, கர்மம் அஸத்யமுமாய் அநித்யமுமான வர்ணத்துக்கு அநுகுணமாயிருக்கும்; கைங்கர்யம் ஸத்யமுமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாயிருக்குமென்கை. வர்ணத்தை அஸத்யம், அநித்யம் என்கிறது ஆத்மாவுக்குள்ள வேஷமல்லாமையாலே ஸததைகரூபமன்றிக்கே ஔபாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமுமான தேஹாவதியாய்ப் போருகையாலே; தாஸ்யத்தை ஸத்யம், நித்யமென்கிறது ஆத்மாவுக்குள்ள வேஷமாகையாலே ஸததைக ரூபமாய் யாவதாத்மாநு வர்த்தி யாகையாலே. வர்ணாநுகுணமென்றது – வர்ணத்துக்குச் சேர்ந்த தென்றபடி. தாஸ்யாநுகுணமென்றதும் அப்படியே.

கடந்த சூர்ணையில் “க்ரியை” என்ற சொல் மூலம் உணர்த்தப்பட்ட கர்மம் என்பது பொய்யானதாக, ஒரு சில நாள்களில் அழியக்கூடியதாக உள்ள வர்ணத்திற்கு (சாதி) ஏற்றதாக இருக்கும். “விருத்தி” என்பதால் கூறப்பட்ட கைங்கர்யம் என்பது எப்போதும் உன்மையானதாக, என்றும் அழியாமல் நிலைத்து நிற்பதாக உள்ள அடிமைக்கு ஏற்றதாக இருக்கும். வர்ணத்தை ஏன் அஸத்யம், அநித்யம் என்றார்? காரணம் - ஆத்மாவுக்கு ஏற்றதான ஸ்வரூபம் இல்லாததாலும்; ஒரே தன்மை கொண்டதாக இல்லாமல் ஏதோ ஒரு காரணத்தால் உண்டாகி பின்னர் சில நாட்கள் கழித்து மறைந்து விடக்கூடிய இந்தச் சரீரத்தை நம்பி உள்ளதாலும் ஆகும். அடிமைத்தனத்தை ஏன் ஸத்யம், நித்யம் என்றார்? காரணம் – ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேரும்படி உள்ளதாலும், ஒரே தன்மை கொண்டதாக இந்தச் சரீரத்தில் உயிர் நிலைக்கும்வரை தொடர்வதாலும் ஆகும். “வர்ண அநுகுணம்” என்றால் “வர்ணத்துக்குச் சேரும்விதத்தில்” என்று பொருள். இது போன்றே “தாஸ்ய அநுகுணம்” என்றால் “அடிமைத்தனத்திற்குச் சேரும்விதத்தில்” என்று பொருள்.